1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டது.
தமிழ்நாடு தமிழருக்கே! - II
நேற்று இத்தலைப்பின்கீழ் எழுதிய தலையங்கத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது ‘திராவிடம் திராவி டருக்கே’ என்ற கருத்துக்கொண்டதென்றும், திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் பழைய திராவிட எல்லையையும் திராவிட பாஷைகளையுமே குறிப்பது என்றும், ‘திராவிடம் திராவிடருக்கே’ என்பதன் கருத்து, “இந்தியா”வின் பிணைப்பில் இருந்து திராவிடத்தைப் பிரித்து அதை ஒரு தனி நாடாக ஆக்கி, வேண்டுமானால் திராவிட பாஷைப்படி உள்ள பாகங்களை திராவிட தேசத்திற்குள் உள் மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனிப் பிரதிநிதித்துவமோ, அல்லது சட்ட
சபையோ ஏற்பாடு செய்து முக்கிய அதாவது எல்லா மாகாணங்களையும் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொதுப் பாதுகாப்பு, எல்லா மாகாணத்திற்கும் சம்பந்தப் பட்ட தபால், தந்தி, ரயில், மின்சாரம், பொதுத்தேவை, தொழிற்சாலை ஆகிய விஷயங்களில் தலை அரசாங் கத்திற்குச் சம்பந்தமும் அதிகாரமும் கொடுத்துவிட்டு, மற்றவைகளை அந்தந்த மாகாணமே முழுவதும் பார்த்துக் கொள்ளும்படியாகவும், கூடுமானவரை அந்தந்த மாகாண உத்தியோகம் பொருளாதாரம் முதலாகியவை பற்றிய நிர்வாக அதிகாரம் அந்தந்த மாகாணத்திற்கே அவரவர் எண்ணிக்கைப்படி அளிக்கக் கூடியதாகவும் செய்து கொள்வது என்ற கருத்திலும்.
பிணைந்திருந்து பயன் என்ன?
இப்படிச் செய்வதனாது எவ்விதத்திலும் நாஸ்திக மென்றோ, மதமொழிப்பு என்றோ சொல்வதாகாது என்றும், மற்றும் இதானது உலகிலோ `இந்தியா’ விலோ உள்ள மற்ற மக்களுடன் துவேஷம் கொண்டதாக ஆகாதென்றும் ‘இந்தியா’ உடன் ஒன்றாய் இருந்ததால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிட வில்லை என்றும், அதற்கு மாறாகப் பல கெடுதிகள் ஏற்பட்டனவென்றும் முன்னேற்றம் அடையாமல் நிலைமை தேங்கிவிட்டதோடு அல்லாமல் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு பின்னாலும் போயிருக்கிறோமென்றும், நாம் தனித்து நின்று நம் காரி யத்தையே நாம் கவனிப்பதற்கு `இந்தியா’ என்னும் பெரும் கசா கூளத்தில் இருந்து விலகிக்கொள்ளாவிட்டால் இனியும் கேடடைவோம் என்றும், சமுதாயத்துறையில் நாம் மைனாரட்டிகளாக ஆகிவிட்டோம் என்றும், சமயத் துறையில் நாம் மைனாரிட்டிகளாக ஆகிவிட்டோம் என்றும், சமயத்துறையில் கீழ் மக்களாகவும், நாலாம் சாதியாகிய பிறவி அடிமைகளாகவும் ஆய்விட்டதோடு, உலகத்தின் முன் காட்டு மிராண்டிகளாகக் கருதப்பட்டு விட்டோமென்றும், மற்றும் நாம் ஆரியர்களாலும், அவர்கள் நம்மை நசுக்க உதவி அளிக்கும் வடநாட்டாராலும் முறையே நாம் எவ்வளவு காட்டிக் கொடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் தலைதூக்க முடியாத நிலையில் ஆழ்ந்துவிட்டோம் என்றும் இத்தியாதி காரியங்களால் நாம் இனி “இந்தியா” என்ற போலிக்கூட்டு சம்பந்த மில்லாமல் விலகிக்கொண்டு திராவிட எல்லை மாத்திரம் கொண்ட திராவிடம் என்கின்ற ஒரு தேசத்தை தனித் தேசமாக ஆக்கிக்கொண்டு பூரணசக்தி ஏற்படும் வரை பிரிட்டிஷ் பாதுகாப்பு உதவியில் இருந்து வந்து பிறகு உலகில் உள்ள மற்ற பூரண சுயேச்சை தனி நாடுகளில் ஒன்றாக விளங்க வேண்டும் என்பது ஆகவும் எழுதி இருந்தோம்.
