ஹிந்தி எதிர்ப்பில் திமுக:
அமித்ஷா அவ்வப்போது ஹிந்தி பற்றி கிளப்பிவிடும் சர்ச்சை நடப்பு அரசியல் பிரச்சினையை திசைதிருப்புவதற்காக இருக்கிறது.
ஆனால் ஒரு விசயம் மட்டும் உண்மை; இனி இங்கு ஹிந்தியே இணைப்பு மொழி என ஒரு சட்டமோ அதற்கான நடைமுறையோ பாஜக கும்பலால் உருவாக்கப்பட்டால்கூட பெருமளவிற்கு தமிழக மக்கள் எதிர்த்துப் போராட முன்வருவார்களா என்பது ஐயமே.
ஏனெனில், விருப்பப் பாடமாக ஹிந்தியை கற்றுக் கொள்வதை தமிழ்நாட்டில் தடுக்கவில்லை என்கிற திராவிட அணுகுமுறையால், ஹிந்தி பிரச்சார சபா மூலம் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளும் ஹிந்தியை ஒரு மொழிப் பாடமாக கற்றுக் கொடுத்து வருகின்றனர். அதற்கான டியூசன் வகுப்புகளுக்கும் மாணவர்கள் பரவலாக பெற்றோர்களால் அனுப்பப்படுகிறார்கள். அச் சபாவால் அங்கீகரிக்கப்பட்ட ஹிந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும் குக்கிராமம் வரை பரவியிருக்கிறார்கள்.
மாத வருமானமுள்ள நடுத்தர வர்க்கப் பெற்றோர்களையும் கடந்து அன்றாட வருமானமுள்ள பெற்றோர்களின் மனநிலையும் ஹிந்தியை இன்று ஒரு பாடமாக பாவிக்கத் தொடங்கியுள்ளது.
ஏன், தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பயிலும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்கூட மதிப்பெண் கூடுதலாக எடுக்கலாம் என்பதற்காக தமிழிற்குப் பதிலாக மொழிப்பாடமாக சமற்கிருதத்தை தேர்வு செய்து படிக்கிறார்கள். அப்படி படிக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் ஊக்குவிக்கின்றன.
இதையெல்லாம் நடைமுறையில் தடுக்காமல், மாற்றாமல்... பாஜக கும்பலின் ஹிந்தி திணிப்புக்கு மட்டும் விழித்துக் கொள்ளும் வீரர்களாகி வீர வசனம் பேசக்கூடாது. இதற்கான களப்பணி - களப்போராட்டம் அறவே இல்லாத திமுக, பழைய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைச் சுட்டி திராவிட பழம் பெருமை மட்டுமே பேசி பாசிஸ்டுகளை மிரட்டிவிட முடியாது.
விருப்பப்பட்டவர்கள் ஹிந்தி படிக்க மூன்றாவது நிலையில் 'ஆப்சனாக' ஹிந்தி இங்கு இருக்கும் என்பதை அமைச்சர் பொன்முடி ஒரு பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
தற்போது அரசுப் பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக "ஆப்சன்", "விருப்பம்", "நிதிநிலைக்கேற்ப வாய்ப்பு" "தெலுங்கு, மலையாளம்... என எல்லா மொழிகளும் இருக்கும்" என்று எந்தக் காரணத்தை முன் வைத்துக் கொண்டு வந்தாலும் நாளடைவில் நடைமுறையில் அது ஹிந்தியைக் கற்றுக் கொள்வதில்தான் போய் முடியப் போகிறது. அரசுப் பள்ளியைத் தவிர்த்து நகர்ப்புறங்களில் உள்ள எல்லா அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் கூடுதல் விருப்பப் பாடமாக ஹிந்தி இப்பொழுது இருப்பது போல மாறிவிடும்.
ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தயாரிக்கும் மாற்று கல்விக் கொள்கையின் லட்சணம் வெளிவருவதற்கு முன்பே இப்படி பல்லிளிக்கிறது. ஹிந்தி கட்டாயம் என்றால் தோட்டா! ஹிந்தி விருப்பம் - 'ஆப்சன்' என்றால் தேன் தடவிய தோட்டாவா?
அத்துமீறும் ஆளுநர் எதிர்ப்பில் திமுக:
ஆதீன மடங்களின் மனிதர்கள் தூக்கும் பல்லக்கு என்கிற ஒரு மடமைப் பழக்கத்தை - பிற்போக்கு முறையை ஒழிக்கும் பண்பாட்டு நகர்வு இப்பொழுது தமிழ்நாட்டிற்கு முதன்மைத் தேவையா?
