'நீதி மற்றும் மனித நேய லட்சியத்துக்காகப் போராடும் படியும் தங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சிகளையும் சதியையும் அம்பலப்படுத்தும் படியும் தமது மக்களுக்கு இப்பொழுது டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு அறைகூவல் விடுத்தார். தமது மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உறுதிப்படுத்த இதுதான் கடைசிச் சந்தர்ப்பம் என்பதை அவர் அறிவார். ஏனெனில் சுதந்திர இந்தியா தனது பழைய பாரம்பரியங்களுக்குத் திரும்பி செல்லும் என்றும் தமது மக்கள் வறுமைக்கு ஆளாக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, சமுதாயத்திலிருந்தும் பொதுப்பணிகளிலிருந்தும் தூக்கி எறியப்படுவர் என்றும் அவர் அஞ்சினார்.

ஜூன் 29ம் தேதி இடைக்கால அரசாங்கம் (care-taker government) அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் தூதுக்குழு மற்ற விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் பொறுப்பை வைஸ்ராய்க்கு விட்டுவிட்டு லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றது.ambedkar 600பம்பாய் சட்ட சபையின் புனா தொடர் கூட்டத் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் 1946 ஜூலை 15ல் போராட்டம் துவங்கியது. 1946 ஜூலை 16ம் தேதி ஏ.பி.ஏ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்.

''மற்ற எவர் எவ்வளவு விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு நமது நாடு முன்னேற வேண்டும் என்று நாங்களும் விரும்பு கிறோம். அதற்குத் தடையாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவதெல்லாம், எதிர்கால இந்தியாவில் எங்கள் நிலையை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான்."

"இதற்காக, மே 16ம் தேதி பிரிட்டிஷ் ஆலோசனைகளுக்கு எதிராக எந்த மாதிரியான போராட்டத்திலும் நாங்கள் கலந்து கொள்வோம். பிரிட்டனுக்கு எதிராக முஸ்லீம் லீக் எந்த நேரடி நடவடிக்கையைத் துவங்கினாலும் இப்பொழுது சீக்கியர்கள் எடுத்த நிலையை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். எங்கள் ஆதரவை அவர்கள் பெறுவார்கள்'' தங்கள் அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் புனாவில் இப்பொழுது நடத்தப்படும் சத்தியாகிரகம் இறுதியில் 1942 ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் துவக்கிய போராட்ட உருவத்தைப் போல் ஒரு நாடு தழுவிய போராட்டமாகமாறும் என்று அவர் எச்சரித்தார்.

"இது எங்கள் போராட்டத்தின் துவக்கமே" என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ”காங்கிரஸ் இயக்கம் போல் போராட்டம் எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால், ஆகஸ்ட் கலவரங்களின்போது காங்கிரஸால் செய்யப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் நாமும் செய்வோம்"

"கடந்த 28 ஆண்டுகளாக ஷெட்யூல்டு வகுப்பினருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த எல்லா விதமான வாக்குறுதியையும் உடைத்ததற்கு எதிரான கண்டனம் என்று ஷெட்யூல்டு வகுப்பினரின் ஆர்ப்பாட்டங்களை டாக்டர் அம்பேத்கர் வர்ணித்தார்.

"அரசியல் சாசனத்தில், ஒரு சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்புகளை அடைந்தாலொழிய மற்ற இடத்தில் வேறு ஒரு உருவில் போராட்டம் தொடரும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நியாயமற்ற ஆலோசனைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை மாகாணங்கள் நடத்த அது சரியான நேரமாகும்"

இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துவதில் அவை எந்த உருவத்தில் நடத்த வேண்டும் என்பது பற்றி தாங்கள் மாகாணங்களுக்கு ஏதாவது ஆணை பிறப்பித்துள்ளாரா எனக் கேட்டபோது டாக்டர் பதிலளித்தார்: "எந்த போராட்ட உருவத்தை கையாளுவது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மாகாணங்களுக்கே நாம் விட்டுவிடுவோம். இந்த விஷயங்களையெல்லாம் தத்துவார்த்த ரீதியில் விவாதிக்க முடியாது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் சொந்தப் பின்னணி உள்ளது. ஒரு மாகாணத்திற்கு பயனளிப்பதாக இருக்கும் போராட்ட உருவம் மற்றதற்கு பொருத்தமானதாக இல்லாமல் போகலாம்"

சம்மேளனத்தின் நோக்கம் பூனாவில் சத்தியாகிரகம் நடத்த சிறு குழுக்களை அனுப்புவது என்ற இன்றைய உருவத்தில் புனாவில் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றார் டாக்டர் அம்பேத்கர். 'புனாவில் பெரிய அளவிலான போராட்டத்திற்கு பிரகான கஷ்டத்தை அளிப்பது ரேஷன் முறைதான்.” மேலும் டாக்டர் அம்பேத்கர் "இல்லையெனில், நாங்கள் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருப்போம்" அடுத்து வரும் காலத்தில், சத்தியாகிரகத்தை நடத்த அவர் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளாரா என்று கேட்டதற்கு, ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத் தலைவர் இவ்வாறு பதிலளித்தார். "படைத் தளபதி போர்க்களத்தில் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. நம்பிக்கை வாய்ந்த துணைத் தளபதிகள் என்னிடம் உள்ளனர். எனவே அவர்கள் போராட்டத்தைக் கவனித்து கொள்வர். நான் (பங்குபெற வேண்டும்) இருக்க வேண்டுமென்ற நிலைமை அதன் வளர்ச்சியில் ஏற்பட்டால் நான் களத்தில் இருப்பேன்". புனாவிலிருந்து தினம் அனுப்பப்படும் எனது சொந்த தூதுவர் மூலம் போராட்டம் பற்றி மிக சமீபத்திய எல்லாச் செய்திகளையும் நான் பெறுகிறேன்".

