“இத்தனை விளக்கங்களை
நீ யாருக்காக
சொல்லிக்கொண்டிருக்கிறாய்?
உண்மையில்
உன்னை நீ திருப்திப்படுத்திக் கொண்டாயா?”
என்னும் ஜெயமோகனின் கேள்வி இப்போது இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பொருந்துகிறது. யாரை திருப்திப்படுத்துவது? எதற்காக மீண்டும் மீண்டும் தங்களைத் தாங்களே நிரூபிக்க வேண்டும்?
அண்மையில் பகல்ஹாம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில், வழக்கம்போல் இஸ்லாமிய சமூகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
ஒரு நாட்டில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், அந்த நாட்டு மக்களுக்கு ஓர் அச்சம் வரும், இதுபோல தொடரக்கூடாதே என்று. இந்தியாவில் மட்டும், ஒரு தாக்குதல் நடந்தால் நமக்கு இரு கவலைகள்.
ஒன்று, இத்தகைய தாக்குதல் தொடரக் கூடாதே... அது மக்களின் வாழ்க்கையை பாதிக்காதவாறு இருக்க வேண்டுமே என்று. மற்றொன்று, இந்தத் தாக்குதலைக் கொண்டு இங்குள்ள இஸ்லாமியர்களை சங்கிக் கூட்டம் இலக்காக்குமே என்பது.
பகல்ஹாம் பகுதியில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள், பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைத்து, உணவு கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
அங்கு நேரில் சென்று வந்த சுற்றுலாப் பயணிகளே இதை உறுதி செய்திருக்கின்றனர்: “அந்தச் சமுதாயம் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது” என்று கூறுகிறார்கள்
எந்த சமுதாயம்? இவர்கள் எந்த ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக தீவிரவாதிகள் என்கிறார்களோ அந்த இஸ்லாமிய சமூகத்தை.
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லியே சாக வேண்டியதாகயிருக்கிறது, சங்கிகளை திருப்திப்படுத்தி எதுவும் ஆகப் போவதில்லை. அவர்கள் இந்தியாவைத் துண்டாட வந்தவர்கள். இஸ்லாமியர்கள் இந்தியப் பற்று உள்ளவர்கள்தான் என்பதை சுதந்திரம் உணர்த்தும். நமக்கு சங்கிகளைப் போல சூ நக்கும் வரலாறு இல்லை.
ஏப்ரல் 22 அன்று, அழகான பகல்ஹாம் பள்ளத்தாக்கில் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு செய்வார்கள் என. 26 பேர் அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்த பிறகும் 4.5 கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்புப் படையினர் ஓடியே கடக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்கிறது. அப்படி அவர்கள் சென்று சேரும்போது சம்பவம் முடிந்து ஒரு மணி நேரம் ஆகி விட்டிருக்கிறது.
தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில், உள்ளுர் காஷ்மீர் முஸ்லீம் இளைஞர்களே முதல் கட்டமாய் இறங்கியிருக்கிறார்கள்.
அப்பகுதியைச் சார்ந்த சால்வை வியாபாரி சஜாத் அகமது பாட் (Sajad Ahmad Bhat) என்ற இளைஞர், காயமடைந்த சுற்றுலாப் பயணியை தனது முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
“இவ்வாறு மனிதர்களைக் கொல்வது, மனிதத்துவத்தின் கொலை. பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் குதிரையில் 18-20 பேர் வரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என்றார்.
"பஹல்காமில் உள்ள சங்கத் தலைவர் அப்துல் வஹீத் எங்களுக்கு வாட்ஸப்பில் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அனுப்பியதும் நாங்கள் ஓடிச் சென்றோம்... நாங்கள் பிற்பகல் 3 மணியளவில் அங்கு சென்றடைந்தோம். காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை தூக்கிச் சென்றடைந்தோம். அவர்களில் பலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.
