மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் தொல்பழங்கால மனிதர்கள் குகைகளிலும் குகைகளைப் போன்ற அமைப்புடைய பாறைப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வேட்டையை முதன்மையாகக் கொண்ட இச்சமூகம் தகவல் தொடர்புக்காகவோ நம்பிக்கை மற்றும் சடங்குகள் சார்ந்தோ தங்கள் வாழ்விடங்களான குகைகள் மற்றும் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். இத்தகு தொன்மை வாய்ந்த ஓவியங்கள் உலகின் பல பகுதிகளிலும் மலைக் குகைகளிலும் பாறைச் சரிவு மற்றும் உட்கூடுகளிலும் வரையப்பட்டுள்ளன. ஆதி மனிதர்களின் இத்தகு ஓவியங்கள் பாறை ஓவியங்கள், கற்செதுக்குகள் என்ற இரண்டு வகைகளில் தற்போது நமக்குக் கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பாறை ஓவியங்கள் நமக்குக் கிடைக்கின்றன. தமிழகத்திலும் பாறை ஓவியங்கள் பெருமளவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய இரண்டு காலக் கட்டங்களைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் தற்போது கிடைக்கின்றன. தமிழகப் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கின்றன. அதிக அளவில் வெள்ளை வண்ண ஓவியங்களும் அதற்கடுத்த நிலையில் சிவப்பு வண்ண ஓவியங்களும் கிடைக்கின்றன. காலப் பழமையுடைய ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தில் உள்ளன. இருப்பினும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமையைக் காணமுடிகிறது அரிதாகக் கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வகைப் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் ஒரே வண்ணத்திலும் செத்தவரை, கரிக்கையூர், வெள்ளரிக் கோம்பை, வேட்டைகாரன் மலை போன்ற சில இடங்களில் இரண்டு வண்ணங்களிலும் வரையப் பட்டுள்ளன, பாறை ஓவியங்கள் சிலவற்றில் கோட்டோவியம் ஒரு வண்ணத்திலும் உடல் பகுதி வேறு வண்ணத்திலும் இடம் பெற்றுள்ளன. தமிழகப் பாறை ஓவியங்கள் சிவப்பு, வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் கிடைத்தாலும் பெருங்கற்காலக் கல்திட்டைகளில் (DOLMENTS) கிடைக்கும் ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கின்றன. பொதுவாகப் பாறை ஓவியங்களில் சிவப்பு வண்ண ஓவியங்கள் புதிய கற்காலத்தவை என்றும் வெள்ளை வண்ண ஓவியங்கள் பெருங் கற்காலத்தவை என்றும் நாம் வரையறுக்க இயலும்.

தமிழகப் பாறை ஓவியங்களில் மனிதர்கள் மாடுகள், மான்கள், குதிரைகள், மீன்கள் முதலான உருவங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. நிகழ்ச்சிச் சித்தரிப்புகளாக வேட்டையாடுதல், நடனம், சடங்குகளை நிகழ்த்துதல், பயணம் முதலான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வகை ஓவியங்களில் விலங்கு, மனித உருவங்களைவிட மிகுதியான எண்ணிக்கையில் குறியீடுகளும், சில அடையாளங்களும் காணப்படுகின்றன. குறிப்பாகக் கீழ்வாலை, மல்லசந்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன் பள்ளி போன்ற இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் கீறல்களை ஒத்தனவாக உள்ளன. பெரும்பாலான பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்களில் தலைப்பகுதி தவிர்த்த உடலின் மற்ற பகுதிகள் கோடுகளால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. குச்சி வடிவில் அமைந்த மனிதர்களின் கைகள், கால்கள் முதலான உடல் பகுதிகளோடு இணைத்து வில், அம்பு, கேடயம் முதலான ஆயுதங்கள் இருப்பது போல் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மல்லபாடி, கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல், பாடியேந்தல், ஆலம்பாடி, சிறுமலை, அழகர்மலை, வேட்டைக்காரன் மலை, கொணவக்கரை, கொல்லூர், மசினக்குடி, நெகனூர்ப்பட்டி, கிடாரிப்பட்டி, திருமலை, கருங்காலக்குடி, நாகமலை, திருமயம் முதலான இடங்களில் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் கிடைக்கின்றன. பாறை ஓவியங்களில் மனிதர்கள், விலங்குகளின் உள் உறுப்புகளை வரைந்து வெளிப்படுத்தும் வகையில் தீட்டப்படும் ஓவியங்கள் உலகின் பல பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இந்த வகையிலான “எக்ஸ்ரே“ ஓவியங்கள் தமிழகத்திலும் ஆலம்பாடி, செத்தவரை போன்ற இடங்களில் கண்டறியப் பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள பாறை ஓவியத் தொகுப்புகளில் சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்த குறியீடுகளோடு பாறை ஓவியங்கள் கிடைக்கும் ஒரே இடம் என்ற பெருமை கீழ்வாலைக்கு உண்டு.

