பாலஸ்தீன மக்கள் 75 ஆண்டுகளாக தொடர் இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். புராணக் கட்டுக்கதைகள், அதனால் உருவான மத அடிப்படைவாதம், இஸ்ரேல் எனும் நாட்டை வளர்த்தெடுப்பதில் மேற்குலகிற்கு இருக்கும் பிராந்திய- ஏகாதிபத்திய நலன் ஆகியவற்றிற்கு பல லட்சம் பாலஸ்தீன மக்கள் பலியாகி இருக்கின்றனர். இன்றும் அது தொடர்கிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீன மக்கள் அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக வரலாறு காணாத அளவிலான மிகப்பெரிய எதிர் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது. 17 ஆண்டுகளாக எல்லை சுவர் என்கிற பெயரில் சிறைப்படுத்தப்பட்ட பாலஸ்தீன மக்கள், ஹமாசின் உதவியுடன் சிறைச்சுவரை உடைத்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். இது இஸ்ரேலையும், அதை 75 ஆண்டுகளாக வளர்த்து வரும் மேற்குலக நாடுகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீன பொதுமக்களது வாழிடங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கு காரணம், இஸ்ரேல், ‘சியோனிசம்’ எனப்படும் யூத அடிப்படைவாத கொள்கையை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடு. அதன் ராணுவம், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் கொள்கை நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. 75 ஆண்டுகளாக நடந்தேறி வரும் அதன் தாக்குதலுக்கு இலக்காவது பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் முகாம்களே ஆகும். ஹமாசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்தேறி வரும் தற்போதைய போரிலும் இஸ்ரேல் ராணுவம் இதையே செய்திருக்கிறது. போரின் முதல் 5 நாட்களில் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை 950. அதில் 260 பேர் குழந்தைகள்.attack on palastineஇஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிற வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் ’காசா’ என்கிற பகுதி முழுவதுமே நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள்; 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே காசாவின் மக்கள் தொகையில் 70% க்கு அதிகமானோர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்; 61 லட்சம் பேர் அண்டைய நாடுகளின் 50க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் சிதறிக் கிடக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இப்பேரழிவு தாக்குதலால் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது.

ஒருபுறம் மக்களின் வாழிடங்களை அழித்து படுகொலைகளை அரங்கேற்றி வரும் அதே வேளையில் மற்றொருபுறம் திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் ஹமாஸை தீவிரவாத இயக்கமாக சித்தரித்து வருகிறது இஸ்ரேல். இஸ்ரேல் உள்ளே நுழைந்த ஹமாஸ் இஸ்ரேலிய குழந்தைகளின் தலைகளை கொய்ததாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன்மூலம் ராணுவ ரீதியிலான தனது தோல்வியை மறைத்து தனது இனப்படுகொலைக்கான தார்மீக நியாயங்களை உலக மக்களிடையே இஸ்ரேல் கோரி வருகிறது. இதற்கு பக்கபலமாக மேற்குல ஊடகங்களும், செய்தி வெளியீட்டு நிறுவனங்களும், ஒவ்வொரு நாடுகளிலும் அவர்கள் வைத்திருக்கும் கருத்துருவாக்க அடியாட்களும் களம் இறக்கி விடப்பட்டிருக்கின்றன. BBC, இந்து குழும பத்திரிக்கைகள் துவங்கி தினமலர் உள்ளிட்டவை வரை வெளியிடும் செய்திகளில் இருந்து இதைக் காணலாம். இவை அனைத்திற்கும் பின்னணியில் மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்திய நலனும் இஸ்ரேலின் இனவாத கருத்தியலும்தான் இருக்கின்றன.

