கடந்த ஏப்ரல் 21ம் தேதி இரவு நேரத்தில் மின்மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மூவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டனர். அச்சம்பவம் குறித்து பி.யு.சி.எல்., தேசிய செயலர் பேராசிரியர் இரா.முரளி, மாநிலப் பொதுச்செயலாளர், ஆ.ஜான்வின்சென்ட், மாநிலப் பொருளாளர் பி.கண்மணி, செயற்குழு உறுப்பினர்கள் சோ.தியாகராசன், செல்லமணி, சமநீதி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் கனகவேல், புரட்சிகர இளைஞர் முன்னனி பொறுப்பாளர் குமரன், மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் ஹரீஷ் ஆகியோரைக் கொண்ட குழு 30.04.2022 அன்று கள ஆய்வை மேற்கொண்டது.

மதுரை மாநகரில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வேறு பகுதிக்குக் கொண்டு செல்லப்படும். மதுரை மாநகராட்சியில் அறுபது இடங்களில் அவ்வாறான கழிவு நீரேற்றுத் தொட்டிகள் [Pumping Station] உள்ளன. இறுதியாக அவனியாபுரம் வெள்ளக்கல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். சுமார் 270 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். 2021 இறுதி வரை ஹேப்பி ஏஜென்சி என்ற நிறுவனத்திடம் இருந்த ஒப்பந்தம் 2021 டிசம்பர் முதல் சென்னையைச் சேர்ந்த வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்னும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, பழங்காநத்தம் நேருநகர், கந்தசாமி தெருவில் 30 அடி ஆழமும் எட்டு அடி விட்டமும் கொண்ட கழிவு நீர் சேகரிப்புத் தொட்டி உள்ளது. அடியில் இரண்டு அடி உயரத்தில் இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டு அவற்றின் மீது 500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட இரண்டு நீர் மூழ்கி மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் ஒரு மோட்டாரும் மாலை நேரத்தில் ஒரு மோட்டாருமாக மாற்றி, மாற்றி இயக்கப்படும். அவற்றில் பழுது ஏற்பட்டால் மோட்டாரை சங்கிலியால் பிணைத்து வெளியில் எடுத்து பழுது நீக்கவேண்டும். ஒரு மோட்டார் பழுதான நிலையில் தொட்டியிலிருந்து கழிவு நீர் சரிவர வெளியேற்றப்பட்டாததால் குடியிருப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. 70வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதாவின் கணவர் தவமணி கூறியதன் பேரிலும் மாநகராட்சி உதவிப் பொறியாளர் சக்திவேல் அறிவுறுத்தியதன் பேரிலும் 20.04.2022 புதன்கிழமை இரவு சரவணக்குமார், சிவக்குமார், இலட்சுமணன், பாண்டி, சக்திவேல், கார்த்தி என ஆறு பேர் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவு நீரை வெளியேற்றி ஒரு மோட்டாரை வெளியில் எடுத்து சரிசெய்யும் போதே இரண்டாவது மோட்டாரும் பழுதாகி நின்றுவிட்டதால் முதல் மோட்டாரில் ‘ஹோஸ்’ பைப் பொறுத்தி இறக்கி இயக்கியிருக்கிறார்கள். பணி முடியாததால் மறுநாள் இரவு தொடரலாம் என விட்டுச் சென்றுள்ளனர். இரவு பகல் எதுவானாலும் கழிவு நீர்தொட்டிக்குள் ஆட்கள் இறங்கி வேலை பார்க்கக் கூடாதென 2013-ஆம் வருட உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் மாநகராட்சி பொறியாளர்கள் இவர்களைப் பகலில் தொட்டியில் இறங்க அனுமதிப்பதில்லை. இரவில் மட்டும் சட்டவிரோதமாக பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அந்த தொட்டியில் மின் விளக்கும் பொருத்தப்படவில்லை.

