so dharman writerஇலக்கியவாதிகள் என சொல்லிக் கொண்டு, தற்கால மக்களிடமும் அறிவியலிடமிருந்தும் இருந்து அந்நியப்பட்டு, "இயற்கை, பாரம்பரியம், குலதெய்வம்" என்று பிணாத்துவதில் சோ. தர்மன் விதிவிலக்கல்ல.

30000 சொச்சம் ஊருணிகள் காணாமல் போய்விட்டதை திமுகவின் கணக்கில் சேர்க்கும் சோ. தர்மன் தனக்கு 25000 ரூபாயும் குத்துவிளக்கும் தந்தார்கள் என்பதற்காக அதிமுகவிற்கும் ஊருணிகள் காணாமல் போனதற்கும் தொடர்பில்லை என்று சொல்லுகிறார் எனச் சொல்ல தயக்கம் இருந்தாலும் சோ. தர்மனுக்கு இருக்கும் திமுக, திராவிட இயக்க வெறுப்பு வெளிப்படை.

தி.மு.க திராவிட இயக்க வெறுப்புள்ளவர்கள் அனைவரும் ஒன்றுபடும் புள்ளியாக "தடுப்பூசி எதிர்ப்பு, குலதெய்வ மரபை விதந்தோதுதல், அறிவியல் எதிர்ப்பு, மூடநம்பிக்கை" என பல புள்ளிகளில் ஒன்றுபடுவது யதேச்சையானதல்ல. திட்டமிடப்பட்ட கருத்துறுவாக்கம்.

YouTube, Facebook என்ற நவீன அறிவியலை அடிப்படையாக சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சோ. தர்மனுக்கு கவிஞர் கனிமொழியின் ராஜ்யசபா உரைகளை கண்டுபிடிக்க முடியாததின் காரணம் "அவருக்கு தொழில் நுட்ப பரிச்சயம் இல்லை" என்பதல்ல. அவருக்கு இருக்கும் திமுக வெறுப்பு தான் அடிப்படை காரணம். கனிமொழி என தமிழிலோ அல்லது Kanimozhi என ஆங்கிலத்திலோ YouTube இல் தேடினால் தோழர் கனிமொழியின் மாநிலங்கவை பேச்சுக்கள் கொட்டிக்கிடப்பதை காணலாம்.

சோ.தர்மனின் அன்புக்குரிய மார்க். கம்யூனிஸ்ட் டி.கே.ரங்கராஜன் 10 சதவித உயர்சாதி இட ஒதுக்கீடு ஆதரவு பேச்சைக் கேட்டு "என்னங்க இப்படி அநியாயம் பண்ணுறிங்க" குமுறிய தோழர் கனிமொழியின் பேச்சு YouTube ல் மிகப்பிரபலமானது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை, சோ. தர்மனின் ஊரான கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் அதிகம் காணப்படும் குழந்தைத் தொழிலாளர் சுரண்டல் பிரச்சினைகள், அவர்களது கல்வி குறித்து, பெண் கல்வி, இட ஒதுக்கீடு என கவிஞர் கனிமொழியின் ராஜ்யசபா பேச்சுக்கள் மிகப் பிரபலம்.

கண்ணை மூடிக்க கொண்டு   உலகம் இருட்டு என சொல்லுமளவுக்கு சோ. தர்மன் முட்டாளல்ல. வெண்தாடி வேந்தர் மோடி என்று சொல்லுமளவுக்கு காரியக்கார எழுத்தாளர்.

சாகித்ய அகாடமி, மோடி, ஜோடி குருஸ், சோ. தர்மன் என இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இலவசம், லஞ்சம், ஊழல் பற்றிய நடுத்தர வர்க்கத்திற்கு இருக்குக்கூடிய அதே மேம்போக்கான பார்வை சோ. தர்மனுக்கு இருப்பது ஆச்சர்யமல்ல. ஆனால் இவர் ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிக்கிறார் என்பது ஆச்சர்யம். அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு லஞ்சம், ஊழல், இலவசம் பற்றி சரியான பார்வை இருக்கிறதா எனக் கேட்டுவிடாதீர்கள்.

