கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் வேங்கைவயல் சிற்றூரில் பட்டியலின (பறையர்) மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிக் கும்பல் சாதி, மத அரசியலில் அடைக்கலம் தேடியுள்ளது. இது தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் சாதி, மத வெறிக் கும்பல் ஒரு புறமும், புரட்சிகர, சனநாயக ஆற்றல்கள் மறுபுறமும் அணி வகுக்கக் காரணமாகி விட்டன. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு ஆகியன எப்போதும்போல சந்தர்ப்பவாத நிலையெடுத்துள்ளன.

தொலைக்காட்சி செய்திகள், சமூக வலைதளங்கள், வெவ்வேறு சாதி மக்களிடையே கண்ட பேட்டிகள், காவல்துறையின் ஒரு சார்பான விசாரணை தோரணைகள், சுற்றுப்புறச் சாட்சிகள் ஆகியவற்றினைப் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தால் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா கும்பல் என்பதை உறுதி படுத்துகிறது. எனவே முத்தையா கும்பலும் அவர்களுக்கு உடந்தையான அதிகார வர்க்கமும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். முத்தையா முத்தரையர் சாதி ஆவார். முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா. அவரது கணவர் முத்தையாதான் உண்மையான தலைவர். முத்தையா முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். முத்தையா ஊராட்சி மன்றத்தில் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு ஊழல் புரிந்துள்ளார் என கிராமசபைக் கூட்டத்தில் தெரியவருகிறது. ஆகையினால் இதனைப் பட்டியலின மக்கள் அதிகாரிகளிடம் கணக்கு கேட்டுள்ளனர். முத்தையாவின் முறைகேடுகளை தண்ணீர்த் தொட்டியின் முன்னாள் ஆப்ரேட்டர் முத்தரையர் சண்முகம் வெளிக்கொண்டு வந்துள்ளார். அதனால் சண்முகம் அப்பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சண்முகம் பணியில் சேருவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்குத் துணையாக பட்டியலின மக்கள் இருந்துள்ளனர். எனவே பழிவாங்கும் நோக்குடன் முத்தையா கும்பல் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்துள்ளது எனத் தெரிய வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட அதிகார வர்க்கம் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்தது யார்? எனக் கண்டறிவதோடு நின்றிருக்க வேண்டும். மாறாக இரட்டைக்குவளை முறை ஒழிப்பு, கோவில் உரிமை மீட்பு போன்ற முரண்பாடுகளைக் கையாண்டதால் முத்தையா கும்பல் சாதி, மத அரசியலில் எளிதில் தஞ்சம் அடையக் காரணமாகி விட்டது. இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட வேண்டும், கோவில் உரிமை மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் பல்வேறு முரண்பாடுகளை ஒரே நேரத்தில் கையாள்வது தவறு. பொதுவாகவே, உடமை வர்க்கம், அதிகார வர்க்கம், குற்றவாளிகள் ஆகியோர் தவறு இழைத்துவிட்டு சாதி, மதத்திற்குள் ஒழிந்து கொள்வது வழக்கம். அதுபோலவே முத்தையா கும்பலும் அவர்களுக்கு உடந்தையான அதிகார வர்க்கமும் தாங்கள் தப்பித்துக்கொள்ள அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெறும் குற்றச் செயல்களில் ஏதோ ஒரு சாதியைச் சேர்ந்தவர் குற்றமிழைத்து சிறைக்குச் செல்கிறார். அந்த குற்றவாளிக்காக அவரது சாதியினர் முன்வருவதில்லை. அதே நேரத்தில் குற்றமிழைத்த முத்தையா கும்பலுக்குத் துணையாக சாதிச் சங்கங்கள் வரிந்து கட்டிக் கொண்டு முன்வருவதேன்?. புதுக்கோட்டை மாவட்ட அதிகார வர்க்கம் மலச்சிக்கலை சாதிய சிக்கலாக மாற்றியதே இதற்கான விடையாகும்.iraiyoor pudukottaiஒரு சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகள் நிலவியபோதும் எல்லா முரண்பாடுகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க எல்லா வர்க்கங்களும், சாதிகளும் இடம் கொடுப்பதில்லை. ஒரு நேரத்தில் முன்னுக்குவரும் குறிப்பிட்ட முதன்மையான முரண்பாட்டை தீர்த்து தான் சமூதாயம் படிப்படியாக முன்னேற இயலும். ஒரு குறிப்பிட்டமுரண்பாட்டின் எதிர் எதிர் கூறுகளின் வர்க்க அல்லது சாதிய அணி வகுப்பின் சமநிலை மாறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (எ.கா) தேசிய விடுதலைக்கும், சோசலிசத்துக்குமான போராட்டத்தில் வர்க்க அணி வகுப்புகள்மாறும். அதுபோல இரட்டை குவளை முறை ஒழிக்க வரும் வர்க்கங்கள், சாதிகள் கோவில் உரிமை மீட்பதில் எதிரெதிர் நிலைக்குச் செல்லக் கூடும். குறிப்பான நிலைமைகளை ஆய்வு செய்வதன் மூலமே முடிவுக்கு வரவேண்டும்.

இறையூர் - வேங்கைவயல் கிராமத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கிராமங்கள், நகரங்கள், அரசாங்கங்கள், அரசு அலுவலகங்கள், கட்சிகள் அனைத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சாதி பிற சாதி மீதும், அனைத்துப் பெண்கள் மீதும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. படிவரிசை முறையில் எல்லோருக்கும் கீழ் நிலையில் தாழ்த்தப்பட்டோரும் பெண்களும் உள்ளனர். தேசியக் குற்றப் பதிவுத்துறைக் குறிப்புகளின்படி ஒவ்வொரு 16 நிமிடத்துக்கம் தலித் (தலித் என்ற மராட்டிய சொல்லுக்கு குழைந்து போனவர்கள், சிதறடிக்கப்பட்டவர்கள் என்று பொருள்) ஒருவருக்கு எதிராக தலித் அல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கிழமையும் 13 தலித்துகள் கொல்லப் படுகிறார்கள், ஆறு தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

2012 இல் மட்டும் தில்லியில் 23 வயது நிரம்பிய பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும் 1,574 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், 651 தலித்துகள் கொல்லப்பட்டனர். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு). இந்த கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே. உடையவிழ்த்து அம்மன ஊர்வலம் நடத்துதல்,மலமுண்ணச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகியவை அடங்குவதில்லை. மசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாகக் கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005 இல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்ட செய்தி இந்தப் புள்ளி விவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த சிங்.

