2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, அமித்ஷாவின் வார்த்தைகளை உண்மையாக்கி இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவுப் பகுதியில், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ஏனைய அமைப்புக்களின் துணையின்றியே 300-ற்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் தனித்து வெற்றி பெறுவோம் என்று அமித்ஸா குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் வீழ்ச்சி அடைந்திக்கின்ற போதிலும் 2014-யில் அக்கட்சி வெற்றி பெற்ற 44 இடங்களைக் காட்டிலும் ஓரளவிற்கு கூடுதலான இடங்களை நோக்கி இத்தேர்தலில் முன்னேறி இருக்கிறது.

modi and amit shah after election resultஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து துடிப்புமிக்க பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டாலும், வலிமையான மைய அரசியலை முன்வைத்து பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் பிரச்சாரத்திற்கு இணையாக உற்சாகம் இழந்த காங்கிரஸ் கட்சியின் தொண்டர்படையும் ஒருமை காணாத கூட்டணி தலைவர்களும் இருக்கவில்லை.

நடைபெறப் போகும் தேர்தல் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கும் தேர்தல் வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது காவிக் கட்சி. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், 'அடையாள அரசியல்’ என்ற தனது தனித்த முத்திரைப்பாணியை அது வலுவாக கட்டியெழுப்பியுள்ளது.

பிஜேபியின் வியூகத்தை கண்டறிதல்:

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடியை தனது கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி. சமூகநீதியை வலியுறுத்தக்கூடிய அரசியல் கருத்தாக்கத்திற்கு மாற்றாக குஜராத் வளர்ச்சி மாதிரியை முன்வைத்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது பாஜக. காங்கிரஸ் கட்சியையும், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற ஏனைய மாநிலக் கட்சிகளையும் ‘இஸ்லாமிய ஆதரவுக் கட்சிகள்’ என கடுமையாகத் தாக்கியது. இந்தக் கட்சிகள் இஸ்லாமிய மக்களின் நலன்களுக்காகவே பாடுபடுகின்றன; இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோமா இல்லையா என்பது தான் அவர்களது கவலையாக இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கினார்.

வட இந்தியப் பகுதிகளில் வாழ்கின்ற இசுலாமிய மக்களின் சமூகப் பொருளாதார நிலை படுபாதாளத்தில் இருக்கின்றது என்று 2006-ல் அமைக்கப்பட்ட சச்சார் ஆணையத்தின் (Sachar committee) சீரிய ஆராய்ச்சி அறிக்கைகள் கூறியபொழுதிலும், மதத்தின் அடிப்படையில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்தி மக்களை கூறுபோடும் அரசியல் பிரச்சாரங்களை பா.ஜ.க தொடர்ந்து உந்தித் தள்ளியது.

போலி மதச்சார்பின்மையைப் பேசும் அரசியல் கட்சிகளின் மூலம் இசுலாமியர்கள் போதுமான அரசியல் இலாபமடைந்து விட்டனர்; பெரும்பான்மை இந்துக்கள் தான் கைவிடப்பட்டுள்ளனர் என்று பேசிய பா.ஜ.க, அந்த முழக்கத்தின் மூலம் மக்களிடையே ஓர் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றது.

பழைய இந்துத்துவத்தை வலியுறுத்தும் இந்தப் புதிய அரசியல் பிரச்சாரம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளையும் சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல் கட்சிகளையும், பி.ஜே.பி-க்கு ஆதரவாக வேலை செய்யுமாறு மாற்றி இயக்கியது.

2014-ற்குப் பிறகான காலகட்டங்களில், இந்து மதத்தில் ஆதிக்கம் செலுத்தாத சாதி இந்துக்களை நோக்கி கட்சியை நகர்த்த பா.ஜ.க கடுமையாக உழைத்தது. சமாஜ்வாதி கட்சி யாதவர்களின் ஆதரவிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஜாதவர்களின் ஆதரவிலும், இராஸ்திரிய லோக் தளம் உத்திரப்பிரதேச ஜாட்டுகளின் ஆதரவிலும், அரியானா காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தின் ஜாட்டுகளின் ஆதரவிலும் மகராஸ்டிர காங்கிரஸ் மராத்தியர்களின் பேராதரவிலும் என சாதிய அடையாளங்களோடு இயங்கும் ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் அம்மாநிலத்தில் உள்ள முக்கிய ஆதிக்கச் சாதியினர்களின் மைய வாக்கு வங்கியைச் சார்ந்தே இயங்குகின்றன என்ற உண்மையை பா.ஜ.க. உணர்ந்து கொண்டது.

