சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தபடி சுயமரியாதை இயக்க வேலைத்திட்டக் கூட்டம் ஈரோட்டில் தோழர் ஈ.வெ.ரா. வீட்டில் நடைபெற்ற விபரமும் அதன் முடிவும் சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. அக்கூட்டத்திற்கு எதிர்பார்த்ததற்கு மேலாகவே பல ஊர்களில் இருந்தும் சுமார் இருனூறு தோழர்கள் வரை விஜயம் செய்து இருந்தார்கள். பல தோழர்கள் தாங்கள் வர முடியாத அசௌகரியத்திற்கு வருந்தி தந்தியும் கடிதங்களும் எழுதி இருந்தார்கள். என்றாலும் கூட்டத்தின் முடிவை ஏற்று, தங்களால் கூடியவரை கலந்து உழைப்பதாகத் தெரிவித்துக் கொண்டார்கள்.

கூட்டமானது இரண்டு நாளில் நான்கு தடவை கூடி சுமார் 20 மணி நேரம் நடந்தது. பல விஷயங்களைப் பற்றியும் பலமான வாக்கு வாதங்களும் நடந்தது என்றாலும் முடிவில் ஏகமனதாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன,

முதலாவது சுயமரியாதை இயக்கத்தின் லக்ஷியம் என்பது. அதாவது சென்றவாரக் குடியரசில் “சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை” என்ற தலைப்பில் பிரசுரித்த விஷயமாகும். இது பலருக்கு ஒரு பெரிய உணர்ச்சியையும், திடுக்கிடக்கூடிய நிலையையும் உண்டாக்கி விட்டதாகத் தெரிகிறது. அதில் சிலருக்கு அந்த கொள்கையே அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாய் இருந்ததாகவும் காணப்பட்டது என்பதோடு மாத்திர மல்லாமல், சிலருக்கு அந்த லக்ஷியத்தை அப்படியே ஒப்புக் கொள்ளுகின்றவர்களுக்கும் கூட அதை வெளியில் சொல்லுவது என்பது அதிக பயத்தைக் கொடுத்திருக்கிறதாய்த் தெரிகிறது. எதனாலென்றால் இதைச் சொன்னால் அரசாங்கத்தார் பிடித்து 10 அல்லது 20 வருஷம் தண்டித்து விடுவார்களோ என்று கருதினதினாலேயாகும்.periyar with kid 720ஆகவே, எது எப்படி இருந்த போதிலும் சரி, அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை, அதன் சாதக பாதகங்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் நன்றாய் விவாதித்து ஆராய்ந்து அறிந்த பின்பே அது சரியா தப்பா என்று முடிவு கட்ட வேண்டும் என்பது தான் நமது கடமையாய் இருந்தது. அந்தப்படியே நமது அழைப்புக்கு இணங்கி விஜயம் செய்து இருந்த சுமார் 200 தோழர்களும் நன்றாய் இரண்டு நாளும் விவாதித்து பிறகே ஏகமனதாய் ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அதுபோலவே சு. ம. இயக்க வேலைத் திட்டம் என்கின்ற விஷயமும் மேற்கண்டது போன்றவையாய் இல்லா விட்டாலும் அதுவும் ஓரளவுக்கு பெருத்த விவாதத்தைக் கிளப்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி என்றால் சு. ம. இயக்கம் அரசியலில் தலையிட்டால் இயக்கத்திற்கு கேடுவந்து விடுமென்றும் பலருக்கு அது அசௌகரியமாய் இருக்குமென்றும் சொல்லப்பட்டது. ஆனபோதிலும் சட்டசபை முதலிய ஸ்தாபனங்களை கைப்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அதனால் குறைந்த பட்சம் என்று சற்று அதிகமான பிரசாரம் செய்யவாவது இடமேற்படும் என்றும் கருதி ஏகமனதாய்த் தீர்மானிக்கப் பட்டு விட்டது.