மற்றும் இதைப்பற்றி ‘மெயில்’ பத்திரிகைக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்குப் பதில் கூறி அதன் கண்டனங்களுக்கும் சமாதானம் கூறி அப்பத்திரிகைக்கு அனுப்பிய சேதியை மொழி பெயர்த்த கருத்தையும் நேற்று வேறு பக்கத்தில் பிரசுரித்துமிருந்தோம்.
என்றாலும் நேற்றைய தலையங்கத்தின் முடிவில் குறிப்பிட்டுள்ளபடி, அது சம்பந்தமான மற்ற சில விபரங்களையும் விளக்க அதன் தொடர்ச்சியாக இத்தலையங்கம் எழுதுகிறோம்.
பொதுவாகவே இன்றைய உலகக் கொள்கையானது ஒவ்வொரு நாடும் பெரும் பரந்த ஜனத்தொகை எல்லை ஆகியவற்றின் பிடிப்பிலிருந்து பிரிந்து சிறுசிறு அளவான சிறுநாடாக இருந்த அந்தந்த எல்லையின் சமுதாயத்தின் தேவைகளையும் முன்னேற வழிகளையும் கவனிப்பது தான் பொதுஜன சமுதாய முதலிய முன்னேற்றத்திற்கு அனுகூலமான வழி என்ற கொள்கை (டிசென்ட்ரலை சேஷன்- Decentralisation) என்று தெரியவருகிறது.
எப்படி என்பதற்குப் பிரதியக்ஷ உதாரணம் கிரேட் பிரிட்டனிலிருந்து அயர்லாந்து பிரிந்து முற்போக்கடைந்து வருவதும், அது ஒரு சமயம் அதிகக் கஷ்டமான உதாரணமென்றால் இந்தியாவில் இருந்து பர்மா பிரிந்து முன்னேற்றமடைந்து வருவதும் போதுமானதாகும்.
தனி மனிதனுக்கோ ஒரு தனி சமுதாயத்திற்கோ முன்னேற்ற உணர்ச்சி வரவேண்டுமானால் அதைத் தூண்டும் அவசியம் ஒன்று இருந்தே ஆகவேண்டும். இன்றைய நிலைமையில் இந்தியா முன்னேற்றமடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமக்கு ஏற்பட வேண்டுமானால் அதைத் தூண்டும் அவசியம் நமக்கு என்ன இருக்கிறது? இதுவரை இந்தியா அடைந்த முன்னேற்றத்தில் அல்லது இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்த லாபகரமான சாதனத்தில் யார் என்ன பலனை அடைந்தார்கள்? குறிப்பாக நமக்கு, திராவிடத்துக்கு அதனால் என்ன நன்மை ஏற்பட்டது? அல்லது எந்தவித மான கஷ்டம் ஒழிந்தது? என்று பார்த்தால் நம் போன்ற வர்கள் வெட்கப்படவேண்டியவர்களாக இருக்கிறோமே அல்லாமல் திருப்தி அடையத்தக்க சமாதானமாவது உண்டா? என்று கேட்கிறோம்.
முன்னேற்றம் என்றால் என்ன?
பொதுவாகவே முன்னேற்றம் என்றால் ஒரு நாட்டு மக்கள் சமுதாய வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதே முக்கியமானதாகும். அதற்கேற்றபடி நாட்டின் தன்மை உயர்த்தப்படுவதேயாகும்.
மற்றும் மனிதன், மற்றவனைவிடத் தான் மிகமிகக் கீழ்நிலையில் இருக்கிறோமே என்று அதிருப்தியும் துக்கமும் படாமையும் ஆகும். அப்படிப்பட்ட நிலைமையில் திராவிடர்களாகிய நாம் நம்மில் மிகப்பெரும்பாலோர் சமுதாயத் துறையிலாவது, பொருளாதாரத் துறையிலா வது, அதற்கேற்ற கல்வி அறிவிலாவது, முன்னேற்றமோ அல்லது மற்ற மக்களுக்கும் நமக்கும் அதிகமான பேதமில்லாத தன்மையோ பெற்றிருக்கிறோமா?