சாதிய அடையாளத்தோடு இயங்கும் கட்சிகளில் உள்ள இத்தகைய ஆதிக்கச் சாதியினரின் மையவாக்கு வங்கியே காலந்தோறும் அவர்களது கட்சிபெறும் தேர்தல் வெற்றியை உறுதி செய்து வருகின்றன. இந்த மைய வாக்கு வங்கியை எப்படி பரந்துபட்ட சமூகத்திற்குமானதாக கட்டமைப்பது என்ற சூத்திரத்தை தான் அவர்கள் பல்வேறு தேர்தல்களில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் என்பதனை பா.ஜ.க கண்டுகொண்டது.

இதற்கு மாறாக பாஜக‌, நாடெங்கும் உள்ள இந்து மதத்தில் போதிய அதிகாரமில்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இந்துக்களை அணிதிரட்ட முயன்றது. ஆதிக்கம் இல்லாத‌ சாதியினர்களிடம் அவர்களுக்குரிய அரசியல் பங்கேற்பிற்கான வாய்ப்பினை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக ஏற்கனவே நன்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஆதிக்கச் சாதியினர்களின் கைகளில் மட்டுமே புழங்கிய பொது ஆதார வளங்களின் பங்குகளை ஆதிக்கமிலா சாதியினர்களும் பெறுவதை பி.ஜே.பி உறுதி செய்தது, என அரசியல் ஆய்வாளர் சஜன் குமார் குறிப்பிடுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்தப் புதிய அரசியல் முன்னெடுப்பினால், தனுக்கர்கள் (Dhanuks),, மௌரியர்கள் (Mauryas,), சாக்கியர்கள் (Sakhyas), தோபிக்கள் (Dhobis), காதிக்குகள் (Khatiks), ராஜ்பஹர்கள் (Rajbhars,) போன்ற எண்ணற்ற சாதியினர்களும், தலித்துகளும் பயனடைந்தனர். தனித்தனியாக பார்க்கும்போது ஆதிக்கச் சாதியினர்களை விட குறைந்த மக்கட்தொகையினரைக் கொண்டவர்களாக இவர்கள் இருந்தபோதிலும், இவர்கள் அனைவரும் இணைந்து பி.ஜே.பி-யின் பின்னால் ஒரே அணியாக ஒன்று திரட்டப்பட்ட‌போது அவர்களே பெரும்பான்மை வாக்காளர்களாயினர்.

இவ்வாறு, எந்தக் கட்சியாலும் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமலிருந்த சாதியினர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து, அவர்களிடம் கண்ட அரசியல் பேரத்தினை லாபமாக்கி ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துதான் பி.ஜே.பி-யின் ஆகச்சிறந்த பலமாக மாறியுள்ளது. பி.ஜே.பி எதைப் பேசினாலும் எதைச் செய்தாலும் அதற்கு பக்கபலமாக அந்தப் புதிய அரசியலணி நிற்கின்றது.

தேசியப் பாதுகாப்பை முன்வைத்து காவிக்கட்சி முன்னெடுத்த அரசியலுக்குப் பின்பலமாக நின்றது இவர்களே. சிறுபான்மையினர்களின் நலன்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த அரசியலிற்கு நேரெதிராக பி.ஜே.பி அரசியல் முடிவுகளை எடுத்தபோது அதற்கும் பக்கபலமாக இருந்தவர்களும் இவர்கள் தான். தனக்கு எது அவசியத் தேவையாக உள்ளதோ அதையே அரசியல் பிரச்சாரமாக, பி.ஜே.பி தாராளமாக தேர்வு செய்துகொண்டது.

அத்துடன் இணைந்து, பழைய இந்துத்துவ பிரச்சனைகள் சார்ந்த அரசியல் முடிவுகளை பி.ஜே.பி கையிலெடுத்ததும் அவை சமூகத்தில் இருந்த பல்வேறு திரிபுவாதங்களை மேலும் அதிகப்படுத்தியது.