மராட்டிய மாநிலத்தில் கைர்லாஞ்சி கிராமத்தில் சுரேகாவும் அவரது மகன்கள், மகள் நால்வரும் கொடும் சித்தரவதைச் செய்யப்பட்டு சாதி ஆதிக்கவாதிகளால் கொல்லப்பட்டனர். இதற்கு காவல்துறை, ஊடகத்துறை, நீதித்துறை, ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் அனைத்தும் துணைநின்றன. தமிழ்நாட்டில் 1968-இல் கீழ்வெண்மணியில் தொடங்கி வேங்கைவயல் வரையிலும், இதற்கிடையே முதுகுளத்தூர், ஊஞ்சனை, கொடியன்குளம், காலப்பட்டி, மீனாட்சிபுரம், உத்தமபுரம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல், தாமிரபரணி, கண்டதேவி, திண்ணியம், நாயக்கன் கொட்டாய், குண்டுப்பட்டி, வாச்சாத்தி, பரமக்குடி என்று தமிழ்நாட்டை உலுக்கிய நிகழ்ச்சிகளில் சாதி ஆதிக்கவாதிகளும், ஆட்சியாளர்களும், போலீசும், நீதிமன்றமும், செய்தி ஊடங்களும், பட்டியலின மக்கள் மீது தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ நடத்திய வன்முறைகளைப் பட்டியலிட்டால் இச்சிறு கட்டுரையை மீறுவதாக அமையும். ‘காலத்தின் தேவை தாழ்த்தப் பட்டோருக்கான இரட்டை வாக்குரிமை என்ற தலைப்பிலான கட்டுரை 2012 புரட்டாசி தமிழ்த் தேசம் இதழில் எழுதினேன் ‘கிராமங்கள் அமைதியாக உள்ளதென்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவ உரிமைக்காகப் போராடத் துணிவில்லாமல் இருப்பதே. குடியுரிமை என்பது ஒருவரது வேலை, வாழும் பகுதி, தனது துணையைத் தேர்வு செய்வதைக் குறிப்பதாகும். இக்குடியுரிமை குறித்து தாழ்த்தப்பட்டவர் ஒரு கிராமத்தில் பேசி விட்டு உயிருடன் திரும்ப இயலுமா என எண்ணிப் பார்க்க அச்சமாக உள்ளது’’ என்று. அருந்ததிராய் சொல்வதுபோல ‘‘சனநாயகம் நாட்டின் சாதி அமைப்பை அழித்துவிடவில்லை. அதனை உறுதிபடுத்தி நவீனமாக்கியுள்ளது.’’

இந்தியாவைத் தவிர்த்து உலகின் வேறு எங்கேயாவது இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பெரும் வன்முறை வெடிக்கிறது. ஆனால் இங்கு எளிதாக கடந்து போகிறோம். ஏன்?. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற சனநாயகத்திற்கு எதிரான பார்ப்பனியம் (இந்துத்துவம்) உருவாக்கிய சாதிய உளவியலே ஒவ்வொரு மனிதனிலும் இயங்குகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு சாதிக்குமான நடைமுறைகள் உள்ளன. அதனை மீறுவது குற்றமாகும். மீறுகின்றவர்கள் தண்டிக்கப் படுகின்றனர். அப்படி தண்டிப்பது சரியென ஒவ்வொருவரும் கருதுகின்றனர். எனவே இங்கே சமத்துவ சனநாயகத்திற்கு இடமில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டம் நீதி மன்றங்களில் விவாதிக்கப்படுகிறதே ஒழிய அரசு அலுவலங்களில் காவல்துறையில் கிராமங்களில் பேச இயலாது. மீறினால் ஏதோ ஒரு வழியில் தண்டிக்கப்படுவர். கிராமப்புறங்களில் மரபு வழியாக வந்த எழுதப்படாத சாதியச் சட்டங்களே செயல்படுகின்றன. சொல்லப்படும் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மரபு வழியாகப் பெற்ற காலனிய அரசு அதிகார வர்க்கம் கலைக்கப்பட்டு ஜனநாயகப்படுத்தி இருக்க வேண்டும். அது செய்யாததன் விளைவு அரசு அலுவலங்களில் சட்டத்திற்குப் புறம்பான மரபு வழியாக பெற்ற எழுதப்படாத அதிகாரவர்க்க நடைமுறையே உள்ளது.

மேல்படிக்கட்டில் உள்ள சாதிகள் கீழ்படிக்கட்டில் உள்ள சாதிகளை ஒடுக்குவதற்கும், உடமை வர்க்கம், அதிகார வர்க்கம் ஆகியனவற்றின் அத்து மீறல்களைத் தடுப்பதற்கும் இந்துத்துவம்வர்க்க ஒற்றுமைக்குத் தடைபோடுகிறது. இந்துத்துவம் அனைத்து சாதியிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு வறுமையும் சாதிய பெருமிதங்களையும், உடமை வர்க்கம், அதிகார வர்க்கம் ஆகியனவற்றிற்குச் சொர்க்கத்தையும் வழங்குகிறது என்றால் மிகையல்ல. ஐரோப்பாவில் ஜனநாயகத்திற்கானப் போராட்டம் நில உடமை வர்க்கம், அதிகாரவர்க்கம் இவ்விரண்டையும் பாதுகாத்த கிறித்துவத்தையும் எதிர்த்து போராட வேண்டியிருந்தது. இந்தியாவில், தமிழ்நாட்டில் சனநாயகத்திற்கான போராட்டம் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளையும், பெரும் நில உடமையாளர்களையும், இவர்களுக்கு தொண்டூழியும் செய்யும் அதிகார வர்க்கத்தையும், இவ்வர்க்கங்களுக்கு ஆதரவான மெய்யியலை (Philosophy) வழங்கும் இந்துத்துவத்தையும் எதிர்த்துப் போராட வேண்டி இருக்கிறது.

