பார்ப்பனிய அதிகாரத்தை நிறுவும்படியான அதிகாரம் வாய்ந்த ஓர் அரசை உருவாக்கும் நோக்கத்தில் 1925-இல் தோற்றுவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் - இன் செயல்பாடுகளை, அதன் தொடக்ககாலத்திலிருந்து இன்றைய காலம் வரை நான்கு வகையாகப் பிரித்து அறியலாம் :
- காந்தி கொலை செய்யப்பட்ட காலம் வரை
- காந்தி கொல்லப்பட்ட காலத்திலிருந்து நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலம் வரை
- நெருக்கடி கால நிலையிலிருந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலம் வரை
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்திலிருந்து மோடியின் இப்போதைய ஆட்சிக் காலம் வரை
இந்தக் காலங்களில் அதன் இலக்கு நோக்கி மக்களை எப்படியெல்லாம் திரட்டினார்கள் என்பதும், எல்லா அமைப்புகளுக்குள்ளும் எப்படி ஊடுருவினார்கள் என்பதும், அவற்றையெல்லாம் எப்படித் தன்வயப் படுத்தினார்கள் என்பதும் நாம் அறியப்பட வேண்டிய முகாமைச் செய்திகள்.
காந்தி கொலை செய்யப்பட்ட காலம் வரை
ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட 1925ஆம் ஆண்டு முதல் 1937 வரை எட்கேவர் காங்கிரஸ் கட்சியிலும் இயங்கிக்கொண்டு இருந்தார் என்பது முகாமையானது. எனவே, அந்தக் காலங்களில் காங்கிரசோடு தொடர்பு கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சியினர் சிலரும்கூட ஆர்எஸ்எஸ்-உடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டியக் கொங்கனிப் பகுதிகளைச் சார்ந்த சித்பவன பிராமணர்களான திலகர், சாவர்க்கர் உள்ளிட்டோரின் தொடர்பில் நாக்பூரைச் சேர்ந்த பிராமணர்களே ஆர்எஸ் எஸ்-க்கான வித்தாக இருந்தாலும், அவர்களில் பெரும் பான்மையோர் கல்கத்தாவில் விவேகானந்தா நிறுவனங்களிலும் அங்குள்ள ஆசிரமங்களிலும் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்.
1938-இல் சாவர்க்கர் எழுதிய ‘நாம் அல்லது நமது தேசியத்தின் விளக்கம்’ எனும் நூலும், எட்கேவரின், ‘தேசம்’ என்பதை இந்துத்துவத்தோடு தொடர்புபடுத்திய ஆய்வும் ஆர்எஸ்எஸ் பேசக்கூடிய அடிப்படைக் கருத்துகளை வலுப்படுத்தி விளக்கப்படுத்தின.
சாவர்க்கர் தொடங்கியிருந்த ‘இந்துமகா சபையும், ஆர்எஸ்எஸ்-உம் இணைந்தே பல வேலைத்திட்டங்களை வகுத்துக்கொண்டன.
சித்பவனப் பார்ப்பனர்கள் எங்கெல்லாம் அரசு வேலைகளில் இருக்கிறார்களோ அங்குள்ளவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ்-இல் இணைக்கப்பட்டனர். அரசின் அதிகாரத் துறைகளில், படைத் துறைகளில், காவல் துறைகளில் உள்ளீடாக நுழைந்தே ஆர்எஸ்எஸ் வளர்க்கப்பட்டது.
அமைச்சர்கள் அளவில் இருந்த காங்கிரசுக்காரர்களுள் பலரும் ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினர்களாக இருந்தனர்.
எட்கேவர் மறைவுக்குப் (1940) பிறகு, நாக்பூரைச் சேர்ந்த பிராமணர் கோல்வால்கர் கல்கத்தா விவேகானந்த ஆசிரமத்தின் வழிகாட்டலில் செயல்பட்டார். 1939-இல் ஆர்எஸ்எஸ்-இன் பொதுச் செயலாளராக இருந்த அவரின் தலைமையில் இன்னும் கூடுதலான வேலைகள் நடந்தன.
1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் ஈடுபடாமல் ஒதுங்கியது மட்டுமன்றி, ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தது என்பதும், பலரையும் காட்டிக்கொடுத்தது என்பதும் வரலாற்றில் அறியப்படவேண்டிய செய்திகள்.
ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வகையில் எழுச்சியோடு அப் போராட்டம் நடைபெற்றிருந்த போதிலும், அப் போராட்டச் செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது.
அந்த இயக்கத்திற்குப் பின்னர் வன்மையாக இசுலாமிய எதிர்ப்பை அதிகப்படுத்தி இந்துக்கள் என்கிற பார்வையை விரைவுபடுத்தியது ஆர்எஸ்எஸ்.