கீழ்வாலை

விழுப்புரம் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூரே கீழ்வாலை. இக் கீழ்வாலை கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தொலைவில் பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக் குகைகளுமாகச் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களைத் தம்மகத்தே பொதிந்து வைத்துள்ளது அப்பகுதி. கீழ்வாலையில் தொல்பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தில் உருவான செஞ்சாந்துப் பாறை ஓவியங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தன. காலவெள்ளத்தில் இயற்கை மாற்றங்களாலும் பாதுகாப்பு இன்மையாலும் அழிந்து உருக்குலைந்தன போக தற்போது எஞ்சியிருக்கும் ஓவியங்கள் சொற்பமே.. கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு (கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில்) நான் சென்று பார்த்தபோது தெளிவாகத் தெரிந்த ஓவியங்கள் பலவும் தற்போது மங்கி உருக்குலைந்து அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

கீழ்வாலை ஓவியங்களை முதன்முதலில் கண்டுபிடித்து வெளிப்படுத்தியவர் அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி ஆவார். 01-08-1982 தினமணிச்சுடர் ஞாயிறு மலரில் கீழ்வாலை ஓவியக் கண்டுபிடிப்பு குறித்து ஒரு கட்டுரையை அவர் வெளியிட்டார். தொடர்ந்து புதுவை வரலாற்றுச் சங்க உறுப்பினர்கள் பாகூர் சு.குப்புசாமி, வில்லியனூர் ந.வேங்கடேசன் இருவரும் வரலாற்றுச் சங்கத்தின் தலைவரும் புதுச்சேரி மாநில ஆட்சித் தலைவருமான ஆய்வறிஞர் பி.எல்.சாமி அவர்களோடு இணைந்து கீழ்வாலை ஓவியங்களை ஆய்வு செய்தனர். பி.எல்.சாமி கீழ்வாலை ஓவியங்களில் சிந்துவெளிக் குறியீடுகள் இடம் பெற்றிருப்பதனைக் கண்ணுற்று அதனை ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். அவரது கட்டுரை TAMIL CIVILIZATION என்னும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில ஆய்விதழில் (Vol.1 No.2, 1983) வெளியானது. கீழ்வாலைப் பாறை ஓவியக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையினர் விழுப்புரம் மாவட்டத்தின் இதே பகுதியில் செத்தவரை, புறாக்கல், குளிர்சுனை, பாடியந்தல், ஆலம்பாடி ஆகிய இடங்களில் பழங்காலப் பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தினர்.

தொல்பழங்கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ள பாறைகளை இப்பகுதி மக்கள் 'இரத்தக் குடைக்கல்' என்று அழைக்கின்றனர். இரத்தச் சிவப்பில் அதாவது செஞ்சாந்து வண்ணத்தில் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளதால் இப்பாறைகளுக்கு இரத்தக் குடைக்கல் என்ற பெயர் வழங்கி வந்திருக்கலாம். கீழ்வாலைக்கு வடபுறத்தில் உள்ள குறுங்காடுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் இரத்தக் குடைக்கல்லுக்கு வந்து படையல் போட்டு விழா நடத்திச் செல்லும் முறைமை கடந்த நூற்றாண்டின் நாற்பதுகள் வரையிலும் வழக்கத்தில் இருந்ததாக வெள்ளையாம்பட்டு சுந்தரம் குறிப்பிடுகின்றார். கீழ்வாலை ஓவியப் பாறைகளை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து மக்கள் வாழ்விடமாக இருந்து வந்துள்ளமைக்குச் சான்றாக அப்பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்புப் பானையோடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் பகுதிகளும் கிடைத்துள்ளன. கீழ்வாலைக்கு வடக்கேயுள்ள குறுங்காட்டுப் பகுதியாகிய உடையார் நத்தத்தில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த கல்திட்டைகளும் தாய்த்தெய்வ வழிபாட்டின் அடையாளமாக விளங்கும் விசிறிப்பாறையும் உள்ளன என்பதனை இங்கே இணைத்துப் பார்த்தல் வேண்டும்.

ஓவியப் பாறைகளுக்கு அருகே உள்ள வேறுவொரு பாறையில் உரல்போன்ற குழி ஒன்று குடையப் பெற்றுள்ளது. அக்குழியின் அருகில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் 24ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 983) கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது.

