நாம் வசிக்கும் பகுதி சென்னையின் ஒதுக்குப்புறமான பகுதி. காற்றோட்டமோ, சுகாதாரமோ நாம் யாசித்துப் பெறவேண்டிய கட்டாயத்திலே இருக்கிறோம். அதிகார மையத்தின் பார்வை எமது பகுதியில் எப்போதாவது தேர்தல் காலங்களிலோ, அமைச்சர்களின் வருகையிலோ விழலாம். அந்தநேரத்தில் தெருக்கள் சுத்தப்படுத்தப்படும், கொசு விரட்டிக்கான புகை வீசப்படும், அது மண்ணெண்ணெய் வாசம் கலந்த ஒரு நெடியை உருவாக்கி மறையும். இப்போது அது கொஞ்சம் கூடுதலாகி மின்வெட்டும் சேர்ந்து கொண்டது. காற்றோட்டமில்லாத வீட்டமைப்பை கொண்டிருப்பதால், மின்விசிறி இல்லாத உறக்கம் என்பது நினைத்துப் பார்க்க முடியாது. அதோடு சேர்த்து கொசுக்கடியும் நம்மை மிகவும் நெருக்கடியான, சோகமான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். அப்படித்தான் நேற்றும் நிகழ்ந்தது.

india_350விடியற்காலை 3 மணிக்கு திடீர் மின்வெட்டு. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திடீர் விழிப்பு. தெருவில் வந்து நிற்கலாம் என்றால் நம்மை கொசுக்கள் பெரும் வேட்டைக்காடாக்கிவிடும். தெருவிலும் நிற்க முடியாமல், வீட்டிற்குள்ளும் அடைந்து கிடக்க முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 7 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைத்தது. வாசிக்கலாம் என்று ஒதுக்கி வைத்த ஒரு தாள் மேசையின்மீது கிடந்தது. வாசிக்க தொடங்கும்போது ஏதோ புரியாமல் இருந்தது. ஆனால் வாசிக்க வாசிக்க இரத்த நாளங்களை துளைத்தெடுத்தது. மூளை செல்களை உலுக்கி எடுத்தது. ஒருநாள், ஒரே ஒருநாள் மின்வெட்டை என்னால் தாங்க முடியவில்லை. இந்த நாட்டின் ஒரு மூளையில் வாழும் மக்கள் தமது வாழ்வையே தொலைத்துவிட்டு, இருள்சூழ்ந்த வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்களே, இதற்கு நானும் ஒரு காரணமா? என்ற எண்ணம் என்னை குற்றம் சாட்டியது. எப்படிப் பார்த்தாலும் அந்த குற்றச்சாட்டிலிருந்து என்னால் மீள முடியவில்லை. ஜார்கண்ட் மாநிலம், ஜாதுகுடா மலைகிராமம்.

இந்த கிராம மக்களின் வாழ்வு, அவர்களின் நிகழ்வு ஒவ்வொன்றும் இந்த நாட்டை மட்டுமல்ல, நம்மையும் பார்த்து எரிச்சலோடு கேலி செய்கிறது. இந்த மக்கள் சொந்த மண்ணிலே ஏதிலிகளாக்கப்பட்ட கொடுமைக்கு நீயும், நானும் காரணம் என்பதை நம்மால் மறுதலிக்கமுடியாது. எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ, அங்கே ஏன் என்று நாம் கேட்கத் தவறும்போது அந்த அநீதியின் பக்கத்தில் நமக்கும் பங்கிருப்பதை இந்த மலைவாழ் மக்களின் வாழ்வு நமக்கு புரியவைக்கிறது. முன்னொரு காலத்தில் இந்த மக்கள் யாரும் உரிமை கொண்டாடாத நிலத்தில் ஆடி, பாடி மகிழ்ந்து வாழ்ந்தார்கள். அவர்களை கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை. அந்த மண் அவர்களின் தாயாக இருந்தது. அது, அந்த மக்களை தம் மடிமீது போட்டு தாலாட்டியது. அங்கிருக்கும் மலைகாடுகள் இவர்களின் தொட்டிலாகியது. அங்கிருக்கும் மரம், செடி, கொடிகள் அவர்களின் உணவாதாரமாக இருந்தது.

