mao 6731921 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. கம்யூனிஸ்ட் கொடியை ஏற்றி வைத்துவிட்டு மாசேதுங் உரையாற்றுகிறார்.

ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் இனியும் எங்களால் ஒத்துக்கொள்ள முடியாது. தலைவனுக்காக நாடல்ல நாட்டைக் காக்கவே தலைவன். அரச குடும்பத்தின் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு அடிமைகளாக இருக்க இனியும் எங்களால் முடியாது.

மக்களை மக்களே ஆளவேண்டும். மன்னனை கடவுளின் பிரதிநிதி என எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. கடவுளின் பெயரைச் சொல்லி எங்களை நான்காயிரம் ஆண்டுகளாக முட்டாளாக்கி வைத்திருந்தது போதும். அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் சாமரம் வீச இனியும் எங்களால் முடியாது.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. மன்னருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டம் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டிலுள்ள இருபது கோடி பேருக்கும் சேர்த்து தான் உரிமை கேட்கிறோம்.

சீன மக்கள் முதுகெலும்பு அற்றவர்கள் என மன்னன் நினைத்துவிடக் கூடாது. எதிரிகளின் நிலைப்பாட்டை அறிந்து தான் வியூகத்தை வகுத்து இருக்கிறோம். நாங்கள் கைகளில் எந்த ஆயுதம் ஏந்த வேண்டுமென்பதை எங்கள் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

மக்களின் விடுதலைக்காக இரத்தம் சிந்த  தயாராய் இருக்கிறோம். ஊரே பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல் ஆள்வோர்கள் இருக்கக் கூடாது. மக்கள் தலையெழுத்தை மக்களே தீர்மானிக்கும் சுதந்திரம் வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் என்றுமே ஊமைகளாக இருக்க மாட்டார்கள்.

மக்களின் கபாளத்தை மண்டையோட்டு மாலையாக அணிந்திருக்கும் நீங்கள் எங்களின் பிணங்களின் மேல் தான் கால் வைத்து நடந்து செல்கிறீர்கள் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். சீனாவின் சரித்திரத்தை மாற்ற எங்கள் செம்படை தயாராகவே இருக்கிறது.

நாளைய சீனாவின் வரலாறு செம்படைப் போராளிகளின் இரத்தத்தால் எழுதப்பட்டவையாகவே இருக்கும். உங்கள் பக்கம் கடவுளே வந்து நின்றாலும் எதிர்த்து நிற்க தயங்க மாட்டோம்.

இப்போது உயரே பறந்துகொண்டிருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மன்னராட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அறைகூவல் விடுக்கிறது.

சாவதற்கு அஞ்சாத செம்படையினர் மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிரையே கொடுப்பார்கள் என்று உரையை நிகழ்த்திவிட்டு கீழே இறங்கினார் மாவோ.

அவரிடம் செம்படைத் தளபதிகள் சீன அரசின் தலைவரான சியாங்கேஷேக் உளவுத்துறையின் மூலம் நமது நடவடிக்கைகளை கண்காணிக்கிறார் என்று சொன்னார்கள். பதவியை காப்பாற்றிக் கொள்ள சில சமயம் நாய் கூட நரியாக மாறிவிடும் என்றார் மாவோ அவர்களிடம்.

அதிகாரம் அரசாங்கம் கையில் இருப்பதால் தானே நம்மை பந்தாடுகின்றனர் என்றனர் அவர் குழுவில் இருந்தவர்கள். அதற்கு மாவோ மக்கள் ஏற்றுக் கொண்டால் தானே சட்டம் அமலாகும் இனிமேல் பாருங்கள் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக அவர்களிடம் பேசினார்.

இதன் மூலம் மாவோ ஒன்றை உணர்ந்து கொண்டார் மரத்தின் இலைகளிடமும், கிளைகளிடமும் பேசி பயனில்லை வேர்களிடம் பேச வேண்டும் புரட்சித்தீயானது அப்போதுதான் அணையாமல் இருக்கும் என்று எண்ணினார்.

1934ஆம் வருடம் சுதந்திரத்துக்காக உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த சுமார் ஒரு லட்சம் போராளிகள் மாசேதுங்க முன்பு திரண்டிருந்தனர். அவர்களிடையே உரையாற்றும் போது வீரர்களே மரணம் ஒரு முறைதான் அதனால் நாட்டுக்காக நாம் இன்னுயிரை இழந்து நாளைய சுதந்திர வரலாற்றில் இடம்பெறுவோம்.

