“கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” - இமாச்சல மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பிரதமர் பேசிய பேச்சின் ஒரு வரி இது. கூசாமல் பொய் பேசுகிறார் பிரதமர்.

பிலாஸ்பூர் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட அதே ஆண்டில்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்னும் மதுரை எய்ம்ஸ், பொட்டல் காடாகவே காட்சியளிக்கிறது. பிரதமரின் பேச்சில் குறிப்பிடும் “நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்குமான வளர்ச்சி” என்பது அவரது வழக்கமான ‘உருட்டல்’ என்பது மதுரை எய்ம்ஸ் பொட்டல் காட்டைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். எனவே அவர் பேச்சில் உண்மையில்லை. பொய்களின் சாட்சியாகத் திகழ்கிறார்கள் மோடியும் அவரது அடிப்பொடிகளும் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

aims madurai“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று சும்மா சொல்லவில்லை பேரறிஞர் அண்ணா.

தெற்கு தானாகத் தேய்வதில்லை. தேய்க்கப்படுகிறது.

வடக்கின் ஆதிக்கத்தால் ஆரம்பம் முதலே தெற்கு தொடர்ந்து தேய்க்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் நம் வரிப்பணம் மட்டும் சுரண்டப்படுகிறது.

இந்திய நாட்டின் மாநிலங்களில் தன் தனித்த அடையாளங்களோடு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனிதவளம் என அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக ஆகியுள்ளது தமிழ்நாடு. நாம் செலுத்தும் வரிப்பணத்தைக் கூட மற்ற வட மாநிலங்களில் முதலீடு செய்துவிட்டு நமக்குச் சட்டப்படி வரவேண்டிய GST பங்கைக் கூட முழுமையாகத் தராமல் இழுத்தடிக்கிறது ஒன்றிய அரசு.

அதுமட்டுமன்றி ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்திலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. வேண்டுமென்றே வஞ்சிக்கப்படுகிறோம். ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைக்கு ஆகச் சிறந்த உதாரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும்(?) பணிகள் விளங்குகிறது.

பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

அதன் பின் நடந்து வரும் பணிகள் குறித்துச் சொல்ல வேண்டிது இல்லை, ஊரே அறியும். அடித்தளமே கட்டாமல் மொட்டைமாடிக்குப் படிக்கட்டு கட்டுகிறேன் என்பதுபோல கட்டடமே கட்டாமல் வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதுவும் குட்டிச்சுவராக ஆனதுதான் மிச்சம்.

நிலைமை இவ்வாறிருக்க.. தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 1,264 கோடி ஒதுக்கப்பட்டது... அதை மதுரையில் கட்ட நினைத்தோம். உங்கள் உதவியால் நாங்கள் அதில் வெற்றி பெற்றோம். இன்று எய்ம்ஸின் 95% பணிகள் முடிவடைந்துள்ளன. அது பிரதமரால் விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று பாஜகவின் பல்துறை வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெருமையாகச் சொன்னார். அதை பாஜக தலைவர் அண்ணாமலையும் கைதட்டிப் பாராட்டினார். ஆனால் அவரின் பேச்சு அனைத்து ஊடகங்களிலும் நகைப்புக்கு உள்ளானது.

வடநாட்டு அப்பாவி மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றுவதைப் போல, தமிழகத்து மக்களையும் நினைத்திருக்கிறார்கள். ஏதாவது சொல்லி வைப்போம், நம்பினால் நம்பட்டும் என குருட்டாம் போக்கில் அடித்து விடுவது அவர்களின் வேலை. தமிழக மக்களிடம் அந்த வேலை எப்போதும் எடுபடாது, தெரு முக்கு கூட தாண்ட முடியாது என்பதுதான் வரலாறு.

ஜே.பி.நட்டாவுக்கு இதை யாரும் சொல்லவில்லை போல, பாவம்!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் “எய்ம்ஸ் செங்கல்” தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பெரும் ஆரவாரத்தைக் கிளப்பியதோடு, அதுவே கடந்த ஆட்சியை அகற்றும் பல காரணிகளில் ஒன்றாக அமைந்தது.

நாட்டின் சொத்துக்களை எல்லாம் விற்றுத் தீர்க்கும் மோடி அரசு, மதுரை எய்ம்ஸ் ஒற்றைச் செங்கலால் 2024ஆம் ஆண்டில் மக்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பற்றி நாம் நினைக்க முடியும்!

- தம்பி பிரபு

Pin It