கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

NPTELகொரோனா எனும் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமி வளர்ந்த உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியதோடு, வளரும் நாடுகளில் பொருளாதாரச் சரிவையும், பொருளாதார முடக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு முன்பு இந்திய நாட்டின் பொருளாதாரம் சரிவில் கிடந்ததை மறைப்பதற்கும், நிமிர்த்துவதற்கும், கொரோனாவின் பேரில் பெரும் முதலாளிகளின் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதையும் பார்க்க முடிகிறது.

கொரோனாவினை முன்னிட்டு நேரடி அந்நிய முதலீட்டைப் பெருக்குவதற்கு தாராளமய வாதத்தையும், தனியார் மயவாதத்தையும் கையிலெடுத்ததும், அதனை நடைமுறைப் படுத்துவதுமான செயல் மக்களுக்கு எதிரான செயலாக அமைகின்றது. மேலும் இணையச் சேவைவழி முதலீட்டைப் பெருக்குவதற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பெரு முதலாளிகளின் தொழில்கள் கொரோனா காலத்தில் முடங்கி விடாமல் இருப்பதற்கு அரசே மேலும் கடன் வழங்க முன்வந்த அதேவேளை, விவசாயம் மற்றும் கல்விக் கடன்களைப் பெற்றுள்ள உழைக்கும் ஏழை மக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை. கொரேனாவினால் படுகின்ற மக்களின் துன்பத்தைத் துடைக்க அரசு முன்வரவில்லை.

இச்சூழ்நிலையில் தீ நுண்கிருமி தொற்றின் பரவலாக்கத்தால் கூட்டுச் செயல்பாடு, கூட்டு நடவடிக்கை என்கிற சமூகமயமாதலிருந்து விலகி இருப்பதே நல்லது என்று அறிவுறுத்தப் படுவதோடு அனைவரிடத்திலும் பயவுணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்பக்கருவி மனித சமூகத்தைத் தனித்தீவு வாழ்க்கைக்குள் அணியப்படுத்தியது ஒரு புறமிருக்க, கொரோனா எனும் தீ நுண்கிருமி மனித சமூகத்தை அந்நிய நிலைக்குள் விலகியிருக்க வைத்ததோடு மக்களிடம் பொருளாதார இருப்பின்றி பசியாலும், பட்டினியாலும் நடமாடும் பிணங்களாக மனிதர்களை ஆக்கியுள்ளது. ஆனால் பெருநிறுவனங்கள் மட்டுமே தகவல் தொழில்நுட்பம் வழி முதலீட்டைப் பெருக்குவதற்காகத் திட்டமிட்டு, இணைய வழிச் சேவையையும், ஆன்லைன் வர்த்த சேவையையும் விரிவுபடுத்தியுள்ளன.

கொரோனா காலச் சூழலில் உழைக்கும் மக்கள்களின் வாழ்வாதாரச் சூழல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களைக் காக்க வேண்டியவர்கள் பிரமாண்ட சிலையை உருவாக்கியும், கொரோனாவுக்காக மலர்களைத் தூவியும், முதலாளிகளுக்குக் கடன்களை வழங்கியும் நாட்டின் கசானாவைக் காலி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு பேரிடரிலும் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களே. கிராமத்திலிருந்து நகரத்திற்குப் பிழைப்பு தேடிச் சென்றவர்களோ தம் சொந்த ஊர் தேடி வருகிறார்கள். வீடற்றவர்களையும் பிற இடத்திற்குப் பிழைக்கச் சென்றவர்களும் கொரோனா அலைகுடி மனிதர்களாக்கி விட்டது. கொரோனா காலத்தில் வெவ்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து உதிரித் தொழில் செய்து வாழ்ந்தவர்களும் பெரும் சோகத்தோடு சொந்த ஊர்களை நோக்கிச் சென்ற துயரம் மீளாது. அன்றாடத் தொழில் செய்து கிடைத்த வருவாயை வைத்துக் கொண்டு வாழ்ந்தோர்களின் வாழ்வு அதோ கதியாகியுள்ள நிலையில், கொரோனா காலச் சூழலில் கல்வி கற்றல், கற்பித்தல் செயல்பாடும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு, தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டின் ஏப்ரல், மே மாதத்திற்குள் தேர்வுகள் நிறைவு பெற்று, கோடை விடுமுறை முடிந்து ஜீன் மாதத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதுமான வழக்கமான நிலை மாறியுள்ளது. இச்சூழல் முற்றிலும் மாறியதற்குக் கொரோனா மட்டுமே காரணமல்ல, அரசும் தான். இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