அப்படி இல்லையானால் கூடி இருப்பதில் என்ன பயன்? நமது பங்காளிகளுக்கு மேலாக நாம் உழைத்துப் பயிரிட வேண்டும். அதன் பலனை நமக்கு மேல் நமது பங்காளிகளே அனுபவித்துக்கொண்டு நாம் பட்டினியால் செத்துப் போகாமலிருக்க மாத்திரம் (ஏனெனில் செத்துப் போனால் நமது பங்காளிகளுக்கு இம்மாதிரிப் பாடுபட ஆள்கள் கிடைக்காமல் போய்விடுமே என்கின்ற சுயநல கவலை மீது) உயிர்க்கஞ்சி மாத்திரம் பெற அருகதை உடையவர்கள் என்றால், எப்படி அயலார்களோடு கூடி ஒத்துழைக்க முடியும்? ஆதலால் தான் நாம் தனித்து -நமது நிலத்தை பிரித்துக்கொண்டு நமது ஏர்களைத் தனியாய் ஒட்டி ஆழ உழுது பயிரிட்டுக் கொள்ளுகிறோம் என்று சொல்லுகிறோம். இதனால் யாருக்கும் எவ்வித நியாயமான கெடுதியும் ஏற்பட்டுவிடாது.
கைத்தொழில்
திராவிடநாடு பழங்காலச் சரித்திரத்தில் கைத்தொழிலில் மேன்மையுற்றிருந்ததாக சரித்திரங்களால் தெரிகிறது. உதாரணமாக யுத்த விஷயங்களில் இந்தியா பூராவுக்கும் இன்று உள்ள தகுதி உதைப்பவனைக் கண்டால் அஹிம்சை பேசி உதை வாங்கிக் கொள்வதும், இளைப் பாளியைக் கண்டால் “நாடு அகிம்சைக்கு லாயக்கில்லை கையில் கிடைத்ததை எடுத்து அடித்து ஒழிக்க வேண்டியது” என்று சொல்லுவதுமான அளவில்தான் இந்த 20ஆவது நூற்றாண்டு இந்தியா இருக்கிறது.
ஆனால், 3000, 4000 வருடத்துக்கு முந்தின தமிழ் நாட்டுச் சரித்திர இலக்கியத்தில் யுத்த விஷயத்தில் மனிதன் உதவி இல்லாமல் மதிற்சுவர்களே போரிட்டி ருக்கின்றன. அதாவது மதில்மேல் இயந்திரப் பொறி மனிதன் நின்று கொண்டு ஈயக்குண்டுகளை வார்த்து வீசி எதிரிகள் மீது எறிவதும், இயந்திரங்கள் சரமாரியாய் கவண் கல்லுகளை வீசுவதும், இயந்திரப் பொறியில் மனிதன் பறப்பதும், மயில் போன்ற ஒரு பொறியில் மனிதன் புகுந்துகொண்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து போவதுமான பல அரிய கைத்தொழில்கள் இருந்திருக் கின்றன. இவை சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை முதலாகிய பழங்கால திராவிட சரித்திர இலக்கிய இலக்கணங்களில் காணலாம்.
இவற்றை நாம் பாட்டிக் கதையாகக் கூறுவதாக யாரும் கருதிவிடக்கூடாது. ஏனெனில் பாட்டிக் கதை என்பது இராமாயணம், பாரதம், பெரியபுராணம், சின்னப் புராணம், மச்சப்புராணம், தவளைப்புராணம் ஆகியவற் றில் வரும் தெய்விகப் புஷ்ப விமானங்கள் அதாவது மனிதனுடைய அறிவு முயற்சி இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் நினைத்தபடி தானாகவே ஆகக்கூடியதும், தெய்வலோகத்தில் இருந்து நரகலோகத்துக்கு வரக் கூடியதும் ஆகாயத்தில் மறைந்திருந்து சண்டை போடு வதும் போன்ற மனோ கற்பனை சாதனங்கள் போன்ற கட்டுக்கதை அல்ல - அறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் ஏற்ற முறையில் ஒரு மனிதன் செய்தது இருந்ததாகவே சொல்லப்படுகிறது. இன்றும் பொறிகளால் அன்றி மக்கள் கையினால் செய்திருக்க முடியாது என்று சொல்லத் தகுந்த அநேகக் காட்சிகள் திராவிடத்தில் பிரத்தியட்சத்தில் பார்க்கலாம். இம்மாதிரியான காரியங்கள் இன்று வடநாட்டில் இவ்வளவு இருக்கிறதென்று சொல்லமுடியாது.
