kovai gani‘கோவை ஞானி’ என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற அய்யா கி.பழனிச்சாமி இன்று நம்மிடம் இல்லை. அவர், நம்மீது செலுத்திய அன்பால் அக்கறையால் நம்மனத்துள் வாழ்கிறார்.

இது போன்று தமிழ் மண்மீதும் தமிழ் மக்கள்மீதும் அவர் கொண்டிருந்த பேர் அக்கறையால் தொடர்ந்து இம்மண்ணில் வாழ்வார். தமிழ் மண் தமிழ் மக்கள் என்ற இச் சொல்லாடல்களின் எல்லையை உலகம் மானுடம் என மாற்றி அமைத்துக்கொள்ள நமக்கு ஞானியின் கருத்தியல் இடமளிக்கின்றது. இக்கருத்தியலை அவர்தம் ஒட்டுமொத்த எழுத்துக்களிலிருந்து நாம் வருவித்துக் கொள்ளலாம்.

குறிப்பாக ‘மார்க்சிய அழகியல்’ என்ற குறுநூல் மானுடச் சமதர்மத்தை அடைவதற்கான செயல் திட்டங்களைப் பதிவிட்டுள்ளதாகக் கருதலாம். பொதுவாக, மார்க்சியம் கம்னியூசம் பெரியாரியம் என்ற அடிப்படைகளில் அமைகின்ற எழுத்துக்களில் எல்லாம் ‘கருத்துக்கள்’ ஆதிக்கம் செலுத்தும்.

அதாவது, எந்த ஒரு விடுதலை பற்றிப் பேசும் எழுத்துகளும், கருத்துக்களை விதிமுறைகளாக சூத்திரங்களாக வடிவமைத்துக் கொள்வது இயல்பு. ஞானியின் எழுத்துக்களிலும் இந்த வடிவாக்கத்தைக் காணலாம். எனினும், ஞானி இந்த வடிவாக்கத்தைக், கலையழகு கலையுணர்வு பேரழகு படைப்பியக்கம் எனும் மற்றோர் இணைக்கருத்தியலுடன் வலியுறுத்துகின்றார். இதுதான் ஞானியின் மெய்யியல் அல்லது சிறப்பு.

ஆதிக்கம் அதிகாரம் ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் போன்ற சொல்லாடல்களின் வழி மனிதச் சமதர்மத்திற்கு எதிரான போக்குகளை அடையாளப்படுத்துவது ஞானியின் இயல்பு. இந்தச் சமதர்ம எதிர்நிலைகளுக்கு எதிராக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதனை ஞானி அழுத்தமாக எடுத்துரைக்கின்றார்.

இந்த எதிர்வினை சமூகத்தில் களப்போராட்டமாக அமைவதும் உண்டு. களப்போராட்டங்களுக்கு அடிப்படையாக அமையும் கருத்துக்களை உருவாக்கிச் சமூகத்தில் பதிவிட்டுச் சிந்திக்கச் செய்தலாகவும் அமைதல் உண்டு. இவற்றில், ஞானி கருத்துருவாக்கச் செயல்பாட்டாளராகத் தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டார்.

நூல்களைத் தேடி வாசித்தல், வாசித்தவற்றை நண்பர்களுடன் விவாதித்தல், வாழ்வியல் சூழல்களில் நிலவும் பிரச்சினைகளுக்கான வழிமுறைகளை உருவாக்குதல் என்று ஞானியின் வாழ்வியல் பயணம் அமைந்தது. கோவையில் அவர் நிகழ்த்திய விவாத வட்டங்களும் கருத்தரங்குகளும் வெவ்வேறு பெயர்களில் அவர் வெளியிட்டு வந்த இதழ்களும் சளைக்காது அவர் அளித்துவந்த பேட்டிகளும் எழுதிய கட்டுரைகளும் நண்பர்களுடனான தொலைபேசி உரையாடல்களும் அவருக்கான களமாக அமைந்தன.

இதனை ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சிச்சார்புடனும் செய்துள்ளார்; கட்சியிலிருந்து விலகி நின்றும் செய்துள்ளார்; தம் சம வயதொத்த நண்பர்களின் கூட்டுழைப்போடும் செய்துள்ளார்; தனித்து நின்றும் செய்துள்ளார்.

இந்த அறிவு சேகரிப்புக்கும் பகிர்வுக்கும் அவர்தம் கண்பார்வை என்றும் தடைக்கல்லாக இருந்ததில்லை. சத்தான கலையுணர்வை, ஆதிக்கமற்ற சமதர்மச் சமூகத்தை மனிதன் அடைவதற்கான வழிமுறையாக ஞானி கருதுகின்றார். புற உலகம் மனிதனின் மனத்தைப் பாதிக்கின்றது. அந்த மனம் தூண்டப்பட்ட நிலையில் புறத்தின்மீது எதிர்வினையாற்றுகின்றது.

