224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு 10.05.2023 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது, பா.ஜ.க-வுக்கு 119, காங்கிரஸுக்கு 75, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.கவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி, வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3000 உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்கும் முதல் நாளே இந்த ஐந்து முக்கிய திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.பட்டியலிடப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 விழுக்காடிலிருந்து 75 விழுக்காடாக உயர்த்துவதாகவும், பட்டியலிடப்பட்டோர் இடஒதுக்கீட்டை 15 விழுக்காடிலிருந்து 17 விழுக்காடாகவும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 3 விழுக்காடிலிருந்து 7 விழுக்காடாகவும் உயர்த்துவதாக அறிவித்துள்ள காங்கிரஸ், பசவராஜ் பொம்மை அரசால் ரத்து செய்யப்பட்ட இசுலாமியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆபரேஷன் லோட்டஸ் மூலம் மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மக்கள் தீர்ப்புக்கு மாறாக அமைந்த பசவராஜ் பொம்மை அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் கர்நாடகாவை விட்டு வெளியேறும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், இசுலாமியருக்கான இடஒதுக்கீடு ரத்து, ஹிஜாப் விவகாரம், சிறும்பான்மையினர் மீதான வெறுப்பு அரசியல், ‘ஜாதிக் கணக்கு’ அடிப்படையில் இந்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. அத்துடன் காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை முன்வைத்து அவரது பதவியைப் பறித்து அரசு பங்களாவைக் காலி செய்ய வைத்த செயல் அந்த அவதூறு வழக்குக்கு காரணமாக அமைந்த ராகுல் உரை நிகழ்த்தப்பட்ட அதே கர்நாடகா மண்ணில் காங்கிரஸிற்கு மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இதை அறிந்த பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பது காங்கிரஸின் வெற்றிவாய்ப்பை அதிகரித்திருக்கிறது.
அதனால் இது வரை இலவச திட்டங்கள் அவசியமற்றவை என்று கூறி வந்த பா.ஜ.க, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி, நாள்தோறும் 1/2 லிட்டர் நந்தினி பால் இலவசம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 3 இலவச சிலிண்டர்கள் என தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இசுலாமியருக்கு வழங்கப்பட்டிருந்த நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு, கர்நாடகாவில் பெரும்பான்மை சமுதாயங்களாக இருக்கும் லிங்காயத், ஒக்காலிகர் ஆகியவற்றுக்கான இட ஒதுக்கீடு சதவிகிதத்தை பா.ஜ.க அரசு அதிகரித்திருக்கிறது. மேலும் பிரதமர் மோடி தனது பரப்புரையில் “காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை 91 முறை என்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். என்னை திருடன் என்றார்கள், நான் சார்ந்த ஓபிசி சமூகத்தையே திருடன் என்றார்கள். அதுமட்டுமல்ல, கர்நாடகாவின் லிங்காயத் சமூகத்தையும் திருடர்கள் என விமர்சித்தார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடித்திருப்பது அவர்களின் தோல்வி பயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அதன் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. நேற்று வரை தமிழ்நாட்டைத் தாண்டி திராவிடம் எங்கே இருக்கிறது என்று கேட்ட பத்ரி சேஷாத்ரி “கர்நாடகாவைக் காங்கிரஸ் திராவிடமயமாக்கி இருக்கிறது” என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளதன் மூலம் அவர்களின் பதட்டத்தை பார்க்க முடிகிறது.
“நல்லதன் நலனுந்தீய தன் தீமையும் இல்லை யென்போர்க்கு இன்னா கிலியர்” என்ற புறநானூற்றுப் பாடலுக்கேற்ப தீமைகளையே மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க ஆட்சி வீழ்வது நிச்சயம். தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்த முதல் மாநிலமான கர்நாடகம், தற்போது அக்கட்சியின் தோல்விக்கான தொடக்கமாக அமையப் போகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் அடுத்து நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.
கர்நாடகம் காங்கிரஸ் வசமாகட்டும் !
இந்திய ஒன்றியம் திராவிடமயமாகட்டும் !!