காஞ்சிபுரம் மாவட்டம் பால்நல்லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் சாதிவெறிப் போக்கைக் கண்டித்து அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் சென்ற நவம்பர் 26ஆம் நாள் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. 500க்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான சுவரொட்டிப் பரப்புரையின் போது 14 வயது தலித் சமூகச் சிறுவர் ஒருவர் திருப்பெரும்புதூர் காவல் நிலையக் காவலர் ஒருவரால் மிரட்டப்பட்டார்.

பரப்புரையில் ஈடுபட்டிருந்த அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியைச் சேர்ந்த தோழர் சாலமனும் மற்ற தோழர்களும் அந்தக் காவலரைக் கண்டித்தனர்.

பிறகு அந்தக் காவலர் அந்தச் சிறுவரின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டதன் பேரில் காவலர் மீது முறைப்பாடு அளிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் அந்தக் காவலர் தோழர் சாலமன் தன்னைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சுற்றுக்காவல் பணியின் போது தன்னை அச்சுறுத்தியதாகவும் பொய்யாக முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிகிறது அந்த அடிப்படையில் திரு.சாலமன் மீது ஆர்ப்பாட்டத்திற்கு இரு நாள் முன்னதாகப் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தப் பொய் வழக்கின் அடிப்படையில் திரு.சாலமனைக் கைது செய்ய ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் இரவு அவர் வசிக்கும் நரசிங்கபுரம் கிராமத்திற்கு திருபெரும்புதூர் காவல் துறையினர் சென்று, அவர் அங்கு இல்லாத காரணத்தினால் திரும்பி விட்டனர். 

ஆர்ப்பாட்ட நாளில் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திரு மணிகண்டன் சாதிய நோக்குடன் பல்வேறு இடையூறுகள் செய்துள்ளார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்துப் பொதுமக்களும் சனநாயக ஆற்றல்களும் இதனைக் கண்டித்தனர். குறிப்பாக டிஎஸ்பி மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு, திரு சாலமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கையும் கண்டித்தனர். 

இந்நிலையில் திசம்பர் 2 அதிகாலை 5 மணி அளவில் தோழர் சாலமன் தன் இல்லத்தில் உறங்கி கொண்டிருந்த போது சீருடை அணியாமலும் சீருடை அணிந்தும் கிட்டத்தட்ட ஏழெட்டுக் காவல் துறையினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, சாலமனை வலுவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றுள்ளனர். காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் முன்னிலையில் சாலமனை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

சாலமன் மீதான வழக்கு முழுக்க முழுக்கத் திருப்பெரும்புதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்றாலும் 30 கிலோ மீட்டர் அப்பால் உள்ள மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சாதிவெறியுடனும் சாதிய இழிசொற்களைப் பயன்படுத்தியும் திரு சாலமனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். எல்லாமே டிஎஸ்பி மணிகண்டன் ஆணைப்படி நடைபெற்றுள்ளது. திருபெரும்புதூர் காவல் துறையினரின் இத்தாக்குதலால் திரு.சாலமனுக்குக் கொடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

இப்போது திரு சாலமன் தன் கோரிக்கைகளுக்காக செங்கல்பட்டு கிளைச் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கியுள்ளார். தன் மீது சட்டப் புறம்பான தாக்குதல் தொடுத்த திருப்பெரும்புதூர் காவல் துறைக் காவலர்கள் மீதும் அவர்களைத் தூண்டிய துணைக் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக டிஎஸ்பி மணிகண்டனை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாகும். 

சாத்தான்குளம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் காவல் நிலையக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறையினர் இன்றளவும் சிறையிலிருக்கும் போதே, காவல் நிலையக் கொடுமைகளுக்கு எதிராகத் தமிழநாட்டு மக்கள் விழிப்புற்றிருக்கும் போதே திருப்பெரும்புதூர் காவல் துறையினரும் டிஎஸ்பி மணிகண்டனும் சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிக்காமல் மேற்கண்டவாறு செயல்பட்டிருப்பதைக் காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசு தலையிட்டு, குற்றம் புரிந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், சிறையில் இருக்கும் சாலமன் மீதான வழக்கைத் திரும்பப்பெற்று அவரை உடனே விடுவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

- தியாகு, ஒருங்கிணைப்பாளர் & மீ.த. பாண்டியன், செயலாளர், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் - தமிழ்நாடு & புதுவை

Pin It