நாங்குநேரி பள்ளி மாணவர் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம், அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் காவலரையே கூட்டாகச் சேர்ந்து தாக்கிய சம்பவம், இப்போது திருநெல்வேலியில் எட்டாம் வகுப்பு மாணவர் தன்னோடு படித்த மாணவரோடு தன் ஆசிரியரையும் அரிவாளால் வெட்டியது - இவையெல்லாம் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் மாணவர்களின் நடத்தை குறித்தும் பெரும் விவாதங்களைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன.
மாணவர்கள் மத்தியில் எழுகின்ற வன்முறைக்குக் காரணமான அடிப்படைகளை ஆராய்ந்து அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளை அரசு வேகப்படுத்தாத வரையில் இந்த நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எரிவதை அணைக்காத வரையில் கொதிப்பதை எப்படி நிறுத்துவது?.
சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் காவலரையே தாக்கும் சூழல் உருவாகிவிட்ட நிலையில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி மாணவர்களின் குற்றங்களை எல்லாம் தடுத்து விடலாம் என்கின்ற பார்வை கொக்கின் தலையில் வெண்ணெய்யை வைத்துக் கொக்கைப் பிடித்து விடலாம் என்கின்ற பழமொழியையே நினைவுக்குக் கொண்டு வருகின்றது.
குற்றத்தின் அடிப்படையை ஆராய்வோம்!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எழுகின்ற குற்றங்களை ஆராயாமலே இரண்டு அடிப்படை உண்மைகளை எல்லோராலுமே உணர முடியும். ஒன்று சாதி, மற்றொன்று போதைப்பழக்கம்.
இவை இரண்டும் மாணவர்களிடம் எப்போதும் இல்லாத அளவிற்குக் கூடுதலான தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றன. சாதியப் பற்றையும் போதைப் பழக்கத்தையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை சமூக ஊடகங்கள் சாதிச் சங்கங்கள், சாதியக் கட்சிகள், பிற அரசியல் கட்சிகளும் முன்னெடுக்கின்றன. சமூக ஊடகங்களின் இன்றைய வளர்ச்சி மாணவர்களால் தவறான போக்கிற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்வுகள், அது குறித்த விவாதங்கள் முன்பைவிட வாட்ஸ்ஆப் போன்ற குழுக்களின் வழி மிக வேகமாகப் பரப்பப்பட்டு அடுத்த நிமிடமே செயலாக்கம் பெற்றுவிடுகின்றன. இப்படி விரைவாகச் செயலாக்கம் பெறுகின்ற செயல்களில் வேண்டாத குப்பைகளே அதிகம். சாதியம் குறித்து நடைபெறுகின்ற பெருமித உரையாடல்கள் எல்லாம் இந்தச் சமூக ஊடகங்கள் வழிதான் பரப்பப்படுகின்றன.
இன்னொன்று போதை. இந்தப் போதை பல்வேறு வடிவங்களில் மதுவாக, பாக்குகளாக, கஞ்சாவாக, பான் மசாலா, புகையிலைகளாக மிக எளிதாக மாணவர்களின் கைகளுக்குக் கிடைக்கும் சூழல் இன்றைக்கு உருவாகி விட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் புகைப்பதற்கே அஞ்சிய காலம் ஒன்று உண்டு. இதற்கு முற்றிலும் மாறான நிலையே இன்றைய வீதிகளில் நிகழ்கின்றன. இயல்பாக எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்ற சூழலை அரசியலும் சமூகமும் சேர்ந்தே உருவாக்கி வைத்திருக்கின்றன.
சாதிய உணர்வைத் தணிப்போம்
முன்பு எந்தத் தலைமுறையினரிடமும் இல்லாத சாதியப் பற்றை இன்றைய தலைமுறையினரின் உள்ளத்தில் அரசியல்வாதிகள் வெறியூட்டி வளர்த்து வைத்திருக்கின்றனர். அதற்கு இந்தச் சாதி தான் இப்படிச் செய்கிறது, அந்தச் சாதிதான் இப்படிச் செய்கிறது என்று ஒற்றைச் சாதியை விரல் நீட்டிக் குற்றம் சுமத்தி விடாதவாறு எல்லா கட்சிகளுமே இந்த வேலையை மிகச் சிறப்பாகத் தேர்தல் களம் தொடங்கி வேட்பாளர் அறிமுகம் வரையில் கச்சிதமாகச் சுயசாதி நிலைபாட்டை எடுக்கின்றன. எந்தத் தொகுதியில் எந்தச் சாதியினரின் எண்ணிக்கை அதிகமோ, அந்தச் சாதியினரையே அனைத்துத் தேர்தல் கட்சிகளும் களம் இறக்குகின்றன. தேர்தல் பிராச்சாரத்திற்கு வெளிவருகின்ற பிரச்சாரப் பாடலில் தொடங்கி இளைஞர்கள் போடும் டீ - சர்டுகள் வரையிலும் சாதியச் சாயம் அப்பிக் கிடக்கின்றன. அப்படியான சமூகச் சூழலில் இருந்து வளர்ந்து வருகின்ற மாணவர்களின் சிந்தனை என்பது சீழ் நிறைந்த சிந்தனைகளாகவே மாறிப் போயிருக்கின்றன. இந்தச் சிந்தனைகளுக்கு மேலும் வலிமையூட்டிகளாக வாட்ஸ் ஆப் பரப்புரைகளும் , பெரியோர்களின் ஆண்டப் பரம்பரைக் கதையாடல்களும் தூபம் போட்டு வளர்த்து விடுகின்றன.