மீண்டும் 21.04.2022 வியாழக்கிழமை இரவு 9 மணிக்குமேல் ஏற்கனவே வேலை பார்த்தவர்களில் இரண்டு பேர் அசதியின் காரணமாக வரவில்லை. மேற்கூறிய கவுன்சிலரின் கணவர் தவமணி, பொறியாளர் சக்திவேல் ஆகியோரது வற்புறுத்தலின் பேரில் மற்ற நான்குபேர் சென்றுள்ளனர். இரவு 9.30 மணிக்கு மோட்டார் மூலம் கழிவு நீரை வெளியேற்றிவிட்டு லட்சுமணன் என்பவர் இறங்கியுள்ளார். சுவரின் பக்கவாட்டில் ஏணி போல ‘ப’ வடிவக் கம்பிகள் பொறுத்தப்பட்டுள்ளன. கழிவு நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, நல்ல நீரை நிரப்பி சுத்தம் செய்து அதனையும் வெளியேற்றிய பிறகே இறங்கவேண்டும் என்ற விதி இருக்கிறது, எனினும் மோட்டார் மேடையே இரண்டு அடி உயரம் என்பதால் 3 அடி மட்டத்திற்கு கீழுள்ள நீரை வெளியேற்ற இயலாது. தொட்டிக்குள் நல்ல நீரை நிரப்பும் லாரி போன்ற வசதிகள் இல்லை. பாதுகாப்புக் கவசங்களின் பயன்பாடு பற்றி தற்போது அதிகாரிகள் கூறிய போதிலும் அதுபோன்ற பயிற்சிகளோ, கவசங்களோ இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் ஊழியர்கள். நாலு திசைகளிலிருந்தும் நான்கைந்து குழாய்களில் கழிவு நீர் உள்ளே கொட்டும், அவை வராமல் இருக்க தடுப்புக்கதவு வசதியும் இல்லை. உள்வரத்துக் குழாய்களில் அடைப்புகள் இருந்ததால் நீர் வரவில்லை என்று லட்சுமணன் உள்ளே இறங்கி வேலை பார்த்த நிலையில் விசவாயும் தொடர்ந்து கழிவு நீரும் உள்ளே கொட்டத் தொடங்கிய நிலையில் மயக்கமடைந்து அபயக்குரல் எழுப்பியுள்ளார். அவரைக் காப்பாற்ற சிவக்குமார் இறங்கி லெட்சுமணனைத் தோளில் தூக்கி இரண்டு படிகள் ஏறியுள்ளார். எனினும் நீர் வரத்து அதிவேகத்துடன் வரவே அவரும் மயங்கியுள்ளார். செய்வதறியாது மின் பணியாளர் சரவணக்குமாரும் இறங்கி மேலே நின்றிருந்த கார்த்திக்கை கயிற்றை இருக்கிப் பிடித்துக்கொள்ள சொன்ன போதிலும் ஒருவரால் மூன்று பேரை மேலிழுக்க முடியவில்லை. கழிவு நீரும் தொட்டியில் நிரம்பிய நிலையில் மூவரும் மூழ்கி இறந்து விட்டனர்.

திடீர் நகர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்து வந்தவர்கள் கொக்கி போட்டு தூக்கியதில் இரு சடலங்களை மீட்ட போதிலும் மூன்றாவது சடலம் பலமணி நேரங்களுக்குப் பிறகே வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் புகார்

எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் குற்ற எண்.710/2022 ஆக 22.04.2022ம் தேதி கவனக்குறைவால் மரணம் சம்பவித்ததாக வி.ஆர்.ஜி கன்ஸ்ட்ரக்சன் நிறுவன மதுரை மேலாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் லோகநாதன், நிறுவன உரிமையாளர் சென்னையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர்கள் மீது கவனக்குறைவாகவும், அஜாக்கிரைதையாகவும் செயல்பட்டதாக இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 304 [A] ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம். புகாரளித்த உதவிப் பொறியாளர் என்.சக்திவேல், மின் மோட்டாரை சரி செய்யும்போது உள்ளே இறங்கிய ஒருவர் இறந்துவிட்டதாக மாமன்ற உறுப்பினர் அமுதா அவர்களின் கணவர் தவமணி தகவல் தெரிவித்ததாகவும் தன்னிடம் எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் மின் மோட்டார் பழுதினை சரி செய்வதற்காக மூன்று பேரை வி.ஆர்.ஜியின் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் நியமித்ததாகவும் எவ்வித உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இரவு நேரத்தில் போதிய மின் வசதி இல்லாமல் சரியான மேற்பார்வையின்றி வேலை செய்யக்கூடாதென்று தெரிந்தும் அஜாக்கிரதையாக மின் மோட்டார் பழுது செய்யச் சொன்னதால் இறப்பு நேர்ந்துள்ளது எனப் புகார் அளித்துள்ளார். மாநகராட்சி பொறியாளர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ, மாமன்ற உறுப்பினருக்கோ பொறுப்பு ஏதுமில்லை, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் சம்மந்தப்பட்டது என நிறுவ முயல்கின்றனர்.