கற்றல் கற்பித்தல் முறைகளைக் கல்வி நிறுவனத்திற்குள் செயல்படுத்த முடியாத நிலையால் பள்ளி, கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு இணைய வழிக் கற்பித்தல் முறையை உருவாக்கியுள்ளன. இவ்வழியான கற்றல் நெறிமுறை எல்லா மட்டத்தில் உள்ள மாணவர்களுக்குப் பொருந்திப் போவதில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி கற்றல் முறை முற்றிலும் சாத்தியப் பாடற்றதாகும். கணினி, நவீனத் தகவல் தொழில்நுட்பக் கருவி போன்றவை உபகரண வசதியில்லாத காரணத்தால் ஏழை, எளிய மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் முறை பயனளிக்காமல் போய் விடுகின்றன. நவீனத் தொழில்நுட்ப வழிக் கற்றல் கற்பித்தல் செயல்பாடு பொருளாதாரத் தன்னிறைவு பெறாத மக்கள் வாழும் இந்தியாவில் சாத்தியப்படுத்த வெகுகாலமாகலாம். ஆனால் கொரோனா ஊரடங்கினைக் காரணங்காட்டி கல்வியில் புது மாற்றத்தைக் கொண்டு வரப் பல முன்னெடுப்புகளை முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது.

கொரோனா காலத்தில் கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளைக் கீழ்க்கண்டவாறு பின்பற்ற வேண்டுமெனப் பல்கலைக்கழக மானிய ஆணையக் குழுத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

  • கல்லூரிகள் மே31க்குள் ஆன்லைன் மூலமாகப் பாடங்களை முடித்துவிட வேண்டும்.
  • ஜூன் 1 முதல் 15 ஆம் தேதிக்குள், திட்டப் பணிகளுக்கான வாய்மொழித் தேர்வு, ஆய்வகச் செய்முறைப் பயிற்சி போன்றவற்றை ஆன்லைனில் முடிக்க வேண்டும்.
  • ஜூன் 15 முதல் 30 வரை கோடை விடுமுறை.
  • ஜூலை 1 முதல் 15க்குள் இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு. அதன் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடுதல் வேண்டும். ஏனைய மாணவர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்திட வேண்டும். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் வேண்டும். மூத்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரி தொடங்க உள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம்.
  • ஸ்வயம் மூலமும் NPTEL - மூலமும் படிக்கும் ஆன்லைன் வகுப்புகளின் கிரெடிட்களை மொத்த கிரெடிட்டில் 20% வரை மாற்றிக் கொள்ளலாம் என இருந்தது. (உதாரணத்திற்கு பி.ஈ படிப்பில் 170 கிரெடிட் இருந்தால், 34 கிரெடிட் ஆன்லைன் மூலம் பெறலாம் எனவும், இனி அதை 40% ஆக்குவதற்கான ஆலோசனையும் நடத்தி, 68% கிரெடிட்கள் வரை இணையத்திலேயே படித்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
  • ஜூலை 1ல் தேர்வு நடத்த முடியாத சூழல் எனில் இம்முறை எடுத்த இண்டேர்னல் மார்க் 50% சென்ற செமஸ்டர் மார்க் 50% என எடுத்து மதிப்பெண் வழங்கலாம் எனவும் குறிப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டவை எல்லாமே UGCயின் வழிகாட்டுதலாகக் கூறப்பட்டாலும் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் போன்ற கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்கள் வழிகாட்டுதலே இறுதியானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்கலைக்கழக மானிய ஆணையக் குழுத் தலைவர் கூறியுள்ள கருத்துக்கள் கலை, அறிவியல் புலத்திற்கு பொருந்தாததாகும். தொழில் நுட்பக் கல்விக் கொள்கைகளை அப்படியே கலைப்புலக் கல்விக்குள் கொண்டு வருவது வம்படியாகத் திணிப்பதாகும். Swayam வழியாகக் கற்றுக் கொள்ள வற்புறுத்துவதும், Outcome Education எனும் கொள்கையில் கற்றலின் விளைவு சார்ந்து பாடம் நடத்துவதும் கொரோனா காலத்திற்கு முன்பே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இணைய வழிக் கற்றல் கற்பித்தலை கொரோனா காலத்திற்கு முன்னும் பின்னும் விரிவுபடுத்தும் எண்ணம், சிக்கலை மையமிட்டதாகும்.