சியோனிசமும் இஸ்ரேலிய உறுவாக்கமும்

பாலஸ்தீனம், மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள ஒரு நாடு. ஆபிரகாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் யூதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் இந்த பிராந்தியத்தில்தான் தோன்றின. இன்று, இந்த மண்ணின் மக்களாகிய பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் அவலத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

எபிரேய விவிலியத்தின்படி (Hebrew Bible), யூதர்களுக்கென கடவுளால் அறிவிக்கப்பட்ட பெரும்தேசம் எனக் கூறி யூதமக்களை இன்றைய பாலஸ்தீனம் அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார் ஆபிரகாம். அவரைத் தொடர்ந்து மோசஸ் மற்றும் ஜோசுவா அவர்களை வழி நடத்துகிறார்கள். அவ்வாறுதான் யூதர்கள் இப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு யூதர்களுக்கென ஒரு தேசத்தையும் அரசாங்கத்தையும் அவர்களெல்லோரும் ஒன்றுகூடி நிறுவினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கி.பி.70களில் இந்த ஆட்சி அழிந்தபோன காரணத்தால், யூதர்கள், தங்களுக்கென நாடில்லாதவர்களாகி,​ உலகம் முழுவதும் அகதிகளாக அலைய நேரிட்டது. இது மத அடிப்படையில் சொல்லப்பட்டு இன்றுவரை நம்பப்பட்டு வரும் கதை.

இப்புராணக்கதையை அடிப்படையாக கொண்டு சியோனிசம் என்கிற கருத்தினை தியோடர் எக்செல் (Theodor Herzl) என்பவர் 1896ல் உருவாக்குகிறார். இந்த சியோனிச கொள்கையினை ஏற்றவர்கள், உலகம் முழுவதும் இருக்கிற யூதர்கள் தங்களுக்கென தனி நாடு ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும், அதுவும் தங்களது கடவுளால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை பேச ஆரம்பித்தனர்.

இக்கருத்தியல் மிகக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து, செல்வாக்கு பெற ஆரம்பித்தது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், வங்கிகள் மூலம் தங்களுக்கென நிதி கட்டமைப்புகளை உருவாக்கி, பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்க துவங்குகின்றனர் சியோனிஸ்ட்கள்; கூடவே யூத குடியமர்வும் நடைபெறத் துவங்குகிறது. இதனால் தனித்த இனமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன அரேபியர்கள் அடுத்து வரும் காலங்களில் சிறுபான்மையினராக மாற்றப்படுகின்றனர்.

1917-இல், அரசியல் காரணங்களுக்காகவும் தனது பிராந்திய நலனிற்காகவும், இஸ்ரேல் எனும் நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்தது இங்கிலாந்து. சியோனிஸ்டுகளின் பல்வேறு அரசியல் நகர்விற்குப் பிறகு பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க 1947இல் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்று யூதர்களுக்கான இஸ்ரேல். மற்றொன்று அரேபியர்களுக்கான பாலஸ்தீனம். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இங்கிலாந்தின் அரசியல் சூழல் உலகளவில் மாறியபோது, ​​இஸ்ரேலை தனது பிராந்திய அரசியல் நண்பனாக்கிக் கொண்டது அமெரிக்கா. இவ்வாறு, பாலஸ்தீன மண்ணில் அதுவரை வாழ்ந்து வந்த தேசிய இன மக்களை அழித்து, இல்லாத ஒரு தேசம் உருவாக மேற்குலக நாடுகளும் ஐ.நா.வும் அடித்தளம் இட்டுக் கொடுத்தது.

1880-90களில் 15,000 எண்ணிக்கையில் இருந்த யூதர்கள் அடுத்த 30 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்கள் தொகையில் 6 சதவிகிதமாக மாறுகின்றனர். இன்றைய நிலவரப்படி, பாலஸ்தீனத்தில் 79 சதவிகிதம் இஸ்ரேலியர்கள் வாழ்கின்றனர். 1948க்கு பிறகு 600க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகளால் துண்டுதுண்டுகளாக பிரிக்கப்பட்டது பாலஸ்தீனம். இன்று, ஒன்றொன்றுக்கும் சம்பந்தமில்லாத இரு பகுதிகளாக பாலஸ்தீனத்தின் காசாவும் மேற்கு கடற்கரையும் இருக்கின்றன.israeli expansionகாசாவின் நிலை

சியோனிஸ்டுகள் நுழைவுக்கு முன்னர் செழிப்பாக இருந்த பாலஸ்தீனம், காலப்போக்கில் மிகவும் வரிய சூழலுக்கு தள்ளப்பட்டன. வருமை, தொடரும் போர்சூழல், வேலைவாய்ப்பின்மை, உணவுத் தட்டுப்பாடு, இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை பாலஸ்தீனத்தை வாழ்வதற்கு அருகதையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கின்றன. காசாவிற்கும் மேற்கு கரைப் பகுதிக்கும் இடையே இஸ்ரேலிய நிலப்பகுதிகள் இருக்கின்றன. இது ராணுவ அடிப்படையில் இஸ்ரேலுக்கு வாய்ப்பாக அமைகிறது.