பசுமையான நிலப்பரப்பும், நீண்டு வளர்ந்த மரங்களும், வளமான காடுகளும், இவர்களின் வாழ்வை மகிழ்ச்சியும், நிறைவும் கொண்டதாய் மாற்றியிருந்தது. இதெல்லாம் இப்போது மறைந்து போய்விட்டது. இன்று ஒவ்வொருநாளும் இவர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் தம்மை விரட்டிக் கொண்டே இருக்கும் சொந்த மண்ணின் ஏதிலிகளாக மாறிவிட்டார்கள். எங்கள் நிலை வாழ்வு எப்போது? நாளெல்லாம் விரட்டி அடிக்கும் நிலை எப்போது மாறும்?" என்று ஜார்கண்டின் உரிமை குடிமக்கள் தமது உணர்வை, தமது வேதனையை, மேற்கண்ட வரிகளால்தான் பாடி வைக்கிறார்கள். அந்த வேதனையை புரிந்து கொள்ள அந்த வரிகள்தான் நமக்கு துணைபுரிகிறது. காரணம், அவர்களுக்கான வரலாறு என்று எதுவும் எழுதிவைக்கப்படவில்லை.

அவர்களுக்கான இலக்கியம் என்று யாரும் சொல்லக் கேட்டதில்லை. அவர்கள் தமது சோகத்தை தெம்மாங்கு பாடல்களால் தாமே பாடி, நிம்மதி அடைந்து கொள்வார்கள். தாமே பாடி, தம்மையே ஆறுதல் படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்த விரட்டியடிக்கப்பட்ட என்ற வார்த்தைகள்தான் ஆதிக்க திமிறின் முதலாளித்துவத்தின் முகவரியாக நமக்கு தெரிகிறது. இது அந்த மக்கள் ஏதிலிகளாய் அலையும் வரலாற்றை நமக்கு வாசித்துக் காட்டுகிறது. ஜார்கண்டில் வாழும் காட்டு பகுதியின் பூர்வ குடிமக்களாகிய அந்த மக்கள் இன்று பல்வேறு கடுமையான நோய்களால் பிடிக்கப்பட்டு அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எலும்புறுக்கி நோய் அவர்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் கருதறித்த பெண்கள் எல்லாம் தொடர்ந்து கருசிதைவால் தமது வாரிசுகளை தமது வயிற்றுக்குள்ளேயே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நோய்களுக்கான காரணம் என்னதென்றே புரியாமல் அந்த மக்களின் வாழ்வு தினம் தினம் துயர் தினமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணின்மீது யாரும் அணுகுண்டு வீசவில்லை. அது ஹூரோசிம்மா, நாகாசாகி போன்று அணுகதிர்களால் நிறைந்திருக்கிறது. எப்படி ஜப்பானுக்கு ஹூரோசிம்மாவும், இந்தியாவுக்கு ஜாதுகுடாவும். இதற்கான காரணங்கள் அரசிடமிருந்து மிக அலட்சியமாக வந்து சேர்கிறது. அந்த மக்களின் வாழ்விடங்கள் அசுத்தமானது. அந்த மக்கள் பெரும் குடிகாரர்களாக இருக்கின்றார்கள் என்பது அரசின் குற்றச்சாட்டு.

ஆனால் எது சரியோ, இதை எதிர்த்து பேசுவதற்கு இந்த மக்களுக்கு யார் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வு சிதைவதற்கு லாபவெறியும், பணத் திரட்டலும்தான் காரணம் என்பது அந்த மக்களுக்குத் தெரியாது. ஆனால் அரசுக்குத் தெரியாதா? ஆனாலும்கூட அந்த மக்களை தொடர்ந்து அலைய வைக்க நிலைகுலைய வைக்க இந்த அரசு, இந்த அரசிடம் இருக்கும் அதிகார நடுவம் முயற்சிக்கிறதே. அந்த மக்களின் மீதான அடக்குமுறை தொடர்கிறதே என்ன காரணம்? பொதுவாக நாம் எல்லோருக்கும் ஓரளவுக்கு தெரிந்து ஒரு பெயர்தான் யுரேனியம். அணுஆற்றலை வெளிப்படுத்த, மூலப்பொருளான யுரேனியம் மிக மிக ஆற்றல் வாய்ந்த ஒரு எரிபொருள். எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததோ, அதேபோல் விலையும் உயர்ந்தது.