பல்கலைக்கழக மானிய ஆணையக் குழுத் தலைவர் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு கொரோனா கால அறிவிப்பாக சிலவற்றை விடுத்துள்ளார். இதில் ஒரு சில பல்கலைக்கழகம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் உள்ளன என்பதைத் தெரிவித்தும் உள்ளது. மாணவர்கள் கிராமப்புறம் சார்ந்து இருப்பதால் இவர்களுக்கு இணைய வசதி இல்லாத காரணத்தால் ஊரடங்கிற்கு முன் எவ்வளவு பாடம் நடத்தப் பட்டுள்ளதோ அதுவரை மட்டுமே வினாத்தாள்கள் அமையும் என அறிவித்துள்ளதிலிருந்து இணைய வழி பாடம் நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை அறிய முடிகிறது.

பல்கலைகள், கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் குறைகளைத் தீர்த்திட UGC Task force அமைக்கப் பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. கொரோனா தொற்று நோயால் ஊரடங்கில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு யுஜிசி ஒரு பிரத்தியேக ஹெல்ப்லைனை நிறுவியுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணையத்தை (யுஜிசி) ஒரு ஹெல்ப்லைன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். தற்போதுள்ள ஆன்லைன் மாணவர்களின் குறை தீர்க்கும் போர்ட்டலில் மாணவர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம் என்பதையும் கொரோனா காலத்தில் யுஜிசி அறிவித்துள்ளது. மேலும், கொரோனா காலத்திற்கு முன்பே உள்ள திட்டத்தை இப்பொழுது செயல்படுத்த அறிவுறுத்தவும் செய்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும், கலை அறிவியல் கல்வி நிறுவனங்களும் NPTEL மூலம் உருவாக்கப்பட்டுள்ள காணொளி விரிவுரைகள் மற்றும் வலைப்படிப்புகள் வடிவில் பாட நெறிமுறைகளைப் பின்பற்றுவது தற்காலச் சூழலில் உருவாக்க எத்தனிக்கும் நிலையை அவதானிக்க முடிகிறது. காணொளி விரிவுரைகள் மற்றும் வலைப் படிப்புகளின் பாடநெறிகளை NPTEL வழங்கியுள்ளது இன்றைய கல்வி முறைக்கு ஆபத்தாகி விடும் என்பதை இன்றைய சூழலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். NPTEL இணையதளத்தின் இவ்வமைப்பின் கற்றல் விபரத்தை வெளியிட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. “350க்கும் மேற்பட்ட வீடியோப் பாடநெறிகள் உள்ளன, 10 பாடங்களில் 12000க்கும் மேற்பட்ட வீடியோ விரிவுரைகள் உள்ளன. இந்த படிப்புகளில் பெரும்பாலானவை 40 வீடியோக்களையும் தலா ஒரு மணிநேர கால அளவையும் கொண்டுள்ளது. சில படிப்புகளுக்கான பாடநெறி நிறைவு சான்றிதழையும் நீங்கள் பெறலாம். சில படிப்புகளுக்கு பாடநெறி நிறைவுச் சான்றிதழ்களை வழங்கத் தொடங்கினர். நீங்கள் அவற்றை YouTube மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் அணுகலாம்” எனப் பதிவாகியுள்ளது. இதன் மூலமாக, திறந்த வீட்டில் எவரும் நுழையலாம் என இணைய வாசலைத் திறந்து விடுவதும், பின்னர் வெளிவர முடியாமல் திறந்த கதவுகளை மூடுவதும் உருவாகிவிடும். இதன்வழி கற்கும் மாணவர்களுக்குத் தொடர் கற்றல் இல்லாமல் செயல்பாடற்று வாழ்வு சூன்யமாகி விடக்கூடும்.