லக்ஷியம்

நிற்க, சுயமரியாதை இயக்க லக்ஷியம் பொது உடமை இயக்க லக்ஷியமாய் இருக்கின்றதென்றும், அதற்கு அரசாங்க அடக்குமுறை கொடுமை ஏற்படுமென்றும், அதனால் இயக்கமே அழிவுர வேண்டி வரும் என்றும் பலர் சொல்லக் கேள்க்கிறோம். பலர் பத்திரிகைகளிலும் பிரசங்கங்களிலும் அந்தப்படி குறிப்பிட்டு வருவதையும் பார்க்கின்றோம். இதற்கு நாம் முதலாவதாக கூறும் பதில் என்னவென்றால் அவர்கள் கூறுகின்றபடியே பொது உடமைக் கொள்கையே சு. ம. கொள்கை என்று ஒத்துக் கொண்டே பாhப்போமானாலும் அதனால் ஏற்படும் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்றுதான் கேள்க்கின்றோம். நாம் என்றையத் தினம் சுயமரியாதை இயக்கம் என்று ஆரம்பித்தோமோ அன்று முதலேதான் இவ்வியக்கத்தைப்பற்றி பலரால் இது பொதுவுடமை இயக்கமென்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது என்பதோடு சு. ம. இயக்கத்தின் முடிவான லட்சியங்களை எடுத்துச் சொல்லும் போதெல்லாம் நாமும் மேல் கண்ட தத்துவத்தையே தான் சொல்லி வந்திருக் கிறோம். ஆதலால் நாம் புதிதாக எதையும் கொண்டு வந்து புகுத்தி விட வில்லை.

நிற்க மனித சமூகத்துக்கு ஏதாவது ஒரு உண்மையான தொண்டு செய்யவேண்டுமென்று ஒருவன் கருதினால் அவன் ராட்டினத்தின் பெருமை யையும், கோவில்களிலுள்ள கடவுள்களின் பெருமையையும், பகவத்கீதை, புராணங்கள் ஆகியவற்றின் பெருமையையும் உலகிற்கு எடுத்து ஓதிக் கொண்டிருந்தால் போதுமா? என்றும் சகல கொடுமைகளுக்கும், குறைபாடு களுக்கும் அன்னிய நாட்டான் மீது குற்றம் சொல்லி பாமர மக்களை அவன் பக்கம் திருப்பி ஏவிவிட்டுக் கொண்டு இருந்தால் போதுமா என்றும் கேட் கின்றோம்.

நமது நாட்டுக்கு நன்மை செய்ய முற்பட்ட காங்கிரசை 46 வருஷமாய் பார்த்தாய் விட்டது. அதைத் தலைமை வகித்து நடத்த தேசாபிமானிகள், லோகமானியர்கள், தேச பந்துக்கள், மகாத்மாக்கள் வரை முன்வந்த எல்லாப் பெரியார்களின் யோக்கியதைகளையும் பார்த்தாய் விட்டது. அதுமாத்திரமல்ல. அவற்றால் விளைந்த பயன்களையும் பார்த்தாய் விட்டது. இனி விளையப் போகும் பயன்களும் நன்றாய் விளங்கி விட்டன. ஆகவே இனியும் அறிவுள்ள மனிதன் - மனித சமூகத்தின் ஜீவகாருண்யத்தில் உண்மையான பற்றுக் கொண்ட மனிதன் அவற்றையேதான் இன்னமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டுமா? என்று கேட்கின்றோம்.

அன்றியும் நம்மை ஆட்சி புரியும் அரசாங்கம் என்பதின் யோக்கியதையும், அது இந்த 160 வருஷ காலமாய் நமக்கு செய்துவந்த பயன் என்ன என்பதையும் கண்டுவிட்டோம். அது இனி என்ன செய்ய போகின்றது என்பதையும் தெரிந்துவிட்டோம். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் நமது அரசாங்கம் ஒரு கசாப்புக் கடைக்காரன் போலவும், நமது காங்கிரஸ் அந்தக் கசாப்புக் கடைக்காரனிடம் வியாபாரம் செய்து விலை பேசி மாமிசம் வாங்கும் வாடிக்கைக்காரன் போலவும், நாமாகிய பொது மக்கள் கசாப்புக்கடைக் காரனது ஆடுகள் போன்றுமே இருந்து வந்திருக்கின்றோம். ஆடுகளாகிய நம்மை வளர்க்கும் விஷயத்தில் கசாப்புக்கடைக்காரனுக்கு இருக்கும் கவலையும் தாராள நோக்கமும் எல்லாம் நம்மை வெட்டி விற்பனை செய்வ தில் அதிகலாபம் கிடைக்கும்படியான ஆசை முயற்சியே யொழிய வேறில்லை.