இறையூர் மலமும், ஆண்ட அடிமைச் சாதிகளும்

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் முத்தையா கும்பல் மலம் கலந்ததை ஒட்டி தமிழ்நாட்டிலுள்ள சாதிய அமைப்புகள் ஊழல் பெருச்சாளி முத்தையாவுக்கு துணை நிற்கின்றன. அத்துடன் தாங்கள் ஆண்ட பரம்பரை என மார்த் தட்டிக் கொள்கின்றன.

தமிழ்நாட்டில் ஆண்ட சாதிகள் யார்?. அரசனது வரலாற்றையே உழைக்கும் மக்களது வரலாறாகப் பார்க்கும் கீழ்தரமான மனோபாவம் இன்றும் தமிழ்நாட்டில் நீங்கவில்லை. அதனால் தாங்கள் ஆண்ட பரம்பரை எனத் துள்ளிக்குதிக்கின்றனர். அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

இந்தியாவின் வட பகுதியில் பிராமணன், சத்திரியன், வைசிகன் என்ற சாதிகள் ஆண்ட சாதிகளாகவும், சூத்திரர்கள் அடிமைச் சாதிகளாகவும் இருந்துள்ளனர். தலித்துகள் புறச்சாதிகளாக (Outcaste) இருந்தனர். அதாவது (வர்ணமற்றவர்களாக - அதர்வர்ணத்தினராக)சாதியற்றவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் அரசன், அந்தணன், வணிகன், வெள்ளாளன் ஆகியோர் ஆண்ட சாதிகளாகவும் மற்றவை அடிமை சாதிகளாகவுமே இருந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமை நிலையுடன் கூடுதலாக தீண்டாமைக்கு ஆட்பட்டனர். அரசன் என்ற ஒரு சாதியே தமிழ்நாட்டில் இல்லை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்கள் சாணிப்பால், சவுக்கடி தண்டனையை எல்லாச் சாதிக்காரர்களுக்கும் கொடுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் கூடுதலாக தீண்டாமையைச் சுமந்தனர். இன்றைக்கு எல்லா சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் மீது அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறை இருக்கிறது. கூடுதலாக தாழ்த்தப்பட்டோர் மீதும், பெண்கள் மீதும் தீண்டாமை இருக்கிறது.

தமிழ்நாட்டில் அனைத்து சாதிகளிலுமுள்ள உழைக்கும் மக்கள் மீது உடமை வர்க்கம் எவ்வாறெல்லாம் ஒடுக்குமுறை செலுத்தியது, செலுத்தி வருகிறது என்பதற்கான விவரங்களை சுமார் 300 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளிலிருந்து காட்டுகிறேன். பள்ளிப்பாடங்கள், உடமை வர்க்க ஊடகங்கள், உடமை வர்க்கம், அதிகார வர்க்கம்ஆகியன மன்னர்களது வரலாற்றையே மக்களது வரலாறாக காட்டுகின்றன. அதனால் ஒவ்வொரு சாதியிலுமுள்ள உழைக்கும் மக்கள் பட்ட, படுகின்ற துன்பங்கள் மறைக்கப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் சாதிய வன்முறை, ஒடுக்குமுறை நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் சாதிகளுக்கு இடையில் இரத்தத் தூய்மை பேசுப்பட்டு இளைஞர்கள் உசுப்பேற்றப் படுகிறார்கள். ஆகவே முதலில் சாதிகளுக்கு இடையிலான இரத்தத் தூய்மையை பார்த்துவிட்டு அடுத்து உழைக்கும் மக்கள் பட்ட, படுகின்ற துன்பங்களைப் பார்ப்போம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தற்போது இருக்கின்ற பல்வேறு மொழிகள், இனங்கள், பழங்குடிகள், சாதிகள், மதங்கள், தேசிய இனங்கள் ஆகியவற்றிலுள்ள மக்கள் அனைவருமே பூர்வகுடிகள் அல்ல, வந்தேறிகளே. இதனை கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டம் ஆய்வும், மரபணு ஆய்வும் உறுதிபடுத்துகின்றன. லெமூரியக் கண்ட ஆய்வானது அழிந்து போன குமரிக் கண்டத்திலிருந்து ஹோமோசேபியன் (அறிவு மனிதன்) என்ற ஆதி முதல் மனிதன் தோன்றி உலகம் முழுவதும் பரவினான் என்கிறது. இதனை டார்வினும், ஹெக்ஸ்லி ஆகிய அறிஞர்களும் எங்கெல்சும் ஆதரித்தனர். இன்றைய மனிதனுக்கும் குரங்குக்கும் மூதாதையர் ஒன்றே என்பது டார்வினின் பரிணாமக் கொள்கையாகும். மரபணு ஆய்வானது ஆப்பிரிக்காவிலிருந்து ஆதி முதல் மனிதன் தோன்றி அவன் உலகம் முழுவதும் பரவியதாகக் கூறுகிறது. மரபணு ஆய்வு துல்லியமானது. தமிழ்நாட்டின் கீழடி ஆய்வு இவ்விரண்டில் எதனை உறுதி படுத்தப்போகிறது என்பது ஆய்வின் முடிவில் தெரியவரும்.

தொல்லியல், மரபணுவியல், கடலியல், மொழியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஆய்வுகள் அனைத்தும் காட்டுவது இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் குடிகள் அல்லது பூர்வ குடிகள் தமிழர்களே. இதனை அம்பேத்கரும், மேற்கு வங்க முதல்வராய் இருந்த ஜோதிபாசும் உறுதிபடுத்தினர். தமிழர்களுக்குப் பிறகுதான் தென்கிழக்காசியா&விலிருந்தும், அடுத்து மத்திய ஆசியாவிலிருந்தும் (ஆரியர்கள்) அதற்கடுத்து நாடு பிடிக்கவும், வணிகம் செய்யவும் வந்தவர்கள். இப்படி மரபினமாக, பழங்குடிகளாக வந்தவர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தில் தேசிய இனங்களாக வளர்ந்துள்ளனர். இத்தேசிய இனங்களின் மூதாதையர் ஒன்று அல்ல. பல மரபினங்கள், பழங்குடிகளின் கலப்பால் உருவானவர்களே. எனவே இந்தியத் துணைக் கண்டத்தில் மரபணுக் கலப்பில்லாத, இரத்தக் கலப்பில்லாத குடிகள், சாதிகள், மதங்கள், இனங்கள் என்று தூய வடிவில் ஏதுமில்லை. இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒருதாய் வயிற்றுபிள்ளைகள் பல வண்ணங்களில் பிறப்பது இதற்குச் சான்று.