காந்தியிடமிருந்து அழைப்பு இல்லை

"விஷயங்களை நேரில் கண்டறிய" தாம் ஞாயிற்றுக்கிழமை புனா செல்ல தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கூறினார். விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்காக பேச்சு வார்த்தைகளைத் துவக்க திரு. காந்தியிடமிருந்தோ அல்லது உயர் மட்ட காங்கிரஸ் தலைவர்களிடமிருந்தோ தாம் எந்த அழைப்பையும் பெறவில்லை என்றும் கூறினார்.

அவர் மேலும், சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளைத் துவக்க இன்னமும் சம்மேளனம் விரும்புகிறது என்றார். ''ஷெட்யூல்டு வகுப்பினரைப் புறக்கணிக்க பிரிட்டிஷ் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்ற பிரதான அடிப்படையின் பெயரில்தான், பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழுவின் நீண்டகால ஆலோசனைகளை திரு. காத்தி ஒத்துக்கொண்டார் என்பதை இந்த நாட்டிலுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர் நினைக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்".

நீண்டகால ஆலோசனைகள் கயமைத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் இது பற்றி காங்கிரஸ் தலைவர்களே சமீபத்தில் பேசியுள்ளனர். அவைதான் மிகப் பெருமளவு சாதகமானவை என்று (win over) ஷெட்யூல் வகுப்பினரைத் தியாகம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொண்டது; இது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம் என்று தாம் குற்றம் சாட்டுவதாக அவர் உறுதிபடக் கூறினார்.

''எவர் ஒருவர் எவ்வளவு விரும்புகிறாரோ அந்தளவிற்கு நாடு முன்னேற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதற்குத் தடங்கலாக நிற்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவதெல்லாம். எதிர்கால இந்தியாவில் எங்கள் நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான்"

புனாவில் அஹிலாஸ்ரமத்தில், 1946 ஜூலை 21ம் தேதி தீண்டத்தகாதவர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு. ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் பேசினார். அத்த பத்திரிகையாளர் மாநாட்டைப் பற்றிய செய்தி பின்வருமாறு

                                                                                          ஆசிரியர்கள்.

ஷெட்யூல்டு வகுப்பினரின் எதிர்காலம்: திட்ட வரைவை (Blue Print) அளிக்கும்படி காங்கிரஸ் கோரப்பட்டது.

இன்று புனாவில் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், இந்தியாவின் எதிர்கால அரசியல் சாசனத்தில் 6 கோடி தீண்டத்தகாதவர்களின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் உத்தேசித்துள்ளதை ஒரு பகிரங்கப் பிரகடனத்தில் வெளியிடுமாறு அவர்களைக் கோரினார். அதற்கான திட்டவரைவை (Blue-print) கேட்டார்.

ஷெட்யூல்டு வகுப்பினர் தங்களது நியாயமான அரசியல் உரிமைகளைப்பெற புனாவில் துவங்கப்பட்ட சத்தியாக்கிரகம் நாடு தழுவிய போராட்டத்தின் துவக்கமே இது. புனாவில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகம் உயர்வான தார்மீக மட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஏராளமான ஊழியர்களின் அகிம்சை நடவடிக்கை தம்மை சத்தியாக்கிரகத்தின் பட்டதாரி' என்று கூறிக்கொள்ளும் திரு. காந்திக்கே கூட ஒரு பாடத்தை அளிக்கும். எனினும், தார்மீக ஆதாரங்கள் தீர்ந்துவிடும்போது, தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்க 'வேறு முறைகளை அவர்கள் பார்ப்பார்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

'பம்பாய் அரசாங்கத்திற்கு எதிராக அரிஜனங்கள் என்ன வைத்திருக்கிறார்கள்?" என்று பிரதம மந்திரி திரு.பி.ஜி.கெர் கேட்டதற்கு டாக்டர் அம்பேத்கர் ஆச்சரியம் கொண்டார். பதில் எளிமையானது என்றார்.