சுற்றுலாப் பயணிகள் அழுவதைக் கண்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்களின் வருகை எங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்தது - அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது"
அவர்களுக்கு இந்துவோ முஸ்லிமோ இல்லை எல்லாமே சுற்றுலாப் பயணிகள்தாம். சுற்றுலாப் பயணிகளை தங்கள் சொந்த உறவினர்களாகவே கவனித்தனர்.
சுற்றுலாத் துறையே அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதால், அவர்கள் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க எப்ப்போதுமே அரணாய் இருக்கிறார்கள்.
அங்குள்ள காஷ்மீர் வியாபாரிகள் காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து, அழுது கொண்டிருந்த பெண்களை சமாதானம் செய்தார்கள்.
அங்குள்ள 30 வயது குதிரை ஓட்டுனர் ஆதில் ஹுசைன் ஷா, பயணிகளைக் காப்பாற்ற முயற்சிக்கையில் உயிரிழந்தார். அவர் ஆயுதம் கொண்ட பயங்கரவாதிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டார். அப்பாவியான சுற்றுலாப் பயணிகளை ஏன் கொல்லுகிறீர்கள் என்று கேட்டு, தன்னுடைய உயிரைப் பணையமாக வைத்தார்.
அவரது தியாகம் மட்டும் இல்லாமல், அவரது உறவினர் நசாகத் அகமது ஷா, 11 சுற்றுலாப் பயணிகளை, அதில் குழந்தைகளும் உட்பட, பாதுகாப்பாக வழிநடத்தி தப்பித்தார்.
அசாவரி ஜாக்டேல் (Asavari Jagdale) என்ற சுற்றுலாப் பயணி தனது தந்தை சந்தோஷ் ஜாக்டேல், மாமா கௌஸ்துப் கண்போட்டேவையும் இழந்தார்.
“ஒரு குதிரை ஓட்டுநர் எங்களைப் பாதுகாத்தார். அவர் எங்களை விட்டுவிடாமல், என் அம்மா, மாமி மற்றும் என்னை பாதுகாப்பாக எங்கள் டிரைவரிடம் கொண்டு சென்றார். அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் போல இருந்தனர். அவர்கள் எங்களுடன் இருந்ததால் நாங்கள் பயத்தை உணரவில்லை.”
நசாகத் அகமது ஷா (Nazakat Ahmad Shah) தனது குழுவில் இருந்த 11 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 குழந்தைகளைக் காப்பாற்றினார். தாக்குதல் நேரத்தில், குழந்தைகளைப் பூமியில் படுத்த வைத்து பாதுகாத்தார். பின், ஒரு சிறிய குறுக்கு வழியாக அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றார்.
“என் முதல் கவலை சுற்றுலாப் பயணிகள். அவர்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லவே நான் முயற்சி செய்தேன். குழந்தைகளை முதலில் எடுத்துச் சென்றேன். பிறகு மற்றவர்களையும் பத்திரமாக பஹல்காம் நகரத்திற்குத் திரும்பி கொண்டு வந்தேன்.”
அர்விந்த் அகர்வால் (Arvind Agrawal), தனது பிள்ளையுடன் நசாகத்தின் உதவியால் உயிர் தப்பினார்.அவர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:
"நசாகத் பாய், நீங்கள் உங்கள் உயிரை பயணம் வைத்து எங்களைக் காப்பாற்றினீர்கள். இந்த பாக்கியத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது.”
குல்தீப் ஸ்தபக் (Kuldeep Sthapak), நசாகத்தின் உதவியால் தப்பித்து தெரிவித்தது:
“நசாகத் பாய், நீங்கள் எனது உயிரைக் காப்பாற்றினீர்கள். மேலும் மனிதத்தை நிருபித்தீர்கள். நான் உங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.”
உள்ளூர் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் காஷ்மீர் மக்கள் பல சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக புல்தானா மாவட்டத்திலிருந்து வந்த ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை, ஹோட்டல் ஊழியர்கள் வெளியே செல்லாமல் தடுத்து பாதுகாத்தனர்.