பல பகுதிகளாக இருந்த அரசுப் பகுதிகளையெல்லாம் இந்தியாவிற்குள் இணைக்க, காங்கிரசிலிருந்த படேலின் முயற்சிக்கு ஆர்எஸ்எஸ் - இன் துணை அதிகமாக இருந்தது கவனிக்கத்தக்கது.
காசுமீரை இணைப்பதற்கு, காசுமீர் மன்னர் அரி சிங்கை 1947-இல் சந்தித்துப் பேசி இணைக்கிற வேலைகளில் கோல்வால்கரையே பட்டேல் ஈடுபடுத்தினார் என்பதும் அறியப்பட வேண்டியது.
1948 சனவரி 30ஆம் நாள் இந்து மகா சபை - ஆர்எஸ்எஸ்-இன் திட்டமிடலில் காந்தியைக் கோட்சே சுட்டுக் கொன்றதன் பின், பிப்ரவரி மாதத்தில் ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டது.
காந்தியை ஆர்எஸ்எஸ் கொல்லவில்லை எனப் பொய்கூறியது மட்டுமன்றி, தடைசெய்யப்பட்டபின் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் பதுங்கிக்கொண்டனர். பலர் அடிபணிந்து காங்கிரசுத் தலைவர்களிடமெல்லாம் மன்றாடித் தடைநீக்கம் செய்யக் கேட்டுக்கொண்டனர்.
1949 சூலை 11ஆம் நாள் தடைநீக்கப்படுவதற்கு முன்பாக, பட்டேல் கோல்வால்கரைச் சந்தித்துப் பேசியது கவனிக்கப்படவேண்டியது. ஆர்எஸ்எஸ்-ஐப் பாதுகாப் பதில் பட்டேல் மிகமிக அக்கறை கொண்டு தொடர்ந்து போராடியதும் அறியப்பட வேண்டியது.
ஆக, காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள் சிலரைத் தன் உறவுக்குள் வைத்துக்கொண்டே அரசின் நிர்வாகத் துறைகளிளெல்லாம் ஆர்எஸ்எஸ் தனக்கான ஆதரவாளர்களை அமர்த்திக்கொள்ளும் வகையில் ஊடுருவியது.
காந்தி கொல்லப்பட்ட காலத்திலிருந்து நெருக்கடி காலநிலை அறிவிப்பு வரை
ஆர்எஸ்எஸ்-இன் திட்டங்களுக்கு ஏற்ப அரசின் அனைத்துத் திட்டங்களும் பல ஊர்களின் பெயர்கள் எல்லாமும் சமசுக்கிருதப் பெயர்களாகவும் வைதீகப் பெயர்களாகவும் சூட்டப்பட்டன.
காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பின், ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டு மீண்டும் தடை நீக்கம் செய்யப்பட்ட பின், சில காலம் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. முழு நேரப் பணிகளில் இருந்த பலரும் விலகி இருந்தனர் என்றாலும், அதன் கொள்கை அளவிலிருந்து அவர்கள் விலகிவிடவில்லை.
அவர்களுள் பலர், ஆர்எஸ்எஸ் தொடர்புடைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட பள்ளி, கல்லூரிகளைத் தொடங்கிச் செயல்பட்டனர்.
இதனால், தேர்தலில் ஈடுபாடு கொள்வதற்கான திட்டத்தை ஏற்று ‘ஜனசங்கம்’ கட்சியை அதற்காக ஈடுபடுத்தி 1952 தேர்தலில் அக்கட்சி பங்கேற்றது.
அதற்கு முன்பாக 1949-இல் மாணவர்களுக்கு என்று ‘அகில பாரத்திய வித்தியார்த்தி பரிசத்’தும், 1955-இல் ‘பாரதிய மஸ்தூர் சங்க’மும் 1952-இல் ‘வனவாசிகள் கல்யாண் ஆஷ்ரம்’ எனும் அணி அமைப்புகளும் கட்டப்பட்டு வேலைகள் நடந்துவந்தன.
இதற்கிடையில் 1960-இல் கோல்வால்கர் ‘சிந்தனைக் கொத்து’ நூலைக் கொண்டுவந்து, அதனடிப்படையில் கொள்கையைப் பரப்பியது; மொழி வழியாக மாநில அமைப்புகள் உருவெடுப்பதை ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்த்தது; இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க வலியுறுத்தியது; இந்துக்களின் பாதுகாப்புக்காக அறிக்கைகளை விட்டது என அதன் பணிகள் நடந்தன.
1973-இல் கோல்வால்கர் மறைவுக்குப்பின் தேவரசு பொறுப்பேற்ற நிலையில் பல புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
1952, 1957, 1962, 1971 தேர்தல்களில் பாரதீய ஜன சங்கத்தின் வளர்ச்சி நிலையையும், அவை எங்கெங்கு வளர்ந்தன என்பதையும் கவனிக்க வேண்டும்.
