பள்ளி வளாகங்களும், வகுப்பறைகளும் மூடப்பட்டு பல இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிப் படிப்பை வீட்டிற்குள்ளேயே எதிர் கொண்டு வருகின்றார்கள். இது நமக்குப் புதிது.
கொரோனா தொற்றுயிர் பயம் நிகழ்த்திய “கற்றல் கற்பித்தல்” மீதான பெரும் தாக்குதல் இது. கற்றலும் கற்பித்தலும் முடங்கிப் போனது அல்லது முடக்கப்பட்டது என்றே கூறலாம்.
எதிர்காலத்தின் மீதான பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு இந்த முடக்கம். தனிமனித உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இருப்பினும், என்ன செய்வது... கற்பித்தல் தொடர வேண்டும், கற்றல் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் உள்ளிட்ட அனைவரிடத்திலும் இயல்பாய் எழுகின்றதையும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
கற்பித்தலுக்காய் முன்மொழியப்பட்ட இணைய வழிமுறைகளும் அதன்பொருட்டான முன்னெடுப்புகளும் கடினமானவைகள். அதற்குரிய வழிமுறைகள் அனைவருக்கும் உகந்ததாய் இல்லை.
இணையவழிக் கல்வி
21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இணையப் பயன்பாடு மாறியிருக்கிறது. “இணைய வணிகச் சந்தை” சாமானிய மனிதனையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு இணைய டேட்டா சலுகைகளை அறிவித்து பயன் பாட்டாளர்களை தன் வயப்படுத்த எத்தனித்து வருவதும் இயல்பாய் அரங்கிகேறி வருகிறது.
இணையம் அறிமுகம் செய்த புதிய புதிய செயலிகள் மனித இணைப்பை செயற்கை முறையில் இணைக்க முயற்சித்து வருகிறது. அரசு மற்றும் அரசு சாராக் கல்வி நிறுவனங்கள் செயலி வழிக் கற்பித்தலை பொதுவில் முன்னெடுக்க முனைந்தன. வெற்றியை இம்முயற்சி எட்டவில்லை. ஏனெனில், கற்றல் கற்பித்தலில் இணையவழிக் கல்வி அனைவருக்கும் உரியதான ஒன்றாகவும் இல்லை.
பெரும்பான்மை பள்ளி ஆசிரியர்களால், மற்றும் இன்னும் ஒருபடி மேலே கல்லூரிப் பேராசிரியர்களால்கூட இணையவழிக் கற்பித்தல் என்பது பெரும் தலைவலியாகப் பார்க்கப்படுகிறது.
சிறு அளவிலான ஆசிரியர் சமூகம் இணைய வழிக் கற்பித்தலில் வெற்றியடைய முயற்சித்தது. ஓரளவு அதில் வெற்றியடைந்துள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஆனால், பெரும்பான்மையான மாணாக்கர் இணையவழிக் கற்றலுக்கு பழக்கப்படாத சூழலில் பொறுப்பற்ற நிலையில் ஆசிரியர்கள் இணையவழியில் வகுப்புகளை கையாளுவது மிகவும் ஆபத்தான சூழல்களை மாணாக்கரிடையே உருவாக்கி வருகிறது.
குழந்தைகளின் மீதான் இணைய வழிப் பாலியல் தாக்குதல்களும் உள்ளடங்கிய ஆபத்துகள் உண்டு. இங்கு, இணையவழிக் கல்விக்கு தனித்துவமான பாடத் தயாரிப்பு அவசியம் என்பதை உணராத ஆசிரியர்களே அதிகம். இல்லையேல், இணையவழி பாலியல் வன்முறைகளுக்கு இச்சூழல்கள் காரணமாய் அமையும் என்பதையும் நாம் உணர வேண்டிய தருணமிது.
கேள்விக்குள்ளாகும் ஆசிரியர் மாணாக்கர் இணைப்பு
ஆசிரியர் மாணாக்கர் என்ற இருவேறு துருவங்களையும் இணையம் இணைக்கும் என்ற முயற்சி பெரிதாய் போற்றப்படவில்லை. முழுமையான வெற்றியை நோக்கி நகரவுமில்லை.
குறிப்பாகப் பள்ளிச் சிறார்களுக்கான இணையவழிக் கற்பித்தல் என்பது பெரும் இடைவெளியை மாணாக்கர் ஆசிரியரிடையே ஏற்படுத்தியுள்ளதை நாம் முழுதாய் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
மனிதர்களுக்கே உரித்தான உயிரோட்டமான இணைப்பு, ஒத்துழைப்பு, முறையான கற்றலுக்கான வாய்ப்பு போன்றவை இணையவழியில் முடங்கிப் போயியுள்ளன. சிக்கலான பாடங்களைக் கைகோர்த்துக் கற்பதில் “இணையவழி” என்பது குழந்தைகளிடமிருந்து முரண்பட்டு நிற்கிறது.
