corona villagepeople“சும்மாவே வீட்டிலிருந்தா போரடிக்குது… கொஞ்சம் வெளியே வந்தா கொரோனோ நம்மை சாவடிக்குது...வராதே வெளியே...காட்டாத தலையை.. கொரோனோ பார்த்தா வாங்கிடும் பலியை” என்ற ‘கானா பாலா’வின் பாடல் கிராமங்களில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“போலீசு அடிச்சாக்க கோவப்பட வேணாம், அவங்க ராவும் பகலும் உழைக்குறாங்க மறந்துவிட வேணாம்...” என்று இதன் அடுத்த வரிகள் தொடர்கிறது. இதற்கு பெயர் கொரோனோ விழிப்புணர்வுப் பாடலாம்! இது விழிப்புணர்வா, மிரட்டலா, மூடத்தனமா என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்! அடுத்து “சீனாக்காரன் செஞ்சு வச்ச வேலை... அட பாம்பை புடிச்சு திங்குறதாட உங்க வேலை” என்று ஒரு ‘தேசபக்தி’ பாடலும் வருகிறது! ஆனால் இதையெல்லாம் பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. முகத்தில் மாஸ்க்கை மட்டும் மாட்டிக்கொண்டு -அதுவும் போலீசுக்கு பயந்து- எளிதாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதை ‘முரட்டுத் தைரியம்’ ‘முட்டாள்தனம்’ என்று ‘சமூக அக்கறையுடன்’ சிலர் கருதலாம். கிராமப்புற மனிதர்களுக்கும் உயிர் இருக்கிறது. உயிர்மேல் ஆசையும் இருக்கிறது. சகமனிதன் மீது அக்கறையும், மனிதாபிமானமும் இருக்கிறது. ஆனால் இந்த ‘சமூக அக்கறையோடு’ ஒரு விவசாயி வீட்டிற்குள் முடங்க முடியாது.

விவசாயத் தொழிலும், அதனுடன் இணைந்த வாழ்நிலையும் அவனை முடங்கியிருக்க விடுவதில்லை. மீறி முடங்கினால் நீங்களும், நானும் மண்ணைத்தான் தின்ன வேண்டும்!

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அடிக்கடி கைகளை சோப்புபோட்டு கழுவிக்கொண்டும் விவசாய வேலைகளை செய்ய முடியாது. முகக்கவசம் போட்டுக்கொண்டு தென்னைமரம் ஏறமுடியாது. பைக்கில் ஒருஆள், ஆட்டோவில் இரண்டுபேர், காரில் மூன்றுபேர் என்ற விதிமுறைகளைப் பின்பற்றித் தான் கூலியாட்களை கொண்டு செல்ல வேண்டுமென்றால், தக்காளி கிலோ 500 ரூபாய்க்கு விற்றால்தான் விவசாயிக்கு கட்டுபடியாகும்!

விளைந்த பொருள்களை ஊரடங்குக்குப் பயந்து வீட்டிற்குள் முடக்க முடியாது. கமிசன் மண்டிக்கு கொண்டுசென்றாக வேண்டும். கமிசன்மண்டிகள் 6 மீட்டர் இடைவெளியில் இருக்காது. ரயில்பெட்டிபோல தொடர்ச்சியாக இருக்கும். அங்கு விவசாயிகளும், வியாபாரிகளும் கூடிநின்றுதான் ஏலம்விட முடியும். 

லோடுமேன்கள், “அந்த மூடையை ஏன் தொட்டே போய் குளிச்சுட்டு வா” என்று ‘ஹமாம் சோப்பு அம்மா’ விளம்பரம் கூறுவதுபோல ஒவ்வொரு சரக்கு மூடையையும் குளித்துவிட்டு வந்துதான் தூக்குவேன் என்று கூற முடியாது!