சங் பரிவாரங்களின் குடையின் கீழ் ஆதிக்கச் சாதியக் குழுக்கள் மட்டுமேயில்லை. பல புதிய சாதிக்களும் அக்குடையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பி.ஜே.பி தனது தற்போதைய அரசியல் வடிவத்தை மாற்றிக் கொள்ளாத வரையில், அக்கட்சியின் அதிகாரம் பரந்த சாதியக் குழுக்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் என்பது உறுதி. சிறுபான்மை மதங்களை பி.ஜே.பி மறுப்பதனால் கிடைக்கும் எச்ச சொச்ச இடங்களை, அரசியலில் இதுவரை வெகுச்சொற்பமாக பிரதிநிதித்துவப்பட்டுள்ள சாதியக் குழுக்களோடு அக்கட்சி பகிர்ந்து கொள்கிறது.

பழமையான இந்துத்துவத்தோடு, ஆதிக்கமில்லாத சாதி இந்துக்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் இணைவதன் கூட்டுப்பலன், முன்னுதாரணமற்ற ஒரு தேர்தல் அரசியல் பலத்தினை பி.ஜே.பி-ற்கு வழங்குகிறது என சஜன் குமார் கூறுகிறார்.

இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சிதறல்களை மீண்டும் ஒருங்கிணைக்கவே, பாகிஸ்தானின் பாலக்கோடு மீதான வான்வழித்தாக்குதலை பா.ஜ.க அரசு அண்மையில் தொடுத்தது.

பிரக்யா தாகூர், ’பேரச்சம் ஊட்டக்கூடிய’ குற்றவாளியென பலர் சரியாகவே மதிப்பிடுகின்றனர். ஆனால், அக்குற்றவாளி காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுரம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்கிறார். சங்பரிவாரங்கள் கடந்த 50 ஆண்டுகளாகவே காந்தியடிகளின் அரசியலைப் பல்வேறு தருணங்களில் தங்களுக்குள் மறைவாக பூதாகரமான முறையில் எதிர்த்து வந்திருக்கின்றனர். அதே உள்ளார்ந்த வெறுப்பை தான் பிரக்யா போன்றவர்களும் விதைக்கின்றனர். காந்தியைப் பற்றிய பல தவறான, பொய்யான கருத்துக்களை பேச்சுவாக்கில் அவர்கள் பரப்புகிறார்கள். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதை அம்பேத்கர் மகிழ்ச்சியாகக் கருதினார் என அண்மைக்காலங்களில் ஓர் அவதூறு பரப்பப்படுகிறது.

பி.ஜே.பி-ற்கு ஆதரவான வாக்குகளில் பெரும்பகுதி 50% வாக்குகள், இந்துக்களின் மத்தியில் காந்தியைச் சுட்ட கோட்சேவின் மதிப்பை உயர்த்திப் பேசுவதால் கிடைத்தது என சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு பெருகும் இந்துக்களின் பேராதரவு வியப்பான தேர்தல் முடிவுகளுக்கு வழிவகுக்கின்றது. டெல்லி கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அதிசி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவர் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல, பேகூசாராய் (Begusarai) தொகுதியில் போட்டியிட்ட கண்ணையா குமார் (Kanhaiya Kumar) பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். ஏழைகளின் கல்விக்காகவும் இந்திய மக்களின் குடியுரிமை விடுதலைக்காகவும் பேசிய மாணவத் தலைவர் கண்ணையா குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடினமான சூழ்நிலையில் பி.ஜே.பி எப்படி வெற்றி கண்டது..?

 ஒரு சாரரின் கருத்து யாதெனில்: மோடிக்கும் பி.ஜே.பிக்கும் வாக்களிப்பது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை. மோடிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கருதியதாக பலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது சரியான பார்வையாக இருக்க முடியாது.

சில நிகழ்வுகளின் வழி இதை நாம் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். டெல்லியில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பி.ஜே.பி பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையானது, ஆம் ஆத்மியும் காங்கிரசும் சேர்ந்து பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

தேர்தலுக்கு முன்பே கூட்டணிக்கு முறையான களம் காணாதது தான், இரண்டு கட்சிகளின் தோல்விக்கும் பா.ஜ.க.வின் வெற்றிக்கும் காரணம் என இரு கட்சிகளின் தோல்வி குறித்து அலசுபவர்கள் கணிக்கிறார்கள். இது ஓரளவிற்கு சரியான கருத்து தான்.