அதிகாரத்திற்கு வாரிசு 

இந்நாட்டில் பிரிட்டிஷ் அதிகாரம், செல்வாக்கு மற்றும் இறையாண்மைக்கும் வாரிசுகள் இரு சமூகத்தினரே - முஸ்லிம்களும் சாதி இந்துக்களுமே என்று அமைச்சரவைத் தூதுக்குழு முடிவு செய்தது. உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் நிர்ணயசபையில், எல்லா விஷயங்களும் சாதி இந்துக்களின் அதீதப் பெரும்பான்மையால் மட்டுமே முடிவு செய்யப்படப்போகின்றன. இந்தியாவை விட்டு வெளியேறுவது என்று பிரிட்டிஷ்காரர்கள் முடிவு செய்து விட்டனர். அவர்களின் அதிகாரத்தை வாரிசுகள் என்ற முறையில் சாதி இந்துக்களும் முஸ்லிம்களும் பெறுவர். 6 கோடி ஷெட்யூல்டு மக்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்ய உத்தேசித்துள்ளனர். என்று சாதி இந்துக்களை கேட்கும் உரிமை அவர்களுக்கு (ஷெட்யூல் வகுப்பினருக்கு) இல்லையா?

பம்பாய் அரசாங்கமும் மற்றும் பம்பாய் சட்ட சபையும் காங்கிரஸின் அங்கம்தான்; எனவே காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டதே சத்தியாக்கிரகம்.

முஸ்லிம் மாகாணங்களாகிய பஞ்சாபிலும் வங்காளத்திலும் சத்தியாகிரகத்தை நடத்த தமக்கு விருப்பம் எதுவும் இல்லை என்றார் டாக்டர் அம்பேத்கர். காரணம் "முஸ்லிம்களோடு எங்களுக்கு எந்தச் சண்டையும் இல்லை. எங்களது நலம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் (வாக்களித்து) உறுதியளித்துள்ளனர். சத்தியாக்கிரக இயக்கம் சோர்வு உணர்வால் தூண்டப்பட்டது என்பதை கோபத்துடன் மறுத்த டாக்டர் அம்பேத்கர், சென்ற தேர்தலில் ஷெட்யூல்டு வகுப்பினர் நூறு சதவிகிதம் வென்றனர்.

காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு ஷெட்யூல்டு வகுப்பினர் வாக்களித்திருந்தால், சோர்வு இருந்திருக்க முடியும். ஷெட்யூல்டு வகுப்பினரில் 4 சதவிகிதத்தினர்கூட காங்கிரஸ் அரிஜனங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை புள்ளி விவரங்கள் அடிப்படையில் நிரூபிக்கத் தயார் என்றார்; காங்கிரஸ் அரிஜனங்களில் வெற்றி பெற்றவர்கள் சாதி இந்துக்களின் வாக்குகளைக் கொண்டே, ஒரு தோல்வி மனப்பான்மையால் அவர் பாதிக்கப்படவில்லை. அவரது சம்மேளனத்தின் பின்னே 90 சதவிகித ஷெட்யூல்டு வகுப்பினர் உள்ளனர் என்பதால் அது வெற்றி.

புனா ஒப்பந்தம்

சட்ட சபைகளுக்கு ஷெட்யூல்டு வகுப்பினரின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுத்த புனா ஒப்பத்தம் அவசியம் போகவேண்டும் (ரத்து செய்யப்பட வேண்டும்) 6 கோடி தீண்டத் தகாதவர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதில் அது முடிந்தது. சர்வதேச சட்டத்தின் படிகூட, எந்த ஒப்பந்தமும் இறுதியானதோ புனிதமானதோ அல்ல. அவர்களின் லட்சியத்திற்கு தீங்காய் இப்பொழுது ஆகிவிட்டதால், அதை மாற்றியமைப்பதற்கு போராட ஷெட்யூல்டு வகுப்பினருக்கு உரிமை உண்டு.

இன்று மாலை பம்பாய் திரும்பும் முன், ஷெட்யூல்டு வகுப்பினர் மிகத் திரளாகக் கூடியிருந்த புனாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போராட்டம் கடுமையாக இறுதி வரை தொடர்ந்து நடைபெறனும் என்று கூறினார்.1

இதுவரை, 569க் குறையாத ஷெட்யூல்டு வகுப்பினரின் ஊழியர்கள், பூனா சத்தியாகிரகம் சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டு தண்டிக்கப்பட்டனர்"

நாங்கள் கேட்பது நீதியும் நியாயமும்தான்

                                                                      பம்பாய், புதன்கிழமை*

தம்மிடம் பல அதிசயங்களை சட்டைப் பைக்குள் வைத்திருப்பதாக 'சரியான' நேரம் வரும்போது, 'பிரிட்டிஷ் அதிகாரத்தின் வாரிசுகளான இந்து காங்கிரஸ்" கோட்டையின்மீது மேலும் பயங்கரமான தார்மீக ஆயுதங்களைப் பிரயோகிக்கப் போவதாகவும் அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 'பம்பாய் கிரானிக்கில்'' பத்திரிகை நிருபரிடம் 60 நிமிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கூறினார்.