மாமன்ற உறுப்பினர் அமுதா அவர்களை கைபேசியில் அழைத்த போது அவரது கணவர் ஜீன் மாதம் 10ஆம் தேதி தங்கள் மகனுக்கு திருமணம், இது “பிக்கஸ்ட் மேரேஜ்” இருவரும் பத்திரிக்கை கொடுக்கும் பணியில் உள்ளோம் சீர்வரிசை, ஜீன் மாதம் 11ம் தேதி கொடுப்பார்கள். எனவே எதுவாக இருந்தாலும் ஜீன் 12ஆம் தேதிக்குபிறகு அழையுங்கள் எனத் துண்டித்துவிட்டார்.

3வது மண்டல உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் அவர்களைச் சந்தித்தபோது “நடந்தது ஒரு விபத்து. அரசு அறிவித்தபடி வி.ஆர்.ஜி நிறுவனம் மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சம் வீதம் கொடுத்துள்ளது. இனி அவ்வாறு விபத்துக்கள் நடக்காது. ஆணையாளர் கார்த்திகேயன் எல்லா நடவடிக்கைகளும் எடுத்துள்ளார்” என்றார். மே 4ம் தேதி நகரப்பொறியாளர் அரசு அவர்களைச் சந்தித்தோம். “இது விபத்துதான். சடலக்கூறாய்வு முடிந்துவிட்டது. ரசாயண அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்த பின் இறப்புக்கான காரணம் தெரியும், உரிய நடவடிக்கை எடுப்போம். மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் உள்ளது” என்று சென்றுவிட்டார். மே 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆணையாளரைச் சந்திக்க முயன்றோம். நீண்ட காத்திருப்புக்குப்பின் அழைத்த ஆணையாளர் “நீங்கள் பி.யு.சி.எல் என்கிறீர்கள், அரசுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்கிறீர்கள். நான் ஆணையாளர் அலுவலகமென்றும் எனது பெயர்ப்பலகையும் வைத்து அமர்ந்திருக்கிறேன் ஆனால் நீங்கள் யாரென்று நம்புவது? உங்கள் லெட்டர் பேடில் எழுதிக் கொடுங்கள், தகவல் தருகிறோம்” என்றார், கடிதம் அனுப்பியுள்ளோம்.

இரண்டு நாட்களாக முயற்சித்தும், மேயரைச் சந்திக்க இயலவில்லை. இன்று வரை பணியிலிருக்கும் மேலாளர் இரமேசைச் தொடர்புகொண்டபோது ஜனவரி மாதமே தான் பணியிலிருந்து விலகிவிட்டதாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறிவிட்டார். தீயணைப்பு நிலைய அதிகாரி கே.பி.பாலமுருகனிடம் பேசியதில் தொட்டிக்குள் கழிவு நீர் வரத்து அதிகமாக இருந்ததால் பிரேதங்களை மீட்பத்தில் சிரமம் ஏற்பட்டது. சங்கிலியில் கொக்கி மாட்டி முயற்சித்ததில் ஒருவரை மட்டுமே உடனே மீட்க முடிந்தது என்றார். விசவாயு இருக்கிறதா என முன்கூட்டியே சோதிக்கும் உபகரணம் ஏதும் இல்லையா என கேட்டபோது தீக்குச்சியை உரசிப் போட்டுப்பார்த்தாலே தெரிந்துவிடும் என்றார், நன்று.

வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் இதற்கு முந்தைய நிறுவனத்திடம் எட்டு ஆண்டுகளாக பணியாற்றி ரூ.16,550/- மாத ஊதியம் பெற்ற ஆப்பரேட்டரின் சம்பளத்தை ரூ.12,000/- ஆகக் குறைத்துள்ளது. மின்பணியாளருக்கு [Electrician] பழைய ஒப்பந்ததாரர் ரூ.18,000/- சம்பளம் கொடுத்து வந்த நிலையில் புதிய நிறுவனம் ரூ.12,000/- மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. மேலும் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் சம்பளம் தரும் வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் பராமரிப்பு போன்ற தொழில் நுட்பம் சாரா பணியாளர்களுக்கு பென்சிலால் நிரப்பப்பட்ட “வவுச்சரில்” கையெழுத்து வாங்கி சம்பளம் கொடுக்கின்றனர்.

மேற்காண் சம்பவம் தொடர்பாக இறந்துபோன மூவரின் குடும்பத்தினர், உறவினர்களை நேரில் சந்தித்து பெற்ற தகவல்களையே கொடுத்துள்ளோம். மேலும் மாநகரட்சி மோட்டார் அறையின் காவலர் காளிதாஸ், அருகில் மாவுமில் நடத்தும் நாகராஜன் ஆகியோரிடமும் பேசினோம்.