பார்ப்பனியத்தோடு சமரசமான சைவம் - சமரசமின்றி எதிர்க்கும் சைவம் என்று இரண்டும் பல நூற்றாண்டுகளாக இங்கு இருக்கிறது. பார்ப்பனியத்தோடு சமரசமான சைவத்தின் பக்கம் பாஜக தரப்பும் எதிர்க்கும் சைவ சமயத் தலைவர்களுடன் திராவிட முற்போக்கு தரப்பும் அணிவகுத்து நின்று இன்று மோதிக் கொண்டார்கள். தமிழகத்தை ஆரிய - ஆன்மீக மண்ணாக மாற்றுவதாலும் திராவிட - சமத்துவ மண்ணாக மாற்றுவதாலும் யாருக்குப் பலன்? 'சாட்சாத்' பாஜகவிற்கும் திமுகவிற்கும்தான்! மக்களுக்கல்ல.
மக்கள் பார்வையாளர்களாகவே உள்ளனர்; பங்கேற்பாளர்களாக அல்ல. இம்முறை தொடர்ந்தால் அல்லது ஒழிந்தால் இன்றைய தமிழக மக்களின் எந்தப் பொருளியல் பிரச்சினை தீரும் என மக்களுக்கு பாஜகவோ திமுகவோ விளக்குவார்களா?
அத்துமீறும் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்ப்பதற்கு இது ஒரு ஆயுதமா? மாறாக பாஜக வளர தீனி போடும் ஆயுதம். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறிய அரசியல் பேச்சு - தலையிடலுக்கு எதிராக திமுக ஏன் நேரடியாக களத்தில் அரசியல் போராட்டத்தை கட்டியமைக்கவில்லை? அதற்கு அணிகளை சற்றும் ஈடுபடுத்த முனையாமல், தமது ஆட்சி அதிகாரத்தின் நேரடி மற்றும் மறைமுக எதிர் நடவடிக்கைகளை கட்டியமைக்கிறது.
அதுவும் தமிழ்நாட்டு அரசு துறைகளிலுள்ள பலரை பாஜக கடந்த பத்தாண்டு 'அடிமை' ஆட்சியில் காவிமயமாக்கி வைத்திருக்கும் நிலையில், பொருளியலாளர் ஜெயரஞ்சன் குறிப்பிடுவது போல் ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பல துறைகளில் - திட்டங்களில் - பொருளாதாரப் பகிர்வில் 'குழிகளைப்' பறித்து வைத்திருக்கும் சூழலில், வெகு காலமாக வீரியமான (அடையாளப் போராட்டமல்ல) களப் போராட்டமில்லாத திமுக, பாஜகவை வரம்புக்குட்பட்ட இந்த ஆட்சியதிகாரத்தின் மூலமே எதிர்கொண்டு வீழ்த்திடலாம் என கனவு காண்கிறது. ஆளுநரின் அதிகாரங்களை முற்றிலும் மாநில முதலமைச்சரால் பறிக்கவோ மாற்றவோ முடியாது என்பது தெரிந்தும் ஏதோ சாதித்து விடப் போவதாக நம்மையும் நம்பச் சொல்கிறது.
சரி, அந்த வரம்புக்குட்பட்ட அதிகாரத்தை வைத்து, "அமைச்சர்கள் நடமாட முடியாது" என மிரட்டியவரை கைது செய்ததா என்றால், அதுவும் இல்லை (அவரைப் பக்கத்தில் அமர்த்தி பேட்டியளிக்கும்படி மாற்றி விட்டதாகப் பெருமை பீற்றிக்கொள்கிறது). ஜெயலலிதா சங்கராச்சாரியை கைது செய்தது போல் ஒரு சில நடவடிக்கைகளை செய்து பார்ப்பனியத்தை பயமுறுத்தி கட்டுப்படுத்தவும் திமுக அரசாங்கம் தயங்குகிறது; ஏனெனில், இந்துக்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்டு ஓட்டு வங்கி போய்விடுமோ என்ற பயம்.
பொருளாதாரம் சார்ந்த அரசியலைக் காட்டிலும் பண்பாட்டு சார்ந்த அரசியல் மட்டுமே தமிழ்நாட்டில் பெரிதாக்கப்படுகிறது. அல்லது முந்தையதை திசை திருப்ப, பிந்தையது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஆரியமும் திராவிடமும் விதிவிலக்கல்ல.
மாநில சுயாட்சியில் திமுக:
GST கவுன்சில் முடிவுகள் மாநிலங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்ற விளக்கத்திற்குப் பிறகு "GST வரி முறையையே கேள்வி எழுப்பவில்லை; அதில் சீர்திருத்தம்தான் வேண்டும்; மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல் கூடுதல் அதிகாரம் வேண்டும்" என்ற பொருளில் மட்டுமே திமுகவினர் பேசுகிறார்கள்.
GST வரி விதிப்பு முறையே மாநில சுயாட்சிக்கு எதிரானது; தமிழ்நாட்டிற்கு தேவையில்லை; முன்பிருந்த மாநிலங்களின் VAT வரி விதிப்பு முறைதான் மாநில உரிமைக்குரியதாகும். ஆனால் மேலுள்ளபடி பேசி, மாநில சுயாட்சிக் கோரிக்கையையும் இன்றைய திமுக சுருக்கிக் கொண்டே போகிறது.