2006-க்கு பிறகு, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு ராணுவக் காவலுடன் இவை இரண்டு பகுதிகளும் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. காசாவில், சுமார் 23 லட்சம் மக்கள் மிகக் குறுகிய நிலப்பகுதியில், திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இஸ்ரேலின் போர்கள் அனைத்தும் அடர்த்தியாக அடைக்கப்பட்டு இருக்கும் இம்மக்களின் மீதே நடத்தப்படுகின்றன.

மேலும், பாலஸ்தீனத்தின் தரை, வான் மற்றும் கடல்வழி எல்லைகள் அனைத்தும் இஸ்ரேலின் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால், காசாவிற்கான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ உதவிகள் ஆகிய அனைத்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

இதனால், போர் அற்ற (?) காலங்களிலும் கூட பாலஸ்தீனத்தின் 63% அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பில்லாத நிலையிலேயே வாழ்கின்றனர். காசாவின் குடிநீரில் 90% மேல் பயன்படுத்தமுடியாத நிலையில் மாற்றப்பட்டு இருக்கின்றது. இப்படியிருக்க, போரின்போது இவை அனைத்தும் முற்றும் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும். ஒவ்வொரு போரின் போதும் சர்வதேச சட்ட விதிகளை மீறி இத்தகைய மனித உரிமை மீறலை செய்கிறது இஸ்ரேல். கொள்கை அடிப்படையில் திட்டமிட்டு இவை நடத்தப்படுகிறது. இருப்பினும், உலக நாடுகள் கண்டும் காணாதவாறு கடந்து செல்கிறது.

கடந்த அக்டோபர் 9 அன்று இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் “காசாவிற்கான உணவு, குடிநீர், மருந்துகள், மின்சாரம் ஆகிய அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும். மிருகங்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கிறோம். ஆகையால் அதற்கேற்றபடிதான் நடந்துக்கொள்ள முடியும்” என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதன்படி, தடுத்தும் நிறுத்திவிட்டார். தற்போது காசா உணவு, தண்ணீர், மின்சாரம், மருந்துகள் இன்றி கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. போரில், மக்களின் அடிப்படை வாழ்வாதார பொருட்களை தடுப்பது போர்க்குற்றமாகும். இஸ்ரேல் அதனை வெளிப்படையாக அறிவித்துவிட்டே செய்கிறது. சர்வதேச சமூகமும் அதனை வேடிக்கை பார்க்கிறது. மேலும், போரில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் கொத்துக்குண்டுகளை அதிகளவில் பயன்படுத்துகிறது. இவையும் போர்க்குற்றமாகும்.

இது இன்று நேற்று நடப்பதல்ல. 1967ல் நடந்த அரபு- இஸ்ரேலிய போரின் போது மோஷே தயான் என்கிற முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் “.. இனி வரும் காலங்களில் பாலஸ்தீன மக்கள் நாய்களைப் போலவே வாழ்வார்கள். விருப்பமில்லாதவர்கள் வெளியேறட்டும்” என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்டு 5, 2022 அன்று இதேபோல காசாவின் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் ஒன்றை நடத்தியது இஸ்ரேல். அதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலின் போதும் அனைத்து அடிப்படை பொருட்களுக்கான பாதைகளையும் அடைத்த நிலையில்தான் போர் நடத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் யாசிர் லாபிட் கூட கடுமையான இனத்துவேச கருத்துக்களை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

தொடர்ந்து இஸ்ரேலியர்கள் மத்தியில் இயல்பாக்கப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரம் காலப்போக்கில் அதற்கான வேலையைச் செய்திருக்கிறது என்பதை சில நேரங்களில் இஸ்ரேலிய வெகுமக்களின் மத்தியிலும் காணலாம். எடுத்துக்காட்டாக, ஜுன் 21, 2023ல், 400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கு கரையின் ஒரு கிராமத்தில் புகுந்து வீடுகள் கடைகள் பொது சொத்துக்கள் என அனைத்தையும் சூறையாடினர். இஸ்ரேலில் பிரதமர், அமைச்சர்கள் துவங்கி வெகுமக்கள்வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மிக இயல்பாக இனதுவேச கருத்துக்களை பேசுவதை காணலாம். அது அங்கு இயல்பாக்கப்பட்டு இருக்கிறது.

