Online classஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. கல்வி கற்கும் முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

கற்றல், கற்பித்தல் எனும் நேரடி வகுப்பறை நிகழ்வில் ஆசிரியரும் மாணவரும் இணைந்து செயல்படுவர். இந்நிலை இன்றைய சூழலில் இணைய வழியில் கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தகவல் தொழில்நுட்பப் பெரு வளர்ச்சியால் உலகமே ஒரு சிறிய கைப்பேசிக்குள் அடங்கிவிட்டது எனலாம்.

கொரோனா தீநுண்மி உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொதுமுடக்கத்தால் முடங்கிப்போயின.

மக்கள் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்காலக் கல்வியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி இன்றைய சூழலில் பெரிதும் தேவையாகிறது.

அறிதிறன்பேசி (Smart Phone), மடிக்கணினி (Laptop), கணினி (Computer) முதலான தொழில்நுட்பக் கருவிகள் இன்றைய காலத்தில் கல்வி கற்கத் துணைசெய்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல வசதிகளோடு இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு Webinar, Google Meet, Zoom, Teamlink முதலான செயலிகள் அறிமுகமாயின.

அனுபவமிக்க ஆசிரியர்களால் முன் தயாரிப்புடன் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் வகுப்புகளை ஒவ்வொரு மாணவரும் பயன்படுத்தி, அறிவை விரிவு செய்துகொள்ள வேண்டும்.

குறித்த நேரத்தில் வகுப்பு நடத்தி, கலந்துரையாடல் செய்து, மதிப்பீடு தருதல் வேண்டும். அவ்வாறு நடத்தும் போது அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அமையும். மாணவர்களுக்குக் குறித்த நேரத்தில் குறித்த தகவலை மன நிறைவாக ஆசிரியர்கள் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பொறியியல், அறிவியல், கணினியியல் துறை மாணவர்கள் இணைய வழியில் கற்று வருகின்றனர். ஆனால் கலைப்பிரிவு மாணவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தியுள்ளன.

பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் புது வரவாக இன்று இணைய வழிக் கல்வி அமைகிறது. எல்லா நிலைகளிலும் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளத் தூண்டுகோளாய் இணையம் விளங்குகிறது.

இனிவரும் காலங்களில் அதாவது பொதுமுடக்கக் காலத்தில் எளிமையாகக் கல்வி கற்றிட, ஏற்றவழி ஒரேவழி இணைய வழிதான். அதனை வரவேற்றுப் பயன்படுத்திட இணையவழிக் கல்வி இன்றைய சூழலில் மிகத் தேவை. அதுவே காலத்தின் கட்டாயமாகும். அதற்கு மைய, மாநில அரசுகள் ஊக்குவிக்க முன் வரவேண்டும்.

சிறப்புகள்

இணையவழிக் கல்வி, எல்லா வசதிகளோடு இருந்த இடத்தில் இருந்தவாறு கல்வி கற்கவும் மாணவர்களின் கற்றல் திறனையும் அறிவுத் திறனையும் வளர்த்தெடுக்கவும் உதவுகிறது. திறன்மிக்க ஆசிரியர்களால் பல தரவுகள் திரட்டப்பட்டு வழங்கப்படும் வகுப்புகளால் மாணவர்கள் பல பயன்களைப் பெறுவதோடு, வகுப்பு முடிந்தவுடன் கலந்துரையாடலால் பல ஐயங்களைக் களைந்து கொள்ளலாம்.

சிக்கல்கள்

இணையவழியில் நடக்கும் நீண்ட நேர வகுப்புகளால் கைப்பேசி, மடிக்கணினி முதலான கருவிகள் வெப்பத்தால் பலவீனமடையும் சூழல் உள்ளது. அதேபோன்று மாணவர்களுக்கும் தலைவலி, கண் பாதிப்பு, மனஅழுத்தம் முதலான உடலியற் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வகுப்புகள் நடக்கும் போது இடையிடையே விளம்பரங்கள் வருவதால் கவனச் சிதறல் ஏற்படும் நிலையுள்ளது.

அறிதிறன்பேசி எல்லா மாணவர்களிடம் இருக்காது. அப்படியே அறிதிறன்பேசி இருந்தாலும் இணைய இணைப்பு எல்லா நேரமும் கிடைக்காது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களால் இணைய வழியில் கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது.

அதனால் கல்வியில் ஏற்றத் தாழ்வு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அறிதிறன்பேசி இல்லாத காரணத்தால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்யும் சூழல் தற்போது நடந்து வருகிறது.

இணையவழியில் பயிலும்போது தொழில்நுட்பக் கோளாறுகளால் குறித்த நேரத்தில் வகுப்பை நடத்தி மதிப்பீடு பெற இயலாத சூழலுள்ளது. இவை போன்ற பல சிக்கல்கள் இணையவழிக் கல்வி முறையில் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

தீர்வுகள்

ஒரு வகுப்பின் கால அளவு 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை அமையலாம். இணையவழியில் கற்கும்போது மாணவர்கள் கண் கண்ணாடி அணிந்து கற்றால் தலைவலி, கண் பாதிப்பு முதலான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். கல்வியாளர்களைக் கொண்டு அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை ஏற்படுத்தலாம்.

அக்குழு அளிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இணையவழிக் கல்வியை நடைமுறைப் படுத்தலாம். மாணவர்கள் அனைவரும் பயன்பெற, கல்விக்காக நிரந்தரமாக ஒரு தொலைக்காட்சியை அரசாங்கம் ஏற்படுத்தி, அதனைக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நடத்தலாம்.

அறித்திறன்பேசி, மடிக்கணினி, கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகள் இல்லாத மாணவர்களும் தொலைக்காட்சி வழியாகக் கற்கமுடியும். தற்போது தமிழக அரசும் தொலைக்காட்சி வழி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைக் கால அட்டவணையோடு வெளியிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

நிறைவாக, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கிணங்க, கல்வி முறையில் பல புதுமைகளைப் புகுத்தி, நம் தலைமுறையினருக்குப் பயனுள்ள வகையில் கற்றல் நிகழ்வுகளை அளித்திட வேண்டும். “கல்வி சிறந்த தமிழ்நாடு“ என்று பாரதியும் “என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்விகற்று..” என்று பாரதிதாசனும் கல்வி குறித்து மொழிவர்.

கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். இன்றைய சூழலில் இணையவழிக் கல்வி மிகமிகத் தேவையாகிறது. ஆதலால் இணையவழிக் கல்வியை நேரடி வகுப்பறைக் கல்விக்கு இணையாகக் கொள்ள முடியாது. இது தற்காலிகத் தீர்வாகக் கொள்ளலாம். எனவே அனைவருக்கும் இணையவழிக் கல்வி கிடைத்திட வழிவகை செய்யவேண்டும். அதுவே கல்வித் துறைக்கு நாம் தற்போது ஆற்ற வேண்டிய கடமையும் தேவையுமாகும்.

- கு.சென்னகிருஷ்ணன்