இந்த எதிர்வினை, கலாச்சாரம் இலக்கியம் தத்துவம் எனப் பல்வேறு வடிவங்களாக வெளிப்படுகின்றது. ஏற்கெனவே உருவாக்கப் பெற்றுவிட்ட கலாச்சாரத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் தத்துவத்தின் மீதும் எதிர்வினையாற்றுகின்றது. இதுபோன்ற எதிர்வினையாற்றுதலை மார்க்சிய எழுத்துக்கள் பதிவிட்டுள்ளன.

இந்தப் பதிவினை ஞானி விரிவாக்கம் செய்கின்றார். ஞானியின் விரிவாக்கத்தில் மையம் கொண்டுள்ள முக்கியக்கூறு மாற்றுக் கருத்தினரை ஒதுக்க வேண்டியது இல்லை; எதனையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகி அங்கு இருக்கின்ற சமதர்மத்துக்குச் சாதகமானவற்றைத் தொகுத்துக்கொள்ள இயலும் என்பது ஞானியின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

இந்த அடிப்படையில்தான் திராவிட இயக்கத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடக்ககால மார்க்சியர்கள் விமர்சனம் செய்ததைத் தவறு என்று குறிப்பிடுகின்றார். மார்க்சிய எழுத்தாளர்கள் என்று ஒருவகை உண்டு. மார்க்சியக் கண்ணோட்டம் உடையவர்கள் என்று ஒருவகை உண்டு.

இந்த இரண்டுவகைப் படைப்பாளர்களுக்கும் அப்பாற்பட்ட படைப்பாளர்களிடமிருந்தும் சமதர்மத்தை அடைவதற்கான கூறுகளைச் சேகரித்துக்கொள்ள இயலும் என்கிறார். கநாசு, சுந்தரராமசாமி, வெங்கட்சாமிநாதன், பிரமிள், ஜெயகாந்தன்,ஜெயமோகன், தி.ஜானகிராமன், மௌனி, கு.ப.ரா என்று பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களையெல்லாம் மார்க்சிய எதிரிகள் பட்டியலில் சேர்க்க முடியாது என்கிறார்(மார்க்சிய அழகியல், ப.163). சுந்தரராமசாமி,ஜெயமோகன் முதலானவர்களின் படைப்புகளில் காணலாகும் வாழ்வியல் நெருக்கடிகளை எடுத்துவிளக்கவும் செய்கின்றார்.

கேசவன், கைலாசபதி,வானமாமலை, பா.செயப்பிரகாசம் முதலானவர்கள் தன்னுடைய கருத்துக்களைத் தவறாகப் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றியவர்கள் என்று குறிப்பிடும் ஞானி, அவர்களின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.

ரகுநாதனின் பாரதி தொடர்பான புரிதலை ஏற்கின்றார்.அதே நேரம் இளங்கோவடிகள் தொடர்பான ஆய்வில் மன நிறைவு இல்லை என்கிறார். திருவள்ளுவரையும், இளங்கோவடிகளையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் விமர்சனம் செய்யும் மார்க்சியர்களை ஞானி கண்டிக்கின்றார்.

எல்லா வகையான வாழ்வியல் நெருக்கடிகளையும் வர்க்கம் பொருள்முதல்வாதம் அடிக்கட்டுமானம் மேல்கட்டுமானம் என்ற அடிப்படைகளில் புர்ந்து கொள்ள இயலாது என்கிறார். அதாவது, எந்த ஒரு பிரச்சினைக்குமான காரணத்தை வரலாற்றில் தேடுதல் வரலாற்றுச்சூழலில் வைத்துப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்கிறார்.

இந்தப் பார்வையின் அடிப்படையில்தான் மாற்றுக் கருத்துடையவர்களிடம் இருந்தும் நமக்குத்தேவையான ஆக்கக் கூறுகளைச் சேகரிக்க இயலும் என்கிறார். இங்குதான் ஞானியின் மெய்யியல் திருவள்ளுவரின் ஒப்புரவு எனும் கருத்தாக்கத்தில் கட்டமைக்கப் பெற்றுள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

கருத்தை எதிர்ப்பது வேறு; கருத்துக்குரியவரை வெறுப்பது வேறு. எதிர்ப்பு ஆக்கப்பூர்வமான விளைச்சலுக்கு வழிவகுக்க வேண்டுமே தவிர, வெறுப்பை உருவாக்கிச் சமூகத்தில் அமைதியற்ற சூழல் நிலவிட நாம் துணைபோகக் கூடாது என்பதே ஞானியின் மெய்யியல் எனலாம்.