இனி எல்லாச் சாதிகளிலுமுள்ள உழைக்கும் மக்கள் பட்ட, படுகின்ற துன்பங்களைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அரசர்கள் ஆண்டபோது விவசாயத்தில் ஆறில் ஒரு பங்கு வரி கொடுக்கும் முறையும், அதற்கு ஈடாக அரசன் பாசன வசதி செய்து கொடுப்பது என்ற முறையும் இருந்தது. கிழக்கிந்தியக்கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியில் இந்த நில உடமை உறவானது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியால் 1739 இல் வங்காளத்தில் கொண்டு வரப்பட்ட சாசுவத நிலவரித் திட்டம் 1802 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மகாணத்திற்கும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் படி அரசுக்கும் மக்களுக்கும் இடைத்தட்டுப் பகுதியினராக சமீன்தார், இனாம்தார், இரயத்துவாரி நில உடமையாளர்கள் உருவாகக் காரணமாகியது. தமிழ் நாட்டின் நிலம் அனைத்தும் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு இவர்கள் உடமையாளராக மாறினர். இவர்கள்தான் ஆங்கில ஆட்சி ஒன்றுபட்ட இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வேரூன்ற உதவி செய்தனர்.

ஆகையினால் இவர்களுக்கு ஆங்கில அரசு பட்டங்களும், பதவிகளும் கொடுத்து மரியாதை செய்தது. இந்த இடைத்தட்டு நில உடமை வர்க்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாச் சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களே.

ஆங்கிலேயர் சாசுவத நிலவரிமுறை மூலம் மக்களிடமிருந்து வாங்கும் வரியில் மூன்றில் இருபங்கை அரசு கருவூலத்தில் கட்டவேண்டும். அதாவது சமீன்தார்கள் தம்பகுதிலுள்ள விவசாயிகளிடம் ஆண்டிற்கு 74 இலட்சம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும். அதில் 49 இலட்சம்ரூபாய் அரசு கருவூலத்தில் கட்ட வேண்டும். மீதம் 25 இலட்சம் ரூபாய் சமீன்தார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு கருவூலத்தில் கட்டும் வரிக்கு ‘பேஷ்குஷ்’’ என்று பெயர். 25 இலட்சம் ரூபாய் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டிய சமீன்தார்கள் 1938&ஆம் ஆண்டு கணக்கின்படி, விவசாயிகளிடமிருந்து 254 இலட்சம் ரூபாய் வசூலித்து அரசுக்கு 49 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு மீதி 205 இலட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டனர். மேலும் மரத்துக்கு, வீட்டுக்கு, புல்லுக்கு, கரும்புக்கு, நில பயன் பாட்டிற்கு, ஆடு, மாடு மேய்ப்பதற்கு, விறகு, தழை, இலைகளை வெட்டுவதற்கு என்று எல்லாவற்றிற்கும் வரி வசூலித்தனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார் மற்றும் பிறசாதிப் பெண்கள் இரவிக்கை அணிவதற்கு முலை வரி அதன் அளவுக்கு ஏற்ப கட்டினர். வரி அதிகம் செலுத்த வேண்டிய காரணத்தினால் விவசாயிகள் சுகந்தை அடிப்படையில் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கடன் வாங்கி வரி செலுத்தினர். அக்கடனை அடைக்க வேண்டி ஒரே பண்ணையில் பண்ணையாளராகக் காலம் முழுக்க உழைத்ததோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய பரம்பரையினரும் உழைக்கும் கொத்தடிமை நிலைக்கு ஆளாயினர். அவர்கள் கொடுக்கும் இடம்,உணவு, உடை ஆகியவற்றைக் கொண்டே உழைக்கும் மக்கள் வாழ்க்கை நடத்தினர். ஆண் அடிமைகள் விவசாயத்திலும், மாடு மேய்ப்பதிலும், பெண் அடிமைகள் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்பும் பஞ்சத்தின் காரணமாக தம்மைத்தாமே அல்லது குடும்பத்தையே விலைக் கூறி விற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்து. பண்ணையடிமைகளை நிலத்துடன் சேர்த்தோ குத்தகைக்கோ அன்பளிப்பாகவோ பண்ணையாளர்களால் விற்கப் பட்டனர். பெண்கள் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கூட விற்றுக்கொண்ட அவல நிலை இருந்தது. இன்றையக்கும் நகர்ப்புறங்களில் ஏழைப் பெண்களும், ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவலம் நீடிக்கிறது. இதற்கு எந்தச் சாதியும் விதிவிலக்கல்ல. ஆனால் காதலுக்குத் தடை போடுகிறோம். இது முரண்பாடல்லவா? தமிழ்நாட்டிற்கு வந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரட்டிஷ்காரர் ஆகிய அனைவருமே அழகிய பல இளம் பெண்களை விலைக்கு வாங்கி அனுபவித்து விற்றுவிட்டு சென்றுள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாகவும், இங்குள்ள உடமை வர்க்கத்தின் ஒடுக்கு முறை காரணமாகவும் வாழ வழியின்றி வெளியேறியவர்களே. அதே நேரத்தில் சங்க காலத்தில் வணிகத்திற்காகவும் தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நில உடமை அடிமை முறைக்கும் வெளிநாடுகளில் நில உடமை அடிமை முறைக்குமான அடிப்படையான வேறுபாடு என்பது வெளிநாடுகளில் பண்ணையடிமை நில உடமையாரின் உடமை ஆவார். அதாவது நில உடமைக்கு பண்ணைடிமை மதிப்பு மிக்க சொத்து. ஆகையினால் தனது சொத்தை பராமரிப்பது என்ற பொருளில் பண்ணையடிமையின் உணவு, உடை, இருப்பிடம், அவர்களது உடல் நலம் ஆகியன அனைத்துக்கும் நில உடமையாளன் பொறுப்பேற்றுக் கொண்டான். எனவே பண்ணையத்தில் வேலை இருந்தாலும் வேலை இல்லாவிட்டாலும்,நாட்டில் பஞ்சம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் பண்ணையடிமை பட்டினி கிடக்க வேண்டியதில்லை. இந்தியா அல்லது தமிழ் நாட்டில் பண்ணையடிமை நில உடமையாளனின் சொத்தாக இருந்தபோதிலும் பண்ணையடிமை சுதந்திர மனிதனாக தனித்து விடப்பட்டான். பண்ணையடிமை தனக்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான உணவு, உடை, இருப்பிடம், உடல் நலம் ஆகிய அனைத்தையும் பண்ணையாரைச் சார்ந்திருந்த போதிலும் தானே தேடிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆகையினால் பண்ணையத்தில் வேலையில்லாத காலங்களில் பஞ்ச காலங்களில் பண்ணையடிமை பட்டினிக் கிடக்க வேண்டி இருந்தது அல்லது கடன்பட வேண்டியிருந்தது. எனவே வெளிநாடுகளிலுள்ள பண்ணையடிமைகளைவிட தமிழ்நாட்டு, இந்தியப் பண்ணையடிமைகள் உணவுக்கும், இருப்பிடத்திற்கும், உடைக்கும் மிகவும் துன்பப் பட்டார்கள்.பல்வேறு நோய்வாய்ப்பட்டு கவனிப்பாரின்றி இறந்து போனார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்பாகவும் எல்லாச் சாதிகளிலுமுள்ள உழைக்கும் ஆண்களும், பெண்களும் பல்வேறு வறுமை சூழலின் காரணமாக தங்களையோ, தங்களது குடும்பத்தினரையோ விற்றுக் கொண்டார்கள் என்பதற்கான சில சான்றுகளையும், ஆட்சியாளர்களே பல பேர்களைப் பிடித்து அடிமைப்படுத்தினார்கள் என்பதற்கான சில சான்றுகளையும் காட்டுகிறேன்.