இந்த யுரேனியத்தின் மூலப்பொருள்கள் ஜாதுகுடா மலைப்பகுதிக்குள் நிரம்பி இருப்பதை கண்டுபிடித்தப்பின், இந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்திருக்கிறது. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த அந்த மக்கள், இன்று மிகவும் துயரமான வாழ்வுக்குள் சிக்குண்டதற்கு இந்த யுரேனியம்தான் காரணமாக அமைந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது அப்பகுதி தாமிரம் கிடைப்பதாக அறியப்பட்டு, தாமிர சுரங்கங்கள் அமைக்கப்பட்டது. தாமிரத்திலிருந்து அடுத்தக்கட்டமான யுரேனியத்தை பிரிட்டிஷ்காரர்கள் படித்தறியாத காரணத்தால் அது அந்த அளவிலேயே நின்றது. பின்னர் யுரேனியம் கிடைக்கத் தொடங்கிய பின்புதான் அல்லது அது கண்டறியப்பட்ட பின்தான் இந்த மக்களின் வாழ்வும் சூறையாடப்பட்டது. அவர்களின் வளமான ஆரோக்கியமும் கொள்ளையடிக்கப்பட்டது.

அப்பாவியான அந்த மக்கள் ஏதோ அமானுஷ்யசக்தி இருப்பதாக எண்ணி, அதற்காக தம்மை தயார்படுத்திக் கொண்டார்கள். தமக்குத் தெரிந்த கடவுளிடம் மன்றாடினார்கள். தமக்குத் தெரிந்த பூஜைகளை எல்லாம் செய்து பார்த்தார்கள். ஆனால் எந்த கடவுளாலும் அந்த மக்களுக்கு விடுதலை தர முடியவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்கள் மகிழ்ச்சி கூத்தாடினார்கள். இனி ஒருபோதும் தமது வாழ்வில் துயரில்லை என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள். ஆனால் அவர்களைவிட மிகக் கேவலமாக நடக்கத் தொடங்கியது, இந்திய பேராதிக்க அரசு.

அவர்கள் மலைவாழ் மக்கள் தானே, ஆதிவாசிகள்தானே, அவர்களை கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் என்ற மமதையும், அந்த மக்களை நேரிடையாக யுரேனிய சுரங்கங்களில் போதிய பாதுகாப்பற்ற நிலையில் பணியாற்ற ஆதிவாசி இளைஞர்களை இந்திய அரசு அனுப்பிவைத்தது. யுரேனிய சுரங்கங்களுக்குள் சென்று வந்த இளைஞர்களுக்கு நோய்தொற்று, உடல்நல பாதிப்பு என அடுக்கடுக்காய் அவர்களின் உடல், மன கட்டமைப்பு சூறையாடப்பட்டது. அந்த இளைஞர்கள் மேல் படிந்துள்ள யுரேனிய கதிர்வீச்சு அந்த இளைஞர்கள் சென்ற இடங்களை எல்லாம் தாக்கத் தொடங்கியது. இப்படித்தான் அந்த ஜாதுகுடா மலைவாழ் மக்களின் துயரம் நிறைந்த வாழ்வு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

யுரேனிய தாதுவை பிரித்தெடுக்க செய்யப்படும் வேதியியல் தொழில் நுட்பங்களில் ஏற்படும் மாற்றங்களில் பல்வேறு நீராதாரங்கள் பாழாகின்ற காரணத்தால் அந்த மக்களின் வாழ்வு தண்ணீர் குடிப்பதற்குக்கூட உரிமையற்ற தனத்தை உறுதிப்படுத்தியது. நீராதாரங்களில் யுரேனிய கதிர்வீச்சு காரணத்தால் அந்த மக்களின் நீர்நிலைகள் அவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக கொல்லத் தொடங்கியது. இவர்கள் யாரிடம் முறையிடுவார்கள்? இவர்களின் முறையீட்டைக் கேட்க யார் இருக்கிறார்கள். ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யுரேனிய சுரங்கங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