அக்காலத்தில் ஆர்எஸ்எஸ்-இன் கொள்கைப் பரப்பு இதழாக 1942-இல் ‘தி ஆர்கனைசர்’ ஆங்கில இதழும், 1948-இல் ‘பஞ்ச சன்யா’ எனும் இந்தி இதழ் கிழமை இதழாகவும் கொண்டுவரப்பட்டது.
இந்தி இதழின் ஆசிரியராக வாஜ்பாய் இருந்தார்; இப்போது அதன் ஆசிரியராகத் தருண் விஜய் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.
காங்கிரசில் நேருவுக்கு எதிராக இருந்தாலும் பட்டேலும், இலால்பகதூர் சாஸ்திரியும் பிறரும் ஆர்எஸ்எஸ்-உடன் நெருக்கமாகவே இருந்தனர்.
1947-இல், தில்லி சட்டம் - ஒழுங்கைச் சரிசெய்ய தில்லி படைத்துறைத் தலைவர், ஆர்எஸ்எஸ்-ஐச் சந்தித்ததும், 1949-இல் ஆர்எஸ்எஸ் தடை நீக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் பட்டேலைப் பலமுறை சந்தித்துப் பேசியதும், 1963-இல் குடியரசு நாள் அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் அழைக்கப்பட்டு பங்கேற்கிறபடி இலால்பகதூர் சாஸ்திரி செய்ததும், நேருவின் மறைவுக்குப் பின் சாஸ்திரி இந்தியத் தலைமை அமைச்சரானதால் ஆர்எஸ்எஸ் மகிழ்வு தெரிவித்து உறவு கொண்டாடியதும், 1965-இல் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குசெய்ய ஆர்எஸ்எஸ் தொண்டர்களை இந்திய அரசே அமர்த்தியதும், ஆர்எஸ்எஸ் அரசு அதிகாரங்களில் மட்டுமல்லாது தேர்தல்களில் வெற்றி அடைகிற வகையில் பல வேலைகள் செய்துகொள்ளவும் பயன்பட்டது.
1963-இல், நேரு மறைவுற்ற ஆண்டு ஓர் ஊக்கமான நிகழ்வாக அதற்கு அமைந்தது.
இலால் பகதூர் சாஸ்திரி துணையில் பெருமளவில் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது.
விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை எல்லாப் பகுதிகளிலும் முன்னெடுக்கிற நிகழ்வின் நிழலில் ஆர்எஸ்எஸ் இந்திய ஒன்றியத்தின் எல்லா மாநிலங்களிலும் ஊடுருவத் தொடங்கியது.
விவேகானந்த கேந்திரா எனும் அமைப்பைத் தொடங்கி அதற்குள் பிற கட்சியினரை இணைப்பதுபோல் இணைத்து அவர்களைப் படிப்படியாக ஆர்எஸ்எஸ் தொடர்பினராக ஆக்கியது.
இந்நிலையில், இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல்களும், அவரின் அதிகார வெறிப் போக்குகளும் மக்கள் நடுவில் எதிர்ப்பை உருவாக்க, காங்கிரசை எதிர்த்துக் களம் காணத் திட்டமிட்டார் செயப்பிரகாஷ் நாராயணன்.
பிரசா சோசலிசுட் கட்சி - (செயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான கட்சி), லோக்தள், பழைய காங்கிரசுக் கட்சி (காமராசர் மறைவுக்குப் பின்), சுதந்திராக் கட்சி (இராஜாஜி மறைவுக்குப்பின்), பாரதிய சன சங்கம் (ஆர்எஸ்எஸ்-இன் தேர்தல் கட்சி) ஆகியவற்றை இணைத்து உருவாக்கிய ‘ஜனதாக் கட்சி’ காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது.
இந்திரா காந்தியின் அரம்பப்போக்கை வீழ்த்திட இந்த அளவு ஒருங்கிணைவு நடந்ததும், அதில் பாரதிய ஜன சங்கம் இணைந்ததும், ஆர்எஸ்எஸ்-ஐ ஒரு சிறந்த இயக்கம்போல் மக்களிடையே காட்டிடப் பயன்பட்டது. அதுமட்டுமன்றி ஆர்எஸ்எஸ்-இன் தலைவர் தேவரசின் 1964ஆம் ஆண்டின் பேச்சு, ஆர்எஸ்எஸ்-ஐப் புதிய முகத்தில் மக்களிடம் காட்டியது.