கி.பி.1374-ஆம் ஆண்டு வெசீளாளன் அடிமைகள் மூவர் புலையடிமை எழுவர் ஆகிய பத்து அடிமைகளை வழங்கியமை குறித்த கல்வெட்டு திருச்சி வட்டத்திலுள்ள தாருகாவனேஸ்வரர் ஆலயவளாகத்தில் காணப்படுகிறது.

கி.பி.1431-ஆம் ஆண்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் குமரி மாவட்டம் கொல்லத்தில் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடியில் வெள்ளாளன் மகன்களும், மகள்களும், பறையர்களின் மகன்களும், மகள்களும் அடிமைகளாக அன்பளிப்பு கொடுக்கப்பட்டனர்.

கி.பி.1743-ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசில் பணியாற்றிய ஒருவரது நாட்குறிப்பில் தரங்கம்பாடியில் வழிபோக்கர்களை ஏமாற்றி அழைத்து வந்து அயல் நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பேர் மூன்று முறைக்கு மேல் விற்கப்பட்டுள்ளனர்.

கி.பி.1832-ஆம் ஆண்டு திருவையாறு பகுதியில் கள்ளர் சாதி ஒருவர் தான் வெள்ளாளர் சாதி என்று ஏமாற்றி தனது 7 வயது மகளை வெள்ளாளருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அப்பெண்ணை பூப்பெய்திய பிறகு அழைத்துக் கொள்ளலாம் என எண்ணி வெளியூர் வேலைக்குச் சென்றுவிட்டு சில ஆண்டுகள் கழித்து மாமானாரை வந்து கேட்ட போது தனது மனைவி தஞ்சாவூர் அரண்மனைக்கு அடிமையாக விற்கப்பட்டதை அறிகிறார். அப்பெண்ணை மீட்க சென்னை மகாணத்திற்கு விண்ணப்பம் செய்கிறார். இந்த செய்தி மோடி எழுத்தில் உள்ளது. மோடி எழுத்து என்பது பிறருக்குத் தெரியாமல் கமுக்கமாக எழுத தஞ்சை மராத்தியர்கள் பின்பற்றிய முறை.

கி.பி.1842 ஆம் ஆண்டு சிதம்பரம் பிள்ளை மிராசு சொத்திழந்து பிழைக்க தஞ்சாவூர் வந்தபோது மிராசின் இருமகள்களை அடிமைகளைச் சேகரிக்க வந்தவர்கள் தஞ்சாவூர் அரண்மணைக்கு பிடித்து சென்று விடுகின்றனர். அவர்களை மிராசு மீட்க முயற்சித்த போது மிராசுவை அடித்து தான் விற்றுவிட்டதாக பொய்யாக எழுதி வாங்கிக் கொண்டார்கள் அரண்மனை ஊழியர்கள். இதனை சென்னை மாகாணத்திற்கு விண்ணப்பம் செய்தும் தனது இரு மகள்களை மீட்க முடியவில்லை. வெள்ளாள மிராசுவின் கதியே அதோகதிதான் என்றால் மற்ற உழைக்கும் மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

கி.பி.1845 ஆம் ஆண்டு வலங்கைமானிலிருந்த பழனி படையாச்சி (வன்னியர்) மனைவி தனது பெண்ணை விற்கிறாள்.

கி.பி.1852 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெடுஞ்சிலக்குடியில் 5 பள்ளர்கள் விற்கப்பட்டுள்ளனர். இன்றைக்கும் கொங்கு மண்டலத்தின் நில உடமையாளர்கள் எசமானக் கவுண்டர் என்றும், ஊர்க்கவுண்டர் என்றும் கூலிக்கவுண்டர் என்றும் பிரிந்துள்ளனர்.

மேலே கண்ட சான்றுகள் அனைத்தும் தாங்கள் ஆண்டபரம்பரை எனப் பீற்றிக் கொள்பவர்களின் பார்வைக்கே. தங்களது சாதி உழைக்கும் மக்கள் விற்கப்பட்டுள்ளனர் எனப் புரிந்து கொள்ளவே தவிர யாரையும் இழிவுபடுத்த அல்ல.

தமிழ்நாட்டில் பரவலாக பறையர்கள், பள்ளர்கள், சக்கிலியர்கள், வலையர்கள் பிற இடை சாதியினர் எளிதாக விற்கப்பட்டதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. கட்டுரை நீளும் என்பதற்காக தவிர்த்துள்ளேன். தமிழ் நாட்டில் சங்க காலத்தில் அந்தணர்கள் என்பவர்கள் பறையர்களாக இருக்கலாம் என்றும், அவ்விடத்தை தற்போதைய பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்றும் கருத இடமுள்ளது. அவை தனியாக ஆய்வு செய்ய வேண்டும்.

உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் நினைவுச் சின்னம் குற்றப் பரம்பரை என பிரான்மலைக் கள்ளரையும் பிற சாதிகளையும் ஆங்கிலேயர்கள் வகைப் படுத்திய வரலாற்றை நினைவு படுத்தவில்லையா? இவைகள் தான் ஒவ்வொரு சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களின் வரலாறு. இந்த அநீதிகளுக்கு எதிராக எந்த ஆண்டைகள் போராடினார்கள்? மாறாக வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வேலுநாச்சியார் உள்ளிட்ட போராட்டக் காரர்களை காட்டி அல்லவா கொடுத்தார்கள்?

தாழ்த்தப்பட்டோர் யார்?

பொதுவான சமூக அறிவியலின் படி மனிதன் காட்டு மிராண்டி நிலையிலிருந்து நாகாரிக நிலைக்கு மாறிய போதும், உணவு சேகரித்தல் நிலையிலிருந்து உணவுக்கான உற்பத்தியில் ஈடுபட்டபோதும் மனிதர்கள் தனியாகவோ, குலங்களாகவோ, இனக் குழுக்களாகவோ அடிமைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு அடிமை பட்டவர்கள் உற்பத்தியில் ஈடுபடச் செய்து உபரி உற்பத்தியை ஆண்டைகள் கைப்பற்றினர். நில உடமை சமுதாயத்தில் வெற்றி பெற்ற மன்னர்கள் போரில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்களையும் அவர்களது வாரிசுகளையும் அடிமைப்படுத்தினர். இந்தியாவில் தமிழ்நாட்டில் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் சிதறடிக்கப்பட்டு பிறகு அடிமைப்படுத்தப்பட்டனர்.

பார்ப்பனியம் சொல்வது போல பிறப்பிலேயே உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது. ஓரிடத்தில் நிலைபெற்று வாழமுடியாத சூழலில் உணவுக்காகவும், வாழிடங்களுக்காகவும் இடம் பெயர்ந்த ஒரே குலங்கள், ஒரே குழுக்கள், ஒரே மரபினங்கள் பல்வேறு சாதிகளாக திரிந்தனர். இந்த இடப்பெயர்வு இன்றும் நடைபெறுகிறது. வட இந்தியாவில் பிராமணன், சத்திரியன், வைசியன் என்ற தொழில் (வர்ணம்) முதலில் ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், பிறகு ஒரு தலைமுறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், பிறகு வாரிசு முறைக்கு மாறியுள்ளதாகவும் அறிகிறோம். தேர்ந்தெடுக்கப்படாத அனைவரும் அடிமைகளாகவும் (சூத்திரர்), தீண்டப்படாதவர்களாகவும் (பஞ்சமர் அல்லது வர்ணமற்றவர்) வைக்கப்பட்டனர். பழந்தமிழ் நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய தமிழர்களது திணை வாழ்க்கையில் இன்று இருக்கின்ற சாதிகள் இல்லை. எனவே சாதி என்பது இடையில் ஏற்பட்டதே. இச்சாதி என்பது உடமை வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிகளில் ஒன்று. உடைமை வர்க்கமும் அவர்களைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கமும் தங்களுக்கு எதிராக ஒவ்வொரு சாதியிலுமுள்ள உழைக்கும் மக்கள் ஒன்று திரளவிடாது பாதுகாக்கும் கருவியாக சாதி செயல்படுவதினால் அது பாதுகாத்து வளர்க்கப்படுகிறது. இதனை ஒவ்வொரு சாதியிலுமுள்ள உழைக்கும் மக்கள் உணராதவரை தங்களது அவல வாழ்விலிருந்து ஒருநாளும் மீளப்போவதில்லை.

சாதி, மதத் திமிர்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் (அணூஞுச்) ஏதோ ஒரு சாதி பெரும்பான்மையாகவும், ஏதோ ஒரு சாதி சிறுபான்மையாகவும் இருக்கின்றன. அவ்வூரில் பெரும்பான்மை சாதிக்கு பணிந்து சிறுபான்மை சாதியினர் வாழ்கிறார்கள். அது ஆதிக்க சாதியா அடிமைப்பட்ட சாதியா என்பதில்லை. அவ்வூரில் பெரும்பான்மை சாதித் தெருவில் சிறுபான்மைச் சாதியினர் செல்லும் போது ஒரு நாய் அடுத்த தெருவுக்குச் செல்லும் போது தனது வாலை கீழ்நோக்கி மடித்துச் செல்வது போல போகின்றனர். இடைப்பட்ட சாதியினர் வாய் பொத்தியே வாழ்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். அதாவது தமிழ்ச் சமுதாயம் சமூக நீதித் தமிழ்த் தேசமாக ஜனநாயகப் படுத்த வேண்டும்.

1991- ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழில்துறை, வேளாண்துறை, சேவைத் துறை ஆகியன அனைத்தும் பன்னாட்டு உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்காக விற்கப்படுகின்றன.சொல்லப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட காலக் கட்டத்தில் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் தேசத்தின் நலன், வளர்ச்சி, தற்சார்பு என்ற பெயர்களில் பறிக்கப்படுகின்றன. இது உண்மையில் அதானி, அம்பானி போன்ற வணிக முதலாளிகளுக்காகவும் (கார்பரேட்), பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும் செய்யப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை நீக்கம், முத்தலாக் தடைச் சட்டம், போக்சோ சட்டத் திருத்தம், மோட்டார் வாகனச் சட்ட திருத்தம், பசுவதை தடைச் சட்டம், 2005- தகவல் உரிமைச் சட்டத் திருத்தம், என்.ஐ.எ. சட்டத்திருத்தம், ஊதியங்கள் சட்டத்திருத்தம் குடியுரிமைச் சட்டத் திருத்தம், போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 44 தொழிலாளர் சட்டங்கள் 4 ஆகத் தொடுக்கப்பட்டு வேலைப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்து எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயம் கார்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட இருந்ததை விவசாயிகளது பேராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய மின்சார சட்டங்களால் இலவச மின்சாரம் நீக்கப்படும். புதிய உணவுக் கொள்கைச் சட்டத்தால் ரேசன் கடைகள் மூடப்படும். புதியக் கல்விக் கொள்கையால் கல்வி பார்ப்பனியகார்பரேட் மயமாகியுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடி மக்களின் கல்வி உரிமை இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகியன பறிக்கப்படுகின்றன. நீட் தேர்வுமுறை மருத்துவப் படிப்பு மட்டுமின்றி அனைத்து உயர் கல்விக்கும் என்று நீட்டியதால் ஏழை, எளிய மாணவர்களின் உயர்க்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி வரி வதிப்பின் மூலம் தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட பிற தேசிய இனங்களின் வரி வருவாய் பறிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றைத் திரித்துப் புரட்டும் வேலையில் பாசிச மோடிக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

ரசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு பிற நாடுகளில் ஏற்படப்போகும் புரட்சியைத் தடுக்கும் நோக்கில் கீன்சியப் பொருளாதாரம் ஏகாதிபத்திய நாடுகளால் கொண்டு வரப்பட்டு முதலாளித்துவ சுரண்டும் அரசுகள் மக்கள் நல அரசுகளாக மாற்றப்பட்டன. 1991&இல் ரசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட பிறகு தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொண்டு வரப்பட்டு வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிலும் அந்நாடுகளிலுள்ள மக்களின் மீதும் ஒடுக்கமுறையையும், சுரண்டலையும் ஈவிரக்கமின்றி நிகழ்த்துகின்றன.இதற்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் துணை நிற்கின்றன.

இவ்வொடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மதம் ஆகியன பற்றி உடைமை வர்க்கம் பரப்பிய தப்பெண்ணங்களிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்திற்கும், சமத்துவதத்திற்கும், சகோதரத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டிய தேவை முன்னுக்கு வந்துள்ளது. இதனைச் சிதைப்பதற்காகவே சாதி வெறியை, மத வெறியை ஆளும் வர்க்கங்கள் தூண்டுகின்றன.

இந்து மதமா? இராமன் கடவுளா?

இந்து மதம் என்ற சொல் வேதங்கள், உபநிடதங்கள், கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்ற எதிலும் இல்லை. பாரசீகர்களும், கிரேக்கர்களும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை சிந்து நாடு என்றனர். புவியியல் அடிப்படையிலான இப்பெயர் இந்து நாடு எனத் திரிந்தது. 1881&இல் ஆங்கிலேயர்களால் முதல் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டபோது இந்து என்ற சொல் நடைமுறை ஏற்பையும், 1950 இல் சட்டத்தில் இச்சொல் அரசியல் ஏற்பையும் பெற்றது.

ஒரு மதம் என்பது ஒரு முழு முதற்கடவுளையும், குறிபிட்ட வழிபாட்டு நெறிகளையும், குறிக்கோள்களையும் கொண்டிருக்க வேண்டும். இந்து மதத்திற்கு இவை ஏதும் இல்லை. சொல்லப்படும் இந்து மதத்திற்குள் வேதத்திற்கு அல்லது பார்ப்பனியத்திற்கு எதிராக உருவான லிங்காயத்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் இடம் பெற்றுள்ளனர். நான்கு வர்ணங்களுக்கு வெளியே இருந்த பஞ்சமர்கள், பழங்குடிகள் இந்துக்களாக இடம் பெற்றுள்ளனர். வேதங்களுக்கு எதிரான ஆதமங்களைக் கொண்ட சைவர்கள், வைணவர்கள் இந்துக்களாக இடம் பெற்றுள்ளனர். உருவான வழிபாட்டை மறுக்கிற வேதத்தை மட்டுமே நம்புகிற ஸ்மார்த்தர்கள் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளனர். இவைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத நூற்றுக்கணக்கான சிறு தெய்வ வழிபாட்டைக் கொண்ட அம்மனை, மாடனை, அய்யனை, கருப்பனை, காடனை, முருகானை வழிபடுகின்ற பெரும் மக்கள் திரள் கூட்டத்தையும் இந்துக்கள் என்கிறோம். ஒன்றும் அறியா அப்பாவி மக்களை விட்டு விடுவோம். பல்வேறு முரண்பட்ட ஆன்மீக மெய்யியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடிகிறது. இதில் துளியும் ஆன்மீக - மெய்யியல் நோக்கம் இல்லை என்பது வெளிப்படையானது. பிழைப்பதற்கான அரசியல் தந்திரம் மட்டுமே உள்ளது. ‘முஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் விட எங்களுக்கு எண்ணிக்கை அதிகம். எனவே எங்களுக்குத்தான் அரசாங்கப் பணிகளிலும், அதிகார மையங்களிலும் அதிக இடம் வேண்டும்’’ என்பதற்காக பார்ப்பன - பனியாக் கூட்டம் இதனைச் செய்துள்ளது. இந்துக்களின் பெயரால் எல்லா அதிகார மையங்களிலும் பார்ப்பனிய மேலாண்மையே நிலவுகிறது.

இவ்வாறாக அரசியல் வழியிலும், ஆன்மீக வழியிலும் இப்பார்ப்பனியக் கூட்டம் அப்பாவி மக்களை ஏய்த்து பிழைக்கிறது. இந்து மதம் தொடர்பாக சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியின் கூற்றொன்றைத் தருகிறேன்.

‘அவன் மட்டும் (வெள்ளைக்காரன் &நாம்) இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுவர் என்று தம்மைப் பிரித்துக்கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல. சைவர்களில் தீவிர வாதிகளுக்கு விஷ்ணு சாமியே அல்ல, சிவன்தான் சாமி. விஷ்ணு சிவனுக்கு பக்தன் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்லுவது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. (தெய்வத்தின் குரல் முதல் பாகம்). இந்து மதம் ஒரு மதம் இல்லை என்பதற்கு இதைவிட என்ன சான்று தேவைப்படுகிறது?.