காய்கறிகளுக்கு N-95 கவசமணிந்தோ, கிருமிநாசினியால் சுத்தம்செய்தோ கொடுத்தால்தான் வாங்குவேன் என்று வியாபாரிகள் அடம்பிடிக்க முடியாது! சுருக்கமாக சொன்னால் அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதுவும் இன்றைய விவசாயத் தொழிலுக்கு பொருந்தாது. கறாராக விதிமுறைகளைக் கடைபிடித்தால் விவசாயமே செய்ய முடியாது என்பதே உண்மை!

இந்த சூழல்தான் “வராதே வெளியே...காட்டாத தலையை.. கொரோனோ பார்த்தா வாங்கிடும் பலியை” என்ற மிரட்டலையும் மீறி விவசாயிகளை இயங்க வைக்கிறது. உண்மையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசு ஆகியோரைப் போல விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்களையும் முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்திருக்க வேண்டும்.

புறக்கணிக்கப்படும் கிராமப்புறங்கள்!

2-வது அலையின் தீவிரம் என்னவென்றால் நகரங்களையும் தாண்டி கிராமப்புறங்களில் கொரோனோ பரவல் அதிகரித்திருப்பதுதான். ஆனால் அரசின் கவனமும், நடவடிக்கைகளும் நகரங்களில் மட்டுமே முடங்கிக் கிடக்கிறது. இதன் விளைவுகள் கிராமங்களில் எப்படி எதிரொலிக்கிறது? அங்கு மக்கள் தொற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

இன்று நாட்டில் நிலவும் கோர நிலமைகளை இவர்களுக்கு யாரும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. ஆக்ஸிஜன் இல்லை, படுக்கைவசதியும் இல்லை, தடுப்பூசித் தட்டுப்பாடு, இறுதிச்சடங்குக்கு காத்திருக்கும் பிணங்கள், கங்கைக் கரையில் நாய்களால் குதறப்படும் பிணங்கள், இறந்துபோன மகனை தோளில் சுமந்து செல்லும் தந்தை, ஆக்ஸிஜன் இல்லாமல் காத்துக்கிடந்து ஆஸ்பத்திரி வாசலிலேயே செத்துபோகும் அப்பாவிகள் என அனைத்தையும் மீடியாக்களின் வாயிலாக தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறார்கள்.

மேற்கண்ட நிலமைகள் “இந்தக்கூட்டத்தில் ஒருவராக நாமும் சிக்கி சீரழியக் கூடாது” என்று அவர்களை எச்சரிக்கையடைய வைக்கிறது. இதன் விளைவாக நோயாளிகளை வீட்டிலேயே வைத்து, கையருகில் கிடைக்கும் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர்.

அரசின் போலி மருத்துவர்கள் என்று பட்டத்தோடு கிராம மக்களுக்கு முதலுதவிகளை செய்து வருபவர்கள்தான் இவர்களின் மானசீக மருத்துவர்கள். அரசினால் கைவிடப்பட்ட கிராமப்புற மக்களுக்கு இவர்களை விட்டால் வேறுஒரு நாதியுமில்லை.

உண்மையான மருத்துவர்களைத் தேடி அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடினால் மட்டும் என்ன நடக்கும் என்பது தெரிந்த கதைதான். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் இருந்தால் மருந்து இருக்காது. மருந்து இருந்தால் ஊசிபோடும் நர்ஸ் இருக்க மாட்டார்.

அதுவும் வாரத்தில் ஒருநாள்தான் ஊசிமருந்து கிடைக்கும். 300 நோயாளிகள் வந்தாலும் ஒரு மருத்துவரும் இரு நர்சுகளும்தான் சமாளிக்க வேண்டும். பிரசவ வசதியுள்ள சுகாதார நிலையங்களில் மட்டுமே படுக்கைவசதி இருக்கும். அவசர சிகிச்சைக்கு ஓடிவரும் நோயாளிகளை தாலுகா, மாவட்ட மருத்துவமனைக்கு துரத்திவிடும் பரிதாப நிலையில்தான் ஆ.சு.நிலையங்கள் உள்ளன.