இறந்து போன லட்சுமணனுக்கு (வயது 31) அலங்காநல்லூர் அருகே கோட்டைமேட்டில் வீடு உள்ளது. மனைவி பரமேஸ்வரி (வயது 22) திருமணமாகி மூன்று ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. மலைவேடன் எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இறந்துபோன மாடக்குளம் சிவக்குமாரின் (வயது 45), மனைவி ஜெகதா (வயது 42) மகள் ஆர்த்தி (வயது 22) பி.காம்., முடித்துள்ளார். மகன் சஞ்சய் (வயது 18) மன்னர் கல்லூரியில் முதலாண்டு பி.எஸ்.சி. (கம்ப்யூட்டர்) படித்து வருகிறார். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இறந்த சரவணக்குமாரின் (வயது 32) மனைவி காளிஸ்வரி (வயது 28) பி.ஏ., (தமிழ்), பி.எட். படித்துள்ளார். தர்னேஷ் (வயது 6) தன்யாஸ்ரீ (வயது 3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பள்ளர் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். ஏர்டெல் நிறுவனத்தில் டவர் அமைக்கும் பணியிலிருந்த சரவணக்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்பணியாளராக இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

லட்சுமணின் உறவினர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கருப்பையா, சசிக்குமாரின் சகோதரர் ரமேஷ், வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் ஊழியர் சரவணக்குமாரின் மைத்துனர் வழக்கறிஞர் தாமோதரன் இவர்களிடம் பேசியதில் வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் தலா ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்ததுடன் ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பீடு செய்துள்ளதாகவும் அரசுவேலை தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறினர்.

எமது பரிந்துரைகள்

1. கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-Aன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செயதிருக்கிறார்கள். கழிவு நீர் தொட்டியில் விசவாயு வரக்கூடும், மரணம் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்தே கழிவு நீர் தொட்டியில் இறங்கி வேலை பார்க்கக்கூறிய வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் மேலாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் லோகநாதன், தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய உரிமையாளர் விஜய் ஆனந்த், இறங்க அனுமதி கொடுத்த இளநிலைப் பொறியாளர் என்.சக்திவேல், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304ன் கீழ் முதகவல் அறிக்கையின் குற்றப்பிரிவை மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் மரணம் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்தே ஆபத்தான பணியில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்க இயலும்.

2. உரிய பாதுகாப்புக் கவசங்கள் இன்றி கழிவு நீர் குழாய் மற்றும் தொட்டிகளை சுத்தப்படுத்த ஆட்களைப் பணியமர்த்திய குற்றத்திற்காக, கையால் மலம் அள்ளுவதற்குப் பணியில் அமர்த்தடை மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கான சட்டம், 2013 [The Prohibition of Employment as Mannual Scavenger and their Rehabilitation Act 2013] பிரிவு 9ன் கீழ் குற்றப்பிரிவைச் சேர்த்து சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் நிர்வாக நடுவர் முன்பு வழக்கு தாக்கல் செய்யவேண்டும். அதே சட்டம் பிரிவு 19 [a]ல் கூறியுள்ளபடி இச்சட்டத்தின் பிரிவுகளை மீறியவர்கள் மீது விசாரணையும் வழக்கும் நடப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்யவேண்டும்.

3. பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடிகள் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 பிரிவு 3 (1) (J) ன்படி பட்டியல் சாதி (அ) பழங்குடி அல்லாத ஒருவர் பட்டியல் சாதி (அ) பழங்குடியினரை கையால் கழிவுகளை அள்ள வைத்தல் அல்லது பணிக்கு அமர்த்துதல் அல்லது அவ்வாறு பணியமர்த்த அனுமதித்தல் ஆறு மாதங்களுக்குக் குறையாமல் ஐந்தாண்டுகள் வரை தண்டிக்கக்கூடிய குற்றம் என்கிறது. மேற்கூறிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3 (1) (J) ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். இச்சட்டத்தின் கீழான விதி 7 கூறுவது போல சிறப்பு அதிகாரம் பெற்ற துணைக் கண்காணிப்பாளர் மூலம் விசாரணை நடத்த ஆவண செய்யவேண்டும்.

4. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசாணைப்படி அதிகரிக்கப்பட்ட இழப்பீடான ரூ.12 லட்சத்தை அரசு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கிடவேண்டும்.