இந்து மதம் இப்படி என்றால் இந்து மதக் கடவுளாகக் காட்டும் இராமன் ‘ஒழுக்கங் கெட்டவன்’’ என்று வால்மீகியே கூறுகிறார். இராமன் சீதையை மட்டுமல்ல, பல்வேறு நபர்களை மனைவியாகக் கொண்டிருந்தான். மனைவியரை மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரை கொண்டிருந்தான். போரில் கூட இராமன் வீரனுக்குரிய நேர்மையாளன் இல்லை. நீதிக்குப் புறம்பாக வாலியைக் கொன்று சுக்கீரிவனை ஆட்சியில் வைத்தான். இலங்கையில் இராவணனையும் அவனது மகன் இந்திரஜித்துவையும் கொன்று விட்டு இராவணனுடைய தம்பி விபீஷணனை ஆட்சியில் வைத்தான். இலங்கையில் சீதை தீயில் இறங்கி தனது கற்பை நிலைநாட்டிய போதும், மீண்டும் அயோத்தியில் தனது கற்பை நிலைநாட்ட வேண்டும் என சீதையைக் கட்டாயப்படுத்தினான். காட்டுமிராண்டித்தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும், சீதை மரணத்தையே ஏற்றுக் கொண்டாள். சீதையை சதித்தனமாக கொல்ல திட்டமிட்டிருந்தான்.

பரதனுக்குப் பிறகு இராமன் அயோத்தியில் முடிசூடிக்கொண்ட பிறகு கூட நிர்வாகத்தை பரதனே கவனித்து வந்தான். இராமனோ அசோகவனத்தின் அந்தப்புரத்தில் மது அருந்தியும், மாமிசம் உண்டும், அழகிகளுடன் கும்மாளமிட்டான். நாட்டின் நடப்புகளை அவன் கேட்டதே கிடையாது. ஒரே ஒரு முறை மட்டும் பிராமணனின் கோரிக்கையை ஏற்று சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டினான். இவர்தான் இந்து மதத்தின் கடவுளாம். பாபர் மசூதியை இடித்த பார்ப்பனிய கூட்டம் ‘மிகவும் ஒழுக்கங்கெட்ட அரசன் இராமன்’’ என வால்மீகி முனிவர் கூறியபோதும் இராமனுக்கு கோவில் கட்டுகின்றனர். வால்மீகி இராமாயணம் தான் மூலம். பௌத்த இராமயணத்தில் இராமனும், சீதையும் அண்ணன் தங்கைகள். ஒவ்வொரு தேசிய இனத்தின் பண்பாட்டிற்கு ஏற்ப இராமாயணம் திரித்து எழுதப்பட்டு உழைக்கும் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இந்தியா முழுமையிலும் இந்தப் பார்ப்பனியக் கூட்டம் மக்களை ஏய்த்துப் பிழைக்க பல்வேறு கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளது. இந்தப் புளுகு மூட்டையிலிருந்து தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் மீண்டெழவேண்டும்.

இறையூர் - வேங்கை வயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது முத்தையாக் கும்பல் எனத் தெளிவாகத் தெரிந்த போதும், புதுக்கோட்டை காவல் துறையோ, சி.பி.சி.ஐ.டி- யோ முத்தையாவை கைது செய்யாததற்குக் காரணம் சாதி, மத மோதலை உருவாக்கும் நோக்கம் கொண்ட அரசியலே! இதுதான் குஜராத் - திராவிட மாடல் அரசியல்? குஜராத் மாடல் மதவெறியையும், திராவிட மாடல் சாதி வெறியையும் அடிப்படையாக கொண்டுள்ளன.

துணை நின்ற நூற்பட்டியல்

1. தமிழகத்தில் அடிமைமுறை - ஆ.சிவசுப்ரமணியன், காலச்சுவடு வெளியீடு : மார்ச் 2007.

2. தலித் மக்கள் மீதான வன்முறை - ஆங்கிலத்தில் எஸ்.விஸ்வநாதன் தமிழில் த.நீதிராஜன், வெளியீடு - சவுத்விஷன் புக்ஸ் -2015.

3. வெண்மணி படுகொலைகள் - முனைவர் செ.த.சுமதி - அலைகள் வெளியீட்டகம் - 2015.

4. ஆசிரியர்கள் வந்தேறிகள் தான் - வெளியீடு, கீழைக்காற்று - 2017.

5. இந்துமாக்கடல் மர்மங்கள், தமிழில் - ஆர். பார்த்தசாரதி NCBH - வெளியீடு - 2005.

6. இந்திய இழிவு - அருந்ததிராய் தமிழில் - நலங்கிள்ளி - ஈரோடை வெளியீடு - 2018

7. உருவாகாத இந்தியத் தேசியமும், உருவான இந்துப் பாசிசமும் - பழ.நெடுமாறன், வெளியீடு - தமிழ்க்குலம் பதிப்பகம் - 2006.

8. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, வெளியீடு : மனித உரிமைப் பாதுகாப்பு மையம் - 2011.

9. பரமக்குடிகளின் அரசியல்- வெளியீடு, தமிழ்நாடு மக்கள் கட்சி - 2012.

10.தலித் மக்கள் மீதான தாக்குதல், வெளியீடு : மனித உடணீமைப் பாதுகாப்பு மையம் - 2012.

11.வெண்மணி ஒரு காலத்தின் பதிவு, மைதிலி சிவராமன், வெளியீடு: பாரதி புத்தகாலயம்-2006.

12.வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும்- பெ.சண்முகம், வெளியீடு : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு மாநிலக் குழு - 2011.

13.இந்து மதமே பார்ப்பனியம்! பார்ப்பனியமே இந்து மதம்! அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர். தமிழில் வெளியீடு : பகத்சிங் மக்கள் சங்கம்- 2018.

14.தோள் சீலைப் புரட்சி: ஒரு மனித உரிமைப் போராட்டம்- கண. குறிஞ்சி இந்துத் தமிழ் நாளிதழ் மார்ச்-6-2023.

15.பார்ப்பனியத்தின் வெற்றி - அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர்.

16.புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்களும் அதிகரிக்கும் தொழிலாளர்கள் மீதான நெருக்கடிகளும் - குமணன், ஓசூர் தொழிற்சங்கம் - 2020.

17.நாம் இந்துக்கள் அல்ல - பௌத்தர்கள், ஏ.பி வள்ளிநாயகம் வெளியீடு ஜீவசகாப்தன் பதிப்பகம் - 2001.