கொரோனோ தொற்று சிகிச்சையில் பல்நோக்கு மருத்துவமனைகளே திணறிக் கொண்டிருக்கும்போது, ஆ.சு. நிலையங்களில் மட்டும் என்ன அதிசயம் நடந்துவிடப் போகிறது? “இங்கே படுக்கை வசதியில்லை. நீங்கள் வீட்டிலேயே 15 நாட்கள் தனிமை[ப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று 4 மாத்திரையைக் கொடுத்து மீண்டும் வீட்டிற்குதான் துரத்தி விடுகிறார்கள்.

சளி, இருமல், நீடித்த காய்ச்சல், உடம்புவலி ஆகிய அறிகுறிகளைக் கொண்டு இது கொரோனோ நோய்தான் என ஓரளவு புரிந்துகொள்கிறார்கள். ‘உள்ளூர் மருத்துவர்கள்’ மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் குடிக்கிறார்கள். ஆவி பிடித்துக் கொள்கிறார்கள். “முடிஞ்ச அளவுக்கு பாப்போம். முடியாத பட்சத்திற்கு நம்ம கையில் என்ன இருக்குது.

செத்தாலும் நிம்மதியா வீட்டுல சாகட்டும்” என்ற கையறு மனநிலையில்தான் கிராமப்புற மக்கள் கொரோனோ தொற்றை எதிர்கொண்டு வருகின்றனர். நோய் முற்றிய நிலையில் இதிலிருந்து விடுபடும் சிலர்தான், மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஓடுகிறார்கள். இவர்கள் மட்டுமே அரசின் அதிகாரபூர்வ தொற்றுப் பாதிப்புக் கணக்கில் இடம்பெறுகிறார்கள்! வழியின்றி வீட்டிலேயே சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு இப்பட்டியலில் இடமில்லை.

கொரோனோ பரிசோதனை செய்து, ரிசல்ட் வரும்வரை வீட்டிற்குள் அடைந்து கிடந்து, பாஸிட்டிவ் என்றால் தெருவை அடைத்து, வாசலில் பிளீச்சிங் பவுடர் போட்டு, அக்கம்பக்கத்து வீட்டாரின் வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகி, சிச்சை முகாமுக்கு போனால் உடனிருந்து அவர்களைப் பராமரிப்பது, கடைசியில் இறந்துவிட்டால் அனாதையாக புதைக்க வேண்டியது வரை இம்மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சனைகள் ஏராளம். இதைவிட மேற்கண்ட ‘கைவைத்தியம்’தான் இவர்களுக்கு பாதுகாப்பாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

உ.பி.யின் ‘மவுலா கோபால்கர்’ கிராமத்தில் மாட்டுக் கொட்டகையையும், மரத்தடி நிழலையும் திறந்தவெளி மருத்துவமனைகளாக மாற்றி, மக்களுக்கு கொரோனோ சிகிச்சயளித்து வருகிறார் ஒரு கிராம மருத்துவர். அங்கு மரத்தடியில் நடப்பது தமிழக கிராமங்களில் வீட்டிற்குள் நடக்கிறது!

முன்பெல்லாம் “என் அப்பாவை ‘பிரபல மருத்துவமனையில்’ சேர்த்து மருத்துவம் பார்த்தேன். என் அம்மாவுக்கு ‘பிரபல டாக்டரிடம்’ மருத்துவம் பார்த்தேன் என்று பெருமிதத்துடன் சிலர் பேசுவார்கள். இதன் பின்னணியில் அவர்களது கவுரவம், அந்தஸ்தின் அடையாளமாக அந்த ‘பிரபல மருத்துவமனையும்’, ‘டாக்டரும்’ இருப்பார்கள். இன்று அத்தகைய பேச்சுக்களை கேட்க முடிவதில்லை.

ஏனென்றால் பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லுமளவுக்கு மக்களிடம் பணமில்லை. தங்களின் தகுதிக்கேற்ற மருத்துவமனையிலோ புதிய நோயாளிகளை அனுமதிப்பதில்லை. இறுதியாக எல்லோரும் ஓடிச்சென்று நிற்குமிடம் அரசு மருத்துவமனை மட்டும்தான். அங்கும் வழியில்லாதபோது வீட்டில் வைத்து மருத்துவம் பார்ப்பதுதான் மக்களுக்கு இருக்கும் ஒரேவழி!  