மேனாடும் ஆரியமும்
இப்படிப்பட்ட பழைய சரித்திர உண்மைகள் நம்பப்படா விட்டாலும் சரி, தள்ளி வைக்கப்பட்டாலும் சரி, அதைப் பிடித்துக்கொண்டு நம் பெருமையைப் பேச நாம் வரவில்லை. ஆனால், இன்றைய அற்புதப் பொறிகளும் அதாவது இயந்திரங்களும் புதிய புதிய அதிசயமான கண்டுபிடிப்புகளும் இந்திய மக்கள் நித்திய வாழ்க்கையில் அனுபவித்து இன்புறும் நூற்பு நெசவு முதலிய ஆலை களும் தந்தி, கம்பியில்லாத தந்தி, ஆகாய விமானம், நீராவி வண்டி, எண்ணெய் வண்டி, மிதி வண்டி, கிராம போன், நடிக்கும்-பேசும் சினிமா, புகைப்படம், எக்ஸ்ரே, ரேடியோ, ரேடியோ மூலம் படம் முதலான பல அற் புதங்கள் மேல் நாட்டாரால், அதுவும் சிறு சிறு நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்திற்குப் பயன்பட்டு மக்கள் இன்புறுவதைப் பார்க்கின்றோம்.
`இந்தியா ஒன்றாயிருந்த அந்தராத்மாவுடன் பேச்சு வார்த்தை நடத்தும் மாகாத்மாவைத் தலைவராக, வழி காட்டியாக, ஞானாசிரியராகக் கொண்ட இந்திய மக்கள் கண்டுபிடித்ததென்ன என்றால் கைராட்டினம், தக்கிளி, கட்டைவண்டி, 51 ஜதை மாடுகளைப் பூட்டி இழுக்கும் விசை வேகம், கருப்பட்டி, கைக்குத்து அரிசி, கோணி, வேஷ்டி, அதுவும் முழங்காலுக்குமேல் கட்டிக்கொண்டு, காட்டுமிராண்டிகளை நினைவூட்டுதல், உலக நிலை கவனிக்காமல் உச்சிக் குடுமியைக் காட்டிக்கொண்டு, மழுங்கச் சிரைத்த தலையுடன் ஆபாசமாய்த் திரிதல்; இவைதான் இந்தியா இன்றைய சகாப்த அற்புதங்களாய்க் கண்டுபிடிக்கப்பட்டு விளங்குகின்ன.
வடநாட்டாரின் கூலிகள்
அன்றியும் விஞ்ஞானம், புதிய கண்டுபிடிப்பு, யந்திர காரியங்கள் முதலாகியவை இன்றைய இந்தியாவுக்குக் கசப்பாய் இருப்பானேன்? உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த பாகத்திலாவது அபிசீனியாவிலோ, அல்லது இன்னும் பழைய ஆதி மக்கள் போன்றவர்கள் வாழு மிடங்களிலோ இயந்திரம் கூடாதென்று சொல்லு வோருண்டா? ஆனால் இயந்திரம் பிசாசு என்று சொல்லி திராவிட நாட்டில் மாத்திரம் இயந்திரம் தலை எடுக்காமல் செய்துவிட்டு இந்தியாவிற்குள்ளாகவே தன் சுயசாதி உள்ள மற்ற நாடுகளில் இயந்திரங்கள் வைத்து திராவிட நாடு பூராவுக்கும் பயன்படும்படியாக துணிகள், சாமான்கள் அனுப்பி மற்ற மாகாணக்காரர்களைக் கொழுக்க வைத்து அவர்களிடம் லட்சம் பத்து இலட்சம் பணம் பெற்று திராவிட நாடு விபீஷணர்களுக்கும், அனுமார், சுக்ரீவன் அங்கதன்களுக்கும் கூலி கொடுத்து - வாலி, இராவணன் போன்ற அவர்களது பெரியார்களையும் வீரர்களையும் சூழ்ச்சியில் கொல்லச் செய்வதும், திராவிட நாட்டில் உள்ள சில இழி மக்களைத் தேர்தலுக்கு நிறுத்தி மற்ற மாகாணத்தாரிடம் திராவிடத்தைக் காட்டிக் கொடுத்துப் பெற்றுவந்த பணங்களைச் செலவுசெய்து வெற்றி தேடிக் கொடுத்து திராவிட மக்கள் ஸ்தாபனங்களை மைனா ரிட்டியாகக் காட்டித் தங்கள் சிறு ஸ்தாபனத்தை “மெஜாரிட்டி”யாக செய்துகொண்டு திராவிட பாஷை, கலை, நாகரிகம், சரித்திர உண்மைகள், சுதந்தர உணர்ச்சி, முதலியவை மறையச் செய்வதுமான காரியம் செய்வதானது திராவிடம் தனித்து இருந்திருக்குமானால் முடிந்திருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டு கிறோம்.
