உடைந்தது தே.மு.தி.க., உடைந்தது த.மா.க. இரண்டு கட்சிகளுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது.
இவர்கள் இருவரும் பா.ஜ.க.வுடன் பேசுவார்கள் கம்யூனிஸ்ட்டுகளுடன் பேசுவார்கள் அ.தி.மு.க.வுடன் பேசுவார்கள், இடையில் தி.மு.க.வுடனும் பேசிக் கொள்வார்கள்.
அப்படியானால் இவர்களின் கொள்கைதான் என்ன? அது விஜய்காந்திற்கும் தெரியாது, வாசனுக்கும் தெரியாது.
நான் ‘கிங்’ ஆக வேண்டுமா? ‘கிங் மேக்கர்’ ஆக வேண்டுமா? என்று பொதுக் கூட்டத்தில் போய்க் கேட்டுக்கொண்டிருந்தார் விஜய்காந்த். அவரை விட்டால் இந்த நாட்டில் வேறு யாருக்கும் முதல்வராகும் தகுதியில்லை என்றார் பிரேமலதா. உலகமே சுற்றிக்கொண்டிருந்தது விஜய்காந்திற்கு.
ஆனால் முதல்வராகும் வாய்ப்பை, யாருடன் கூட்டுச் சேர்வதன் மூலம் பெற முடியும் என்று முடிவெடுக்கத் தெரியாமல் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்தார்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள் கிராமத்தில். இங்கே வைகோ புகுந்தார் - உடைந்தது தே.மு.தி.க.
அதிலிருந்து உருவானது மக்கள் தே.மு.தி.க. அதன் நிறுவனர் சந்திரகுமார். பிரேமலதாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். தே.மு.தி.க. வீழ்ச்சிக்குப் பிரேமலதா காரணம், தற்போதைய நிலைக்கு விஜய்காந்த் காரணம். இவருடன் 7 மாவட்டச் செயலாளர்கள், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், பல மாவட்ட முன்னணியினர் கைகோத்து விட்டார்கள்.
இது ஒரு புறம் இருக்க ஆட்சி முடியும்வரை மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன், ஆட்சி முடிந்த உடன் முதல்வர் கனவில் த.மா.க.வைத் தொடங்கினார்.
தி.மு.க - காங்கிரஸ் தேர்தல் கூட்டு உரிய நேரத்தில் முடிவு செய்யப்பட்டுவிட்டது.
வாசன் போயஸ் தோட்டத்துக் குரலுக்காகக் காத்துக்கிடந்தார், இலவு காத்த கிளியைப்போல.
ஆனால் போயஸ் தோட்டத்து கதவு இவருக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டது.
விடுவாரா வைகோ! ஓடிப்போய் அவரையும் இழுத்துக்கொண்டு வந்தார் மக்கள் நலக் கூட்டணி என்று.
உடைந்தது த.மா.க. கட்சியின் மூத்த தலைவர்கள் பிட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர் விஸ்வநாதன், கார்வேந்தன், ராணி என்று பல முன்னணியினரும், 15 மாவட்டத் தலைவர்களும் த.மா.க.வை விட்டு வெளியோருகிறார்கள்.
எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை. அவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பது வைகோவின் அரசியல் விளையாட்டு.
இதற்குப் பலியானவைதாம் தே.மு.தி.க.வும், த.மா.க.வும்!