ஏளனக் காட்சியல்ல

டாக்டர் அம்பேத்கர் ''எனது முழு பலத்தை நான் இன்னமும் காட்டவில்லை. புனாவில் நாங்கள் ஏளனக் (mock) காட்சியை நடத்துவதாகக் கற்பனை செய்யாதீர்கள் போராட்டத்தின் துவக்கம் இது. நாளாகநாளாகக் கடுமையானதாகவும் கட்டுக்கடங்காததாகவும் வளர்ந்து முடிவாக நாடு முழுவதையும் அதிரவைக்கும்.'' அவரது ஆயுதங்களின் தன்மையை எடுத்துக்கூற ஒரு மாதிரியை குறிப்பிட்டு, அவர் கூறினார் "உதாரணத்திற்கு, நானும் எனது மக்களும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்'' பம்பாய் பிரதம மந்திரி ரேஷன் வழங்க வாக்களித்தால், புனாவை நோக்கி நடைபோட ஒரு லட்சம் 'சத்தியாக்கிரகிகள் தயாராக உள்ளனர். விரைவில் போராட்டம் அகில இந்திய வடிவை எடுக்கும். அவரது மக்களின் "பிரமாண்டமான சாத்தியப்பாடுகளுக்கு (சக்திகளுக்கு) புனா ஒரு லேசான தோற்றம் மட்டுமே".

காங்கிரஸுக்கு நன்மை புரிபவர்

ஒரு விதத்தில் தாம் காங்கிரஸுக்கு நன்மை செய்பவரே என்று உரிமைகோரும் டாக்டர் அம்பேத்கர் அந்த ஸ்தாபனத்தை முற்றிலுமாக செயலற்றதாக ஆக்குவது தமது சக்தியில் உள்ளது என்றார். "நானும் எனது சமூகமும் முஸ்லீம்களாக மாற முடிவு செய்ய முடியாதா? ''திரு. ஜின்னாவின் மதத்தை ஏற்றுக் கொண்டால் எவ்வகையிலும் நான் இழிவானவரக மாட்டேன்; மற்றும், நிர்வாகக் கவுன்சிலுக்கு ஒரு முஸ்லீம் உறுப்பினராக என்னை நியமிக்கக்கூடும். அந்தத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுக்கவில்லை; ஏனெனில், முழு பேரழிவிலிருந்து காங்கிரஸை காப்பாற்ற விரும்புகிறேன்"

"இத்தகைய கடுமையான நடவடிக்கையில் ஏன் நான் இறங்கவில்லை?" என்று கேட்டு தொடர்ந்தார் டாக்டர் அம்பேத்கர் "அது ஏனெனில் காங்கிரஸுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளிக்க நான் விரும்புகிறேன். நாம் துவக்கியுள்ள போராட்டம் எனது கட்சி குறைந்தபட்ச எதிர்ப்பு என்ற கொள்கையை எடுத்துள்ளது".

பொருத்தமான நேரத்தில் தாமே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுக்கப் போவதாகவும் கூறினார். இப்பொழுது ராணுவத் தளபதி படைத் தளபதிகளின் ஒரு சிறிய மையக் கரு மட்டுமே (nucleus) உயர் தளபதிகளும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் நம்பிக்கையும் உள்ள போது தாமே கைதியாக ஆவது அவசியமில்லை என்று டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார். "ஆனால் நான் சிறை வாழ்க்கையைக் கண்டு பயப்படவில்லை" என்றும் பிரமிக்கத்தக்க மற்றும் திட்டமிடாத நடவடிக்கையில் நான் நம்பிக்கை வைக்கவில்லை'' என்றும் கூறுகிறார்.

எத்தகைய திட்ட வரைவை அவர் காங்கிஸிடமிருந்து எதிர் பார்க்கிறார் என்று கேட்டதற்கு டாக்டர் பதிலளித்தார். “கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் ஆக்கப்பூர்வமாக நமக்கு என்ன செய்துள்ளது? பிரிட்டிஷ் அதிகாரம், மற்றும் ஆதிக்கத்துக்கும் இப்பொழுது அவர்கள் வாரிசுகள். புதிய அரசியல் சாசனத்தின் கீழ் நமக்கு என்ன செய்ய அவர்கள் உத்தேசித்துள்ளனர் என்று அவர்களைக் கேட்க நமக்கு உரிமை உண்டு. தெளிவற்ற வாக்குறுதிகள் மீதும் வெற்றுரைகள் மீதும் நாம் நம்பிக்கை வைப்பதில்லை. நியாய மாகவும் நேர்மையாகவும் தம்மை நடத்தப் போவது பற்றிய அவர்களின் (காங்கிரஸின்) நேர்மை பற்றிய ஸ்தூலமான கருத்துகளை தாங்கள் விரும்புகிறோம். வார்த்தை ஜாலங்களில் கற்பனை உலகத்திலிருந்து இறங்கி யதார்த்தத்திற்கு வரட்டும்'

திருப்திகரமான திட்ட வரைவுக்கு கோரிக்கை 

முற்றிலும் திருப்திகரமான திட்ட வரைவை காங்கிரஸ் அளித்தால், அந்த அமைப்பில் சேரும்படி தங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் அறைகூவல் விடுக்கத் தயாரா?' என்று அடுத்து டாக்டர் அம்பேத்கர் கேட்கப்பட்டார்.

