தமிழ்த் தேசிய வரலாறு என்பது, கிழக்கிந்தியக் கம்பெனி எதிர்ப்பு என்பதில் கருக்கொண்டது. வ. உ. சிதம்பரனார் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கப்பல் நிறுவனத்தைக் கொண்டுவரும்போது, அது தமிழ்த் தேசியத்தை உட்கிடக்கையாகக் கொண்டதாக இருந்தது. அதற்கடுத்து ஐரோப்பியர்கள் வரலாற்று ஆசிரியர்கள் என்ற பெயரில் இந்திய வரலாற்றை ஆரியர்கள் தான் உருவாக்கினார்கள் என்ற ஒரு பொய்யான மரபின வாதத்தை உருவாக்கினர். அதனால் வேறு வழி இல்லாமல் அந்த காலகட்டத்தில் தேசியங்கள் வளராத சூழலில் மூலமரபினத்தை எதிராக முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஆரிய வாதத்தை எதிர்ப்பதற்குத் தேவைப்பட்டது. அவ்வாறு உருவானதே திராவிடம். அது ஒரு பக்கம் ஆரியத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்தாலும் அது கருவில் தமிழ்த் தேசியத்தை உருவாக்கிக் கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் அதை ஒட்டி பெரியார் முன் வைத்த 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கமும் வெகுஜனப் தன்மையைப் பெற்றன. அதற்குப் பிறகு அதற்கான முன்னெடுப்புகள் குறைவாகவே இருந்தன.

பிறகு ஒரு கவனத்தைக் கவர்வதாக தோழர் தமிழரசனின் இராணுவ நடவடிக்கைகள் இருந்தன. அதற்கடுத்து ஈழச் சிக்கலை ஒட்டி தமிழகமெங்கும் பரவலாக முன்னோடி சக்திகள் இடையே ஒரு தமிழ்த் தேசிய வேட்கை பரவலாக வளர்ந்து வருகிறது. ஆனால், அது வெகுஜனத் தன்மையைப் பெறவில்லை. இன்றும் வெகுஜனத் தன்மை பெறாமலே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழர்கள் இந்தியர்களாகவும்‌, சாதியர்களாகவும் உள்ளனர். எனவே தமிழ்த் தேசிய வளர்ச்சி என்பது இந்தியத்தையும் சாதியத்தையும் ஒருங்கே எதிர்ப்பதாக அமைகிறது.

ஆனால் சீமான் போன்றவர்கள் சாதியத்தின் அடிப்படையிலான ஒரு இனவாதத்தைக் கட்டமைக்கின்றனர். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான சிந்தனை முறையாகும். இவர்கள் அறிவியல் பூர்வமாக வரலாற்றைப் பார்ப்பதில்லை. தேசியம் என்பது முதலாளித்துவ காலகட்டத்தில் அது சந்தையில் இருந்து பெறப்பட்ட குழந்தையாகும். அது நவீன காலத்தின் ஒரு வடிவம் ஆகும். ஆனால் இவர்கள் கடந்த கால கட்டத்துக்கு அதைப் பொருத்துகின்றனர். உண்மை என்னவென்றால் மொழி இனக்குழு காலகட்டத்தில் மட்டுமே ஓர் அடிப்படையாக இருந்தது. அதுவே வளர்ச்சிப் போக்கிலே சாதிய காலகட்டமாக இருந்தாலும், மரபின காலகட்டமாக இருந்தாலும் தேசிய இனம் என்ற அடிப்படை கிடையாது. அது அந்தந்த காலகட்டத்திற்காண சமூகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் அந்த காலகட்டத்திற்கு தமிழ் இனத்தைக் கொண்டுபோய் முன்னிறுத்துவது தவறானது. தமிழைக் கூட ஒரு வளர்ச்சி அடைந்த மொழியாக நாம் முன்னிறுத்துவது என்பது வேறு. பழந்தமிழ் அல்லது தமிழம் என்ற ஒரு மொழியை அதை விரிவாக தெற்காசிய முழுக்க கூட பரவி இருந்திருக்கலாம். அதுதான் நம்முடைய இன்றைய தமிழ் என்று சொல்வது தவறானது. இன்றைய தமிழ் பழந்தமிழை அடிப்படையாகக் கொண்ட, அதே சமயத்தில் நவீன வளர்ச்சியைக் கொண்ட மொழியாகும். (தெற்காசிய மொழிகள் அனைத்தும் இதே அடிப்படையைக் கொண்டவையாகும்)

அதேபோல் மூல மரபின காலகட்டத்தை திராவிடம் என்று குறிப்பிடுவதை அந்த காலகட்டத்தில் தமிழ் இனம் என்று குறிப்பிடுவதும் தவறானது. அதேபோல் இன்றைய நவீன காலகட்டத்தில் திராவிடத்தை தேசியமாக முன்னிறுத்துவது தவறானது. திராவிடம் என்பது மூலமரபினமாகும். அது ஆரியத்தை எதிர்த்து உருவான ஒரு கொள்கை. அதிலிருந்துதான் தமிழ் தேசியம் கருக்கொண்டு வளர்ந்தது. ஆனால் இந்த சமூகம் வளர்ந்த பிறகு நவீன காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் என்ற முன்மொழிவை முன்னிறுத்துவது தான் சரியானது. திராவிடம் என்பது மூலமரபினமே தவிர, தேசிய அடையாளம் கிடையாது. தமிழ்த் தேசியம் என்பது தேசிய அடையாளமே தவிர மூலமரபினம் கிடையாது.