இணைய வழிக்கற்றல் கொள்கையை உருவாக்க இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு NPTEL (National Programme on Technology Enhanced Learning) எனும் அமைப்பு, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி இவைகளின் கூட்டாகத் தொடங்கப் பட்டுள்ளது. இவை மூலம் இந்திய மதிப்புமிக்க நிறுவனங்களை வளர்க்கும் நோக்கத்தில் கற்பித்தலுக்கான பாடநெறியை உருவாக்குவதே இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வமைப்பு கொரோனாவிற்கு முன்னதாகத் தொடங்கப் பட்டாலும் இதன் தேவையையும், பயன்பாட்டையும் கொரோனா காலத்தில் விரிவுபடுத்த மனிதவள மேம்பாட்டுத் துறையும், பல்கலைக்கழக மானியக் குழுவும் நினைத்துள்ளதை அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனத்தில் இளம் இந்தியர்களில் திறமையானவர்கள் (பார்ப்பனர்கள்) பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள் எனப் பெருமிதத்தில் நம்மைக் குளிரச் செய்வதும், புதிய புதிய கல்விக் கொள்கைகளாலும் திட்டங்களாலும் முதலாளிகளும் பார்ப்பனர்களும் சுகமாக வாழ்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

கொரோனா காலத்தில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் பங்கேற்பாளர்களிடம் அதிகமான பதிவுக் கட்டணம் பெற்றுக் கொண்டு மின்- கற்றலுக்கான பயிற்சி வகுப்பினை இணையவழி கற்பிக்கத் தொடங்கி விட்டன. கீழ்க்காணும் தன்மைகளில் அதன் இணைய வகுப்புகள் அமைந்திருக்கின்றதை அறிய முடிகிறது.

  • மின்-கற்றல் நடைமுறைகள் அறிமுகம்
  • மின்-கற்றல் கட்டமைப்பு
  • மின்-கற்றல் உள்கட்டமைப்பு
  • கூகுள் சந்திப்பு மற்றும் பிற பயன்பாடுகள்
  • மின்-உள்ளடக்க வளர்ச்சியில் தற்போதைய போக்கு

இவ்வாறு மின்-உள்ளடக்கங்களின் வழிக் கற்றலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தல் கூகுள், சூம் (zoom), வெப்னர் (webinar) இவைகளில் இணைந்து கல்லூரிகளின் நிர்வாகத்தினர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் வகையில் இணையவழிக் கல்வி கற்றலை உருவாக்குதல், இ-உள்ளடக்கம் மற்றும் பாடத்திட்டக் களஞ்சியம் உருவாக்குதல் இவைகள் அனைத்தும் கொரோனா காலத்திற்கு முன்பு உயர்கல்வியில் மாற்றங்கள் கொண்டு வரத் திட்டம் தீட்டப்பட்டாலும், கொரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சியினை இணைய வழியாக நடத்த ஆரம்பித்து விட்டதன் பின்னணி ஆசிரியரில்லாத கற்றல் முறைக்கு வழிவகை செய்வதாகும். இங்கு ஒவ்வொரு துறை சார்ந்து பாண்டித்தியம் பெற்ற பல ஆசிரியர்கள் தேவைப்படாது, பயிற்றுநர் எனும் ஒரு நபர் மட்டுமே போதுமானதாக இருக்கும். அதாவது கல்வி எனும் தொழிற் சாலையை வழிநடத்த கற்றல் வல்லுநர்கள் தேவையில்லாது ட்ரெய்னரே போதுமானது எனும் நிலைக்கு கல்வி மாற்றம் பெறும். இம்மாற்றம் வளர்ச்சிக்கானதாக ஒருபோதும் இல்லாமல் தரகு முதலாளிகளை மட்டுமே வளர்த்தெடுக்கும் என்பதில் எவ்வித அய்யமில்லை.

