va vu chi05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

நாம் தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய ஒரு பெரும் தலைவரைப் பற்றி அவருடைய பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைப்பதற்கான ஒரு வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன். அவர் தொடக்க காலத்தில் விடுதலை வீரராக, குறிப்பாக திலகரோடு சேர்ந்து பணியாற்றிய தீவிரவாத பிரிவைச் சார்ந்தவராக வாழ்க்கையைத் தொடங்கி சிறைபட்டதை, விடுதலைக்குப் பின்னர் நடந்த மாற்றங்களை பலரும் பல கோணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நான் ஒரு பெரியார் இயக்கத் தோழன் என்ற முறையில் பெரியார் இயக்கத்தோடும், சுயமரியாதை இயக்கத்தோடும் அவர் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிற்சங்க போராட்டமானாலும், அரசியல் ரீதியாக நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்டமானாலும் அதில் குறிப்பிடத்தக்க முதல் போராட்டமாக இருந்தது வ.உ.சி.யின் 1908 - கோரல் மில்  போராட்டம் தான். அந்த தொழிலாளர்களுக்கு 50 விழுக்காடு ஊதிய உயர்வு கேட்டார்; 50 விழுக்காடு உயர்வு கொடுக்கப்பட்டது.

வார விடுமுறை இல்லா மலிருந்தவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டது. இப்படி பல  உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் அதற்கான முன்முயற்சிகளும், மக்களிடம் எடுத்துச்சென்ற பரப்புரைகளும் முக்கியமானவை ஆகும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறுவார் மக்களை கருத்துருவாக்கம் செய்ய  கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் அதுபோல வ.உ.சி கற்பித்துத்தான் அந்த கிளர்ச்சியை முன்னெடுத்தார்.

அதன் காரணமாகத் தான் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தவர்களுக்கு, அவரது குடும்பத்தினருக்கு உணவிடுதல், அவர் களுக்கு ஆதரவாக மக்கள் பல போராட்டங்களை எடுத்தல் மட்டுமில்லாமல், அதற்கு பின் விபின் சந்தரபால் விடுதலையைக் கொண்டாடியதற்காக, கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகளுக்காக வ.உ.சி. மீது கைது, வழக்கு ஆகியவையும் தொடரப்பட்டது. ஆனால் அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர் இன்னும் கடுமையாகப் பேசியிருந்தார். சுப்பிரமணிய சிவா பேசுகிற போது இரஷ்யப் புரட்சி மக்களுக்கு நன்மை பயந்த புரட்சி என்று கூறினார்.

1905இல் நடைபெற்ற புரட்சியைக் கூறுகிறார். அப்போது இரண்டு செய்திகளை முன்னிறுத்தினார், வேலைநிறுத்தப் போராட்டம் எப்படி நடக்க வேண்டும் என்று. ஒன்று, அப்போது இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம். அது இயந்திரங்களை சிதைப்பது, பழுதாக்குவது, உடைப்பது என்று ஒரு போராட்டம். மற்றொன்று வேலை நிறுத்தம்.

நாம் இரண்டாவது முறையை எடுத்துக் கொண்டோம் என்று கூறியதற்கு அடுத்து பேசவந்த வ.உ.சி கூறினார், இல்லை நமக்கு இருக்கும் நிலைக்கு இரண்டு போராட்டங் களையும் முன்னெடுக்கும் நிலையில் இருக்கிறோம்; எடுத்தால் தான் என்ன?  என்று. வ.உ.சி. அவர்களைக் கைது செய்யக்கருதிய ஆங்கில அரசாங்கத்தார் மக்கள் எழுச்சி காரணமாக, வ.உ.சி யை தூத்துக்குடியில் கைது செய்ய முடியாமல், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை என வரவழைத்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை என நடத்திய பின்னர்தான் கைது செய்தார்கள்.

அதனால், முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் அரசாங்க ஆதரவாளருக்கு முகம் மழிக்கும்போது அரசை ஆதரித்துப் பேசியதால் பாதியிலேயே நிறுத்தி விட்டார், ரங்கசாமி அய்யங்கார் அங்கிருந்து பாதி முகத்தை மறைத்துக் கொண்டார்; பலரிடம் கேட்டார்; யாரும் முகம்மழிக்க முன்வரவில்லை என்பதால் மதுரைக்கு சென்றுதான் மீதி பாதியை மழித்துக் கொண்டார். அப்படி மக்கள் ஆதரவு பெற்ற போராளியாகத் திகழ்ந்த வ.உ.சி, சிறைக்குப் போய் வெளியே வரும்போது வரவேற்க ஆளில்லாமல் இருக்கிற நிலையை கேள்விப்படுகிறபோது தான் பல்வேறு சிந்தனை ஓட்டங்களுக்கு நாம் ஆட்படுகிறோம்.

