எல்லா குற்றங்களுக்கும் சமூக அரசியல் பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. அதில் ஏற்படும் அசமத்துவமான போக்கு மனிதனின் மன சமநிலையை சீர்குலைத்து அவர்களை வன்முறையாளர்களாகவும், ரவுடிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாற்றுகின்றது.

இந்த உலகம் எப்போது எல்லா வகையான அசமத்துவத்திற்கும் சாவு மணி அடித்து சமத்துவத்தின் வாயிலில் நுழைகின்றதோ, அதுவரை நம்மால் குற்றங்களையோ அது எற்படுத்தும் சமூக தாக்கங்களையோ தடுக்கவே முடியாது.

அதுவரை நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் கூடுமானவரை நீதியை அசமத்துவத்திற்கு பெருமளவில் இலக்காகும் எளிய மனிதர்களுக்கு கிடைக்கும் படி செய்வதும், அதற்காகப் போராடுவதும்தான்.

அரசியல், அதிகார, பண பலம் படைத்தவர்கள் எவ்வளவு மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், அவர்களால் மிக எளிதாக இந்த நீதி அமைப்பில் தனக்கு சாதகமான நீதியைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.muslim prisonerஆனால் வயிற்றுப் பாட்டுக்காக சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறைகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிறைக்கொட்டடிக்குள்ளாகவே தங்களின் மூச்சுக்காற்றை விட்டு விடுகின்றார்கள்.

முதலாளித்துவ சமூக அமைப்பில் நீதி என்பது எப்போதும் எளிய மனிதர்களிடம் இரக்கமற்றும், ஆதிக்க சக்திகளிடம் கரிசனையாகவும் நடந்து கொள்கின்றது. இந்தியா போன்ற நாடுகளில் அது அப்பட்டமாகவே சாதியிலும், மதத்திலும் தன் கோரமுகத்தை வெளிக்காட்டிக் கொள்கின்றது.

அசீமானந்தாக்களுக்கும், பிரக்யா சிங் தாகூருக்கும் கிடைக்கும் சலுகை ஒரு போதும் அப்சல் குருக்களும், யாகூப் மேனன்களும் கிடைப்பதில்லை.

இந்து சமூகத்தின் பொது மனசாட்சியை திருப்திபடுத்த அந்த இந்து சமூக உளவியலை கட்டமைக்கும் சக்திகளின் மகிழ்ச்சிக்காக இங்கே சிறுபான்மையின மக்களும் தலித்துகளும் தூக்கில் ஏற்றப்படுகின்றார்கள்.

இந்திய ஜனநாயகத்தில் நீதி கேட்டுச் செல்லும் நெடும்பயணத்தில் அவர்கள் பெரும்பாலும் பிணமாகவே நீதி அமைப்புகளால் திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

அவர்களின் கண்ணீர்க் கதைகள் ஒருவழியாக வெளி உலகில் யாருக்கும் தெரியாமல், யாரின் மனசாட்சியையும் துக்கப்படுத்தாமல் மெளனமாக அரசாலும் ஊடகத்தாலும் புதைக்கப்படுகின்றன.

ஏன் இந்த பாரபட்சம் என்று கேள்வி கேட்கக்கூட ஆளாற்ற அனாதைக் கூட்டமாய் சிறைக் கொட்டடிகளில் சித்தரவதை அனுபவித்தே சிறுபான்மையின மக்கள் கூட்டம் சாகின்றது.

எங்களுக்கு ஓட்டு போட்டால் உங்கள் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றுவேன் என்று உறுதிமொழி கொடுத்தவர்களும், ஆட்சிப் பொறுபேற்றவுடன் முகத்தை திருப்பிக் கொண்டும், எங்கே கேட்டு விடுவார்களோ எனப் பயந்து முக்காடு போட்டுக் கொண்டும் ஓடுகின்றார்கள்.

களைத்த கால்களோடு சோர்ந்த முகத்தோடு அப்பாவுக்காவும், மகனுக்காகவும், கணவனுக்காகவும் அவர்கள் இன்னும் சிறைவாசலில் எத்தனை ஆண்டுகள்தான் காத்துக் கிடக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் 38 இசுலாமிய சிறைவாசிகள், 27 முதல் 28 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட, இசுலாமிய சிறைவாசிகளுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் முன் விடுதலைத் திட்டத்தின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்ப வைக்கப்பட்டு அவர்களின் 90 சதவீத ஓட்டுக்களை திமுக வாங்கியது.