நாசிசம் சியோனிசம் சங்கியிசம்

இத்தகைய பகிரங்கமான இனத்துவேச கருத்துக்கள் எதேச்சையாக எழுகின்ற ஒன்றல்ல என்பதும் அவற்றிற்கு நூற்றாண்டுகால ஃபாசிச வரலாறு இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. வரலாற்றில் பெரும் இனப்படுகொலையை சந்தித்த ஒரு இனத்தின் பெயரில் மற்றொரு ஃபாசிச கருத்தாக்கமான சியோனிசம் உருவாவதும் அது வேறொரு தேசிய இன மக்களின்மீது இனப்படுகொலை நிகழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. யூதர்கள் கடந்த காலங்களில் இனப்படுகொலைக்கு உள்ளானது வரலாற்று உண்மை. ஆனால், அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த ஹிட்லரின் நாசிசம் செம்படைகளால் முற்றிலுமாக துடைத்தெரியப்பட்டதும் வரலாற்று உண்மை. அதே போல சியோனிசமும் வீழும்.

புராணங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு இனத்தை அழித்து அவர்கள் வாழ்ந்து வரும் நிலத்தில் ஒரு நாட்டை உறுவாக்குவது மனித அவலம், அதுவும் நவீன காலத்தில் நடந்தேறுவது போது. அதற்கு நியாயம் கற்பிப்பது பேரவலம். இருப்பினும் மேற்குலகம் தங்களது பிராந்திய நலனிற்காக இதைச் செய்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், ஒவ்வொரு போரின்போதும் ஆதாயமடைவது மேற்குலகங்களும் அதை அண்டியிருக்கிற பிற நாடுகளும்தான்.

அந்த வகையில்தான் இந்தியா இஸ்ரேலுக்கு தனது ஆதரவினைத் தெரிவித்திருப்பதைப் பார்க்க வேண்டும். வரலாற்றில் என்றுமே இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலைப்பாட்டினை இந்தியா எடுத்ததில்லை. மோசமான இந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு மத்தியில் உறுப்படியான ஒரு கொள்கையாக அது இருந்து வந்தது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அதையும் மாற்றி அமைத்திருக்கிறது. இந்துத்துவ வலதுசாரிய தத்துவத்தின் அடிப்படையிலும் இந்திய பெருநிறுவனங்களின் பொருளாதார நலன்களின் அடிப்படையிலும் இக்கொள்கை நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்துத்துவ ஃபாசிசம் சியோனிசத்துடன் கைக்கோர்ப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் தனித்த இறையாண்மை கொண்ட தேசிய இன மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் பக்கமே நிற்க முடியும்.

மனிதத்திற்கு எதிரான போரை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக, ஒடுக்கப்படுகிற மக்களின் பக்கம் நின்று போரிட்டுக் கொண்டிருக்கிறது ஹமாஸ். பாலஸ்தீன மக்களின் போர் என்பது அடிப்படை வாழ்தலுக்கான போர். இதுவே தமிழீழத்திலும் நடந்தது. தமிழீழ வரலாறும் பாலஸ்தீன வரலாறும் ஒன்று போன்றது. வரலாற்றில் இன-மத அடிப்படையிலும் மேற்குல நாடுகளின் பிராந்திய நலனுக்காகவும் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழீழத் தமிழர்கள். அந்த வகையில் இன்று பாலஸ்தீனத்தில் நடக்கும் போரில் தமிழர்களாகிய நாம் பாலஸ்தீன மக்களின் பக்கம் நிற்பதே அறம். மே பதினேழு இயக்கம் என்றும் அதையே செய்யும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It