இப்படியாக வாய்ப்பியத் தன்மையில் உருமாறி இயங்குவதும், மாற்றி மாற்றிப் பேசுவதும் வைதீகப் பார்ப்பனியத்தின் இயல்பு என்பதை மக்கள் எளிதே இன்றுகூட உணரமுடியாத சூழலில், அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அவருடைய பேச்சில், “தீண்டாமை தவறு இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே தவறில்லை என்றும்,
“புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும் அறிவியல் வந்துவிட்டாலும் ராகுவையும் கேதுவையும் கிரகணத்தின் போது சூரியன் விழுங்குகிறான் என்று நம் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கின்றனர்... இருக்கலாமா? நிலை மாறிவிட்டது; அதுபோலவே சூழ்நிலையும் முகாமையானதாகிவிடுகிறது... மரபுப் பெருமைகள் சமகால அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கவேண்டும்” என்றும்,
“பல நூற்றாண்டுகளாக நம் தலித் சகோதரர்கள் மிக அதிகமாகத் தொல்லைகள் பட்டு வருகின்றனர். அவற்றைக் குறித்து நம் மனங்களில் வலி உண்டாகிறது, சமன்மை இன்மையை மாற்றும் வகையில் நம் மனநிலை இருக்க வேண்டும்...
அடுத்து இந்து தேசத்தை ஒருங்கிணைத்தாக வேண்டும். இன்று ஒருங்கிணைப்பு மிகத் தேவையானது. நான்கு வர்ணமுறை இன்றும் தொடர்ந்து வருவது தொடர்பான என்னுடைய நிறைவின்மை அச்சத்தில் முளைத்ததுதான்...
இந்துக் குமுகத்தில் இது கடைப்பிடிக்கப் பட்டால் அது தீண்டாமையை ஒழிக்கக் கட்டாயம் உதவாது என்பதில் ஐயமே வேண்டாம்”
என்றெல்லாம் அவர் பேசியது ஆர்எஸ்எஸ் - இல் இணைய வேண்டுமெனத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பரப்புவதற்கு அவர்களுக்குப் பயன்பட்டது.
பொதுவுடைமைக் கருத்துக் கொண்டிருந்த செய பிரகாஷ் நாராயணன், பாரதிய ஜன சங்கத்தையும் இணைத்து ஜனதாக் கட்சியை உருவாக்க அதற்குத் தேவரசின் இத்தகைய பேச்சுகளும் காரணமாக இருந்தன.
ஆனால், மிக விரைவிலேயே செயப்பிரகாஷ் நாராயணனும், இராஜ்நாராயணனும் “ஆர்எஸ்எஸ் திருந்தவே இல்லை” என்பதை வெளிப்படுத்திக் கண்டிக்கலாயினர்.
ஆக, ஆர்எஸ்எஸ், அரசியலுக்குள் நுழையவும், வெகு மக்களை ஈர்க்கவும் தன் பேச்சில் காட்டிய மாற்று உத்தி அதற்குப் பெரிய அளவில் பயன்பட்டது.
“இந்துக்களை ஒன்றிணைக்க வேண்டும்; இந்தியாவை இந்து நாடாக அமைக்க வேண்டும்” எனும் நிலையில் அவர்களின் நோக்கத்தைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.
சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே ஆர்எஸ்எஸ் இல்லை; மற்ற அனைத்துச் சாதியினரையும் இணைக்க வேண்டுமானால் வைதீகப் பார்ப்பனியக் கருத்துகளை, கோட்பாடுகளை அனைத்துச் சாதியினரின் அறிவிலும் புகட்டிட வேண்டும் என்பதையே ஆர்எஸ்எஸ் அப்போது செய்யத் தொடங்கியது.
இந்திராவின் நெருக்கடிகால ஆட்சியில், ஜனதாவிற்குள் புகுந்து தன் களப் பணிகளைப் பெருமளவில் திட்டமிட்டுச் செய்திட ஆர்எஸ்எஸ் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டது.
நெருக்கடி கால நிலையிலிருந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலம் வரை
நெருக்கடி கால ஆட்சியில் ஆர்எஸ்எஸ், ஜமாய்த் இசுலாமி உட்பட 27 அமைப்புகள் தடை செய்யப்பட்டன.தடை செய்யப்பட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பலர் தலைமறைவாகப் பணியாற்றியதாக ஆர்எஸ்எஸ் பெருமைப்பட்டுக் கொண்டது.
நெருக்கடி காலநிலை ஓராண்டில் செயப்பிரகாஷ் நாராயணன் எடுத்த முயற்சியால் ஜனதாக் கட்சியில் இணைந்து ஆர்எஸ்எஸ் ஜன சங்கத்தைத் தேர்தலில் நிறுத்துவதைப் பார்த்து, இந்திரா காந்தி தேவரசுக்குத் தூது அனுப்பி, ஜனதாவில் சேராமல் இருந்தால் ஆர்எஸ்எஸ் தடையை நீக்கிவிட்டுத் தொண்டர்களை விடுதலை செய்வதாகக் கேட்டதும், ஆர்எஸ்எஸ் அதற்குக் காலம் கடந்து விட்டது என அறிவித்ததுமாகச் சொல்லப்படும் நிகழ்வு கவனிக்கவேண்டிய செய்தி.