திராவிடம் தனித்திருக்குமானால் திருநெல்வேலி ஜில்லாவிற்கு தோழர்கள் ஒரு சொக்கலிங்கமும், ஒரு எக்ஞேஸ்வர சர்மாவும், ஒரு லட்சுமி அம்மாளும் (இவர் களது தகுதியும் யோக்கியதையும் பொது மக்கள் அறிந் ததே) ஆகியவர்கள் திராவிடர்களுக்குப் பிரதிநிதியாகவும், மேடை குடும்பமும், சீனா - வானா (சி,வ.)குடும்பமும், இலஞ்சி குடும்பமும், சாவடி குடும்பமும் இன்று மூலை யில் உட்கார்ந்து கொண்டிருக்கவும் நாலாந்தர ஆள் களுக்குப் பின்னால் கொடி பிடித்துக்கொண்டு திரியவும் நேரிட்டு இருக்குமா? அது போல மற்ற ஜில்லாக்களையும் பார்ப்பதற்கு ஆக கோவை ஜில்லாவைக் குறிப்பிடுகிறோம்.
கோவை ஜில்லாவில் அந்த ஜில்லா பெருமக்களின் சமுதாயத் தலைவர்களான இரண்டு பட்டக்காரர்களும் தமிழ்நாடு பிரதிநிதித்துவ சாதியில் இருந்து தள்ளப்பட்டு பொது வாழ்விற்கு லாயக்கில்லை என்று தண்டிக்கப் பட்டுவிட்டார்கள். கோவை ஜில்லா பிரமுகர்களான தோழர் இரத்தினசபாபதி முதலியார் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு விட்டார். மற்றொரு பிரமுகரான இராம லிங்கம் செட்டியார் மாங்கல்யம் கழற்றப்பட்டுவிட்டார். இவர்கள் பொது வாழ்வில் சகுனத்தடையாக மதிக்கும்படி செய்யப்பட்டு விட்டார்கள். இராஜாக்கள், ஜமீன்தார்கள் புறமுதுகிடும்படி செய்யப்பட்டு விட்டார்கள்.