கொரோனா காலத்தில் இணையவழிக் கல்விச் செயல்பாடு என்பது பொதுமைப் படுத்தப்பட்ட கற்றல் செயல்பாட்டினைப் பின்னுக்குத் தள்ளும் நிலையைக் கொண்டதாகும். கல்வி வழியாகச் சமத்துவத்தைப் பெறுவதும், கல்விப்புலம் வாயிலாகக் கூட்டுச் செயல்பாட்டை நோக்கிய கல்விச் சூழலைச் சிதைத்து, பழைய குருகுலக் கல்வி எவ்வாறு பார்ப்பனர்களின் வழி நடத்தப்பட்டதைப் போன்று நவீன முதலாளிகளால் இணைய வழிக் கல்வி முறையை உருவாக்க கொரோனாவின் வழியான ஊரடங்கு காலத்தில் கல்வியை இணையம் வழியாக மேற்கொள்ளத் திட்டம் தீட்டி விட்டனர். இது கல்வி, அறிவு விருத்தியை மையப்படுத்திய, மாணவர்களின் அக-புற மாற்றங்களை உள்ளடக்கிய நேரடித் தன்மையிலான கற்றல் வழியான தொடர் உரையாடலை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

இன்றைய சூழலில் புதுமையான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் எனும் போர்வைக்குள் மாணவர்களைத் தனித்தனி நபர்களாக ஆக்கப்படும் நெறிப்படுத்தப்படாத கற்பித்தல் தன்மையைக் கொண்ட கற்றல் முறையை தயார்படுத்தத் தூண்டுகின்ற வகையில் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே கற்கும் நிலை புகுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாமல் ஆக்கப்பட்ட காலங்களில் இணையச் செயலிகளின் வழிக் கற்றல் தொடருமானால் இது, கல்விக்கு வந்துள்ள பெரும் ஆபத்தாகும். அரசு சார்ந்து செயல்படும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களைப் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க இங்கு உள்ள அறிவுஜீவிகளும்; ஆட்சியாளர்களும் துணைபோகும் வகையில் இணைய வழியாகப் பல செயலிகளின் துணையோடு கற்றல், கற்பித்தல் செயல்பாட்டினைத் தொடங்கியுள்ளது கல்விக்கான சாபக் கேடேயாகும்.

வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கும், ஆங்கில வழிக் கற்கும் மாணவர்களுக்கும் இணைய வழிக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் எளிமையாக இருந்தாலும், இவை முழுமையாகச் செல்ல மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பில்லை. தொடக்கக் கல்வி, மேனிலைக்கல்வி, கல்லூரிக் கல்வி, உயர்நிலைக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி எனும் கல்வி பயில்வதில் கற்றல் சார்ந்த அமைப்புநிலை ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு பயில்முறையும் பல்வேறு படிநிலை சார்ந்த தன்மையில் அதனதன் கற்றல் நெறிமுறை சார்ந்தும், கொள்கை சார்ந்தும், வேறுபடக் கூடியதை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி அது இணைய வழிக்கல்வி எனும் ஒற்றைத் தன்மையில் இணைய வழிக் கற்றல் செயல்பாட்டிற்குள் அடக்குவது எல்லாவித வளர்ச்சியிலும் மக்களை நோக்கிய பொதுமைத்துவம் இல்லாத இந்திய நாட்டிற்குப் பொருந்தாது.

எல்லா மாணவர்களின் பொருளாதாரச் சூழல் மோசமாக இருக்கின்ற இச்சூழலில் இணையவழிக் கல்விக் கொள்கை அபத்தத்தை நோக்கியதாகும். நடைமுறையிலுள்ள கல்வியைச் சீர்படுத்த எண்ணாமல், இணையவழிப் பாடம் நடத்துவது, முழுக்க முழுக்க லாபத்தைத் தொழிலாகக் கொண்ட கல்வியை உருவாக்கக் கூடும். இன்றளவில் தனியார் கல்வி நிறுவனங்களும் லாபம் சார்ந்து செயல்படுவதை மாற்றாமலும், மக்களின் வாழ்க்கையின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றம் செய்யாமலும், புதுமுறைக் கற்றல் செயல்பாட்டை ஊக்கப்படுத்துவதும், எவ்வித மறுதலிப்பும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை கொரோனா காலத்தில் உட்செலுத்தியதும் அரசின் தந்திரத்தனத்தைக் காட்டுகிறது.