பெரிய திரையான திரைப்படங்கள் சாதிய வன்மத்தை எதிர் கதாபாத்திரமாகக் காட்டினாலும் காட்டப்படுகின்ற அந்த எதிர் கதாபாத்திரங்கள்கூட சாதிய வன்மம் பேசுகின்ற வாட்ஸ்ஆப் குழுக்களில் கொண்டாடப்படுகின்ற மனநிலையை ஒரு சமூகம் உருவாக்குகிறது எனில், அந்தச் சமூகத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? இதற்கு உதாரணம் மாமன்னன் திரைப்படத்தின் இரத்தினவேல் கதாபாத்திரம். இப்படியான வன்மத்தையும் மாணவர்கள் உள்ளத்தில் எழுப்புகின்ற உரையாடல்களையும் சாதியப் பெருமித கதையாடல்களையும் தவிர்ப்பதன் மூலமாகச் சாதிய உணர்வை மட்டுப்படுத்தும் மனநிலையை எல்லோரிடத்திலும் உருவாக்க வேண்டும்.
போதைக்கு எப்போது கடிவாளம்?
அரசு தற்போது ஐந்நூறு டாஸ்மாக்களை மூடியிருப்பது வரவேற்கத்தக்க செயலாக இருந்தாலும், அதனைவிட பன்மடங்கு வீரியத்துடன் இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கின்ற கஞ்சா, பான்மசாலா போன்ற போதை வஸ்துகளின் கட்டுப்பாட்டையும் தீவிரப்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும். மது வாங்க வரும் நபர்களுக்கு வயது வரம்புகள் தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த வயது வரம்பு கல்லூரி மாணவர்களின் வயது வரம்பை உள்ளடக்கியதாக அமைந்திருக்க வேண்டும் என்பன போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
போதை வடிவங்களில் இருக்கின்ற புகையிலையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இப்படி போதைப் பொருட்கள் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கைகளுக்குச் சென்று சேர்கின்றதோ, அந்த ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டிய ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும்.
பெற்றோரும் ஆசிரியரும் என்ன செய்கிறார்கள்?
இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்தாத பெற்றோர்களாகவே இருப்பார்கள். அல்லது மதுபோதைக்கு ஆட்பட்டு இருக்கின்ற பொறுப்பற்ற பெற்றோர்களின் குழந்தைகளாகவே பெரும்பாலான மாணவர்கள் இருப்பார்கள். அம்மாணவர்களின் பின்புலம் ஆராயப்பட வேண்டும். இப்படி ஆராய்வது என்பது எதிர்காலத்தில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற மாணவர்களை அடையாளப்படுத்தி அம்மாணவர்களை நெறிப்படுத்தவும் இம்மாதிரியான ஆய்வுகள் துணை நிற்கும்.
பெற்றோருக்கு அடுத்தபடியாக மாணவர்களின் உள்ளத்தில் பெறும் தாக்கத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். சுய சாதிய அடிப்படையில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பேசி தங்களுக்குத் தேவையான சில காரியங்களை நிகழ்த்திக் கொள்கின்ற போக்குகள் எப்போதும் இல்லாததைவிட தற்போது அதிகரித்திருக்கிறது. இந்த ஆரோக்கிய மற்ற சூழலையும் அரசும் பள்ளிக்கல்வித் துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் எப்படி ஆசிரியராக இருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையையும் நாம் சேர்த்தே தேட வேண்டும்.
பள்ளிகள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அனைத்து மாணவர்களின் சாதிகளை வெளிப்படையாக எழுதுவதை விடுத்து அலுவலக் கோப்புகளில் மட்டுமே மாணவர்களின் சாதிய பெயர்களை அலுவலகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு மாணவரின் சாதி என்ன என்பதை மற்ற மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வழியை ஓரளவிற்கு இந்த நிலைப்படு அடைத்து வைக்க வழியாகவும் அமையும்.
உரையாடலும் கதைகளும் தீர்வாகட்டும்.
சட்டங்கள் என்ன செய்யும்? குற்றங்கள் எழுந்த பின் தடுக்கும். அதுவா சிறந்த வழி? வருமுன்னே காப்பது தானே சிறந்த பாதுகாப்பாக இருக்கும். அவ்வாறான பாதுகாப்பு வழிகளை எல்லோரும் சேர்ந்து உருவாக்க முற்பட வேண்டும். வளர்ந்து வரும் இளம் தலைமுறைகளின் உள்ளத்தில் நல்ல உரையாடல்கள், கதையாடல்கள் மூலம் சமத்துவமான மனநிலைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து கொண்டு சேர்க்க வேண்டும். மாணவர்களை நெறிப்படுத்துவது பள்ளிகளின் வேலை. ஆசிரியர்களின் பணி என விட்டுவிடாமல் சமூகம் , சமூக ஊடகங்கள், பெற்றோர் என எல்லோரும் தொடர்ந்து நல்ல உரையாடல்களையும் நல்ல கதையாடல்களையும் நிகழ்த்துவதன் மூலமாக மாணவர்களை இது போன்ற சாதிய நடவடிக்களில் இருந்தும் போதை அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டு எடுத்து நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். சாதியப் பெருமைகள் தவிர்த்து மொழி, பண்பாட்டுப் பெருமைகள் பேசப்பட வேண்டும். தமிழினத்தின் பேசப்பட வேண்டிய மாண்புகள் மொழி, இலக்கியம், இலக்கணம், உணவு, மருத்துவம், உழவு என எத்தனையோ இருக்கின்றன. இவைகளை மாணவக்காதுகளுக்கு விருந்தாக்குங்கள் வன்முறைக்கு வாய்ப்புக் குறையும்.
- மகா.இராஜராஜசோழன், குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.