ஒருவகையில் இது, ‘துஷ்டணைக் கண்டால் தூர விலகு’ என்பார்களே அதுபோல கையாலாகாத அரசிடமிருந்து மக்கள் தாங்களே விலக்கிக் கொள்ளும் ஒரு எதிர் நடவடிக்கை! இதன் மறுபுறம் பார்த்தால், இவ்வாறு எதிர்ப்பில்லாமல் மக்கள் ஒதுங்கிக்கொள்வது அரசுக்கும் பிரச்சனையாக இல்லாமல் போகிறது. கொரனோவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டிவிடலாம் என்பது இதன் கூடுதல் சாதகம் என்பதால் உள்ளூர் அதிகாரிகளும் இவர்களின் அவலத்தைக் கண்டுகொள்வதில்லை.

வெளிவராத கிராமப்புற மரணங்கள்!

கிராமங்களில் பரவிவரும் கொரோனோ தொற்றின் தீவிரம்குறித்து மீடியாக்களில் முழுமையான செய்திகள் வெளியாவதில்லை. ஒரு சினிமா பிரபலமோ, அரசியல்வாதியோ கொரோனோவால் இறந்தால் ஒப்பாரிவைக்கும் மீடியாக்கள், கிராமங்களில் தினசரி இறக்கும் அப்பாவி மக்களைப் பற்றி குறுஞ்செய்தியாகக் கூட வெளியிடுவதில்லை.

எனவே கிராமப்புற மரணங்கள் வெளிஉலகுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. எங்கள் ஊரில் கடந்த 7 நாட்களில் மட்டும் 10 இறப்புகள் அடுத்தடுத்து நடந்தது. எல்லோரும் 55-60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அனைவரும் 10 நாட்களுக்கும் மேலாக சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு நோய்களுக்காக வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள். இதில் சிலர் நீரிழிவு நோயாளிகள். ஆனால் இவர்களில் ஒருவர்கூட அரசின் கொரோனோ இறப்புப் பட்டியலில் வரவில்லை!

“ஒரே நாளில் 7 பேர் சாவு” “ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தாய் தந்தையை பலிகொடுத்துள்ள குடும்பம்” “திருமணமாகி 4 மாதமேயான 34 வயது இளைஞன் தொற்றுக்குப் பலியாகிறான். அடுத்த 5 நாட்களில் 55 வயதான அவனது தந்தையும் இறந்துவிட்டார்” “65 குடும்பங்கள் உள்ள குக்கிராமத்தில் 45 குடும்பத்தினருக்கு கொரோனோ தொற்றுப் பாதிப்பு” போன்ற நெஞ்சை உருக்கும் செய்திகள் பரவலாக கிராமங்களில் நிலவுகிறது. தொடர் இறப்புகளால் பல கிராமங்களில் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

இறப்புகளில் எது சாதாரண இறப்பு, எது கொரோனோ இறப்பு என்பதுகூட யாருக்கும் தெரியாது. ஏனென்றால் நகரங்களைப் போல கிராமங்களில் 1% அளவுக்குக்கூட முறையான கொரோனோ பரிசோதனைகள் செய்யப்படவில்லை. வீடுவீடாக வெறும் காய்ச்சல் பரிசோதனைகள் மட்டுமே பெயரளவிற்கு நடத்துகின்றனர்.

சமீபமாக தமிழக அரசு மேற்கொண்டுவரும் சுகாதாரக் மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நகரங்களை மட்டுமே மையப்படுத்தி நடந்து வருகின்றன. இது மட்டுமே மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இதில் கடுகளவுகூட இன்னமும் கிராமப்புறங்களை எட்டிப் பார்க்கவில்லை. ‘நீங்களே ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளுங்கள்’ என்று கிராமப்புற மக்களை அரசு கைகழுவி விட்டதாகவே நிலமைகள் தோன்றுகிறது!

