ஜனநாயகம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மூடுதிரை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகின்றது. ஜனநாயகம் என்ற சொல், மக்களின் ஆட்சியை பிரதிநிதித்துவப் படுத்தினாலும் அது ஒருக்காலும் அனைத்து மக்களுக்குமான ஆட்சியை பிரதிநிதித்துவப் படுத்துவது கிடையாது.

சாதிய வேறுபாடுகளும், மத வேறுபாடுகளும், இன வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் உள்ள சமூகத்தில் ஜனநாயகம் என்பது அந்த வேறுபாடுகளை மூடி மறைக்கும் ஒரு திரையாகவே உள்ளது. எனவே ஒருபோதும் சமத்துவம் போன்ற சொற்கள் தம் உண்மையான பொருளைப் பெற முடியாது.

Vaiko with durai vaiyapuri

இன்று உலகம் முழுவதுமே ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பெடுக்கும் அனைத்து நாடுகளுமே அடிப்படையில் முதலாளித்துவத்தை கட்டிக் காப்பாற்றுபவைதான். அதனால்தான் முதலாளித்துவச் சமூக அமைப்பில் அதன் பிரதிநிதியாய் செயல்படும் அரசியல் கட்சிகள் அனைத்தும் முதலாளியத்தின் அடிப்படையான சொத்துரிமை என்ற சட்டகத்துக்குள் முழ்கி, தம் ஜனநாயக அரிதாரத்தைக் களைந்து அம்மணமாய் நிற்கின்றன.

எப்படி ஜனநாயகத்திற்கு முந்திய சமூக அமைப்புகள் அனைத்தும் சொத்துரிமையின் மீது கட்டப்பட்டிருந்தனவோ, அதே போலத்தான் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமும் சொத்துரிமையின் மீதே கட்டப்பட்டு இருக்கின்றது.

நாட்டை ஆளுவதற்கும் அதை வழி நடத்துவதற்குமான தகுதி என்பது பிறப்பின் அடிப்படையில், வழி வழியாகச் சில குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே உள்ளதென்று சொன்னால் அதற்குப் பெயர் எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?

ஆனால் கெடுவாய்ப்பாக இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் அப்படித்தான் இருக்கின்றது. இதன் நச்சு வேர்கள் வாரிசு அரசியலில் வேர் கொண்டு இருக்கின்றன. அதனால்தான் அரசியலில் பெரும் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், சாராய வியாபாரிகளும், கல்வி வள்ளல்களும் மட்டுமே பங்குபெற முடியும் என நினைத்துப் பெரும்பான்மை மக்கள் ஒதுங்கிக் கொள்கின்றார்கள்.

'ஏன் அரசியல்வாதியின் மகன் அரசியலுக்கு வரக் கூடாதா?' எனக் கேள்வி கேட்டால் நிச்சயம் வரலாம். அரசியலில் இருந்து யாரும் விடுபட முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் ஓர் அரசியல்வாதிக்கு மகனாய்ப் பிறந்த ஒரே காரணத்திற்காக கட்சியின் முக்கியம் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கும், பதவிகள் வழங்கப்படுவதற்கும், கட்சியின் மீது ஆதிக்கம் செய்யும் நிலையை உருவாக்குவதற்கும் என்ன பெயர்?

இது திட்டமிட்டுத் திணிக்கப்படுகின்றது. பல நூறு கோடி சொத்து மதிப்பு உடைய கட்சி நிறுவனங்களைத் தன் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே கைப்பற்றி விடக்கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’ இருந்துதான் வாரிசு அரசியல் திணிக்கப்படுகின்றது. ஆனால் வாரிசு அரசியலில் கட்சி ஈடுபடும் போது அந்தக் கட்சியின் தொண்டர்கள் பெரும்பாலும் இதை எதிர்ப்பதில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

அதற்குக் காரணம் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை ஒரு கடவுளைப் போன்றோ, தனக்கு கூலி தரும் முதலாளியைப் போன்றோதான் பார்க்கின்றார்கள். தங்களைப் போலவே மலமும், சிறுநீரும் கழிக்கும் ஓர் அற்ப ஜீவராசிதான் இவர்களும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அதனால்தான் அவர்களைக் கண்டதும் கூழைக் கும்பிடு போடுவது, காலில் விழுவது எல்லாம் செய்கின்றார்கள்.

கார்ப்ரேட் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அனைவருமே மக்களைத் தங்களிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் பிச்சைக்காரர்கள் என்று நினைப்பதால்தான் அவர்களால் மிக எளிதாகத் தங்களது வாரிசுகளைக் கட்சிப் பொறுப்புகளில் உயர்ந்த இடத்திற்கு எளிதாகக் கொண்டு வர முடிகின்றது.

நேற்றுவரை அவன் ஒரு பொறுக்கியாகவோ, ரவுடியாக, மாமாப் பயலாகவோ கூட இருந்திருக்கலாம்; ஆனால் இன்று அவன் ஓர் அரசியல் கட்சியின் தலைவன் என்றால் நீங்கள் அவனை வணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் கட்சியில் இருக்கத் தகுதியற்ற விரோதியாகக் காட்டப்படுவீர்கள்.