5. கழிவு நீர் அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை போன்ற ஆபத்தான பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதைக் கைவிட்டு நவீன தொழில்நுட்பத்தை கையாளுவதை மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் உறுதி செய்யவேண்டும். தவிர்க்க இயலாத சூழலில் போதிய பாதுகாப்பு கவசங்கள் அணிவதை உறுதி செய்யவேண்டும்.

6. மே 11ம் தேதி ரூ.26.65 கோடி பற்றாக்குறையுடன் மேயர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.3.11 கோடி குடிநீர், பாதாளச்சாக்கடை வரியில் அதிகப்படியாகக் கிடைத்தது என்றும், மற்றும் கல்வி வரியில் ரூ.22.72 கோடி அதிகப்படியாகக் கிடைத்ததாகவும் அதனால் பற்றாக்குறை ரூ.67 லட்சமாகக் குறைந்ததாகவும் கூறுகிறார். ஆனால் கல்வி, குடிநீர், பாதாளச்சாக்கடை மூன்றுமே போதிய கவனம் பெறாத துறைகளாக இருக்கின்றன. மாறாக கழிவு நீரேற்றுப் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுப்பதைக் கைவிட்டு மாநகராட்சியே பொறுப்பேற்று, தற்போதுள்ள 270 தற்காலிகப் பணியாளர்களையும் மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களாக்கி பணி உத்தரவாதம் வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

7. மேற்காண் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படி, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவக்காப்பீடு, ஓய்வூதியம் என அரசு ஊழியர்களுக்கான அனைத்துப் பலன்களும் உறுதி செய்யப்படவேண்டும்.

8. கையால் மலம் அள்ளுவதைத் தடுக்கும் சட்டம் 2013-ன் பிரிவு 24-ன்படி மாவட்ட மற்றும் உட்கோட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், உட்கோட்ட நடுவர், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் கண்காணிப்பாளர், வங்கிப் பிரநிதிகள், பெண்கள் உள்ளிட்ட சமூகப் பணியாளர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

9. சம்பவ இடமான கந்தசாமி தெரு இருபது அடி மட்டுமே அகலம் கொண்ட குறுகலான தெரு, அதில் பத்து அடி அகலத்தை ஆக்கிரமித்து தரைமட்டத்திற்கு மேல் மூன்று அடி உள்ள தொட்டி கட்டப்பட்டுள்ளது. கழிவு நீர் மட்டத்தைக் கண்காணிப்பதற்காக மேற்பகுதியின் ஒரு பகுதி நிரந்தரமாக கம்பி வலையிடப்பட்டு திறந்த நிலையில் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றமும் கொசுத்தொல்லையும் குறைவதில்லை. போதிய பரப்பளவும், உயர்நீதிமன்றத்தின் கிழக்கே உள்ளது போல பராமரிப்பு வசதியும் உள்ள இடத்திற்கு உபகழிவு நீரேற்றுத் தொட்டியினை மாற்றவேண்டும்.

10. அறுபது இடங்களில் உபகழிவு நீரேற்று தொட்டிகள் உள்ளன. கட்டாயம் தொட்டிக்குள் இறங்கி பணிபுரிய வேண்டிய நிலை வந்தால் விதிகளில் உள்ளபடி தலைமை நிர்வாக அதிகாரியின் ஒப்புதலோடு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் பகல் நேரத்தில் வேலை நடத்துவதை உறுதி செய்யவேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு அவை அணியப்படுகிறதா என்பதை உறுதி செய்ய பத்து தொட்டிகளுக்கு ஒரு மேலாளர் நியமிக்கப்படவேண்டும்.

11. பணியாளர்களுக்கு மாமன்ற உறுப்பினர் போன்றோர் நேரடியாக உத்தரவு கொடுக்கும் நடைமுறையைக் கைவிட்டு எந்த ஒரு பணியும் அந்தந்த மண்டல இளநிலை மற்றும் நிர்வாகம் பொறியாளர்கள் மூலமாகவே பணி உத்தரவு [work order] வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

12. பணியின் போது இறந்தவர்களின் குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

13. இறந்தவரின் குடும்பத்தினருக்கு வீட்டுமனை இடமும் வீடு கட்ட நிதி உதவியும் வழங்கவேண்டும்.

14. இறந்தவரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு தொழிற் பயிற்சியும் தொழில் தொடங்க கடன் உதவியும் பெற ஆவண செய்ய வேண்டும்.

- மக்கள் சிவில் உரிமைக்கழகம் [PUCL], மதுரை

Pin It