புரட்சித்தீ கொழுந்துவிட்டு எரிவதற்கு உடலையே தீப்பந்தமாக்குவோம். இந்த மண்ணில் சுதந்திர செடி வானை நோக்கி வளர நாம் எருவாவோம். பலகோடி சிற்றலைகள் ஒன்று சேர்ந்து உருவாவதுதான் ஒரு பேரலை என பேரரசுக்கு நாம் புரிய வைப்போம்.

ஏழைகளின் இன்னல்களை கேட்க முடியாத செவிட்டு அரசாங்கம் எங்களுக்குத் தேவையில்லை. மேலே உள்ளது எல்லோருக்குமான சூரியன் எல்லோருக்குமான வானம். சன்யாட்சன்க்கு பின் அமைந்த சியான்கேஷேக் அரசாங்கம் முதலில் குதிரை குட்டிபோல் தான் இருந்தது பின்பு நாட்கள் செல்லச் செல்ல கழுதை எனத் தெரிந்தது.

குரங்குகள் துரத்துகிறதே என பயந்து ஓடிக்கொண்டிருக்கக் கூடாது எதிர்த்து நில்லுங்கள் அவை பின்வாங்கிவிடும். தட்டிப் பார்ப்போம் திறக்கவில்லையென்றால் உடைத்து நொறுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மண்புழு தான் நசுக்கி விடலாம் என்று கேவலமாக நினைக்காதீர்கள் மண்ணைப் பொன்னாக்குவதே அந்த மண்புழு தான் என்பதை மறக்காதீர்கள். அது ஜீவித்திருக்கவில்லை என்றால் ஒரு கவளம் உணவு கூட உங்களுக்குக் கிடைக்காது.

இந்த சியாங்ஸி மாகாணத்திலிருந்து நாம் ஸ்ஜேசுவான் பிரதேசத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். கிட்ட தட்ட ஒருலட்சம் நபர்கள், கம்யூனிஸ்ட் கொள்கையை பரப்புவதற்கும் நாட்டின் தற்போதைய நிலையை கடைக்கோடி மக்களுக்கும் புரிய வைப்பதுதான் இந்த நடை பயணத்தின் நோக்கம்.

விதைகளைத் தூவுவது நம் வேலை அதை விருட்சமாக்குவது காலத்தின் கையில் இருக்கிறது. விதியே என்காதீர்கள் வீதியில் போராட இறங்குங்கள் மாற்றம் வரும். பற்றி எரியும் சுதந்திரத் தீ கோட்டையின் கதவுகளையே அசைத்துப் பார்க்கும்.

மலைத்தொடர்களையும், ஆறுகளையும், மாநகரங்களையும் கடந்து ஸ்ஜேசுவான் பிரதேசத்தை அடைந்தனர் போராளிக் குழுவினர். கிட்டதட்ட 368 நாட்கள் மூவாயிரம் கிலோமீட்டர் பயணம். புறப்பட்ட ஒருலட்சம் போராளிகளில் நடை பயணத்தை முடிக்கும் போது வெறும் நாற்பத்து ஐந்தாயிரம் பேர்களே மிஞ்சி இருந்தனர்.

சியாங்கேஷேக்ன் அரசாங்கன் ஆட்டம் கண்டது. உலக அரசியல் அரங்கில் காணப்பட்ட மிக நெருக்கடியான சூழ்நிலையில் சீனாவின் எதிரி நாடான ஜப்பானை வீழ்த்த சீனமக்கள் மாவோ தலைமையில் ஓரணியில் திரண்டனர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததற்கு மாவோவின் அரசியல் சாணக்கியத்தனமும் ஒரு காரணம். சீனாவின் கடவுளானார் மாவோ. நாடு தங்கள் தலைவனைக் கொண்டாடியது.

விடுதலைப் போரினை தலைமை ஏற்றவருக்கே நாட்டின் தலைமைப் பொறுப்பும் கிடைத்தது. இன்றும் கம்யூனிஸத்தின் பாசறையாக சீனா விளங்குகிறதென்றால் அதற்கு மாசேதுங் தான் முக்கிய காரணம்.

உலக வரலாற்றை நீங்கள் படித்தால் உலகின் இரு வல்லவர்களில் ஒருவராக அதிக விலை கொடுத்தது சீன தேசம் தான் என தெரிய வரும். உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தால் போதும் நாட்டை வல்லரசாக்கி விடலாம் என்பதற்கு சீனாவே முன்னுதாரணம். இப்படி 1949ஆம் ஆண்டு அக்டோபர் 1ல் உதயமானது தான் மாவோவின் மக்கள் சீனக் குடியரசு.

- ப.மதியழகன்

Pin It