இந்திராகாந்தி கொண்டுவந்த நெருக்கடி கால ஆட்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில், பாரதிய ஜனசங்கம் உள்ளடங்கிய ஜனதாக் கட்சியே பெருமளவில் வென்றது.
1977-இல், மொத்தம் 542 நாடாளுமன்றப் பதவிகளில், 345 இடங்களில் ஜனதாக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஏறத்தாழ 95 இடங்கள் தங்களுக்குக் கிடைத்தது என ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொண்டது.
ஜனதாக் கட்சியில் ஜன சங்கத்தைச் சேர்த்ததெல்லாம் ஆர்எஸ்எஸ்-இன் வெகுமக்கள் ஆதரவைத் திரட்டுதலுக்கு வழியமைத்ததாக ஆகிவிட்டது.
காங்கிரசு உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் எல்லாம் ஆர்எஸ்எஸ்-ஐ நடுவாக வைத்துச் சுழலும்படி செய்து கொண்டது, ஆர்எஸ்எஸ். அதன் தொடர்ச்சியாக,
“முசுலீம்களும் ஆர்எஸ்எஸ்-இல் இணையலாம்” என ஆர்எஸ்எஸ் தீர்மானித்தது.
“முசுலீம்கள் இந்தியாவைத் தங்கள் நாடாகக் கருதினால், தங்களின் கடந்த காலம் இந்த நிலத்தைச் சேர்ந்தது என்று நம்பினால், இந்துச் சடங்குகளைச் செய்ய அவர்கள் ஒப்புக் கொண் டால், ஆர்எஸ்எஸ்-இன் கதவு அவர்களுக்குத் திறந்திருக்கும்”
என்று அறிவித்தனர். மும்பையில் முகமத் கரீம் சக்லா,
“நான் மதத்தால் முசுலீம்; ஆனால் இனத்தால் இந்து”
என்று அறிவித்ததாக ஆர்எஸ்எஸ் பெருமை கொண்டது.
`இந்தியன்’ என்று கூட ஓர் இனம் இல்லாதபோது, `இந்து’ என்பது எப்படி இனமாகும்? என்ற கேள்விகள் ஆர்எஸ்எஸ் மீது அப்போது வைக்கப்படவில்லை.
அது மட்டுமன்றி ஜனதாக் கட்சியை எப்படியாவது முழுமையாக விழுங்கிவிட வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் திட்டமிட்டது.
அதில், அனைவரையும் ‘இந்துவாக’ ஆக்குகிற முயற்சியும், இந்தியாவை ‘இந்து நாடு’ என அறிவிப்பதையும் ஜனதாக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜெயபிரகாஷ் நாராயணன் மறைவுக்குப்பின் ஜனதாக் கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டைகள் நடந்தன.
ஜனதாக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், 1980-இல் இந்திரா காந்தியே மீண்டும் ஆட்சிக்கு வந்ததை ஆர்எஸ்எஸ் பெரிய வருந்தத்தக்க நிகழ்வாகவே பார்த்தது.
பாரதிய ஜன சங்கத்தின் பத்தாவது தலைவராக இருந்த தீன்தயாள் மறைவு பெரும் சிக்கலைக் காங்கிரசுக்குக் கொடுக்கும் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.
இந்திரா கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பினை ஆர்எஸ்எஸ் எதிர்த்தது. அதேபோல் வங்கிகளைத் தேசிய மயம் ஆக்கியது மிகப்பெரும் தவறு என ஆர்எஸ்எஸ் அறிவித்தது.
ஆனால், எதுவும் இந்திரா காந்திக்கு எதிராக எடுபடவில்லை.
ஆனால், இந்தக் காலக்கட்டமே ஆர்எஸ்எஸ் மிக வீச்சாக பரந்துபட்டு எல்லா மொழித் தேசங்களுக்குள்ளும் ஊடுருவி அந்த அந்த மொழித் தேசச் சூழலுக்கு ஏற்ப மாற்றிமாற்றிப் பேசி ஒருங்கிணைத்த காலம் என்று அறியலாம்.
இந்திராகாந்தியின் ஆட்சி, ஊழல், முறையற்ற ஆட்சி என்கிற அளவில் மட்டுமன்றி பிற மொழித்தேச வளர்ச்சிகளை நசுக்கிய வகையிலும், பார்ப்பனியத்தை வளர்த்த வகையிலும் எல்லாம் வெறி உணர்வோடு நடந்தன.
எனவேதான், அந்தந்த மொழித் தேச உணர்வு அடிப்படையிலும், ஒவ்வொரு தேச மக்களும் தங்களுக்கான உரிமைகளுக்கு - விடுதலைக்குப் போராடத் தொடங்கினர்.
