மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு மக்களைக் கொல்வது என்பது, இன்றைக்குத் திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போல மிகச் சாதாரணமாகி விட்டது. சட்டத்தின் ஆட்சி, சட்டப் புத்தகத்தில் மட்டுமே இருக்கிறது. மணிப்பூர் மாநிலத் தலைநகரமான இம்பாலில் 23 சூலை, 2009 அன்று, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஒரு சந்தைக்குள் நுழைந்த ராணுவ துணைக் காவல் படையினர் கண்மூடித்தனமாக சுட்டதில், தனது 2 வயது மகனுடன் வந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணான ரபினா தேவி கொல்லப்பட்டார்; தன்னுடைய உறவினர் ஒருவருக்காக மருந்து வாங்க வந்திருந்த 22 வயது சொங்கம் சஞ்சித், அங்கிருந்த ஒரு மருந்து கடைக்குள் ராணுவப் படையினரால் திடீரென இழுத்துச் செல்லப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சஞ்சித்தை கொல்ல முயன்றபோது குறுக்கே வந்ததால் ரபினா சுடப்பட்டதாக காவல் துறை பொய் சொன்னது.

ஆனால், சஞ்சித் ஒரு கடையின் அருகில் நின்று கொண்டிருந்தது முதல், அவர் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வரையிலான காட்சிகளை ஒருவர் புகைப்படம் எடுத்து, அது "தெகல்கா' இதழில் (8.8.2009) வெளிவந்ததால், மோதல் கொலையின் கொடூரம் அம்பலமானது. மணிப்பூர் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 37 போலி மோதல் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

எந்த நேரத்திலும் யாரை வேண்டுமானாலும் கடத்திச் செல்லவும், கண்டதும் சுடவும், பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தவும் என அனைத்து வகை மனித உரிமை மீறல்களுக்கும் மூல காரணமாக இருப்பது, மணிப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சட்டத்திற்குப் புறம்பான "ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம்'. இச்சட்டத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் காணாமல் போகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். இரோம் ஷர்மிளா என்ற பெண், இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, எட்டு ஆண்டுகளாக உணவை உட்கொள்ளாமல் போராடி வருகிறார். ஆனால் பா.ஜ.க. – காங்கிரஸ் அரசுகள், இச்சட்டத்தை ரத்து செய்யவோ, அங்கு நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுக்கவோ முன்வர மாட்டோம் என்று துணிந்து செயல்படுகின்றன.

"அமைதிப் பூங்கா' என்று ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்படும் தமிழ் நாட்டில் என்ன நிலை? இங்கு கடந்த பத்து ஆண்டுகளில், 68 போலி மோதல் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து (13.5.2006) இன்று வரை, 20 பேர் போலி மோதலில் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மரண தண்டனையை தான் வெறுப்பதாக தமிழக முதல்வர் அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால், அவர் பொறுப்பேற்றுள்ள காவல் துறை மரண தண்டனைகளை, தன் விருப்பம் போல் நிறைவேற்றி வருவது கண்டு, அவர் துளியும் வெட்கப்படவில்லை! காவல் நிலைய துன்புறுத்தல்களும், காவல் மரணங்களும் நாள்தோறும் செய்தித்தாளை அடைத்துக் கொள்கின்றன. அது மட்டுமல்ல, சாதிய சமூகத்தில் வளங்களையும், நன்மைகளையும் அறுவடை செய்பவர்களாக ஆதிக்க சாதியினரும்; துயரங்களையும் கேடுகளையும் அனுபவிப்பவர்களாக அடிமைப்படுத்தப்பட்ட சாதியினருமே இருக்கின்றனர்.

தென் மாவட்டங்களில் காவல் மரணங்கள் தலித்துகளிடையே அதிகரித்து வருவதாக டாக்டர் கிருஷ்ணசாமி சுட்டிக் காட்டியிருப்பது, மிகுந்த கவனத்திற்குரியது : ""சிறீவைகுண்டத்தில் சூலை 28 அன்று ராமச்சந்திரன் என்ற தலித், காவல் நிலையத்தில் கொல்லப்பட்டதே மிக அண்மைக்கால ஓர் எடுத்துக்காட்டு. தலித்துகளும் நலிவடைந்த பிரிவினரும்தான் காவல் மரணங்களால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுகின்றவர்கள் "குற்றத்தையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள்' என்று காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் காவல் துறையினரின் உதவியின்றி, இக்குற்றங்களை யாரும் தொழிலாக செய்ய முடியாது'' ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' – 10.8.09).

வன்முறையை குறிப்பாக, காவல் வன்முறைகளை வளர்ப்பதிலும் நியாயப்படுத்துவதிலும் திரைத் துறையினரே முதன்மைக் குற்றவாளிகள். வன்முறையால் கதாநாயகன்களாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் இவர்கள், கூச்சமின்றி அகிம்சையை போதித்து அரசியலுக்கு வரவும் முயல்கின்றனர். நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றவாளிகள், தங்களைத் தாக்கி விட்டு தப்பிப்பதால்தான் சுடுகிறோம் என்று நாடகமாடும் போலிஸ், அதிபயங்கரவாதியான கசாப்பை (26/11) சுட்டுக் கொல்லாமல் விசாரணை நடத்தும் முரண்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும். அரச பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக இருப்பது, சமூகத்தில் கோலோச்சும் பயங்இஅகரவாத (ஜாதிய) எண்ணங்களே. இந்து சமூகப் (ஆயுதங்களில்லா இந்து கடவுளே இல்லை) பண்பாடு, அரசு நிர்வாகத்திலும் எதிரொலிக்கிறது. எனவே மனித உரிமைப் பண்பாட்டை விதைத்து, வளர்த்தெடுப்பதே தொலைநோக்கிலான தீர்வாகும்.

 

Pin It