இணையவழிக் கற்பித்தல் முயற்சிகள் ஆரோக்கியமான கற்றல் மனப்பான்மையை உடைக்கக் கூடியதாகும். கொரோனா காலத்தில் இணைய வழி நடத்தப்படும் வினாடி வினாப் போட்டிகள் உட்பட அனைத்துமே கல்வியாளர்களையும் மாணவர்களையும் நாடி பிடித்துப் பார்க்கும் நவீன முதலாளிகளின் பரிசோதனை முயற்சிகள் தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இணையவழிக் கருத்தரங்கம் நடத்துவது, பயிற்சிப் பட்டறை நடத்துவது, புத்தாக்கப் பயிற்சி நடத்துவது, கொரோனா விழிப்புணர்வு வினாடி வினா நடத்துதல், துறைசார்ந்த வினாடி வினாப் போட்டி நடத்துதல், சான்றிதழ், பட்டயப் படிப்பினைத் தொடங்குதல், தொழிற்படிப்பைத் தொடங்குதல், தொலைதூரப் படிப்பை இணைய வழித் தொடங்குதல் - இவ்வாறான கற்றல் கற்பித்தலுக்கான கொள்கையை மனிதவள மேம்பாட்டின் துணையோடு நடத்துவதற்கான வரைவை கொரோனாவுக்கு முன்பே உருவாக்கப் பட்டிருந்தாலும், கொரோனா கால ஊரடங்கிற்குப் பின் புதிய கல்விக்கான செயல் திட்டத்தை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் உருவாக்க வேண்டுவதன் பின்னணி, தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் கல்வியை வழி நடத்துவதற்கான சூழல் உருவாக்குவதாகும் என்பதில் சந்தேகமில்லை.

கொரோனா கால ஊரடங்கில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இணையவழி வினாடி வினாடிப் போட்டிகளும், ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளும் இணையவழிக் கற்றல் கல்வி முறை என்பது ஆரம்பத்தில் இலவசமாக நடத்தி, எல்லோரிடத்திலும் கலந்து கொள்ளும் மனநிலையை உருவாக்கிய பின்னர் பதிவுக் கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும் எனும் நிலைக்குக் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். இணையவழிக் கற்றலில் பயனாளர்களின் எண்ணிக்கையை மையப்படுத்திய இதன் செயல்பாடுகள், லாப வேட்டைக்கானதாகவே அமைவதாகும். இதனால் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கற்றுத் தர வலியுறுத்தப்படுவதும் நிகழலாம். தேர்வு வீட்டிலிருந்தவாறே எழுதலாம். இத்தேர்வுகள் கணினி வழி என்பதால் கொள்குறி வினாக்கள் மட்டுமே வினாக்களாக அமைக்கப்படும், கொள் குறி வினாக்களுக்கான பதில்களைக் கற்பதும் மட்டுமே அறிவின் செயலாக்கத்தை விரிவுபடுத்தாது. இதன்வழிச் சமூக இயங்கியல் புரிதலும், மானுட விடுதலையையும் உருவாக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையவழிக் கல்வியில் சான்றிதழ்களும் இணையம் வழியாக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும் எனும் கல்விச் சூழல்கள் உருவாகி வருகின்றன. இம்முறையிலான பயில்தல் உருவாகி விட்டால் கற்றலின் விளைவு மிக மோசமாகி விடுவதோடு, கற்றல் - கற்கும் சூழல் - ஆசிரியர் - மாணவர் இவ்வுறவுநிலை பிளவுபட்டு, இயந்திரங்களின் வழியாகக் கல்வி கற்பதும், கற்பிப்பதன் மூலமாக இயந்திரத்தனமான கற்றோர்களை உற்பத்தி செய்வதுமான தன்மை உருவாகும்.