GST Council-லிருந்து தமிழ்நாடு அரசு வெளியேறுவது பற்றியே திமுக பேச வேண்டும்; அதற்கான நடைமுறையில் - சட்டமன்றத்தில் தீர்மானம் போன்றவையில் ஈடுபட வேண்டும். செய்யுமா?
GST வரியில் ஒன்றிய அரசு வைத்துள்ள நிலுவையை காரணம்காட்டி உடனே வெளியேறலாம். வெளியேறாமல் மாநில சுயாட்சியில் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக தம்பட்டமடிப்பது அசிங்கம்.
திராவிடக் கொள்கையில் திமுக:
தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் அழுத்தத்தால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணை, தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கான அரசாணை, சிதம்பரம் கனகசபை வழிபாடு தொடர்பான அரசாணை போன்றவற்றை திமுக அரசாங்கம் போட்டுள்ளது.
ஆனால்...
அரசாணைப்படி பணியாற்ற வந்த அர்ச்சகர்களுக்கு சமமான வாய்ப்பு பல கோவில்களில் வழங்காமல் அவமதிக்கப்படுகிற பொழுது, திருச்சி-வயலூர் முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனைக்கு எதிர்ப்பு இருந்த பொழுது, சிதம்பரம் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்த்ததால் போலீசு காவலுடன் நிறைவேற்றிய பொழுது...
மக்கள் அதிகாரம் (ராஜூ) - மகஇக (கோவன்), விசிக, தமிழ் ஆர்வலர் அமைப்புகள், திராவிட - பகுத்தறிவு அமைப்புகள் களத்தில் இறங்கி செயல்பட்டார்களே ஒழிய, திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கட்சி வகையில் களத்தில் நிற்கவில்லை.
அந்தந்த பகுதி திமுக மாவட்டச் செயலாளர்கள் இப்பிரச்சினைகளில் கட்சிக்காரர்களை ஈடுபட ஏன் பணிக்கவில்லை? தன்னெழுச்சியாகக்கூட களத்தில் திமுக தொண்டர்கள் ஒன்று திரளவில்லை.
ஏனெனில், திமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் அல்லது அதற்கடுத்த பொறுப்புகளில் உள்ளோர் பெரும்பாலும் வீட்டிலும் கோவில்களிலும் பார்ப்பனிய புரோகித சடங்குகளை கடைபிடிக்கிற சாதி இந்துக்களாக, ஆதாயமுள்ள ஓட்டரசியலை மட்டும் செய்யக்கூடியவர்களாக, கொள்கை தொடர்பானவற்றில் தலைமை நிர்பந்தித்தால் மட்டும் கடமைக்கென செயல்படக் கூடியவர்களாக இருப்பதே காரணம்.
திராவிடக் கொள்கை சார்ந்த இதுபோன்ற தேவைகளுக்குகூட செயல்பட வழியில்லாத கட்சி உள் கட்டமைப்பை வைத்துக் கொண்டு இத்தகைய அரசாணைகளைப் போடும் திமுக, நாளை இவற்றிற்கெதிரான தீர்ப்பு எதுவும் வந்தால் சட்டப் போராட்டத்தை மட்டுமே செய்யும்; சமூகப் போராட்டத்தைச் செய்யாது.
ஆட்சியாலும் சட்டத்தாலும் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. தான் போடும் ஆணையை நடைமுறைப்படுத்துவதற்குரிய சமூக அணிதிரட்டலைக்கூட தமது அணிகளிடையே செய்ய திமுக அணியமாக இல்லை. இந்த திராவிட மாடல் எப்படி பார்ப்பனியத்தை வீழ்த்தப் போகிறது?
முதலாளிய ஆலோசனைக் குழுவே திமுகவிற்குப் பொருந்தும்:
திமுக, தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோரை அமர்த்திக் கொண்டது. ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க (ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன்) ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழுவை அமர்த்திக் கொண்டது.
அதுபோல்...
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் அரசியல் தாக்குதல்களை எதிர்த்து வியூகம் வகுக்க - திராவிட மாடல் 'மிடுக்கை' தக்க வைக்க கட்சி செலவில் ஒரு அரசியல் நிபுணர் குழுவை அமர்த்திக் கொள்ளலாம்.
குறிப்பு: கி.வீரமணி, சுபவீ, வே.மதிமாறன் போன்ற பெயர்களைப் பற்றி சிந்திக்காமல், பிரசாந் கிஷோர், ரகுராம் ராஜன் மாதிரி சித்தாந்த துறையில் தொழில்முறை நிபுணர்களை தேடுவதே உங்களுக்கு செட்டாகும்!
இல்லையெனில் "திராவிட மாடலை" "தேசிய திராவிட மாடல்"(?) விழுங்கிவிடும்!
- ஞாலன்