ஆனால் அண்ணாவின் 113வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதில் இஸ்லாமிய கைதிகளின் விடுதலையைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை.

பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை என திமுக அரசு அரசாணை வெளியிட்டது.

இதனால் இஸ்லாமிய மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டது. எனவே அவர்களை சமாதனப்படுத்தும் நோக்கில் நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின உத்தரவிட்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த குழு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்று யாருக்குமே தெரியவில்லை

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வைக்கும் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காமலேயே இருந்து வருகின்றது.

இருபது ஆண்டுகள் சிறைவாசம் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு முன் விடுதலைத் திட்டத்தை 1994இல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்களைச் செய்தவர்களாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் முன் விடுதலை செய்ய முடியும்.

முக்கியமாக, ஒரு மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு என்ற பல நிகழ்வுகளில் பத்து ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழ்நாட்டின் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டம் 432 அடிப்படையில் தண்டனையைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்பிரிவு 161ன் அடிப்படையில் முன் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், மாநில அரசுகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு உரிமை உண்டு.

நிலைமை இவ்வாறு மாநில அரசுக்கு இவ்வளவு சாதகமாக இருக்கும் போதும் திமுக அரசை தடுப்பது எது என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை சம்மந்தப்பட்டவர்களின் மதம்தான் அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ?

நாம் சந்தேகப்படுவதற்கான முகாந்திரம் இல்லாமல் இல்லை. தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கு மற்றும் மதுரையில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 8 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த நிலையில் முன்விடுதலை செய்யப்பட தகுதி வாய்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தஞ்சை கீழவெண்மணி வழக்கில் சேர்க்கப்பட்ட பத்து பேரும், பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

கொடிய குற்றங்கள் புரிந்த அவர்களை விடுதலை செய்யும் போது இவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் இருந்து நாம் நீதி கேட்கவில்லை. முன்விடுதலைத் திட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்து செயல்படுத்தும் போது அதில் மத ரீதியான பாகுபாட்டை காட்டாதீர்கள் என்றுதான் கேட்கின்றோம்.

இந்தியா முழுவதும் நீதி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரிய பாகுபாடு காட்டப்படுவதால்தான் இந்தக் கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கின்றது.

இந்திய மக்கள் தொகையில் 14.2 சதவிகிதம் முஸ்லிம்கள் இருந்தாலும் சிறையில் உள்ள கைதிகளில் 16.6 சதவீதம் முஸ்லிம்களே ஆவார்கள். அதில் 18.8 சதவீத கைதிகள் விசாரணைக் கைதிகள் ஆவார்கள். மேலும் தடுப்பு காவலில் உள்ள கைதிகளில் 35.5 சதவீதக் கைதிகள் இஸ்லாத்தை கடைபிடிப்பவர்களாக உள்ளார்கள் என 2019 ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகின்றது.

நிலைமை இப்படி இஸ்லாமிய மக்களும் எதிராக இருக்கும் போது நாம் நிச்சயம் அவர்களின் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுத்தாக வேண்டும்.

நம்மிடம் இருக்க வேண்டிய நீதி சார்ந்த ஒரு தெளிவான பார்வை, நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் இல்லை என்பதுதான். இந்திய நீதி அமைப்புகள் அதிபயங்கரமான சாதிய மதவாத சக்திகளின் கட்டுப்பாட்டில்தான் எப்போதும் இருப்பதால் அது கொடுக்கும் தண்டனைகளுக்கு நாம் புனிதத் தன்மையோடு ஆரத்தி எடுக்கத் தேவையில்லை.

2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 9 முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தங்களுக்கான நீதியைப் பெறுவதற்கு முன் ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நீதியை ஒவ்வொரு மனிதனின் சாதி, மத, வர்க்க அடிப்படையில் நாம் வழங்க ஆரம்பித்தால் நம் கையில் இருப்பது மனிதகுல விடுதலைக்கான நீதியாக இருக்காது. அது ஆண்டாண்டு காலமாக மக்களை ஏய்த்துப் பிழைக்கும் சாதிய, மதவாத, வர்க்கச் சுரண்டல் பேர்வழிகளின் ஆயுதமாகவே இருக்கும்.

திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சிறையில் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்டு எஞ்சிய வாழ்க்கையாவது தங்கள் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் வாழ வேண்டும் என ஏங்கிக் கொண்டிருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It