யுரேனிய வேதியியல் மாற்றம் நிகழும்போது வெளியேறும் நீராதாரங்களில் நீர்பருகும் கால்நடைகள் செத்தொழிகின்றன. ஆனால் எதை குறித்தும் இந்த அரசுக்கு அக்கறையோ, கவலையோ துளிக்கூட கிடையாது. யுரேனிய மூலப்பொருட்களை பாதுகாப்பற்ற கலங்களில் ஏற்றி இறக்கும்போது ஏற்படும் விரிசலால் சாலையெங்கும் கொட்டப்படும் அதன் துகள்கள் ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு உடல் ஊனமுற்றத் தன்மையை ஏற்படுத்துகிறது. மரணம் என்பது முதுமையில் அல்ல, இளமையிலேயே அது கூடுதலாக அந்த ஜாதுகுடா மண்ணிலே தொடர்ந்து நிகழ்கிறது. மக்கள் எதிர்க்கிறார்கள், சுரங்கத்தை மூடுமாறு அரசை வலியுறுத்துகிறார்கள். ஆனால் அரசு செய்தது என்னத் தெரியுமா?

1998ல் அணுகுண்டை வெடிக்கச் செய்து தனது வல்லாதிக்கதை நிலைநாட்டியதுதான். ஆயிரக்கணக்கான மக்களின் குருதியிலிருந்து திரட்டப்பட்ட அணுக்கதிர்கள், அணுகுண்டாய் வெடித்தது. ஆயிரக்கணக்கான மனித உயிர்களின் மூலம் கிடைத்த அணுதுகள்கள் இந்தியாவின் மானத்தை காப்பாற்றியது. இந்திய தேசியம் ஏழை, எளிய மக்களின் குருதியிலிருந்து தம்மை மேன்மைப்படுத்திக் கொண்டது. அந்த மக்களின் கண்ணீரிலிருந்து தமது கண்ணியத்தை வெளிப்படுத்தியது. அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிறேன், பள்ளிக்கூடம் அமைத்துத் தருகிறேன், சாலை அமைக்கிறேன் என்று மாய்மாலம் பேசிக் கொண்டிருக்கும் இந்திய பேரினவாத அரசு, அந்த மக்களின் ஆன்மாவைக் குறித்து சிந்திக்க தவறிவிட்டது.

இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியலாம், அங்கிருந்து கிடைக்கும் யுரேனியத்தால் தொழிற்சாலைகளை வடிவமைக்கலாம். மின் தட்டுப்பாடு இல்லாமல் வாழ வழிவகுக்கலாம் என்றெல்லாம் கள்ளத்தனமான காரணங்கள் ஆயிரக்கணக்காக அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அந்த மக்களின் கண்ணீரிலிருந்துதான் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. அந்த மக்களின் குருதியிலிருந்துதான் நமது மின்விளக்கு எரிகிறது. அந்த மக்களின் உயிர் காற்றிலிருந்துதான் நமது மின்விசிறி சுழல்கிறது என்று நினைக்கும் போது நம்மால் மின்சாரத்தை ஏற்க முடியவில்லை. ஆனாலும்கூட அந்த துயரை கண்டும் காணாதவர்களாய் நம்மால் இருக்க முடியவில்லை.

அந்த மக்களின் வாழ்வை பார்க்க மறுத்து, கண்மூடிக் கொண்டு நம்மால் வாழ முடியவில்லை. இந்த அப்பாவி மக்களின் மரண சாசனத்தில் நம்முடைய மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது என்றால், நாம், நம்மை என்னவென்று அழைத்துக் கொள்வது? நமக்கு போபால் சொல்லிக் கொடுத்த பாடம் இன்னமும் நமது மனங்களிலிருந்து மறைந்துவிடாமல் நமது மக்களை முன்னிருத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் வலி-சீர் இயந்திரம் நிறுத்தப்பட்டால், நமது வாழ்வு தொலைந்துவிடும். ஜாதுகுடா அல்ல, இன்னும் எத்தனை மலைவாழ் கிராமங்களாவது இதற்காக சமாதிகளாகட்டும். நாம் மட்டும் மகிழ்ச்சியோடு வாழலாம்.

- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It