காஷ்மீரம், பஞ்சாப், அசாம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு தேசங்களின் உணர்வுகளையெல்லாம் ஆர்எஸ்எஸ் எப்படியெல்லாம் திசை திருப்பியது, ஊடுருவி அழித்தது என்பது கவனமாக அறியப்பட வேண்டியவை.
ஜனதாக் கட்சிக்குள் இருந்து செயல்பட்ட ஜன சங்கத்திற்கு, ஜனதாக் கட்சியின் கதவுகள் மூடப்பட்டு விட்டதால் ‘பாரதிய ஜனதா கட்சி’ என்கிற தேர்தல் கட்சியான வடிவத்தை ஏப்ரல் 1980-இல் முன்னெடுத்தது.
ஆனால், அதற்கு முன்பாக 1980-இல் சனவரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் பங்கேற்க வில்லை.
1984 தேர்தலில் ஆந்திராவில் ஒன்று, குஜராத்தில் ஒன்று என்ற அளவில் இரண்டு இடங்களில் மட்டுமே ஆர்எஸ் எஸ்-இன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 374 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆர்எஸ்எஸின் பணி முடுக்கமானது.
அசாமில் ...
அசாமில், விடுதலை முன்னணி வலுப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு இயங்கத் தொடங்கிய ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’, ‘அசாம் கன பரிசத்’ - அமைப்புகளுக்குள்ளும் ஆர்எஸ்எஸ்-இன் சங்பரிவார்கள் உள் நுழைந்தனர்.
அசாமிற்குள் நுழைந்திட்ட வங்காள ஏதிலி (அகதி) களில் இந்துக்கள் - இசுலாமியர்கள் எனும் வேறுபட்ட பார்வை தேவை என்பதாகத் தூண்டி நச்சுக் கருத்துகளைப் பரப்பினர்.
அங்கு, ஆர்எஸ்எஸ் இயக்கங்களைச் சங்பரிவார் துணை கொண்டே இயக்கினர்.
விவேகானந்தர் கேந்திராவை அசாமிலும் நிறுவி மருத்துவம், கல்விக் கூடங்கள் அமைத்து அதன் வழியாக மக்களை ஈர்த்து ஆர்எஸ்எஸ்-சிற்குக் கொண்டுவரும் பணிகளை விடாமல் செய்து வந்தனர்.
இன்றைக்கு மோடி குடியுரிமைச்சட்டத் திருத்தத்தை முதலில் அசாமில் நடைமுறைப்படுத்திக் கலவரத்தை உருவாக்கியது வரை பல்வேறு வகையில் ஆர்எஸ்எஸ்-இன் நச்சு ஊடுருவல் நடைபெற்று வருகிறது.
கிழக்குத் தேசங்களில் ...
அருணாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆர்எஸ்எஸ்-காரரான இதழியலாளரைப் பகுதி நேரமாக விவேகானந்த கேந்திராவை உருவாக்கிக் கவனிக்கச் செய்தது.
அதை நிறுவிய பின் அந்தக் கேந்திரத்தின் வழியாகப் பள்ளிக் கூடங்கள் நடத்துவதாக அந்த தேச முதல்வரிடம் பேசி அதற்காகப் பெருமளவில் நிலத்தை ஒதுக்கி இலவயமாகப் பெற்றதுடன், அதில் கட்டடம் கட்டவும், மேசை நாற்காலிகள், பிற கருவிகள் என அனைத்தையும் இலவயமாகவே பெற்றனர்.
1926 முதல் ஆர்எஸ்எஸ் முழுநேரப் பொறுப்பாளராக இருந்த ஏக்நாத் ரானடே, முழு அதிகாரக் கட்டுப்பாட்டில் இயங்கும் விவேகானந்தா கேந்திரா மூலம் 1977-இல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் ஏறத்தாழ 40 பள்ளிக்கூடங்களை அக் கேந்திரத்தின் வழியாக நிறுவி ஆளுகை செய்கிற அளவில் ஆர்எஸ்எஸ் முழுமையாக அந்த மொழி மாநிலத்தில் ஊடுருவிக் களப் பணிகள் செய்யத் தொடங்கியது.
இதற்காகப் பிற எல்லா மொழித் தேச ஆர்எஸ்எஸ் சாகாக்கள் பலரையும் அந்த கிழக்குத் தேசங்களுக்கு அனுப்பியது, ஆர்எஸ்எஸ்.
1970-கள் வரைகூட, பெருமளவில் தொடர்பில்லாத அப்பகுதிகளைப் பிற்காலத்தில் முழுமையாகக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அத்திட்டம் பெரும் அடித்தளமாக அமைந்தது.
அங்கு நடைபெறும் கிறித்துவ மதச் செயல்பாடுகளால், ஏதோ அந்த மொழி மாநிலங்கள் பறிபோய்விடும் நிலைக்கு ஆளாக்கப்படுவதுபோல் காட்டி, பெரிய அச்சத்தை உருவாக்கிப் பல வெளியீடுகள், ஆய்வு நூல்கள் வெளியிட்டு வருகிறது.