"நிச்சயமாக இல்லை. காங்கிரஸைவிட சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நாங்கள் அதிகம் தீவிரமாக இருக்கிறோம். ஏழையிலும் ஏழைகளை நாங்கள் பிரதிபலிக்கிறோம். நாங்கள் மண்ணின் மைந்தர்கள். உண்மை மாந்தர் எனவே காங்கிரஸ் போன்ற போலித்தனமான சோஷலிச ஸ்தாபனத்தில் சேருவதை எண்ணிப் பார்க்க முடியாது". எனினும், ஷெட்யூல்டு வகுப்பினருக்கு காங்கிரஸ் உண்மையிலேயே நல்லது செய்தால் நாட்டின் 'உண்மையான' புணரமைப்புக்கான போராட்டத்தில், தயக்கமின்றி தமது ஒத்துழைப்பை அளிக்கத் தயார் என்றும் கூறினார்.

இந்தப் பிரச்னையில் முஸ்லீம் லீக்கிலிருந்து கட்சிக்கு ஏதாவது வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுளளதாக புனா பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் தாம் கூறியதாகச் சொல்லப்பட்டதை அவர் மறுத்தார். முஸ்லீம் மாகாணங்களில் சத்தியாக்கிரக இயக்கத்தை துவக்குவதற்கு அவர் விரும்பாததற்குக் காரணம் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு முஸ்லீம்கள் எந்தத் தீங்கையும் விளைவிக்கவில்லை.

வாக்குகளை பெற்றாலும் இடங்கள் இழக்கப்பட்டன 

சமீபத்தியப் பொதுத் தேர்தல்களில் ஷெட்யூல்டு வகுப்பினரின் வேட்பாளர்களின் தலைவிதியைப் பற்றிக் குறிப்பிட்டு, உண்மையில் எந்தப் பலப் பரீட்சையும் இல்லை என்றார். அவரது ஆட்கள் எல்லா வாக்குகளையும் வென்றனர். ஆனால் இடங்களைப் பிடிக்கவில்லை; ஏனெனில், இந்து வாக்குகள் இடம் பெறும் சந்தர்ப்பத்தை மூழ்கடித்தன.

*"எங்களது சுதந்திரத்திற்காகவும் ஜீவிதத்திற்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று உணர்ச்சியுடன் இறுதியில் குறிப்பிட்டார். "நாங்கள் ஒரு பெரிய சமூகம், பல பத்தாண்டுகளாக அடிப்படை நீதி மறுக்கப்பட்டோம். நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்; எங்களது நியாயமான கோரிக்கைகள் அவமரியாதையுடன் தூக்கியெறியப்பட்டன. எந்த பக்கத்திலிருந்தும் எந்த அனுதாப உணர்வும் எங்களை அணுகியதில்லை. நாங்கள் கேட்பது என்னவெனில் நீதியும் நேர்மையும், எங்களுக்கு அதுகிடைக்கட்டும். இல்லையெனில், கடவுளே! விளைவுகள் யாராலும் கற்பனை செய்ய முடியாத பயங்கரமானதாக இருக்கும்'. 2

பாபா சாகேப் தலைமை தாங்கத் தயார் 

அஸ்ஸோசியேடட் பிரஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் சத்தியாகிரகிகளின் எண்ணிக்கையை சிறிய எண்ணிக்கைக்குள் வைத்திருப்பது அவர்களுக்கு உணவளிப்பதில் உள்ள கஷ்டம் உண்டயிற்று; எனவே எண்ணிக்கையை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் சம்மேளனத்திற்கு ஏற்பட்டுள்ளது என்று பீம்ராவ் அம்பேத்கர் கூறினார்.” இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் பர்மா, மலேசியாவிலிருந்தும் கடிதங்களும் தந்திகளும் புனா சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள வருவதாக எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், உண்மையான கஷ்டம் என்னவெனில், அவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளிப்பதுதான். உணவுபங்கீட்டு முறைக் (rationing) கஷ்டத்தால், இது சாத்தியமல்ல" சட்ட சபை வட்டாரக்தில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டின் தடையை மீறி சிறு குழுக்களாக இன்று முதல் சத்தியாகிரகத்தில் இறங்குவார்கள். புனா முஸ்டி நபுநிதி அவர்களின் தேவையைக் கவனித்துக் கொள்ளும். இதை தவிர இதில் பங்கெடுப்பவர்கள் நான்கு ஐந்து நாள் ரேஷன்களை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு மேலாக, ஆண்கள் தங்களுடன் நான்கு ஐந்து நாட்களுக்கு ரேஷன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எப்பொழுது தேவைப்பட்டாலும் அவரர்களுக்குத் தேவைப்பட்டால் புனா செல்ல தாம் தயாராக இருப்பதாக இயக்க அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.3

லக்னோ, சத்தியாகிரகத்தைத் துவக்குகிறது 

ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தில் 140க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் புனா ஒப்பந்தத்திற்கு எதிராக சத்தியாக்கிரகத்தில் இறங்கியபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 140 சம்மேளன உறுப்பினர்களில் 80 பேர் கவுஸ்சில் இல்லத்தில் கைது செய்யப்பட்டனர். மற்றவர் நகரின் பல்வேறு பாகங்களிலிருந்து, குற்றவியல் சட்டத்தின் 144 பிரிவின்படி காவலர்கள் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர்.