இவர்களில் யாராவது தோழர் ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார், குப்புசாமி, அண்ணாமலை உபயதுல்லா சாயபு, சுப்பையா, சுப்ரமணியர்கள் ஆகியவர்களுடைய தகுதியிலோ, ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, தேசாபிமானத்திலோ குறைந்தவர்கள் என்று சொல்லமுடியுமா? மற்றென்ன காரணம் என்றால் திராவிடம் திராவிடருக்கல்லாமல் ஆரியர்களுக்கும், ஆரிய பனியாக்களுக்கும் ஆரிய புரோகிதர்களுக்கும் ஆக இருப்பதனால் அல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்? திராவிட கிறித்தவர்கள், திராவிட முஸ்லிகள் என்று சொல்லப்படுபவர்களுடைய யோக்கியதைதான் எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டுக்கு முஸ்லிம் பிரதிநிதி தோழர் உபயதுல்லா சாயபு - மற்றொருவர் தோழர் யாகூப் உசேன். இவர் திராவிட நாட்டவர் அல்ல என்பது யாவரும் அறிந்ததே. கிறிஸ்தவர்களில் யாரோ ஒரு தோழர் வர்க்கியாம். தமிழ்நாட்டில், அல்லது திராவிட நாட்டில் முஸ்லிம்களுக் கும், கிறிஸ்தவர்களுக்கும் இவர்கள் பிரதிநிதியாய் இருக்க நேர்ந்ததற்குக் காரணம் திராவிடம் திராவிடருக்கு அல்லாமல், ஆரியருக்கும், பனியாக் களுக்கும், மார் வாடிகளுக்கும், புரோகிதர்களுக்கும், ஆதரவுக்காக இருந்தது என்பதல்லாமல் வேறு என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
திராவிடர்கள் எத்தனையோ மேன்மையும், நாகரிகமும், தன்மானமும், வீரமும் பொருந்திய மக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் ஆரியர் மிலேச்சர் களாக, காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் அவரவர்கள் கலை, சமய நூல்கள் முதலியவைகளே போதுமான சாட்சியம் என்றாலும் உலக சரித்திர ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்தெழுதி இருக்கிற உண்மை ஆராய்ச்சி சரிதங்களில் இன்றும் நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்காகப் பார்க்கலாம் என்றாலும் மற்றும் ஆரியத் தன்மையை உணர வேண்டியவர்கள் இந்து சமய சைவ வைணவ சம்பந்த மான, அவற்றின் கடவுள் சம்பந்தமான புராணங்களைப் பார்த்தால் கண்ணாடிபோல் விளங்கும்.
அவை சிறிதும் சம்பந்தம் இல்லாத திராவிடர்கள் நிலை இன்று எப்படி இருக்கிறது? திராவிட நாட்டில் உள்ள தெருப்பெருக்கி, கக்கூஸ் கழுவி, மூட்டைதூக்கி, வண்டி இழுக்கி, பங்கா இழுக்கி, எச்சிலை எடுக்கி இது போன்ற மற்றும் பல தொழில் செய்பவர்கள் 100க்கு 100 பேரும் திராவிட ஆண் மகனும் திராவிடப் பெண்மணியுமேயாகும். ஆனால், இதே திராவிடத்தில் பிழைக்க வந்துள்ள ஆரியர்கள், குஜராத்திகள், மார்வாடிகள், பார்சிகள், பஞ்சாபியர்கள் முதலிய அந்நியர்கள் திராவிட நாட்டில் 100க்கு 100 பேர் எப்படி உயர்ந்த, உன்னத, மேன்மையான நிலையில் `பூதேவர்களாக’ கோடீஸ்வரர்களாக, மகாத்மாக்களாக, ஆச்சாரிய சுவாமிகளாக, உலகப் பிரசித்தியான பெரியோராக, அறிவாளியாக, விஞ்ஞானியாக விளம்பரப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் என்பது யாரும் அறிந்ததேயாகும்.
இதற்குக் காரணம் திராவிடம் திராவிடருக்கில்லாமல் மேற்கண்ட கூட்டத்தாருக்காக இருப்பதினாலா அல்லது வேறு காரணத்தாலா என்று கேட்கிறோம்.
ஆகவே இவற்றிலிருந்து திராவிடம் தனித்து இருந்து தனது பண்டைய பெருமைகளில் உள்ள மேன்மை களையும், உலக முற்போக்கில் தகுதியானதும், முன் னேற்றமானதுமான பெருமைகளையும், ஸ்தானத் தையும் அடைய வேண்டியது அவசியமா? அல்லது ஜட்கா வண்டிக்காரன் மூலமாகத்தான் குதிரைகள் மோட்ச மடைய வேண்டுமென்பது போலவும், செக்கோட்டியின் மூலமாகத்தான் மாடுகள் மோட்சமடைய வேண்டு மென்பது போலவும், ஆரியர்கள், பனியாக்கள், மார்வாடிகள் முதலியவர்கள் மூலமாகத்தான் திராவி டர்கள் மோட்சமடைய முடியுமென்று கருதிக்கொண்டு “இந்தியா”வுடன் கலந்திருப்பதா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். மற்றும் திராவிடர் - அந்நியர் வாழ்க்கை முறை முதலியவைகளைப் பற்றிப் பின்னால் எழுதுவோம்.
விடுதலை: 22-11-1939
- தொடரும்