இனவாதிகள் மிகத் தெளிவாக இன்று தமிழ்த் தேசியம் கட்டமைப்பு தடுக்கப்பட வேண்டி சாதியம், இந்தியத்தை எதிர்க்காமல் அதாவது சாதி அடிப்படையிலான தேசியத்தை பேசிக்கொண்டு இந்தியத்தை எதிர்க்காமல் திராவிடத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய விடுதலையை தமிழ்த் தேசியப் போராட்டத்தை திசை திருப்புகிறார்கள். திராவிடம் என்பது இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும்வர்க்கத்தின் மக்களை கொள்ளை அடிக்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது. ஆனால் அதன் உருவாக்கத்தில் திராவிடம் என்பது அப்படிப்பட்டது அல்ல. அது முற்போக்கு பாத்திரத்தைக் கொண்டது. எனவே அதை முதன்மையாக எதிர்ப்பது என்பது தமிழ்த் தேசிய விடுதலையை திசைதிருப்புவது ஆகும். முதன்மை எதிரிகளாக உள்ள இந்திய தேசியத்தையும் சாதியத்தையும் எதிர்க்காமல் மடைமாற்றம் செய்யும் வேலையாகும்.

அடுத்ததாக தமிழர்கள் என்பது யார் என்பதற்கு இனவாதக் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவர்களே சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளாக மாறுகின்றனர். எதையும் அறிவியல் பூர்வமாக வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ளும் அறிவு அவர்களிடம் இல்லை.

ஒருவன் சிந்திப்பதற்கும் செயலுக்கும் எந்த மொழியைப் பயன்படுத்துகிறானோ அதுதான் அவனின் தாய்மொழி. (பிறப்பினடிப்படையில் தீர்மானிப்பது பார்ப்பனியமாகும்) அதாவது உலகத்தில் முதன் முதலில் கட்டமைக்கப்பட்ட தேசியமான பிரெஞ்ச் தேசியம் கட்டமைக்கும் போது 40 சதவீதம் மட்டுமே பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இருந்தனர். ஆனால் இன்று 90% பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களாக அந்த பிரெஞ்சு தேசம் மாறியுள்ளது. 50% சிறுபான்மை மொழி கொண்டவர்களை பெரும்பான்மையான பிரெஞ்சு மொழி உட்கொண்டது. இதுதான் வரலாற்று நிகழ்வு. அப்படித்தான் தமிழகத்திலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்த வேற்று மொழியினர் இன்று தங்களது மொழிகளை மறந்து தமிழர்களாக மாறியுள்ளனர். தேசிய உருவாக்கம் என்பது அப்படித்தான் தமிழகத்தைப் பொருத்தவரை அது சாதி இனம் மதம் கலந்து உருவாகும். இதுதான் சமூக விதி.

மற்றபடி வேறு மொழி பேசுபவர்களாக உள்ளவர்களை மொழிச் சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களை யாரும் தமிழர்கள் என்று சொல்வதில்லை. ஆனால் அதே சமயத்தில் அவர்கள் தமிழ்த் தேசியர்கள். தமிழகத்தில் குடியுரிமை பெற்ற அனைவருமே தமிழ்த் தேசியர்கள். தமிழ்த் தேசியத்துக்குள் இன அடிப்படையில் மொழியின் அடிப்படையில், நாம் தமிழர், மலையாளி, தெலுங்கர், கன்னடர், உருது எனக் குறிப்பிட்டாலும் அனைவருமே தமிழ்த் தேசியர்கள். இந்த தமிழ்த் தேசியம் அனைவருக்குமானது.

வாழலாம் ஆள முடியாது என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான பாசிச சிந்தனையாகும். மனிதர்களை எவ்வகையில் பிளவுபடுத்தினாலும் நாகரீக காலகட்டத்தில் அது பாசிசமாகும். குடியுரிமை பெற்றவர்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அப்படித் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருக்கிறார். பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் - ஒன்று இனவாதத்தை எதிர்ப்பது, இன்னொன்று தமிழ்த் தேசியத்தைச் சொல்லாமல் திராவிடத்தை தேசியமாக முன் நிறுத்துவதே தவறு என்று சுட்டிக் காட்டுவது.

அதே சமயத்தில் வெகுஜனத் தன்மைக்கு தமிழ்த் தேசிய விடுதலையைப் பரவலாக முன் கொண்டு செல்வது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நவீன-பார்ப்பனிய இந்துத்துவ பாசிசக் கும்பல் டெல்லி ஆட்சிக்கட்டிலில் இருக்கும் கட்டத்தில் அவர்கள் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று அனைத்தையும் ஒன்றாக மாற்றுகின்ற ஒரு சூழ்ச்சியில் இறங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில், நமது இலக்காக நாம் தமிழ்த் தேசிய குடியரசுக்காகப் போராட வேண்டியது அவசியமாகும். அதே சமயத்தில் குடியரசுகளின் கூட்டரசு அமைப்பது அவசியமாகும்.

இந்த அடிப்படையில்தான் நாம் இன்று இழந்து கொண்டிருக்கும் மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இலக்குகளை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த இலக்கை நோக்கி நாம் நகர இதுவே நம்முடைய லட்சியமாக இருக்கட்டும்!

- துரைசிங்கவேல், தலைவர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி.

Pin It