சமாதானபூர்வமான எதிர்ப்பை ஷெட்யூல்டு வகுப்பினர் துவங்குகிறார்கள் 

பொதுச் செயலாளரின் அறிவிப்பு

ஷெட்யூல்டு வகுப்பினரை ஒரு தனிக்கூறாக இருப்பதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு அமைச்சரவைக் குழு தங்களுக்கு இழைத்த அநீதியை எதிர்த்து (வன்முறை - இல்லாத) ஷெட்யூல்ட் வகுப்பினர் சம்மேளன உறுப்பினர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் சத்தியாகிரகத்தைத் துவங்குவார்கள். பம்பாய் சட்ட சபைக் கூட்டத் தொடர் துவங்குவதையொட்டி ஜூலை 15ம் தேதி புனாவில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்த புனா மாஜிஸ்ட்ரேட் விதித்துள்ள தடையை மீறி, கவுன்சில் ஹால் மற்றும் அரசாங்கச் செயலகம் ஆகியவை உள்ள 1/2 மைல் வட்டாரத்தில் (இயக்கம்) துவங்க இருக்கிறது."

பொதுச் செயலாளரின் விளக்கம்

ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் பொதுக் காரியதரிசி திரு.ராஜ்போஜ் இந்த முடிவை விளக்கி வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார். 1946 ஜூன் 4ம் தேதி பம்பாயில் அல்ல இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளன நிர்வாகக் குழு தீர்மானப்படி அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தும் காலம் வந்துவிட்டது. இந்த நேரடி நடவடிக்கையை மேற்கொள்வதைவிட இப்பொழுது வேறு மாற்று இல்லை. வரவிருக்கும் அழிவிலிருந்து ஷெட்யூல்டு வகுப்பினரைக் காப்பாற்ற இன்றுள்ள சூழ்நிலைமைகளில் ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. திரு.ராஜ்போஜ் மேலும் கூறுகிறார் : "ஷெட்யூல்டு வகுப்பினர் ஒரு தனி அரசியல் கூறு என்பதை அலட்சியம் செய்தும் அரசியல் பாதுகாப்புகளுக்காக டாக்டர் அம்பேத்கர் மற்றும் ராவ்பகதூர் என்.சிவராஜ் ஆகியவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததன் மூலமும் பிரிட்டிஷ் அரசும் அதன் அறிக்கையும் நம்பிக்கைத் துரோகத்தைச் செய்கின்றன. எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுப்பதற்கு சம்மேளனத்திற்கு அவசியமாகிறது. இந்த மோசமான விஷயத்தில், காங்கிரஸ் வகித்த விஷமத்தனமான பாத்திரத்தை அவர்கள் மறக்கவும் முடியாது. தான் பெரும்பான்மைக் கட்சி என்பதை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியது என்றும் காங்கிரஸைத் தாஜாசெய்யும் அக்கறையில் ஒரு தனி அரசியல் கூறு என்று ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அங்கீகாரம் மறுக்கும் நிர்பந்தத்திற்கு பிரிட்டன் உட்பட்டது என்றும் சம்மேளனம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. அமைச்சரவைத் தூதுக்குழு ஷெட்யூல்டு வகுப்பினருக்கு என்ன செய்ததோ அதற்கு காங்கிரஸ் சூழ்ச்சியே காரணம்; எனவே, காங்கிரஸுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க சம்மேளனத்திற்கு கட்டாயமாகிறது'. ஒரு போராட்டத்தை நடத்தும் வழிமுறைகளைப் பற்றித் தீர்மானிக்கும் நடவடிக்கைக் குழு ஒவ்வொரு மாகாணத்திற்கும் அவை நடத்தவிருக்கும் போராட்டம் எத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதை அவற்றிற்கு அறிவிக்கும் என்று திரு.ராஜ்போஜ் கூறுகிறார். மேலும், பம்பாய் மாகாண ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் பூனாவின் ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் தடையை மீறிப்போராட்டத்தின் முதல் அடியை ஜூலை 15ல் எடுத்து வைப்பதென முடிவு செய்தது. இந்த இயக்கத்தில் பங்கு பெற விரும்புபவர்கள் எல்லோரும் புனாவில் உள்ள பம்பாய் மாகாண ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளன அலுவலகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு திரு.ராஜ்போஜ் அறைகூவி அழைக்கிறார்; அங்கு பொறுப்பு வகிப்பவர் தலைவர் பி.கே.கெயிக்வார்ட்.