இதனை, எங்கும் எந்தச் சூழலுக்கும் ஏற்ற ஒன்றாக நம்மால் அடையாளப் படுத்திக்கொள்ளவும் இயலும். ஞானி தம் கருத்துக்களைக், கருத்துக்களாகப் பதிவிடுவதற்கு அப்பால் செயலாக்கத்திற்கான வழிமுறைகளை வகுத்தளிக்கவும் செய்கின்றார்.

தமிழகத்தில் எங்கெல்லாம் சாதி மதம் முதலான கலவரங்கள் நிகழ்கின்றனவோ அந்தப் பகுதிகளை மையமிட்டுப் படைப்பாளர் முகாம்கள் நிகழ்த்த வேண்டும் என்கிறார். இந்த முகாம்களில் இளம் படைப்பாளிகளுக்குப் பயிற்சி அளிக்கலாம் என்கிறார்.

இதற்கு ஜீவாவின் பசுமை இயக்கம் சார்ந்த பணிமனைகளைக் கவனத்தில் கொள்ளலாம் என்கிறார். இந்த முகாம்களில் இளைஞர்களைத் திரட்டி அமர வைத்துப் பயிற்சி எனும் போர்வையில் ஆசிரிய அதிகாரம் உருவாவதை ஞானி விரும்பவில்லை. இதற்கு மாறாக ஞானி முன்வைத்துள்ள திட்டம் கவனத்திற்குரியதாக உள்ளது.

குறிப்பிட்ட சிறு நகரங்களைத் தெரிவு செய்தல், அந்த நகரங்களை ஒட்டிய சிற்றூர்களுக்குப் படைப்பார்வம் உள்ள இளைஞர்களை அனுப்பித் தங்கச் செய்தல், அங்குள்ள உழவர்கள் நெசவாளர்கள் முதலானவர்களின் வாழ்வியல் முறைகளை பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளச் செய்தல், மீண்டும் முகாமிற்குத் திரும்பி விவாதித்தல், படைப்புகளை உருவாக்குதல் என்ற செயல் திட்டத்தை ஞானி வடிவமைக்கின்றார்.

இந்த முகாம்களில் மூத்த படைப்பாளர்கள் பங்கேற்று ஆரோக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். ஞானியின் இந்தச் செயல்திட்டம் மேலோட்டமான பார்வையில் இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்று தோன்றும். ஆனால், ஞானியின் இச்செயல் திட்டத்தை அவர்தம் ஒட்டுமொத்தமான எழுத்து நீரோட்டத்தில் வைத்துப் பார்த்தால் அவர் கட்டமைக்க விரும்பும் மெய்யியலுக்கான அடிப்படை என்பது தெரிய வரும்; படைப்பியக்கம் வளம்பெற வேண்டும் அந்த வளத்திற்குத் திறனாய்வு துணை நிற்க வேண்டும்.

இந்தப் படைப்பியக்கத்தால் கருத்துக்கள் விதைகளாக்கப் பெற்றுச் சிந்தனை மாற்றம் உருவாகும். சிந்தனை மாற்றத்தால் எதிர்வினையாற்றுதல் இயல்பாகும். இந்தத் தொடர்ச்சியான நிகழ்வு அதிர்வலைகளை உள்ளடக்கியதாக ஞானியின் மெய்யியல் பார்வை உள்ளது என்பது தெரிய வரும். ஞானியின் இப்பார்வை, நீண்ட கால எல்லையை உட்செறித்தது; சமூகப் பிரச்சினைகள் பலவற்றுக்கு உடனடித் தீர்வு சாத்தியமற்றது என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.

ஞானி குறிப்பிடுவதுபோல நாம் நமக்கான உணவு, உடை, வீடு, இல்லறவாழ்க்கை முதலானவற்றை இந்தச் சமூகத்தில் உள்ள ஆதிக்கச் சக்திகளின் வழியாகத்தான் பெரிதும் பெறுகின்றோம். இந்த ஆதிக்கச் சக்திகளிடம் இழையோடும் சம தர்மமற்ற நிலையை எதிர்த்துப் போராடுகையில் நாம் அவர்களோடே பயணிக்கின்றோம்; அவர்களின் துணையின்றிப் பயணிக்க முடியாத அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இச் சூழலைப் புரிந்து கொண்டால் ஞானியின் கலைப்படைப்பு வழியிலான சமதர்ம மெய்யியலின் தேவையைப் புரிந்துகொள்ள இயலும்.

துணையன்

ஞானி, 2019, மார்க்சிய அழகியல், FREETAMILEBOOKS.COM, கணியம் அறக்கட்டளை.

- இரா.அறவேந்தன்

Pin It