இனியும் அரசாங்க சீர்திருத்த திட்டங்களையும் காங்கிரஸ் தலைவர்களுடைய தேசீய வேலை முறைகளையும் நம்பிக்கொண்டும் அவற்றிற்காக உழைத்துக் கொண்டுமே இருப்போமானால் கசாப்புக் கடைக்காரனை நம்பிய ஆடுகளின் கதியே ஆவோம்.

இதற்கு ஒரு சிறு உதாரணம் எடுத்துக் காட்டுகிறோம். அதென்ன வென்றால், சமீப வட்டமேஜை மகாநாட்டின் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். வட்டமேஜை மகாநாட்டின் அடிப்படையான கொள்கையானது அதா வது இந்திய அரசியல் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்ற விஷயமானது காங்கிரசினுடையவும் காந்தியாருடையவும் பூரண சம்மதத்தைப் பெற்றது என்பதை நன்றாய் ஞாபகத்தில் இருத்துங்கள்.

எப்படியென்றால், உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைசென்ற தேசீய வீரர்கள் விடுதலை பெறுவதற்காக தோழர் இர்வின் பிரபுவிடம் தோழர் காந்தி செய்து கொண்ட ராஜி ஒப்பந்தத்தில் வட்ட மேஜை மகாநாட்டின் அடிப்படையான பெடரல் கவர்ண்மெண்ட் சிஸ்டம், அதாவது சமஸ்டி அரசாங்கம் என்னும் மகாராஜாக்களும், ஜமீன்தாரர்களும், முதலாளிகளும் சேர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஆட்சிக் கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்து செய்து விட்டுத்தான் விடுதலை செய்யப்பெற்றார்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

ஏறக்குறைய சென்ற 30 வருஷ காலமாய் அரசியல் துரையில் ஏற்பட்டுவந்த சீர்திருத்தமென்பதெல்லாம் ‘ஜனநாயக ஆட்சி’ ‘குடிக ளுடைய ஆட்சி’ ’சுயராஜ்யம்’ என்னும் பேரால் பாமரமக்களை ஆயுதமாக வைத்துக் கிளர்ச்சி செய்யப்படுவதும், அதன் பயனாய் ராஜாக்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும்’ முதலாளிகளுக்கும் ஆதிக்கங்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதுமாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இந்தத்தடவை செய்யப்பட்ட கிளர்ச்சியின் பயனாய் ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், முதலாளிகள் என்பவர்கள் மாத்திரமல்லாமல் மகாராஜாக்கள் என்பவர்களுக்கும், இந்திய ஆட்சி ஆதிக்கம் கொடுக்கப்பட்டு அதை நிலைநிறுத்துவதற்காக எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கையொப்பமும் போட்டாய் விட்டது. இந்தப்படியான அரசியல் சீர்திருத்தமே 1933லோ 34லோ அமுலுக்கு வந்து விடப்போகின்றது. இதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம். இதற்காக அடிபட்டவர்களுக்கும், உதைபட்டவர்களுக்கும், சிறை சென்றவர்களுக்கும், தேசாபிமானி, தேசிய வீரர், தேசபக்தர் என்ற பட்டமும், தலைமை வகித்து நடத்தியவர்களுக்கு மகாத்மா, கவர்னர், மந்திரி முதலிய பட்டமும், பதவியும் அல்லாமல் வேறு என்ன நடக்கக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இதுசமயம் உலகிலுள்ள மற்ற தேச அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சி களானது அரசர்களை ஒழிப்பதற்கும் அரசாட்சிக்கு பாமர மக்கள் மீது இருக்கும் ஆதிக்கத்தைக் குறைப்பதற்குமாக கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. நமது நாட்டிலோ அரசர்களுக்கும், மகாராஜாக்களுக்கும் அவர்களது ஆதிக்க அரசாட்சிக்கும் படிப்படியாய் அதிக பலம் ஏற்படுத்தவே கிளர்ச்சிகள் நடை பெறுகின்றன.