சத்தியாக்கிரகத்தின் நோக்கம் பற்றி பாபா சாகேப் அம்பேத்கர்

6 கோடி ஷெட்யூல்டு வகுப்பினரின் எதிர்காலத்தை (விதியை) எப்படி தீர்த்து வைக்கப் போகிறார்கள் என்பதை விளக்கி ஒரு திட்ட வரைவை காங்கிரஸ் வெளியிட வேண்டுமென்று கோரி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் கோரியுள்ளார். ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் புனாவில் துவக்கிய சத்தியாக்கிரகத்தின் நோக்கம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸிடமிருந்து பெறுவதும் எதிர்கால இந்திய அரசியல் சாசனத்தில் ஷெட்யூல்டு வகுப்பினரின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் திட்டம் என்ன என்று பகிரங்கமாக அறிவிக்க காங்கிரஸைக் கேட்டுக் கொள்வதும்தான் என்று அவர் விளக்குகிறார்.4 டாக்டர் அம்பேத்கர், இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்திற்கும் செல்வாக்கிற்கும் இறையாண்மைக்கும் வாரிசுகள் இரண்டு சமூகங்கள் - முஸ்லிம்களும் சாதி இந்துக்களும் என்று சரியாகவோ தவறாகவோ பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக் குழு முடிவு செய்துவிட்டது. ஷெட்யூல்டு வகுப்பினர் அதை தவறு என்றும் அநீதியானது என்றும் கருதுகின்றனர். முஸ்லீம்களுடன் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு எந்தச் சச்சரவும் இல்லை; ஏனெனில் ஷெட்யூல்டு வகுப்பினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்கள் நோக்கம் என்ன என்பதை ஒரு பிரகடனத்தை வெளியிட அவர்கள் தயாராக இருந்தனர். முஸ்லீம்கள் அதிகாரத்திலிருக்கும் மாகாணங்களில் எந்த சத்தியாக்கிரகமும் இருக்காது. எனினும், இந்த பிரச்னை பற்றி காங்கிரஸ் இதுவரை ஊமையாக இருந்து வருகிறது. அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் நான்குக்கு மூன்று 3/4 பெரும் பான்மையில் இருக்கும். ஷெட்யூல் வகுப்பினரை பாதிக்கும் விஷயங்கள் மற்றும் உரிமைகள் பற்றி அவர்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் அவர்கள் முடிவு செய்வார்கள். எனவே தங்கள் கேள்விக்கு காங்கிரஸிடமிருந்து விடைபெற ஷெட்யூல் வகுப்பினருக்கு உரிமை உள்ளது.

பம்பாய் சர்க்காருக்கு ஷெட்யூல்டு வகுப்பினர் சிரமம் கொடுத்து வருகின்றனர் என்றால், அதற்குக் காரணம் அது காங்கிரஸ் இயந்திரத்தின் ஒரு பாகமாகும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்திற்கு உள்ள தோல்வி உணர்வே இப்போதைய சத்தியாக்கிரகத்திற்கு தூண்டுகோல் என்று தமது அறிக்கையில் திரு.பி.ஜி.கெர் குறிப்பிடுகிறார். இயக்கத்திற்கு உள்நோக்கம் - அது பெரிதா அல்லது சிறிதா - கற்பிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது; இதற்குக் காரணம் சென்ற தேர்தலில் தோல்வி அடைந்ததுதான் என்று விளக்குகிறார்; ஆனால் அவரைப் பொறுத்தவரை, அரசியலிலும் பொது வாழ்விலும் பகிரங்கமாக நியாயப்படுத்த முடியாத எதையும் செய்யமாட்டார். எனினும், ஷெட்யூல்டு வகுப்பினர் மனதில் தோல்வி உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது தவறு. அவர்கள் 100 சதவிகிதம் வெற்றி பெற்றனர். ஆனால் தேர்தல் தொகுதிகளை இழந்தார்கள். நமது வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சாதகமாக வாக்களித்திருந்தால் தோல்வி மனப்பான்மை இருந்திருக்கலாம். அது நமக்கு நாசத்தை விளை வித்திருக்கும். சாதி இந்துக்கள் சார்பாக வெற்றிபெற்ற அபேட்சகர்கள் பெற்ற வாக்குகள் 4 சதவிகிதத்திற்கு மேல் இல்லை. இந்தத் தேர்தல்களில் நாம் தோல்வி அடைத்தோம் என்பதால் அவத்தை ஒவ்வொரு தடவையும் இழக்கப் போகிறோம் என்பதல்லா.

ஷெட்யூல்டு வகுப்பினரின் கோரிக்கைகளைப் பத்திப் பேசும் பொழுது, அவற்றில் ஒன்று புனா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகும். அதற்கு எதிராக நாம் ஏன் கிளர்ச்சி செய்யக்கூடாது? உயில் எந்த ஒப்பந்தமும் புனிதமானதல்ல, புனா ஒப்பந்தம் எந்த மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டதோ அவர்களின் அரசியல் குடிமை உரிமை (வாக்களிக்கும் உரிமை) மறுக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. ஆழ்ந்து சிந்தையின் அடிப்படையிலான ஒரு சமூகத்தின் கருத்தை மற்றொரு சமூகத்தால் செல்லுபடியாகாத் தாக்கப்படக்கூடாது. நாட்டில் எங்கெல்லாம் முதல்கட்டத் தேர்தல்கள் நடந்தனவோ, சம்மேளனத்தின் வேட்பாளரை எதிர்த்து எந்த காங்கிரஸ்காரரும் வெற்றி பெறவில்லை. ஆனால் பொதுத் தேர்தல்களில், அந்த சமூகம் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர்; மற்றொரு கட்சியின் 'கையாட்களும், கைக்கூலிகளும் மேலிடத்திற்கு வந்தனர். அதற்குக் காரணம் சாதிஇந்து வாக்குகள் ஒரு சமூகத்தின் அரசியல் பாதுகாப்பிற்காகச் செய்யப்படும் ஏற்பாடு 'முற்றிலும் குறையில்லாததாகவும்' 'ஏமாற்றுக்காரர்களிடமிருந்து காக்கப்படுவதாகவும்' இருக்க வேண்டும்.