பேகூசாராய் தொகுதியில் போட்டியிட்ட கண்ணையா குமார்- மூன்றாவது அணி வேட்பாளாராக தேர்தலில் களம் கண்டவர் - இசுலாமிய வேட்பாளரான தன்வீர் ஹசனை தனது சமூகத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்த மறுத்தார். இதனை சிறுபான்மை நலவுரிமைக்காக பாடுபவர்களில் பலர் சிந்தித்துப் பார்த்தனர். அம்முடிவின் பலன் ஒரு முக்கியமான தேர்தல் படிப்பினை.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவ‌தை வழக்கமாகக் கொண்ட வெறிபிடித்த வலதுசாரித் தலைவர், கிரிராஜ் சிங் கண்ணையா குமாரை விடவும், தன்வீர் ஹசனை விடவும் ஏறக்குறைய 2 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

அதைப்போல, தனித்து நிற்கும் பி.ஜே.பி-ற்கு எதிராக கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தள காங்கிரசின் கூட்டணிக் கட்சிகள் களப்பணியாற்றவில்லை. இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டதோடு, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அமேதியில் தோற்றுப் போயிருக்கிறார். இத்தோல்வியை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மீது வருத்தம் கொண்டிருந்த, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள், தங்களை சிறிது ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.

காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான எதிர்த்தரப்பு வாக்குகளை ஓரளவிற்கு வீழ்த்தியிருந்த போதிலும், பா.ஜ.வின் 50 சதவீத வாக்குப்பதிவிற்கு கூட அது ஈடாகாது. இதற்கு ‘மோடி அலை’ என்றோ அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்தப் பெயரோ இட்டுக் கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மையான அரசியல் காரணங்கள் பி.ஜே.பி-ற்கு ஆதரவாகவே குவிந்திருந்தன என்பதே உண்மை. இந்தக் கட்டுரை எழுதும் நான் உட்பட பல்வேறு அரசியல் நோக்கர்களும், பத்திரிக்கையாளர்களும் இதைக் கவனிக்கத் தவறுகின்றனர்.

பி.ஜே.பி-யின் தேர்தல் உத்திகள், இந்திய நாடாளுமன்றத் தேர்தலை பிரதமருக்கானதாக கருதாமல், அதிபருக்கான தேர்தலைப் போல மாற்றிவிட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சி களத்தில் இறங்கி ஆற்றிய கட்சிப்பணிகளின் தேர்தல் முடிவுகள் தான் இவை. களப்பணியில்லாமல் இவை எதுவுமே சாத்தியமில்லை. அடுத்த பிரதமர் மோடி தான் என எண்ணியிருந்த பெரும்பான்மை வாக்காளர்களின் தெளிவான வாக்குப்பதிவே தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டு இருக்கின்றன.

அதேநேரத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது பிரதமர் கனவை ரகசியமாக வைத்துக் கொள்ளத் தவறிவிட்டனர். அடுத்த பிரதம அமைச்சர் யார் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய அபத்தமான‌ பதில்களும் பேச்சுகளும் வாக்காளர்களை குழப்பமடையச் செய்தன.

தலித் தலைவர் மாயவதி தான் அடுத்த பிரதமர் என்றெழுந்த பேச்சுக்கள், பரந்த அரசியல் தளத்தில், தாராள நோக்கைக் கொண்டிருந்தவர்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க-விற்கு வாக்களித்தவர்களின் தேர்வு இதில் தெளிவாக இருந்தது. மோடிக்கும் முகந்தெரியாதவர்களுக்கும் (மாயவதி உட்பட) இடையே நடக்கும் போட்டியில் அவர்கள் மோடியைத் தேர்வு செய்துவிட்டார்கள்.

சாதியும் மதமும் இணைந்த இயங்குகின்ற ஒரு தனித்த அடையாள அரசியலை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சோதித்துப் பார்த்து வெற்றி கண்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தேர்தல் உத்தியை வலுவாகக் கட்டி எழுப்பி இருக்கிறது. தேர்தல் வெற்றி தருகின்ற உற்சாகத்தினால், இது ஏதோ மோடி அலையினால் கிடைத்த வெற்றி என்பது போல் காட்டப்படுகிறது.

கட்டுரையாளர்: அஜோய் ஆசிர்வாத் மஹாபிரசாஸ்தா (https://thewire.in/politics/bjp-experimented-with-identity-politics-in-2014-and-cemented-it-in-2019)

தமிழில் : ப.பிரபாகரன்

Pin It