சென்ற பல வருஷக் கிளர்ச்சியை நினைத்துப் பாருங்கள். நமது நாட்டின் ஆக்ஷிக்கு சென்ற சீர்திருத்தங்களால் ஸ்டேட் கவுன்சில் ராஜாங்க சபை என்று ஒன்று புதிதாக உண்டாக்கப் பட்டது. அதன் கருத்து என்ன? முதலாளிமாரையும், ஜமீன்தாரையும் கொண்ட ஒரு தனிச்சபை ஆக்ஷிக்கு பொருப்பாய் தலைமையாய் இருக்க வேண்டும் என்று கருதி செய்யப்பட்டு வந்ததல்லவா?

இது இந்திய அரசியல் நிலைமை சீர்திருத்தம் என்பதற்கு முன் இருந்த நிலைமையை விட அதிக மோசமான நிலைமைக்குக் கொண்டுவந்ததா அல்லது முற்போக்கான நிலைமைக்கு கொண்டு வந்ததா என்று பாருங்கள். இதற்கு தேசியமும், காங்கிரசும் காரணமாயிருந்ததா இல்லையா என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

அதுபோலவே இப்போது வட்ட மேஜையால் வரப்போகும் அரசியல் சீர்திருத்தம் முதலாளி ஜமீன்தார் மாத்திரமல்லாமல் மகாராஜாக்களும் கலந்த சபையின் ஆக்ஷிக்கு ஆளாக இருக்க வேண்டும் என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

இதைப்பற்றி ஆரம்ப காலத்திலேயே தோழர்கள் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் ரங்கசாமி அய்யங்கார்கள் சிவசாமி அய்யர்கள் சி.பி. ராமசாமி அய்யர்கள் வியாக்கியானங்கள் செய்து புகழ்மாலை பாடும்போதே நாம் எடுத்துச் சொன்னோம்.

இந்தியா முழுவதிலுமே நம்மைத் தவிர வேறு யாருமே இந்த மகாராஜாக்கள் கூட்டுறவு கொண்ட அரசியல் திட்டத்திற்கு ஆட்சேபணை சொல்ல முன்வரவே இல்லை. இந்த நிலைமையில்தான் தோழர் காந்தியும், காங்கிரசும் ராஜி பேசிக் கையொப்பமிட்டாய் விட்டது. இனி இதை மாற்ற வேறு என்ன வழி இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். ஆகையால் எப்படியாவது நாம் இந்த மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள், முதலாளிமார்கள் ஆதிக்கம் கொண்ட ஆட்சியை அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின் றோம். அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிஷாரால் நடத்தப்படுவதானாலும் சரி, இந்தியரால் நடத்தப்படு வதானாலும் சரி, மற்ற எவரால் நடத்தப்படுவதா னாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் கடமையாகும்.

உதாரணம் காட்ட வேண்டுமானால் ‘பீரங்கியால் சுடப்படவேண்டும்’ என்ற முடிவை ஒப்புக்கொண்ட பிறகு அந்த ‘பீரங்கியை யார் சுடுவது’ என்பதில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதில் பயன் உண்டா என்று கேட்கின்றோம்.

நமது தேசீயம் இப்போது “யார் சுடுவது” என்பதில்தான் சண்டை போடுகின்றது. ஆனால் நமது சுயமரியாதை இயக்கமோ பீரங்கியை உடைத்து சின்னா பின்னமாக்குங்கள்; இந்த வேலைக்கு தேசீயம் வேண்டாம்; செய்யவருகின்றவர்களை எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகின்றது. இது சரியா தப்பா என்று யோசித்துப்பாருங்கள்.