நண்டேட் பகுதியைச் சேர்ந்த சக்சி மற்றும் கிருஷ்ணா லோல்கே தம்பதியர், குதிரை ஓட்டுநர்களால் பாதுகாக்கப்பட்டதாகக் கூறினர்:
"உள்ளூர் மக்கள் எங்களை பாதுகாக்காதிருந்தால், நாங்கள் இப்போது உயிருடன் இருக்க மாட்டோம். அவர்கள் எங்களைக் காப்பாற்றினர்.”
“உடனடியாக காஷ்மீர் முஸ்லிம்கள் எங்களை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் இல்லையெனில் நாங்கள் பிரச்சனையில் சிக்கியிருப்போம்.”
காஷ்மீர் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள், அவர்களது தமது உயிரைத் துச்சமாக்கி சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றினார்கள் , அவர்களுக்கு இந்த நேரத்தில் ஆறுதலாய் இருந்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் எதிரிகளை, தீவிரவாதிகளை உள்ளூர் மக்கள் துணையுடன்தான் வேட்டையாட வேண்டும். ஏனெனில் இந்தத் தாக்குதலில் முதல் பாதிப்பு உள்ளூர் மக்களுக்கே.
அரசாங்கத்திடம் கேள்வி கேட்காமல், இப்படி உதவி செய்த காஷ்மீர் மக்களை சந்தேகிப்பது மிகுந்த அநீதியாகும்.
அரசியல் லாபத்திற்காக வெறுப்பை உருவாக்கும் வாதங்களை மக்கள் தெளிவாகக் கண்டறிய வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் நடந்தபோது, அதற்காக அரசைக் கலைக்க வேண்டும் என்று மோடி கோஷமிட்டார். இப்போது மோடி ஆட்சியில், யார் அரசைக் கலைப்பது? யார் பொறுப்பேற்க வேண்டும்?
இப்போது நாட்டில் பரவும் இந்துத்துவா வெறி, சாதாரண இந்துக்களையே பலி கொடுப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பகல்ஹாம் சம்பவத்தில், பயணிகளைக் கொன்றவர்கள் நிச்சயமாக தீவிரவாதிகள்தான். ஆனால் அவர்களின் மதத்தை வைத்து “இஸ்லாமிய தீவிரவாதிகள்” என்று பாஜக சங்கிகளால் பரப்பும் முயற்சி நடந்து வருகிறது.
ஆனால், அங்கு நேரில் சென்று பாதுகாக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்:
"அங்குள்ள முஸ்லிம்கள் எங்களைக் காப்பாற்றினார்கள்.”
அப்படி இருந்தும், இஸ்லாமியர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். அவர்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்
தீவிரவாதிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுங்கள். ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் துணை நிற்பார்கள். இம்மண்ணில் அமைதிக்காக போராடியவர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள். அவர்கள் இந்தியர்களே. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறார்கள்; பாகிஸ்தானோடு அல்ல. அவர்கள் அப்பாவிகள், ஒரு குற்றச்செயலை வைத்து ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்கும் செயல் மிகப் பெரிய அநீதி.
ஏன் சங்கிகள் இப்படி இந்தியாவை துண்டாடத் துடிக்கிறார்கள்? இந்தியா என்கிற நாட்டின் பெருந்தேசிய ஊடகங்கள் அதாவது கோடி மீடியா என்று அழைக்கப்படுபவை, விஷத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த ஆதில் ஷா பற்றி அவர்கள் பேசவில்லை. முதுகில் சுமந்து காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றி அவர்கள் பேசவில்லை. டாக்சி ஓட்டுநர் பற்றி அவர்கள் பேசவில்லை.
சில ஊடகங்கள் சஜத் அகமது பட்டை தேடிக் கண்டுபிடித்து பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள். வறுமையால் உள்ளொடுங்கிய கண்களுடன், நிலைகுத்திய பார்வை கொண்டு உள்ளுறுதியுடன் அநாயாசமாகச் சொன்னார்:
"சுற்றுலாப் பயணிகளால்தான் எங்களுக்கு வருமானம். அவர்களுக்கு ஒன்று என்றால் எதற்கும் யோசிக்க மாட்டோம். மனிதநேயத்துக்கு முன் மதமெல்லாம் ஒன்றும் இல்லை. சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்தது. அங்கிருப்பவர்கள் அழுததும் எனக்கும் அழுகை வந்தது. தீவிரவாதிகள் அவர்களை கொல்வதற்குப் பதிலாக எங்களைக் கொன்றிருக்கலாம்!"