அனைத்தும் தெரிந்த எழுத்தாளர் ஊழல், இலவசம் (உண்மையில் அது இலவசமல்ல) பற்றி மார்க்சிய பார்வையை படித்திருப்பார் என எதிர்ப்பார்த்து என் தவறு.

கட்சி சார்பற்ற கல்வியாளர்களுக்கும் புலமையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாம் ராஜ்யசபா. அதில் அறிஞர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் இடமில்லை என வருத்தப்படுகிறார்.

யார் அறிவுஜீவு? "வெறும் பழங்களை மட்டுமே  நாட்கள் சாப்பிட்டால் இரண்டாவது நாளே மலம் மணக்கும்" என கண்டறிந்தவரே அறிவுஜீவி. அதையும் போய் முகர்ந்து பார்த்தவர்கள் மட்டுமே அறிவுஜீவியாக இருக்க முடியும்.

அமைச்சர்களாக அறிவுஜீவிகள் இல்லாதது கண்டு கவலைப் படும் இவர் அறிவுஜீவிகளுக்கு அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் இருப்பதே தகுதி என நினைப்பார் போலும்.

திமுகவை ஆதரிக்க மனமில்லாதவர்களுக்கு திமுகவில் யாருக்கு அமைச்சர் பதவி, எம்பி, எம்எல்ஏ பதவி கொடுக்கிறார்கள் என்ற கவலையின் பிண்ணனியில் இருப்பது தன்னைப்போன்ற அறிவுஜீவிகளுக்கு தரவில்லையை என்ற வயிற்றெரிச்சல் மட்டுமே.

இது வரை ஊசியே போட்டதில்லை என பச்சை இலக்கியப் பொய் கூறுகிறார். இலக்கியம் என்ற பெயரில் கண்டதை எழுதுபவர்கள் பொய் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஜெயமோகன், சோ. தர்மன் ஆகியோர் சாட்சி.

கோவில்பட்டி பகுதி எழுத்தாளரான கி.ரா விடம் கரிசல் இலக்கியத்தை கற்றதாகச் சொல்லும் சோ. தர்மன், கி்.ராவிடம் இருந்து நவீன மருத்துவம் குறித்த அறிவியல் பார்வையையும், திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் கற்றிருக்கலாம். மேல் சாதிக்காரரான கீ.ராவுக்கு திராவிட இயக்கம், திமுக வின் பங்களிப்பு குறித்து இருந்த புரிதலில் கால் பங்களவு கூட தலித் சாதியில் பிறந்த சோ. தர்மனுக்கு இல்லை.

அவரது கதைகளில் சில பக்கங்கள் தான் படித்திருக்கிறேன். ஆனால், அவருக்கு சாதி, இந்து மதம் குறித்த கறாரான பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.  அவருக்கு இருப்பதெல்லாம் நடுத்தர வர்க்கப் பார்வை மட்டுமே.

மருத்துவமனைகள் எங்கும் மக்கள் நிறைந்து கிடக்கின்ற கொரானா பேரழிவு காலத்தில் "இது  வரை எந்த ஊசியும் போட்டதில்லை, எந்த மாத்திரையும் போட்டதில்லை" என சொல்லுபவர் முட்டாள் மட்டுமல்ல. சமூக விரோதிகள் கூட.

எவரையும் தொந்தரவு படுத்தாத எழுத்தை நான் ஏன் எழுத வேண்டும் என்ற எழுத்தாளர் அருந்ததிராயின் மேற்கோளை பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.

எண்ணற்ற மக்களை சாவில் இருந்து காத்த நவீன அறிவியல் மருத்துவத்தை எள்ளி நகையாடும்  உங்கள் எழுத்து, மற்றவர்களுக்கு தொந்தரவு மட்டுமல்ல சாவுமணி. மலத்தில் மணம் வீசுவதை கண்டிபிடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It