வெறுப்புணர்வை விதைப்பதா விழிப்புணர்வு!    

ஒரு அபாயகரமான சூழலில், “மக்களே பயப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள் நானிருக்கிறேன். உங்களைக் காப்பாற்றுவது என் பொறுப்பு” என்று மக்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு அரசு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் ஊரடங்கும், கட்டுப்பாட்டு விதிமுறையும், போலீசு நடவடிக்கைகளும் மக்களை பீதியூட்டி வீட்டிற்குள் முடக்குவதாகவே உள்ளது.

மருத்துவ ரீதியாக இவையெல்லாம் அவசியம் என்றால், மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமை. விழிப்புணர்வு என்றால் மக்களை மிரட்டி, உருட்டி, அபராதம் விதித்து, உத்தரவுகளுக்கு அடிபணிய வைப்பதல்ல. மக்களை சுயவிருப்பத்துடன் செயல்பட தூண்டுவது, அரசின் செயல்திட்டங்களில் மக்களையும் இணைந்து செயல்பட ஊக்குவிப்பது என்ற வகையில் இருக்க வேண்டும். ஆனால்  ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் இதற்கு நேரெதிராக இருக்கிறது. இதனால் விளைவுகளும் எதிர்மறையாகவே இருக்கிறது.

 “வீட்டுல புழுக்கமா இருக்குதேனு தெருமுனையில போயி நின்னேன். உனக்கு இங்க என்னய்யா வேலை. வீட்டுக்கு ஒடுனு போலீசு விரட்டிட்டான்.  காற்றோட்டமான இடத்தில் கொரோனோ அதிகமா பரவாதுனு டிவி.யில சொல்றாங்க. அதை இவங்கிட்ட பேசமுடியுமா” என்று ஒரு பெரியவர் வருத்தப்பட்டார்.

மக்களின் எதார்த்தமான ஒரு பிரச்சனைக்கும், அரசின் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி இதுதான். ஒரு அரைமணிநேரம் அவரை உட்கார அனுமதித்தால் பெரிய விளைவு ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை.

தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் குறைவு. பல ஊர்களில் வசிக்கும் இவர்கள் ஒன்றுசேர்ந்துதான்  மாவட்டம் முழுக்க சென்று தேங்காய் வெட்டுகிறார்கள். ஊரடங்கை மீறியதாகக் கூறி இவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்கிறது போலீசு! எனவே இதற்குப் பயந்து கிரிமினல் குற்றவாளிகளைப் போல, அதிகாலையில் எழுந்து குறுக்குப்பாதைகளின் வழியாக பயணித்து வேலைசெய்து வருகிறார்கள். இதுபோன்ற அணுகுமுறைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்துவிட்டு அரசுடன் ஒத்துழையுங்கள் என்றால் எப்படி நடக்கும்?

‘அனைவருக்கும் தடுப்பூசித் திட்டம்’ சாத்தியமா?

நோய் அறிகுறிகளே இல்லாத ஒருவர் முன்னெச்சரிக்கையாக, குடும்பத்தோடு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அடுத்த இரண்டாவது நாளில் அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பதறிப்போன குடும்பத்தினர் கொரோனோ பரிசோதனை செய்கிறார்கள். 3-பேருக்கு பாசிட்டிவ். ஒருவருக்கு மட்டும் நெகட்டிவ்! முகாமில் 14 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

அறுவடையில் இருந்த பயிர்கள் முழுவதும் வீணாகிப் போனது. "தடுப்பூசி போட்டிருக்கா விட்டால் எனக்கு இவ்வளவு நட்டம் வந்திருக்காது. தேவையில்லாத வேலையை செஞ்சுட்டேன்!" என்று இப்போது புலம்புகிறார்! இனிமேல் இவர் யாரிடமும் தடுப்பூசி போடுங்கள் என்று நிச்சயம் கூறமாட்டார்.