சங்கிகள் தம் மக்களுக்கு எதிராக வஞ்சத்தைக் கட்டவிழ்ப்பார்கள் என்பது சஜத்துக்கு தெரிந்திருக்கலாம் போல.
பாஜக கூட்டம் காஷ்மீர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக இச்சம்பவத்தைப் பயன்படுத்தும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்திய அரசு இச்சம்பவத்துக்குப் பிறகு இன்னும் அடக்குமுறையை காஷ்மீர் மீது கட்டவிழ்க்கும் என்று கூட அவருக்குத் தெரிந்திருக்கலாம்.
தனது தந்தை ராமச்சந்திரனை தாக்குதலில் பறிகொடுத்த மகள் ஆரதி பேசுகிறார்:
“என் தந்தை கொல்லப்பட்டதும் பரிதவித்து நின்ற எனக்கு, ஷபீர் மற்றும் முசாபிர் என இரு காஷ்மீரி டிரைவர்கள் உதவினார்கள். ஊர், இடம் தெரியாத எனக்கு பிணவறை தொடங்கி வசிப்பிடம் வரை உடன் இருந்து உதவினார்கள். அந்நியர்களாக எங்களை அவர்கள் பார்க்கவே இல்லை. சகோதரர்களைப் போல் பார்த்துக் கொண்டார்கள். காஷ்மீருக்குப் போனதில் எனக்கு இரு சகோதரர்கள் கிடைத்திருப்பதாக சொல்லித்தான் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். அவர்களை அல்லா நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.”
வன்மத்தையும் வெறுப்பையும் அறுவடை செய்யும் கூட்டத்துக்கு நடுவே கோமாளிகளாகத் தெரிந்தாலும் பரவாயில்லை நாம் அன்பையே விதைப்போம்.
சுற்றுலாப் பயணிகள் வந்த டாக்ஸிகள், ஹோட்டல்கள் இஸ்லாமியர்களின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. குதிரை ஓட்டிகள், வழிகாட்டியவர்கள் முதல் உணவு சமைத்து கொடுப்பவர்கள் வரை இஸ்லாமியர்கள்தான்.
பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய போது, பயணிகளைப் பாதுகாத்ததும், தாக்குதலைத் தடுத்து நின்று உயிரிழந்த முதல் நபரும், இராணுவத்திற்கு முன்பாகவே முதலில் உதவிக்கு வந்தவர்களும் இஸ்லாமியர்களே.
முதலுதவி மற்றும் மீட்பு பணிகளும் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது. ஆம்புலன்ஸையும் இஸ்லாமியர்களே ஓட்டினார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்த மருத்துவரும் செவிலியரும் இஸ்லாமியர்கள். சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர்களும் இஸ்லாமியர்களே.
ஆனால், சமூக ஊடகங்கள் அந்த பயங்கரவாதிகளை மட்டும் இஸ்லாமியர்கள் என்று அடையாளமிடுகிறது.
காஷ்மிருக்குக் கைகொடுப்போம், இணைந்தே தீவிரவாதத்தை அழித்தொழிப்போம்.
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍۢ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًۭا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًۭا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَـٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًۭا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ
5:32 “…ஒருவன் ஒரு ஆன்மாவைக் கொலை செய்தாலோ அல்லது பூமியில் ஊழல் செய்தாலோ குற்றமற்றவனாக இருந்தாலும், அவன் எல்லா மனிதர்களையும் கொன்றவன் போலாவான்; ஒரு உயிரைக் காப்பாற்றுபவன் எல்லா மனிதர்களையும் காப்பாற்றியவன் போலாவான்.” என இஸ்லாம் போதிக்கிறது
- ரசிகவ் ஞானியார்