 1907ஆம் ஆண்டு காங்கிரஸ் சூரத் மாநாடு. அம்மாநாட்டில்தான் மேடையை நோக்கி செருப்பு வீசப்பட்டது. அந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும்; திலகர் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் தீவிரவாதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வ.உ.சி அவர்களுக்கு அனுப்பபட்ட தந்தியை ஏற்றுக் கொண்டு இங்கிருந்து நூறு பேரை அழைத்துக் கொண்டு போகிறார், சொந்த செலவில் 50 பேரையும், மண்டையம் சீனிவாச்சாரி என்பவர் செலவில் 50 பேரையும் அழைத்துக் கொண்டு போகிறார்.

ஆனால் அவரின் நிலை மீண்டும் சிறைவாசம் முடிந்து விடுதலை ஆனபின்னர் தலைகீழாக மாறுகிறது. அடுத்து கல்கத்தாவில் 1917 இல் அன்னிபெசன்ட் தலைமையேற்ற மாநாட்டிற்கும் போகிறார். ஆனால் வந்தவுடன் காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து பேசுகிறார், அதில் பெரியாரும் இருக்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் கலந்து பேசுகிறார்கள் அதில், சீனிவாச்சாரி அய்யங்கார்களெல்லாம் இருக்கிறார்கள் அதில் அன்னிபெசன்டிற்கு எதிரான ஒரு நிலையை எடுக்கிறார். திலகரை ஆதரித்தவர்; திலகரைத் தீவிரமாக பின்பற்றியவர்தான். ஆனால் திலகர் ஆதரவு காட்டும் அன்னிபெசண்டை, தமிழ்நாட்டில் ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதால் எதிர்த்தார்.

திலகர் கீதைக்கு உரை எழுதினார்; வ.உ.சியோ கீதையை மறுத்து திருக்குறளுக்கு உரை எழுதினார். தன்னுடைய தனித்துவத்தை பாதுகாத்தவராகவே எப்போதும் அவர் இருந்திருக்கிறார். அந்த மாநாட்டிற்குப் பிறகு 1919இல் அமிர்தசரஸ் மாநாடு. அந்த மாநாடு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அடுத்து நடந்த மாநாடு. அந்த மாநாட்டிற்கும் பெரியாரும் போகிறார்.

அப்படி போகிறபோது, சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த என். தண்டபாணி பிள்ளையும் உடன் போகிறார். அவர் பெரியாரோடு அவரது அனைத்து முன்னெடுப்புகளுக்கும் துணையாக நின்றவர். வ.உ.சி யின் வரலாறு நெடுகிலும் அவர் வருகிறார். அந்த மாநாட்டிற்கு போகிறபோதுதான்,பெரியார் முதல் வகுப்பு பயணச் சீட்டு எடுக்கிறார். காங்கிரஸ், சுயமரியாதை காலத்திற்குப் பின்னர்தான் எளிய வாழ்க்கை முறையைப் பெரியார் பின்பற்றினார். அதற்கு முன்னர் முதல் வகுப்பு பயணம் தான் செய்கிறார். அப்போது வ.உ.சி அவர்களோ வறுமையின் காரணமாக பயணத்திற்கு கூட வழியில்லாமல் தான் இருக்கிறார். அப்போது தண்டபானி பிள்ளை சென்று அனைவருக்கும் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு எடுத்து கொண்டு வந்து, மீதித் தொகையை வ.உ.சி இடம் கொடுக்கிறார் தண்டபாணி.

ஏனென்றால் திரும்பி வருவதற்கு தொகை வேண்டுமல்லவா? அதனால். அப்படித்தான் அந்த மாநாட்டிற்கு செல்கிறார்கள்.  அம்மாநாட்டின் போதுதான், அந்நகரில் இருந்த, படுகொலை நடந்த ஜாலியன்வாலா பூங்கா சென்று துப்பாக்கி குண்டு களால் சுவற்றில் உள்ள அடையாளங்களையெல்லாம் பார்க்கிறார்கள். அந்த  மாநாட்டிற்கு சென்று வந்த பின்னர் தான், அதுவரை ஆதரவாளராக இருந்த பெரியார், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி, முழுமையாக காங்கிரசில் செயல்பட தொடங்கினார்.  அந்த மாநாட்டிற்குப் பின்னரும் வ.உ.சி வறுமையில் தான் இருந்தார். சென்னையில் வசித்து வந்தார். சென்னையிலும் அவர் அமைதியாக இருந்து விட வில்லை.