இந்தவகையில் ‘இந்தியன் சர்ச்’ என்கிற பெயரில் ‘விராக் பாச் போரே’ - என்ற இதழியல் பொறுப்பாளரின் நூல் குறிப்பிடத்தகுந்தது.
ஏறத்தாழ இதே நிலைப்பாடுகளில்தான் நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் பகுதிகளிலும் ஊடுருவத் தொடங்கியது, ஆர்எஸ்எஸ்.
சாதி சங்கங்கள் வைத்து அதை ஊக்கப்படுத்தி வளர்த்தது, பிராமணர்களிடையே சங்கங்கள் உருவாக்கிச் செயல்பட வைத்து, அதைப் பயன்படுத்துவது போன்ற வையும் ஒரு வேலைத் திட்டமாக நடந்து வருகிறது.
பஞ்சாபில் ...
பிற தேசங்களில் நுழைந்தது போலன்றி, பஞ்சாப் சீக்கியர்களிடையே ஆர்எஸ்எஸ் நுழையத் திட்டமிட்டதில் உள்ள பல நுணுக்கங்களையும் கவனமாக அறிந்தாக வேண்டும்.
சீக்கியர்களிடையே பரவியிருந்த காலிசுத்தான் விடுதலை இயக்கச் செயல்பாடுகள், சீக்கியர்களே மேலாண்மைக்கு உரியவர்கள் எனும் எண்ணங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட ஆர்எஸ்எஸ், ‘இராஷ்டிரிய சீக்கியர் சங்கம்’ எனும் பெயரில், அதுவும் ஆர்எஸ்எஸ் என வருகிறபடியான ஓர் அமைப்பை உருவாக்கியது.
“இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உறவை ஏற்படுத்தி இந்துத்துவ கருத்துகளைப் பாதுகாப்பதற்கே சீக்கிய மதம் தோற்றுவிக்கப்பட்டது”
- என்றும்,
“ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த மகனைச் சீக்கியனாக்குவார்கள்”
- என்றும் புரட்டல் பேசி, விஷ்வ இந்து பரிஷத் அதற்கான விரிந்த பொறுப்புகளை எடுத்துக்கொண்டு ஏறத்தாழ ஆறு நிறுவன அமைப்புகளைச் சீக்கிய ஒற்றுமைக்காக அமைத்தது.
ஆனால், 2004 சூலை 23ஆம் நாள், சீக்கியத் தலைமையகம்,
“ஆர்எஸ்எஸ்-இன் தூண்டலில் நடைபெறும் இராசுட்டிரிய சீக்கிய சங்கம் தவறானது”
- என்றும்,
“அது ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் சூழ்ச்சியாய் இயங்குவது”
- என்றும் வெளிப்படுத்தித் தடை செய்தது.
ஆனாலும், அது விடாமல் செயல்பட்டு வருகிற நிலையில், 2009-இல் அந்த சீக்கியச் சங்கத் தலைவர் குண்டாசிங்கை காலிஸ்தான் சீக்கிய இளைஞர் ஒருவர் கொலை செய்தார்.
அதன் பிறகும், விடாமல் தொடர்ந்து அந்த சீக்கிய சங்கத்தை நடத்தி வருவதும், ஆர்எஸ்எஸ் குரு ஏகர்சிங் என்பார் இப்போது அச் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றி வருகிறார் என்பதும் முகாமையாகக் கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.
மராட்டியத்தில் ...
மராட்டியத்தில்தான் ஆர்எஸ்எஸ் முதன் முதலில் வேரூன்றித் தொடங்கியிருந்தது. மேற்குக் கடற்கரையோரத் தேசங்களில் உள்ள சித்பவன் பார்ப்பனர்கள் எல்லோரையும், ஆர்எஸ்எஸ் அதன் வலைக்குள் முழுமையாகக் கொண்டிருந்தது.
திலகர், சாவர்க்கர், எட்கேவர், கோல்வால்கர், தேவரசு என எல்லா சித்பவன் பார்ப்பனர்களும் தொடர்ந்து அந்த வேலைகளைச் செய்துவந்தனர்.
அவர்களைக் கடந்து மகாத்மா பூலே அவர்களாலும் அம்பேத்கர் அவர்களாலும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பெருவாரியான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைத் திரட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் போட்ட சூழ்ச்சித் திட்டம் கவனத்திற்கு உரியது.
1983-இல் ‘சமர்சதா மஞ்ச்’ என்கிற அமைப்பை ஏப்ரல் 14 அன்று திட்டமிட்டுத் தொடங் கியது. அந்த நாள் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதோடு, எட்கேவர் பிறந்த நாளாகவும் சொல்லி இணைத்துப் பெருவிழாவை எடுத்தது.
பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்கச் சொல்லி ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்தது. சமர்சதா மஞ்ச் சார்பில் ஆர்எஸ்எஸ், அம்பேத்கர் யாத்திரை ஒன்றைத் திட்டமிட்டு நடத்தியது. அந்த யாத்திரையில் அம்பேத்கர் படம், பூலே படத்துடன் மநு நூல் படத்தையும் வைத்துக் கொண்டு 7000 கிலோமீட்டர் தொடர்ந்து 47 நாள்கள் மராட்டியம் முழுமையும் அந்த யாத்திரை சுற்றி வந்தது.
சமர்சதா மஞ்சு சார்பில் இலக்கிய நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் நடத்தி ‘கட்கோ பாவா சமதா’ விருது என்கிற பெயரில் இந்திய ஒற்றுமை இலக்கியங்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துப் பலரையும் இணைத்தது.
மராட்டியத்தில் பராதிகள், கோபாலர்கள், மே தங்கி, ஜோசி, தேவதாசிகள், பில்கன், மாரியவைலே போன்ற பழங்குடியினரிடையே களப்பணி செய்து அவர்களின் வளர்ச்சிக்குத் துணைசெய்து அவர்களையெல்லாம் அதன் அரங்குக்குள் கொண்டுவந்தது.
பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தி வருவதும், சிவாஜியை முன்னிறுத்தி வெகுமக்களைத் திரட்டுவதும், சிவசேனை இயக்கப் போக்குகளையும் தங்களுக்கு வாய்ப்பாக்கிக் கொண்டதும் - என மராட்டியத்தில் ஆர்எஸ்எஸ்-ஐப் பெரிதாக வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
பிற பகுதிகளில் ...
அவ்வாறாகவே ஒவ்வொரு மொழித்தேச மாநிலங்களுக்குள்ளும் நுழைந்து, அம்மொழி மாநில மக்களைத் தங்களின்கீழ் திரட்டிக் கொள்ள பல்வேறு தனித்தனி முயற்சிகளை ஆர்எஸ்எஸ் முன்னெடுத்தது.
கர்நாடகாவில் ‘இந்து சமேஜோத்சவம்’ என்கிற பெயரில் இந்துக்களைச் சமநிலைப்படுத்தி ஒருங்கிணைந்த பெருவிழா என்கிற பொருளில் ஒரு பெரும் விழாவை முன்னெடுத்தது.
கர்நாடக ஆர்எஸ்எஸ்-உம், விஸ்வ இந்து பரிஷத்தும் இணைந்து நடத்திய விழாவில் இந்துமத மடாதிபதிகளையும், வைதீக பிராமண ஆச்சாரிகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக உணவு உண்ணும்படியும் செய்தது.
அதேபோல் 1982 முதல் ஆண்டுதோறும் ‘இந்து சங்கமம்’ எனும் பெயரில் ஒரே வகை உடை அணிந்து முதல் முறையாக வெங்காலூரில் 20,000 பேரும் கூடி ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் அறிவிப்பைச் செய்தது.
கேரளத்தில், நம்பூதிரிகளின் தலைமையில் ஆர்எஸ்எஸ் பெருமளவில் வேலையைத் தொடங்கியது.
ஆட்சி அதிகார அளவில், ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் கேரளத்தில் காலூன்றவில்லையானாலும், குமுக ஆளுமை அளவில் அதன் உள்நுழைவு ஊடுருவல் சொல்லும்படியாக உள்ளதை அறியவேண்டும்.
கேரளத்தின் குருவாயூர், சபரிமலை, ஐயப்பன், பகவதி அம்மன் விழா போன்ற ஒருங்கிணைப்புகளை இந்துக்களின் ஒருங்கிணைப்பாகக் காட்டி, நம்பூதிரி, நாயர்களோடு ஈழவர்களை, புலையர்களை ஒருங்கிணைக்கத் திட்டங்களை அமைத்துக் கூடுதல் கவனம் செலுத்துகிறது, ஆர்எஸ்எஸ்.
அதேபோல், வெளிநாடுகளிலும் திட்டமிட்டு அந்தந்த நாடுகளுக்கென்று தனித்தனித் திட்டங்களோடும் பெயர்களோடும் இயங்கி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் ‘தெற்காசிய நண்பர்கள்’ என்கிற பெயரிலும், மியான்மரில் ‘சனதன் தர்ம சுயம் சேவக் சங்கம்’ என்கிற பெயரிலும், மொரீசியசில் ‘மொரீசியசு சுயம் சேவக் சங்கம்’ என்கிற பெயரிலும், அமெரிக்காவில் ‘இந்து சுயம் சேவக் சங்கம்’ என்கிற பெயரிலும் திட்டமிட்டு இயங்கத் தொடங்கியது.
(தொடரும்)
- பொழிலன்