எனவே வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி என்றால், இந்திய மக்களைக் கொல்லும் ‘இந்தியப் புகையிலை நிறுவனத்தில்’ பங்குதாரராகவும், 'வீ ரியாலிட்டி' என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குநராகவும் நேற்று வரை இருந்த துரை வைகோவையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வையாபுரி தலைமைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதில் பங்கேற்ற 106 பேரில் 104 பேர் துரை வையாபுரிக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்த வாக்கெடுப்பு ரகசியமாக நடந்ததில் இருந்தே அதன் யோக்கியதையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இப்படி ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிவிட்டு அதற்கு வைகோ கொடுத்த விளக்கம் “ஒருவரைத் திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படியே அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டாம் என அவரைத் தடுத்து வந்தேன். ஆனால், முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை. தொண்டர்கள் விருப்பப்படியே கட்சிப் பணிகளில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார்".

கட்சியில் தன்னுடன் 28 ஆண்டுகள் பயணித்தவர்களுக்கு இல்லாத தகுதி 2 ஆண்டுகள், அதுவும் அவருக்கே தெரியாமல்(!) கட்சிப் பணியாற்றிய துரை வையாபுரிக்கு உள்ளதென்று வைகோ நினைத்தால் வைகோவின் நாக்கு ஆயிரம் நச்சுப்பாம்புகளுக்குச் சமமானதாகவே இருக்கும்.

வைகோ தன் மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதன் நோக்கம், அதுவும் கட்சின் மிக முக்கியப் பொறுப்பை வழங்குவதற்கான காரணம் லட்சக்கணக்கான மதிமுக தொண்டர்களின் வியர்வையில் உருவான அதன் சொத்துகள் தனக்குப் பின் தன் மகன் கட்டுப்பாட்டில் செல்ல வேண்டும் என்பதுதான்.

கட்சி நிறுவனம் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவானாலும், அதன் மூலம் கிடைத்த கொழுத்த சொத்துக்களை தானும் தன் குடும்பமுமே மொத்தமாகத் தின்று ஏப்பம் விட வேண்டும் என்பதுதான் அனைத்து கார்ப்ரேட் கட்சிகளுக்குமான பொதுவான கொள்கையாக உள்ளது. அதற்கு மதிமுக மட்டும் விதிவிலக்கல்ல.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தொடங்கி அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா, பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், சிவசுப்பிரமணியத்தின் மகன் சிவசங்கர், ஐ பெரியசாமி மகன் ஐ.பி செந்தில்குமார், பெ.சு.திருவேங்கடத்தின் மகன் பெ.சு.தி.சரவணன், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகன் தங்கம் தென்னரசு, முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், பிடி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,

ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன் கிருஷ்ண முரளி, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்சா வெள்ளைச் சாமியின் மகன் காதர் பாட்சா முத்து ராமலிங்கம்,

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது மைத்துனர் சுதீஸ், பாமகாவில் அன்புமணி, காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர் ப,.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் திருமகன் என இந்தப் பட்டியல் மிக நீளமானது.

இந்திய அளவில் காங்கிரஸ், பிஜேபி போன்றவற்றில் வாரிசு அரசியலைப் பட்டியல் இட்டால் அது பல பக்கங்கள் நீளும்.

நாம் புரிந்து கொள்ள வேண்டியது வாரிசு அரசியல் என்பதை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புப்படுத்தி அல்ல. நாம் வாழும் அரசு அமைப்புடன் அதைத் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவச் சமூக அமைப்பையும், அதன் சுரண்டலையும் கட்டிக் காப்பாற்றும் பெரும்பணியைச் செய்துவரும் கார்ப்ரேட் கட்சிகள் அடிப்படையில் முதலாளித்துவ நிறுவனங்களாகும். அதனால் ஒரு கார்ப்ரேட் கம்பெனி எப்படிச் செயல்படுமோ, அதே போலத்தான் கார்ப்ரேட் கட்சிகளும் செயல்படும். கட்சியின் தொண்டர்கள் என்பவர்கள் உண்மையில் கூலி அடிமைகளே ஆவார்கள். அவர்களுக்கு தேர்தல் காலங்களில் சில நூறுகளோ, சில ஆயிரங்களோ வழங்கப்படலாம். அதைத் தாண்டி வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை.

ஒரு முதலாளி பிடிக்கவிலை என்றால், இன்னொரு முதலாளியைத் தேர்ந்தெடுப்பது போலத்தான் ஒரு கார்ப்ரேட் அரசியல் கட்சியைப் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு கார்ப்ரேட் அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுப்பதும்.

எனவே துரை வையாபுரியின் அரசியல் வருகை என்பதை ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு அரசியல் என்ற கூவத்தில் புதிதாகக் கலந்த ஒரு சாக்கடையாகவே நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

- செ.கார்கி