ops 217அதிமுகவில் யாரையும் அவ்வளவு சுலபத்தில் நம்பாத ஜெயலலிதாவே இரண்டு முறை ஒருவரை முதலமைச்சராக ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் என்றால் அவர் எந்தளவுக்கு ஜெ.வின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும்? இந்தளவு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஓபிஎஸ் எவ்வாறு இன்று கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் என்று சொல்லக் கூடிய அளவுக்கான நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

வீட்டுச்சிறையில் இருந்தால் கூட மகனுக்கு எப்படியாவது மந்திரி சபையில் இடம் கிடைத்து விடும் என்று வானத்திற்கும் பூமிக்குமாக ஆசையுடன் இருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஓபிஎஸ் ஏமாறுவது இன்று நேற்று அல்ல, அது காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கையில் இந்த ஏமாற்றம் ஒன்றும் புதிதல்ல.

இன்று ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் ஊர்ஜீதமாகாதவைதான். சம்பவங்களின் கோர்வையின் அடிப்படையிலும், பொது வெளியில் உள்ள விஷயங்களின் அடிப்படையிலும் தான் நாம் உண்மையை ஓரளவுக்கு அவதானிக்க முடியும்.

2014 செப்டம்பர் - 2015 மே மாத காலகட்டத்தில் முதலமைச்சராக இருக்கையில் பதவி சுகமும், அது தரும் போதையும் ஓபிஎஸ்ஸை புதிய கனவுகளுக்கும், வேறு மாதிரியான அரசியல் அபிலாஷைகளுக்கும் இட்டுச் சென்றதாக கூறுகிறார்கள்.

கிட்ட தட்ட அதுவும் ஒரு சில கால கட்டங்களில் நமக்கு அதை உணர்த்தி இருக்கிறது. 2016ம் ஆண்டு ஜெயலலிதா இறந்த பிறகு யார் முதல்வர் அனைவரும் கேட்க மறைமுகமாக ஓபிஎஸ் பக்கம் கை திரும்பியது.

இன்னும் சொல்ல போனால் அன்று ஜெயலலிதா செய்தது போல சசிகலா நாம் முதல்வராக முடியாது என்று எண்ணி முதல்வராக ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கினார்.

பிறகு இரவோடு இரவாக அவர்கள் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போடச் சொன்னார்கள், நான் கையெழுத்து போட்டேன் என்று கூலாக ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்துவிட்டு பேட்டி கொடுத்தார்.

தர்ம யுத்தம் நடத்த தொண்டர்களை திரட்ட முயன்றார். ஆனால் அதற்கு முன்னரே எடப்பாடியார் சுதாரித்துக் கொண்டு ஆட்சியை பிடித்துவிட்டார்.

அன்று அவரது பின்னால் சென்ற எம் எல் ஏ க்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தர அத்தனையும் தாங்கிக் கொண்டு நாங்கள் இணைந்து அம்மாவின் இறப்பு மர்மத்தை கண்டுபிடிப்போம் என்று பாஜக தலைமையில் ஒன்றிணைந்தனர்.

ஆக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் டம்மியாக்கப்பட்ட தருணம். நாட்டாமை படத்தில் ஒரு காட்சியில் சண்டை நடக்கும் போது ஒருவர் மிஸ்கர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார். அது போல ஓபிஎஸ்ஸ்க்கு பெயருக்கு துணை முதல்வர், நிதி துறையும் கொடுக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் வந்தது யார் முதல்வர் என்று புதிய குழப்பம். ஆட்சியைப் பிடித்து அனைத்து எம் எல் ஏக்களை எடப்பாடியார் வளைத்துப் போட ஓபிஎஸ் மீது பலருக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எடப்பாடி விடாப் பிடியாக இருக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்மொழிந்தார் ஓபிஎஸ். அங்கையும் ஏமாற்றத்தை சந்தித்தார்.

மறுபடியும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை முன்பு கணித்தார். அதனால் தான் எடப்பாடி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவரோ தேனியை தாண்டாமல் தொகுதிக்குள்ளே வலம் வந்தார்.

தேர்தலில் தட்டு தடுமாறி வெற்றி பெற்றார். சரி இனிமேல் கட்சியை நாம் கைப்பற்றி விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் அடுத்த அம்பை எடப்பாடியார் மிக கூர்மையாக தீட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கட்சியின் தலைமையை யார் ஏற்பது என்ற போது இரட்டை தலைமை என்பதில் ஓபிஎஸ் உறுதியாகி இருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை யாரும் பெரிய அளவில் கூட மதிக்காமல் பேசியதால் பாதியிலேயே என்ன செய்துக் கொள்ளுங்கள் என்று கோபத்துடன் பாதியிலேயே கூட்டத்தை புறக்கணித்தார்.

சரி சென்றவர் அப்படியே கோபத்துடன் இருந்திருந்தால் கொஞ்சமாவது தொண்டர்கள் மத்தியில் மரியாதையை இருந்துருக்கும். ஆனால் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று உப்புக்கு சப்பாக ஒரு பதவியை கொடுத்து அதிமுக தலைமை அவரை சமாதானப்படுத்தியது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

இதை ஓபிஎஸ்ஸும் நன்கு அறிவார். ஆனால் மாநிலத்தில் இல்லையென்றால் என்ன? எங்களுக்கு மோடி இருக்கிறார் என்று மகனுக்காக காத்திருந்தார். ஆனால் அதிலும் பேரிடி விழுந்தது. இப்படி தொடர்ந்து பல ஏமாற்றங்களை சந்தித்துள்ள ஓபிஎஸ். சசிகலா கட்சியைக் கைப்பற்றினால் மீண்டும் அவருடன் இணைந்து எடப்பாடியாருக்கு எதிராக பேசவும் தயங்க மாட்டார்.

தனது சொத்துக்களையும் பினாமிகளையும் காப்பாற்ற அனைத்து திசைகளிலும் கம்புகளை சுற்றினார். சிவி சண்முகத்தின் கருத்துக்குக் கூட தலைமை தலையிடுவதற்கு முன்பு தனி அறிக்கை மூலம் நான் பாஜக ஆள் என்று நிரூபித்து விட்டார்.

பதவி சுகமும் அது தரும் போதையும் ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் வரை இது போன்ற ஏமாற்றங்கள் மறையப் போவதும் இல்லை. மாறப்போவதும் இல்லை.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதே ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு.

- சேவற்கொடி செந்தில்

Pin It