“கற்றல்” என்பது ஆசிரியர்கள் வகுப்றையில் நிகழ்த்தும் தொடர் நேரடி உரையாடல்கள் வழி நிகழும் விளைவு. கற்பித்தலின் சவால்கள் அவ்விடம்தான் மறுபரீசீலனைக்கு உட்படும்.
அதற்குரிய சூழல் வகுப்பறைகளில் மட்டுமே நிகழும். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் இணையப் பயன்முறையில் கற்பித்தலை வழங்குவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
கற்றல் மேம்பாடு
குழந்தைகளின் “கற்றல் மேம்பாடு” என்பது “தூண்டுதல்” வழி நிகழ்வது. தூண்டுதல் என்பது மனித இணைப்பினால் மட்டுமே நிகழ்வது. இணையவழியில் இது சாத்தியமற்றது. ஆகவே,“கற்பித்தல்” என்பதும் “கற்றல்” என்பதும் ஒரு மாயத்தோற்ற நிலையிலேயே இணையவழிப் பயன்முறை இருக்கிறது.
நேரடி வகுப்பறைகளே சவால்கள் நிறைந்த ஒன்றாக இருக்கின்ற நிலையில், ஆளுக்கொரு திசையின் எல்லைகளில் அமர்ந்து கற்றலையும்-கற்பித்தலையும் சாத்தியப்படுத்துவது என்பது சிக்கலான ஒன்றாகவே இருக்கும் என்பதே உண்மை. சில வெற்றிகள் உண்டு. ஆனால், பெரும்பான்மை அவ்வாறில்லை.
இணையப் பயன்பாடு நிகழ் நூற்றாண்டின் மறுக்கவியலாத, தவிர்க்கவியலாதத் தேவை. ஆனால் நம்முன் இருக்கும் கேள்வி “நமது கற்றல் கற்பித்தலில் அப்பயன்முறையை எதிர்கொள்ளும் அடிப்டைத் திறனை மேம்படுத்தியுள்ளோமா?'' என்பதே.
சமவாய்ப்பு - சம பங்கேற்பு
இணையவழிக் கல்வி என்பது பாகுபாடுகளின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் உரியதாய், உகந்ததாய் இருந்ததா என்ற கேள்வியும் நம்முன் நிற்கின்றது. அரசும் அது சார்ந்த அனைத்து வகை கல்வி அமைப்புகளும், பொதுச் சமூகமும் கவனிக்கத் தவறிய விடயங்களில் முக்கியமான அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வியில் “சம வாய்ப்பு” “சம பங்கேற்பு” என்ற அடிப்படைக் கூறுகள் இணையவழிக் கற்பித்தலில் முரண்களோடு பயணிக்கிறது.
வாய்ப்பு இல்லாத பெரும்பகுதிக் குழந்தைகளுக்கானக் கல்வியாக இது அமையவில்லை. ஏற்றதாழ்வுகளைப் போக்கும் எவ்வித ஆக்கக் கூறுளுமின்றியே நடந்தேறி வருகிறதை நாம் மறுக்க முடியாது.
தொற்றுயிர் தாக்கமும் - அரசின் பொறுப்பும்
“கல்வியில் சமமான வாய்ப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்குமுரிய சட்டப்பூர்வ உரிமை'' எனக் குழந்தைகள் உரிமைகளுக்கான அகில உலக சாசனம் (1989) பிரிவு 28 அங்கீகரிக்கிறது.
சட்டப்பூர்வமான உரிமை என்ற நிலையில், கல்வியை உறுதிசெய்வதற்கான அரசின் அனைத்து வகையான வழிமுறைகளும் எல்லாக் குழந்தைகளுக்குமானதாக அமைய வேண்டும்.
இந்திய அரசியல் சாசனம், சரத்து 21A கல்வியை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது. கல்வியானது ஒவ்வொருவரின் வாழ்வு மற்றும் சுதந்திர உரிமையின் ஓர் அங்கம்.
“...சட்டத்தின் வாயிலாகத் தீர்மானிக்கும் முறையில் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும்." என்று இச்சரத்து வலியுறுத்துகிறது. எனவே, பாகுபாடுகளற்ற சமவாய்ப்புகள் எல்லோருக்குமானது என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
கல்வியில் சமவாய்ப்பு என்பதற்கான சூழல்கள் வெவ்வேறாக இருப்பினும், தற்போதைய தொற்றுயிர் தாக்கச் சூழலில் இணையவழிக் கற்றல் கற்பித்தலின் எதார்த்தத்தையும் அதன் பயன்முறையையும் உரிமைக் கண்ணோட்டத்தில் உற்றுநோக்கி ஆய்விற்குட்படுத்த வேண்டியுள்ளது.
விளைவுகள் என்ன?
சமூக கலாச்சார பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் இணையவழிக் கற்றல் செயலில் பங்கேற்க இயலாத நிலை.
