கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீயத்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார்.

‘தினமணி’, தி.மு.க.வை தாக்கி எழுதியது, அவர்களுக்குரிய பத்திரிகை சுதந்திரம் என்று கலைஞர் எழுதியிருப்பதோடு, “என்னைத் தாக்கி (தினமணி) வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக்கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்து அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன்.
 
வாரம் தோறும் ‘கலாரசிகன்’ என்ற புனைப் பெயரில் ‘தினமணி’யில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்றெல்லாம் புகழ் மகுடத்தில், அவரை ஏற்றி வைத்து உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரக் குழுவில் அவரின் சம்மதமின்றியே உறுப்பினராக்கினார். இதற்கு கலைஞருக்கு பதில் எழுதிய வைத்தியநாதனோ, கலைஞரின் முடிவில் நெகிழ்ந்து போனதாகவும், ஆனால், தன்னால், அப் பொறுப்பை ஏற்க இயலாது என்று பதில் எழுதினார்.
 
கலைஞர் - வைத்தியநாதன் மீது கொண்டிருக்கும் தீராத அன்பினால், விடாமல் மீண்டும் அவருக்கு பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “தமிழின் பால் தடம் மாறாப் பற்றுக் கொண்ட தங்களைப் போன்றோர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும். அந்த எண்ணத்தோடுதான் குழுக்களின் அறிவிப்பில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன்” என்று மன்றாடி பதில் ‘முகம்’ அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே கே. வைத்தியநாதன், அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்தக் கடிதம் - மறுப்புக் கடிதம் - மறு வேண்டுகோள் கடிதம் - இறுதி ஒப்புதல் கடிதம் - எல்லாவற்றையும் ‘முரசொலி’ ஏட்டில் (21.12.2009) கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார்.
 
கடந்த முறை நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகளையே அரசு இன்னும் வெளியிட வில்லை என்ற கேள்வியை இதே ‘தினமணி’ தான் சில வாரங்களுக்கு முன் எழுப்பியது. அதுமட்டுமல்ல, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தினமணியின் ‘வெள்ளிமணி’ இணைப்பில் அருமறையின் உட்பொருளே அண்ணாமலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழர்களின் சமய வழிபாடுகளை தமிழ்த் திருமுறைகள்மூலம் நடத்துவோரை கடுமையாக சாடுகிறது அக்கட்டுரை. தமிழ்த் திருமுறைகள் வழியாக வழிபாடு நடத்துவோருக்கு, இக்கட்டுரை கீழ்க்கண்ட பெயர்களை சூட்டியுள்ளது. “நவீன பண்டிதர், துன்மார்க்கர், கீழோர், பொறாமைக்காரர், குரு துரோகி, மரண தண்டனை பெறுவோர், நரகம் போவோர்கள்”
 
- இப்படி தமிழ் உணர்வாளர்களை பச்சையாக வசை பாடும் பார்ப்பனர்கள் கலைஞர் பார்வையில், “தமிழின் மேல் தடம் மாறாப் பற்றுக் கொண்டவர்கள்”. ‘தினமணி’ வெளியிட்ட இந்தப் பார்ப்பன வெறி கட்டுரையைக் கண்டு கொதித்துப் போய் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், கடந்த டிசம்பர் முதல் தேதி மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘தினமணி’க்கு எழுதி, அதன் பிரதியை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கும் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ் வழிபாட்டை எதிர்க்கும் ‘தினமணி’ பார்ப்பனீயத்துக்கு எதிராக, சென்னையில் தமிழின உணர்வாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார். கழக சார்பில், துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், அதில் பங்கேற்றுப் பேசினார்
.
கலைஞரின் புகழ் பாடும் கி.வீரமணியின் ‘விடுதலை’யும் கூட அதன் ஞாயிறு மலரில் (டிசம் 19) ‘கொத்துகிற பார்ப்பனர் பாம்பு’ என்ற தலைப்பில் ‘தினமணி’யின் பார்ப்பன வெறியை சாடியுள்ளது. நாள்தோறும் ‘விடுதலை’யை படித்தால்தான் தமக்கு முழு திருப்தி கிடைப்பதாகக் கூறும் கலைஞர் கருணாநிதி, ‘விடுதலை’யில் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே ‘தினமணி’ வைத்தியாத அய்யருக்கு ‘பாசவலை’ வீசி நெகிழ்ந்து நெக்குருகி, கடிதங்களை எழுதி குவித்துவிட்டார்; இதுதான் கலைஞர் ‘விடுதலை’யை நேசிக்கும் பாசம் போலும்!
 