“தடுப்பூசிகள் பாதுகாப்பானது. கொரோனோவை ஒழிக்க தடுப்பூசிதான் ஒரே ஆயுதம்” என்று மருத்துவ நிபுணர்கள் தொடங்கி பிரதமர் முதல் முதல்வர்வரை அனைவரும் உறுதிபட கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காப்பீடு வழங்க மறுக்கிறார்களே ஏன்? சுயவிருப்பத்தின் பேரில் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன் என்று ஏன் ஒவ்வொருவரிடமும் எழுதி வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆளில்லை! லட்சத்தில் ஒருவருக்குத்தான் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்றால், ‘அந்த நபர் நானாக இருந்து விட்டால்’ என்ற அச்சத்தை எழுப்புகிறவர்களுக்கு இந்த அரசிடம் என்ன பதில் இருக்கிறது?

“தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தொற்று வருகிறது!  நோய் அறிகுறியே இல்லாதவன் ஊசி போட்டபிறகு இறந்து போகிறான்! ஊசியே போடாதவர்கள் 15 நாளில் குணமாகிறார்கள்!” இப்படி தடுப்பூசி குறித்து கிராம மக்களிடம் பல சந்தேகங்களும், அவநம்பிக்கைகளும் நிலவிவருகிறது.

நடிகர் விவேக்கின் சாவுக்கு எவ்வளவுதான் சமாதானங்கள் கூறினாலும் தடுப்பூசிதான் காரணம் என்ற கருத்துதான் இன்றுவரை கிராமங்களில் செல்வாக்கு செலுத்துகிறது!

மக்களின் மேற்கண்ட சந்தேகம், அவநம்பிக்கைகளைக் களையாமல் அரசின் “அனைவருக்கும் தடுப்பூசித் திட்ட”த்தை அரசால் எப்படி நிறைவேற்ற முடியும்?

செய்யவேண்டியது என்ன?

வரப்போகும் 3-வது அலையில் 18 வயதிற்கு கீழுள்ளவர்களே அதிகம் பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இன்றுள்ள நிலையிலேயே 3-வது அலையை எதிர்கொண்டால் கிராமங்களில் கொத்துச் சாவுகளைத் தவிர்க்க முடியாது! ஊட்டச்சத்துக் குறைந்த கிராமப்புற மக்களை 3-வது அலையின் ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் குறைந்தபட்சமாக கீழ்கண்ட மருத்துவக் கட்டமைப்பை கிராமப்புறங்களில் உருவாக்குவது அவசியம்.

1) கிராமப்புறங்களில் கொரோனோ தொற்று குறித்து மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இதற்கு உள்ளூர் ஆசிரியர்கள், இளைஞர்களை ஈடுபடுத்துவது சாதகமான பயனளிக்கும்.

2) நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் இலக்கு நிர்ணயித்து முறையான கொரோனோ பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும். இதற்கென மாவட்டம்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துக் கண்காணிக்க வேண்டும்.

3) நோய் அறிகுறி கொண்டவர்களை நம்பிக்கையூட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதற்கட்ட சிகிச்சையளிப்பது அவசியம். இதற்கென ஒவ்வொரு கிராமத்திலும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களை அமைக்கலாம்.

4) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனோ சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ வசதிகளையும் செய்துகொடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளை தற்காலிகச் சிறப்பு முகாம்களாக மாற்றியமைக்க வேண்டும்!

5) கிராம அளவிலான இத்தகைய முயற்சிகள்தான் மாவட்ட மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவு குவிவதைத் தடுக்க முடியும். மருத்துவர்களின் பணிச்சுமையையும் குறைக்க முடியும்.

இறுதியாக, மோடியின் ஒன்றிய அரசை விமர்சித்த உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகளையே  தமிழ்நாடு அரசுக்கும் சொல்லி வைப்போம். “விழித்துக் கொள்ளுங்கள். தூங்காதீர்கள். சுற்றிலும் நடப்பவற்றை கவனமாகப் பாருங்கள்”!

- தேனி மாறன்

Pin It