பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் 5-ஜூலை-2024 ஆம் தேதி ரவுடிகளால் மிகக் கொடூரமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தமிழகம் தாண்டி இந்திய அளவில் பேசப்படுவதோடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் ரவுடியிசமும் அம்பலப்பட்டு போய் இருக்கின்றது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் சகோதரர் புன்னை பாலா, அவருடைய நண்பர்கள் என அறியப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் என 8 பேர் சரணடைந்துள்ளனர். இந்தப் படுகொலை சம்பவம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படுகின்றது.

கொலை செய்துவிட்டு சாகவாசமாக நீதிமன்றத்தில் சரணடையும் அளவிற்கு தமிழகத்தில் ரவுடிகளின் கை மோலோங்கி இருக்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது.armstrong and accusedபடுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறையும், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவும் மூன்று தடவை எச்சரிக்கை விட்டிருந்ததாகவும், ஆனால் அதனை செம்பியம் போலீசார் கண்டு கொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

காவல்துறையின் இந்த அலட்சியத்தால் கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து வந்த கொலைக் கும்பல் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவரையே ரவுடிகள் வெட்டிக் கொல்லும் நிலையில் சட்டம் ஒழுங்கு இருக்கின்றதென்றால், அதைவிட இந்த அரசுக்கு என்ன அவமானம் இருக்க முடியும்?

தமிழகம் முழுக்க ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகின்றது. தமிழகத்தில் கொடூரக் குற்றங்களில் ஈடுபடும், 'ஏ பிளஸ்' வகை ரவுடிகள் 421 பேரும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் குற்றங்களில் ஈடுபடும் 'ஏ' பிரிவு ரவுடிகள் 836 பேரும், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பு செய்யும் 'பி' பிரிவு ரவுடிகள் 6,398 பேரும் அடிதடி, தகராறு, கலவரத்தைத் துாண்டி விடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் 'சி' பிரிவு ரவுடிகள் 18,807 பேரும் உள்ளதாக காவல்துறையே தெரிவிக்கின்றது.

இப்படி மாநிலம் முழுவதும் உள்ள 26,432 ரவுடிகளைக் கண்காணிக்க தற்போது 546 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று பார்த்தால் அப்படியான நிலை நிச்சயம் ஏற்படாது என்பதுதான் உண்மை. காரணம் ரவுடிகள் அனைவரும் ரவுடிகளாக இருப்பதற்கு அரசியல்வாதிகளும் காவல்துறையுமே எப்போதும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.

காவல்துறைக்கோ அரசியல்வாதிகளுக்கோ தெரியாமல் எந்த ஒரு ரவுடியும் சமூகத்தில் அட்டூழியத்தில் ஈடுபட முடியாது.

திமுக, அதிமுக, பாஜக, பாமக என அனைத்துக் கட்சிகளிலும் ரவுடிகள் இருக்கின்றார்கள். ரவுடிகளின் புகலிடமாக கார்ப்ரேட் கட்சிகள் இருக்கின்றன. பொதுமக்கள் ரவுடிகளை எதிர்கொள்ள முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அவர்கள் அரசியல் கட்சியோடும் காவல்துறையோடும் இணைந்து செயல்படுவதுதான்.

தமிழகம் முழுக்க உள்ள டாஸ்மாக்கில் பார்களை எடுத்து நடத்தும் பெரும்பாலானோர் ரவுடிகள்தான். அதனால்தான் அவர்களால் 24X7 பிளாக்கில் சாராயம் விற்க முடிகின்றது.

இவர்கள் மட்டுமல்ல மணல் கடத்தல், கிரானைட் குவாரி, தாது மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், கஞ்சா விற்பனை என அனைத்துமே ரவுடிகளின் துணையோடும், அரசியல்வாதிகளின் ஆசியோடும்தான் நடந்து வருகின்றது.

ஒரு சில குற்றச் சம்பவங்கள் பொதுவெளிக்கு வரும்போது நடவடிக்கை எடுப்பது போன்று நாடகமாடுவதும், பின்பு வழக்கம் போல அது நடப்பதும் தொடர்கதையாக இருக்கின்றது.