சாமான்ய மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளோர்கள் அனைவரும் ஷெட்யூல்டு வகுப்பினரில் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளும்படி டாக்டர் அம்பேத்கர் வேண்டுகோள் விடுத்தார். சுயராஜ்யம் என்றால் அவசியமாக எல்லோருக்கும் சுதந்திரம் என்பதாகாது. ஒரு சிறிய கும்பலுக்கு அதிகாரம் மாறலாம்; அவர்கள் சாமான்ய மக்களை, அவர்கள் முன்பு அனுபவித்ததற்கு மேலாக, கொடுமைக்கு உட்படுத்தப்படலாம். 'உதவி வருகிறதோ இல்லையோ, தார்மீக அடிப்படையில் மிகக் கடுமையான முடிவு வரை போராட்டத்தை நடத்த நாங்கள் தயார்'' என்று டாக்டர் அம்பேத்கர் பிரகடனப் படுத்தினார் '"தார்மீக ஆதாரங்கள் தீர்ந்துவிட்டால், மற்ற முறைகளை நாங்கள் கையாள்வோம்'5

"ஒரு மக்களின் சுதந்திரம், அதை அடைய கையாளப்படும் முறைகளின் புனிதத்தைவிட, மிக உயர்ந்தது" கடுமையாக, இறுதிக் கட்டம் வரை போராட்டத்தை நடத்தும்படி தமது மக்களை அறைகூவி அழைத்தார். அம்பேத்கரின் உழைப்பு மற்றும் போராட்டத்தின் பயனைப் பெற்ற காங்கிரஸ் அரிஜன் தலைவர்கள் அம்பேத்கரின் போராட்டத்தை எதிர்த்துப் பேசினர். அரிஜனங்களின் கோரிக்கைகளை எப்பொழுதும் எதிர்த்தவர்களுக்கு ஆதரவளித்தனர். தனக்கு நன்மை செய்த ஒருவரை எதிர்ப்பது போல் ஆகிறது (It was like barking at one's own benefactor). இந்தச் சத்தியாக்கிரகத்தை குறிப்பிட்டு காந்தி அரிஜனில், அம்பேத்கரால் அரங்கேற்றப்பட்ட சத்தியாக்கிரகத்தை அரிஜன் பத்திரிகையில் நையாண்டி செய்வது அடங்கி இருந்தது என்று அம்பேத்கர் எழுதினார்.

சத்தியாக்கிரக இயக்கம் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடந்தது. அதன் நிர்ப்பந்தம் புனா சட்டசபைக் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. அம்பேத்கருடன் சமரசம் செய்து கொள்வதன் அவசியத்தை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்தார்கள். பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.கே.பாட்டீல், டாக்டர் அம்பேத்கரை சித்தார்த் கல்லூரியில் சென்று பார்த்தார். அவர்கள் இருவரும், எம்.என்.ஜோஷி பின் தொடர, ஜூலை 27ல் சர்தார் பட்டேலைச் சந்தித்தனர். அரசியல் நிர்ணய சபையில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது சம்பந்தமாகவும் புனா சத்தியாக்கிரகம் பற்றியும் அவர்களிடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களால் எந்த ஒப்பந்தத்திற்கும் வரமுடியவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், ஷெட்யூல்டு வகுப்பினரின் பிறபல தலைவர்களான கெயிக்வாட் மற்றும் ராஜ்போஜ் தலைமையில், வார்தாவில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி நடத்திய கூட்டத்தை நோக்கி ஷெட்யூல்டு வகுப்பினரின் ஊர்வலம் சென்றது.

ஒரு தனிநபர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் அவரைவிட நாடுதான் அதிகம் சிறந்தது என்று தாம் கருதுவதாக சில காலம் கழித்து அம்பேத்கர் சர்தார் படேலுக்கு எழுதினார். ஒருவர் காங்கிரஸ்காரராக இல்லாமலே ஒரு சிறந்த தேசியவாதியாக இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த காங்கிரஸ் தலைவரையும் விட தாம் அதிகம் சிறந்த தேசியவாதி என்றும் மேலும் குறிப் பிட்டார். 6

1.'டைம்ஸ் ஆப் இந்தியா', 1946 ஜூலை 22ம் தேதி இதழ் மறு பதிப்பு - கைர்மோடு, தொகுப்பு 8. ப. 96 96

*1946 ஜூலை. 26

2. பாம்பே கிரானிக்கில், தேதி 1946 ஜூலை. 25.

3.ஜெய்பீம், 1946 ஆகஸ்ட். 13, பக்கம் 7

4. ஜெய் பீம் 1946 ஆகஸ்ட். 13, ப.23

5. ஜெய்பீம்180 செப்டம்பர். 16.

6. கீர். பக்கம். 383.

- டாக்டர் அம்பேத்கர்

தொகுப்பு: பேரா. எ. பாவலன்

Pin It