வட்டமேஜை மகாநாடானது என்றைய தினம் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் பிடரல் சிஸ்ட்டத்திற்குக் கையெழுத்து பெற்ற அன்றே முடிவு பெற்றுவிட்டது. இனி அதை யார் எப்படி திருத்தினாலும் அதனின் முக்கிய பயன் ஒன்றும் மாறுதலை அடைந்து விடாது.

இந்த நிலையில் இன்று இந்தியா மாத்திரம் இருப்பதாகக் கருதி விடாதீர்கள். உலகத்தில் உள்ள “தேசீயக் கிளர்ச்சி”கள் என்பவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள பாமர மக்களை ஏமாற்றி, கூலிகளை அமர்த்தி இந்தப்படியே தான் வேலை செய்து, சரீரத்தினால் பாடுபட்டு வாழும் மக்களை வதைத்து வாழ்ந்து வருகின்றன. இதனால்தான் நமது சுயமரியாதை இயக்க லக்ஷியம் உலக லக்ஷியமாய் உள்ளதை கைகொண்டு இருக்கிறது. இந்த லக்ஷியத்தால் ஒன்றும் ஆபத்து வந்து விடப்போவதில்லை. அப்படி ஏதாவது ஒரு ஆபத்து வருவதாய் இருந்தாலும் அந்த ஆபத்தானது மக்கள் சமூகத்தினிடம் உண்மையான கவலை உள்ளவனுக்கு மேல் கண்ட ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருவதை விட கடினமானதாக இருக்காது. ஒரு சமயம் யாருக்குக் கடினமானதாக இருக்கும் என்று யோசிப்போமானால் சோம்பேரிகளுக்கும் ஊரார் உழைப்பில் வாழ்கின்றவர்களுக்கும், முதலாளிகளுக்கும், ஜமீன்தாரர்களுக்கும், ராஜாக்களுக்கும் மகாராஜாக்களுக்கும் கடினமாய் இருக்கலாம்.

அதனால் நமக்கு என்ன? என்றைய தினம் நாம் அந்த சமூகங்கள் பெரும்பான்மையான மனித சமூகத்தின் இன்ப வாழ்வுக்கும் சுதந்திர வாழ்வுக்கும் இடையூறாய் இருக்கின்றது என்று கருதி விட்டோமோ அன்றே அவற்றின் நாசகாலத்தை எதிர்பார்க்க வேண்டியவர்களாகவும் அதற்கு நம்மால் ஆன எல்லா காரியத்தையும் செய்து தீர வேண்டியவர்களாகவும் ஆகிவிட்டோம். ஆதலால் அதைப் பற்றி கவலை இல்லை.

மற்றபடி வேலைத்திட்டத்தைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 01.01.1933)

***

வேண்டுகோள்

நமது மாகாணத்தில் ஆங்காங்குள்ள சுயமரியாதை சங்கத்தார்களும் மற்றும் அதன் லக்ஷியத்தையே லக்ஷியமாய்க் கொண்டு நடைபெற்று வரும் சங்கத்தார்களும் தங்கள் தங்கள் சங்கத்தின் ஊர் பேர், நிர்வாகஸ்தர்கள் பெயர், அங்கத்தினர் கள் எண்ணிக்கை முதலியவைகளைக் குறித்த விபரம் ஒன்று உடனே தெரிவிக்க வேண்டுகிறோம். ஏனெனில் துண்டு பிரசுரங்களையும், சிறு புத்தக வெளியீடுகளையும் அப்போதைக்கப்போது அனுப்பி வரவும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவும், சங்கங்களைக் குறித்து ஒரு சிறு புத்தகம் வெளியிடவும் வேண்டியிருப்பதால் அதன் விபரங்களை உடனே அனுப்பக் கோருகின்றோம். உடனே சீக்கிரத்தில் புதியதாய் ஏற் படுத்தக் கூடியதையும் ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 01.01.1933)

Pin It