டிராம்வே தொழிலாளர் போராட்டத்தில் இதே எம்.தண்டபானி பிள்ளை  தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சென்று உரை யாற்றுகிறார். போராட்டத்திற்கான வேலைகளையும் செய்கிறார். 1920 இல் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரயில்வே போராட்டத்திற்கு செல்கிறார். அதற்குப் பின்னால் 1925 நவம்பரில் பெரியாருடன் இவரும் காங்கிரசை விட்டு வெளியே வருகிறார். வகுப்புரிமை தீர்மானத்திற்கு கூட ஆதரவாகவேத்தான் இருக்கிறார்.

அதைப்பற்றி, 1928இல் ஒரு நிகழ்வில் வ.உ.சி. பேசுகிறார். நாகப்பட்டினத்தில் தேசபக்த சமாஜ்யம் ஏழாம் ஆண்டு விழா. அதில் பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். அந்த விழாவில் கூறுகிறார், “எனக்கு நாயக்கரை 20 வருடங்களாகத் தெரியம் நானும் அவரும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் சில அயோக்கியர்கள் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகி விட்டோம்.

பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, அந்த இயக்கம் மற்ற எல்லா இயக்கத்தினிலும் நல்ல இயக்கம் என்பதால் அந்த இயக்கத்திற்கு நானும் என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்” என்று இரண்டு மணி நேரம் சுயமரியாதை இயக்கத்தின் தேவைகளை பற்றி பேசியிருக்கிறார். குடி அரசிலும் அந்த உரை பதிவாகியிருக்கிறது. அதே போல சேலத்தில் 1927இல் நடைபெற்ற மாநாட்டில் தான் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் பற்றியும் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தைப் பற்றியும் பேசுகிறார். அவரின் ஜாதி ஒழிப்பு சிந்தனைகள் சிலவற்றை நாம் கூற வேண்டும்.

வழக்கறிஞராக அவர் பணியாற்றிவந்தபோது வழக்காடுவதற்கு வந்து போன ஒரு தோழர் மயக்கமுற்றுக் கிடப்பதைப் பார்த்து அவரை தேற்றி என்ன ஆனது என்று செய்தியைக் கேட்கிறார். அவர் சொல்கிறார் வழக்கு நடந்து கொண்டே இருக்கிறது; நானும் வந்து கொண்டே இருக்கிறேன் என்கிறார். அவரிடம் விவரங்களை கேட்டறிந்து இனி வராதே என்று கூறி அனுப்புகிறார். வழக்கை நடத்தி வெற்றி பெற்று செய்தியை மட்டுமே அனுப்புகிறார்.

அதை தன்னுடைய தன் வரலாறு கவிதையில் கூட எழுதுகிறார். “முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல் / அடிமை புரியும் அறிவினைக் கொண்ட / வேத நாயகம்” எனும் மேம்படு பள்ளனை / ஏது மில்லாமலே எண்ணிலா வழக்கில் / அமிழ்த்தனர் பேலீசார்; அனைத்தினும் திருப்பினேன்”  என்று குறிப்பிடுகிறார்.

அதுபோலவே, இரண்டு கண் களையும் இழந்த ஆதரவற்ற இராமையா தேசிகன் என்ற ஒரு ‘குலத்தில் குறைந்தவரையும்’ தமது இல்லத்தில் உணவிட்டுப் பாதுகாத்தவர் வ.உ.சி. பார்வையற்ற அவருக்கு வ.உ.சி. அவர்களின் மனைவி உணவு ஊட்டி வந்துள்ளார்.

அதுகுறித்து தனது தன் வரலாற்றில், “சிவப்பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென் / தவப்பயனால் இலம் தங்கப் பெற்றேன் / ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால் / தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள் / குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென் / தலத்தில் உள்ளோர் சாற்றினர் குற்றம்” ...... எனக் கூறியுள்ளார்.

(தொடரும்)

Pin It