கலைஞர் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டின் மக்கள் தொடர்புக் குழுவில் ‘தினமணி’ வைத்தியநாதன் அய்யர் மட்டுமல்ல, தமிழின உணர்வு ‘பீறிட்டு’ நிற்கும் வேறு சில தமிழர்களும் இடம் பெறுவதை கலைஞர் பெருமையுடன் அறிவித்துள்ளார். ‘இந்து’ ராம், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி ஆகிய பார்ப்பனர்கள்தான், இந்த தமிழின உணர்வாளர்கள்!
 
ஜூன் மாதம் வரை இனி செம்மொழித் திருவிழா கொண்டாட்டங்களிலேயே மக்களை மூழ்கடிக்க முடிவு செய்து விட்டார், தமிழக முதலமைச்சர். தமிழ் செம்மொழிதான் என்று கால்டுவெல், பாவாணர் போன்றோர் கூற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, ‘முரசொலி’யில் ‘கடிதத் தோரணம் கட்டுகிறார்; தமிழ் செம்மொழி என்பதை தமிழ்நாட்டில் எவரும் மறுக்கவில்லையே?
 
 பிறகு எதற்கு இந்த ஆதார விளக்கங்கள்? தமிழ் செம்மொழி என்பதற்கான இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைவிட, தமிழை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைப்பு காட்ட வேண்டியதே முக்கியம்.
 
• தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் முழுமையான வழிபாட்டு மொழியாகிவிட்டதா?
 
• தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் தமிழ் பரப்பும் பல்கலையாக செயல்படுகிறதா?
 
• உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அண்ணா தரமணியில் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்யம் நலிந்து போய் கிடக்கும் நிலை மாறியதா?
 
• அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா?
 
• தமிழ் வழிப் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் எண்ணிக்கைகேற்ப தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா?
 
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வந்த பிறகும், அர்ச்சகர் ஆக முடியாத நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா?
 
இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தாமல், ஈழத்தில் நடந்து முடிந்துள்ள தமிழினப் படுகொலைகளின் துரோகங்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு, பார்ப்பனர்களோடு கரம் கோர்த்து, ‘செம்மொழித் திருவிழா’ நடத்துகிறார், தமிழக முதல்வர்!
 
‘துக்ளக்’ சோ, சு. சாமி, இராமகோபாலன்கள் இனி, செம்மொழி மாநாட்டுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாலும் வியப்பதற்கில்லை!
 
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையே எந்த பயனும் தராத ‘கும்பமேளா’ என்று கூறி கண்டித்தவர் பெரியார். அவரது ‘வாரிசாக’ உரிமை கொண்டாடும் வீரமணியும் திருவிழா கொண்டாட்டத்தில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுதான், இன்னும் வேடிக்கை!

அண்ணா சொன்னார் “காரணங்கள் அப்படியே இருக்கின்றன”
 
“இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.” - சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா, 27.6.1967)
 
கலைஞர் சொல்கிறார் காரணங்கள் மறைந்து விட்டன
 
இந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எஞ்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால் அந்த எஞ்ஜினிலே இன்றைக்கு கோக்கப்பட்டிருக்கின்ற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான், தமிழ் மாநிலம். நான் இதைச் சொல்லுகின்ற காரணத்தால், இந்தப் பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்தக் கோளாறை இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, இந்தியாவை கட்டி ஆளுகின்ற, இந்தியாவிலே நிர்வாகம் நடத்துகின்ற மத்திய அரசு அந்தப் பெட்டிகளையும், தன்னோடு இழுத்துச் செல்லுகின்ற அந்த லாவகத்தைப் பெறவேண்டும். அதேநேரத்திலே பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று பெட்டிகள் இணைந்திடாமல், கழன்று போனால் பிறகு இந்தியா என்கின்ற ஒரு தேசிய நிலை நமக்கு இல்லாமல் போய்விடும்.
 
இந்தியா பெரிய நாடு. பெரிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்தான், வல்லரசு நாடுகளெல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி, நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலேஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகளெல்லாம் கருதுகின்றன. அந்தப் பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கின்ற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை புதிய ரயில்களின் துவக்க விழாவில் கலைஞர் பேசியது - 22.12.2009 ‘முரசொலி’