அப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடையதாக சொல்லப்படும் ரவுடி திருவேங்கடத்தை காவல்துறை தற்போது என்கவுண்டர் செய்துள்ளது. காவல்துறை ஏற்கெனவே அவரைக் கைது செய்திருந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டுள்ளது.

மாதவரம் ஏரி அருகே ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக விடியக்காலை 5:30 மணிக்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது போலீசாரைத் தாக்கிவிட்டு ரவுடி திருவேங்கடம் தப்ப முயன்றதாகவும், அதனால் போலீசார் வேறு வழியில்லாமல் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறுகின்றனர்.

போலீசார் துப்பாக்கியோடு இருக்கும்போது தாக்கிவிட்டு தப்ப யாராவது முயற்சிப்பார்களா என்பதும், ஏன் பகல் நேரத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி இருக்க முடியாதா என்பதும் போலீசாரின் என்கவுண்டரை கேள்விக்குள்ளாக்குகின்றது. இது பொது மக்களை திருப்திபடுத்த அரசே செய்த படுகொலையா என்றும் கேள்வி எழுகின்றது.

இது போன்ற என்கவுண்டர்கள் இதற்கு முன்பும் பல முறை தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கூடுவாஞ்சேரிக்கு அருகில் சோட்டா வினோத், ரமேஷ் என்ற இரு ரவுடிகளும் அக்டோபர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரண்டு பேரும் செப்டம்பர் 16ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷ்வா என்ற ரவுடியும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

கடந்த 11 ஆம் தேதி கூட புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த துரை என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். ஆனால் என்கவுண்டருக்கு போலீசார் சொல்லும் காரணங்கள் மட்டும் “காவல்துறையைத் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சிக்கும் போது சுடப்பட்டார்” மாறுவதில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 10க்கும் மேற்பட்ட என்கவுண்டர் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழக போலீசார் 100க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை நடத்தி இருக்கின்றார்கள்.

ஆனால் ரவுடிகள் அதிகமாகி இருக்கின்றார்களேயொழிய குறையவில்லை. குறையவில்லை என்றால் அதற்கான காரணம் என்னவென்று ஆராய வேண்டும். தமிழகத்தில் 26000க்கும் மேற்பட்ட ரவுடிகள் இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் ஒரே நாளில் ரவுடிகளாக மாறியவர்கள் கிடையாது.

புதிய பொருளாதாரக் கொள்கையும் அது உருவாக்கிய சமூக ஏற்றத்தாழ்வும் அரசியலில் பணக்காரப் பொறுக்கிகளின் நுழைவும் ரவுடிகளே அரசியல்வாதிகளாக மாறியதும் சேர்ந்துதான் ரவுடியிசத்தை வளர்த்து இருக்கின்றது.

அரசாங்கம் திட்டமிட்டே சமூகத்தை போதைக்கு அடிமையாக்கியதும் உழைக்கத் தகுதியற்ற மனிதர்களாக அவர்களை மாற்றியதும் மற்றொரு காரணம்.

இதனால் செல்போன் திருடுவது, செயின் அறுப்பது என ஆரம்பித்து கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகளாக பலர் மாறியிருக்கின்றார்கள். ஒரு பக்கம் காவல்துறைக்கு மாமூல் தரும் தெய்வங்களாக இருக்கும் இவர்கள், மற்றொரு பக்கம் அரசியல்வாதிகளின் அடியாளாகவும் செயல்படுகின்றார்கள்.

கார்ப்ரேட் அரசியலும் ரவுடியிசமும் பிரிக்க முடியாத ஒன்று என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்களை திருப்தி படுத்துவதற்காக அவ்வப்போது இது போன்ற என்கவுண்டர்களும் கை, கால், எலும்பு முறித்து அவர்கள் பாத்ரூமில் வழுக்கி கீழே விழுந்து அடிபட்டதாகச் சொல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கும்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் கூட உண்மையான குற்றவாளிகள் கிடையாது என்றும், அதற்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.

அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமான தமிழ்நாடு ரவுடிகளின் தாயகமாக மாறி வருகின்றது என்பது கடந்து போகும் பிரச்சினை அல்ல. கார்ப்ரேட் அரசியல்வாதிகள் ஒரு சமூகத்தையே தங்கள் சுயநலனுக்காக சீரழித்து இருக்கின்றார்கள்.

- செ.கார்கி