கீழ்வாலையில் பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள பாறைக் குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்களின் வசிப்பிடம் என்று கருதக்கூடிய வகையில் குகை ஒன்று உள்ளது. அந்தக் குகையில் சுமார் முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும். மேலும் அந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்றும் உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

கீழ்வாலை ஓவியங்கள்

கீழ்வாலை ஓவியங்களின் காலத்தைக் கணிப்பதில் ஆய்வாளர்களிடையே ஒத்த கருத்து இல்லை. சிந்துவெளியில் கிடைக்காத குதிரை உருவம் இவ்வோவியங்களில் தென்படுவதால் ஓவியங்களின் காலத்தைக் கணிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காலம் கி.மு. 500ஆக இருக்கலாம் என்று ஐராவதம் மகாதேவன் கருதுகின்றார். இந்த ஓவியங்கள் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்பார் டாக்டர் கே.வி.இராமன். கருத்து மாறுபாடுகள் இருப்பினும் கீழ்வாலை ஓவியங்கள் சுமார் கி.மு. 1000த்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற கருத்தே வலிமையாக உள்ளது. கீழ்வாலையில் கிடைக்கும் செஞ்சாந்து ஓவியங்களில் முதன்மையாகக் கருதத்தக்க ஓவியத்தொகுதி ஆதிமனிதர்களின் குகையை ஒட்டியுள்ள சிறுகுன்றின் மேல்பகுதியில் உள்ள பாறைச் சரிவில் இடம்பெற்றுள்ள தொகுப்பு ஓவியங்களே ஆகும். இத்தொகுப்பில்தான் சிந்துசமவெளி எழுத்துக் குறியீடுகளும் இடம் பெற்றுள்ளன. முதலில் ஓவியங்களைப் பார்க்கலாம். கீழ்வாலை ஓவியங்களில் இடம்பெற்றுள்ள ஆண்கள், பெண்கள் அனைவருமே விலங்கு அல்லது பறவையின் முகத்தோற்றத்தில் உள்ளனர். வேட்டைச் சமூகத்தில் சடங்கு நிகழ்வுகளின்போது விலங்கு போன்ற ஒப்பனையுடனோ, முகமூடி அணிந்தோ அச்சடங்குகளில் பங்கேற்கும் வழக்கமண்டு. இவ்வோவியங்களில் இடம்பெறும் மனிதர்களின் விலங்கு முகச் சித்தரிப்பிற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

keezhvalai art

இத்தொகுப்பில் உள்ள ஓவியங்களை மூன்று பகுப்புகளாகப் பிரித்து விளக்குவார் பி.எல்.சாமி.

முதல் பகுப்பில் மூன்று மனிதர்களும் ஒரு விலங்கும் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியத்தில் ஒரு மனிதன் குதிரையில் அமர்ந்துள்ளான். அவனது உடலில் நீண்ட ஆயுதம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக இடம்பெறும் பெண் உருவம் ஒரு சடங்காடி அல்லது பூசாரியாக இருக்கலாம். அவளின் தலைமுடி அலங்கரிக்கப் பட்டுள்ளது. குதிரைமேலுள்ள அந்த முதல் நபரை இந்தப் பெண்பூசாரி தாய்த் தெய்வத்திடம் அழைத்துச் செல்கிறாள். தாய்த் தெய்வத்திற்குப் பலியிடல் நோக்கமாக இருக்கலாம். மூன்றாவது நபரும் பெண்தான் அவர் இருவரையும் வரவேற்கக் காத்திருக்கிறாள்.

இரண்டாம் பகுப்பில் இடம்பெறும் ஓவியம் ஒரு தாய்த்தெய்வமாக இருக்கலாம். விநோதமான தலை அலங்காரத்துடன் நெடிய தோற்றத்துடன் தாய்த்தெய்வம் உள்ளது. கீழே 17 கிரணங்களோடு சூரியன் வரையப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அத்தெய்வத்தை வணங்குகிறான். இவ்வோவியம் தரும் செய்தி, ஒரு பகல்பொழுதில் அத்தெய்வத்திற்கு அந்த மனிதன் பலியிடப் பட்டுள்ளான் என்பதாக இருக்கலாம்.

மூன்றாவது பகுப்பில் இடம்பெற்றுள்ள ஓவியத்தில் நான்கு மனிதர்கள் படகில் செல்கின்றனர். நடுவில் ஒருவர் படகைச் செலுத்தும் நீண்ட தடியைக் கையில் பிடித்துள்ளார். நால்வரும் கைகளைக் கோர்த்தபடி படகில் நின்ற நிலையில் உள்ளனர். அனைவரும் ஒரே திசையைப் பார்த்தபடி உள்ளனர். அந்த நால்வரும் தாய்த் தெய்வத்திற்குப் பலியிடப் பெற்றவர்கள் என்றும் அவர்களை மோட்ச உலகிற்குப் படகு அழைத்துச் செல்வதாகவும் ஓவியம் சித்தரிக்கின்றது என்றும் விளக்கமளிப்பார் பி.எல்.சாமி.