கேட்பாரற்ற வகுப்பறைச் சூழல்கள், வகுப்பு ஆசிரியர்களால் பார்வார்ட் செய்யப்பட்ட YouTube வலைத்தள கற்பித்தல் பதிவுகள் என இன்னும் பல... அனைத்துமே கண் துடைப்பிற்கான செயல்களாகவே நிறைவேறுகின்ற அவலத்தை இணையவழி கற்பித்தல் வெளிச்சமிட்டுக் காட்டி வருகின்றது.
உயிரோட்டமான மனித இணைப்பின்மை கற்பித்தலை வெறுமையாக்கியது என்பதுதான் உண்மை. தங்களின் குழந்தைகள் எதிர்கால நலன்மீதான கரிசனை பல பெற்றோர்களைத் தூக்கம் கலையச் செய்தது.
இணையப பயன்முறை அறியாத குழந்தைகளின் பதட்ட மனநிலை கற்றலில் பின்டைவுக்கு வழிசெய்தது. ஆக்கப் பூர்வமான கற்பித்தலின்மையால் குழந்தைகளிடம் கற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இணையவழியில் ஆசிரியர் அனுப்பிய பாடங்களைக் கவனிக்க ஆன்ட்ராய்டு அலைபேசி வாங்க காசில்லை... ரீச்சார்ஜ் செய்ய பெரும்பான்மை நலிவடைந்த சமூகப் பெற்றோரிடம் காசில்லை...
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1ஜிபி டேட்டா விலை கொடுத்து இணையவழி கற்றலைத் தொடர வேண்டும்... இது சராசரி பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை... குடும்பப் பொருளாதாரச் சூழலும் இவ்வழியான கற்றல் கற்பித்தல் முன்னெடுப்புகளுக்கு ஒரு பெரும் தடையாகவே இருக்கிறது.
கல்வித் தொலைக்காட்சி வழியான கற்பித்தல் அனைவருக்கும் சென்று சேர்ந்ததா? என்றால் அது மிகப் பெரிய கேள்வியாகவே இருந்கிறது. வாய்ப்புள்ளோர் ஆகா… ஓகோ… என்கிறார்கள். வாய்ப்பற்றோர் வாய்மூடி மௌனமாய் கடந்து செல்கின்றார்கள்.
வகுப்பு ஆசிரியருக்கு இதுகுறித்து தெரிவித்தால் அவர் சொல்லுவது “நாங்க என்ன சார் செய்யுறது, இது தலைமையாசிரியர் உத்தரவு''. தலைமை ஆசிரியரைக் கேட்டால் இது துறை உத்தரவு என்று சொல்லி எளிதாய் கடந்து போகிற நிலையில் இருக்கின்ற நிலை.
இவற்றை எல்லாம் கடந்து இணையத்தினூடே பயணிக்கின்ற போது, அதன் திசைமாற்றம் குழந்தைகளின் எண்ணங்களை உளவியல் ரீதியாகச் சிதறடிக்கிற அபாயத்தையும் உணர முடிகிறது.
குழந்தைகள் மீதான இணையவழிப் பாலியல் வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளதையும் செய்திகள் வழி அறியமுடிகின்றது. அதிகார மையங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகள் குழந்தைகளுக்கானதாக மாற்றம் பெருவதில் தடைகள் ஏராளம்.
டிஜிட்டல் பயன்பாடு - அரசின் கொள்கை முடிவுகளின் தேவையும்
ஏற்ற தாழ்வுகள் நிறைந்த இந்தியச் சமூகத்தில் இணையப் பயன்பாட்டுவழிக் கல்வி என்பது சற்று முரண்பட்டதாகவே இருக்கிறது. இங்கு டிஜிட்டல் பயன்பாடு என்பது அனைவருக்குமானதாக இல்லை. இது ஒருசாராரை பிரித்தே வைக்கினறது.
சமூகப் பொருளாதாரச் சமத்துமற்ற நிலையில் இணையம் வழிக்கல்வி மேம்பாடு என்பதன் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. தொற்றுயிர் காலச் சூழலில், இணையவழிக் கல்வி வழங்குதல் என்பது முழுமையற்றது.
கல்வியில் சமத்துவமான டிஜிட்டல் பயன்பாட்டை நோக்கிய புதிய கொள்கை முடிவுகளை அரசுகள் மேற்கொள்ளவும், அதுசார்ந்த கல்வி உள்ளீடுகளையும் செயல்திறனுடைய வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் உருவாக்க போதிய ஆய்வுகளை துரிதப்படுத்த வேண்டிய தருணம் இது.
பாகுபாடுகளற்ற கல்விச் செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உண்டு என்பதை மனதில் ஏற்று நிலையான முடிவுகளை வகுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
செ.மரிய சூசை
மனித உரிமைக் கல்விச் செயல்பாட்டாளர்
அறங்காவலர், சமூகக் கல்வி நிறுவனம்,