கீழ்வாலை ஓவியத் தொகுப்பில் மனித உருவங்கள் மட்டுமல்லாமல் சூரியன், விண்மீன், வில்அம்பு, சக்கரம், பறவை முதலான உருவங்களும் பலவகைக் குறியீடுகளும் தீட்டப்பட்டுள்ளன.

கீழ்வாலை - சிந்துவெளிக் குறியீடுகள்

கீழ்வாலைப் பாறை ஓவியத் தொகுப்புகளில் தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்த பகுதி சிந்துவெளி எழுத்துக் குறியீடுகளே. படகொன்றில் நால்வர் பயணம் செய்வதாய் வரையப்பட்ட ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வரிசையாக ஐந்து குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.

keezhvalai art 1

முதல் குறியீடு தென்னங்கீற்று போன்றும், இரண்டாம் குறியீடு மத்தளம் போன்றும், மூன்றாம் குறியீடு சீப்பு போன்றும், நான்காம் குறியீடு மத்தளம் போன்றும், ஐந்தாம் குறியீடு நான்கு குறுக்குக் கால்களையுடைய சக்கரம் போன்றும் எழுதப் பட்டுள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ் ஓவிய எழுத்துகள், சிந்துவெளி எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஐந்து எழுத்துக் குறியீடுகளையும் சிந்துவெளி குறியீட்டு வாசிப்பின் அடிப்படையில் 'நாவாய்த் தேவன்' என வாசித்துக் காட்டுகிறார் ஆய்வறிஞர் இரா.மதிவாணன். நால்வர் படகில் பயணம் செய்யும் ஓவியத்தின் கீழ் இடம்பெற்ற இக்குறியீடுகள் படகினைச் செலுத்தும் தேவன் என்ற பொருளில் நாவாய்த் தேவன் என எழுதப்பட்டுள்ளது என்பது அவரின் கருத்தாகும்.

ஆய்வறிஞர் இரா.பவுன்துரை அவர்கள் இதே குறியீடுகளை வேறுவகையில் பொருள் கொள்கின்றார்.

முதல் குறியீடு – இடி அல்லது இடியுடன் கூடிய மேகக் கூட்டம்

இரண்டாம் குறியீடு - ஒரு தலைவனின் கீழ் ஊர்வலமாகச் செல்லுதல்

மூன்றாம் குறியீடு – சொர்க்கம், தேவலோகம் -வடதிசை

நான்காம் குறியீடு – இசையொலி எழுப்பிச் செல்லுதல்

ஐந்தாம் குறியீடு – விழாக் காலம் -வேட்டையாடும் காலம்.

என ஐந்து குறியீடுகளுக்கும் சிந்துவெளிக் குறியீட்டு எழுத்து வாசிப்பின் அடிப்படையில் பொருள் கொண்டு பின்வருமாறு கொண்டு கூட்டுகின்றார். "இனக்குழுத் தலைவனது தலைமையில் வடதிசை நோக்கி இசையொலி எழுப்பி வேட்டைக்குச் செல்லும் விழா நடைபெறுகிற பொழுது இடியுடன் கூடிய மழை பெய்தது”

கீழ்வாலைக் குறியீட்டு எழுத்துக்களை இரா.பவுன்துரை அவர்கள் வாசிக்கும் முறைமையைக் காணும்பொழுது “கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் பல சொற்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஓவியமும் ஒரு சொல்லின் அறிகுறி” என்று குறிப்பிடும் தொல்லியல் அறிஞர் கா.இராஜன் அவர்களின் கூற்று மெய்ப்படுகின்றது..

உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றான சிந்துவெளி நாகரீகம் என்பது தமிழர்களாகிய திராவிட மக்களின் நாகரீகமே என்பது ஹீராஸ் பாதிரியார், பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, ரஷ்ய நாட்டு அறிஞர் நார்சோ, எச்.டி.சங்காலியா, சேவியர் தனிநாயகம் அடிகளார் முதலான அறிஞர்களின் கருத்தாகும். இக்கருத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கீழ்வாலைக் குறியீட்டு எழுத்துக்கள் அமைந்துள்ளமை சிறப்பிற்குரியது.

துணைநின்ற நூல்கள்

  1. தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம், பி.எல்.சாமி, சேகர் பதிப்பகம், சென்னை, 1984
  2. தொல்லியல் ஆய்வுத் தொகுதி, தொல்பொருள் தொழில்நுட்பப் பணியாளர் பண்பாட்டுக் கழகம், மதுரை. 1985
  3. சிந்துவெளி எழுத்தின் திறவு, முனைவர் இரா.மதிவாணன், கழகப் பதிப்பு, சென்னை, 1991
  4. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு, முனைவர் தி.சுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011.
  5. வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள், கோ.செங்குட்டுவன், பி.எஸ். பப்ளிகேஷன், விழுப்புரம், 2013

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி

Pin It