இந்நிலையில் இணையவழிக் கல்வி இரு நிலைகளில் அமைவதுண்டு. ஒன்று, முன்கூட்டியே பாடத் திட்டத்திற்கான பாடங்களை புரோக்கிராமாக உருவாக்கல். மற்றொன்று பாடத் திட்டங்களுக்கான பாடங்களை துறை சார்ந்த நபர்களைக் கொண்டு கூகுள் மீட் போன்ற கான்பரன்சி மூலமாகப் பாடம் கற்பித்துத் தருவது. இவ்விரு செயல்பாடுகளுமே ஒரு பொருளை விற்பனை செய்யும் வணிக விற்பன்னர் போல வாங்குவோர்,கொடுப்போர் எனும் தன்மையில் வேறுவேறு இடச்சூழலில் நிகழக் கூடியதாகி விடுகின்றன. மேலும், இணையச் செயலிகள் யாவும் பதிவாகியுள்ள புரோகிராமை மட்டுமே நடத்துமேயொழிய, தற்கால சமூக நிகழ்வுகளையும், அன்பு, அறம் சார்ந்த மதிப்பீடுகளை வளர்க்கவும், மாணவர்களுக்கான தூண்டல், துலங்கல் சார்ந்த பரிவர்த்தனை நிகழவும் வாய்ப்பு ஏற்படுத்தாமல் செய்துவிடும். கல்வி நன்னெறிக்கானதாக ஒருபோதும் உதவாமல் போய்விடும். இணைய வழியாக ஒரு நபரே பாடம் நடத்துகிறார் என்றால் பாடத்தைத் தவிர வேறு தகவல்களைப் பேசக் கூடாது என அறிவுறுத்தப்படும். கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்-மாணவர்களின் சுதந்திரம், உரிமைகள் பறிபோய் விடும்.

இந்நிலையில் தனித்தனி முதலாளிகள் கல்வியைப் பொருளீட்டும் கருவியாக ஆக்கப்படுவதோடு, அரசிடமிருந்து கல்வி பறிக்கப் படுவதோடு, ஆசிரியர்கள் வேலை வாய்ப்புகள் குறையக் கூடும். தற்பொழுது அரசுப் பணி ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும் பெருந்தொகை செலவழிக்க வேண்டிய அவசியமில்லாமல் போகும் என்று அரசு நினைத்துள்ளதோ? ஆதலால் என்னவோ, தொழில்நுட்பங்களின் துணையோடு இணையவழிக் கல்வியை வளர்ப்பதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம் அரசே ஊக்கப்படுத்துகிறது. கூகுள், சூம் காணொளிக் கூட்டம் நடத்துவோர் சமீப காலத்தில் இதன் பயனாளர்கள் அதிகரிப்பால் மென்பொருள் நிறுவனத்தின் அதிக லாபம் சார்ந்ததாக அமைவதை கொரோனா காலத்தில் அறிய முடிகிறது. ‘கரடிபாத் கற்றல்’ முதலான கற்றல் செயலி வழியாக இளம் குழந்தைகளைக் கற்கத் தூண்டுவது மேலும் கூடுதலாகக் குழந்தைகளை முடக்கத்தை ஏற்படுத்துவதோடு மனச்சோர்வையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.

கல்வியாளர்களும், தனியார் தொழில் நிறுவனங்களும் பணிகளை இணையத்தின் மூலம் பணியைச் செய்வதைப் போன்று, இன்றைய சூழலில் பல நாடகக் குழுக்களும் நாடகக் கற்றல் செயல்பாட்டினையும் பயிற்சியினையும் செயலிகளின் வழியாகக் கற்றுத் தர ஆரம்பித்து விட்டன. நாடகத்தை நவீனத் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றார்போலக் கொண்டு செல்வது புது முயற்சிதான். ஆனால் அது நாடகத்தின் உள்ளார்ந்த அடிப்படை அழகியலைச் சிதைத்து விடும் என்பதே என் எண்ணம். நாடகம் என்றாலே நடிகர்கள், பார்வையாளர்கள் இவர்களுடனான நேரடித் தொடர்பாடு கொண்டதாகும். இந்த நேரடித் தொடர்பாட்டில் பல்வேறு இயங்கியல்பூர்வமான உறவாடலையும் கருத்துரையாடலையும் ஏற்படுத்துவதோடு கூட்டுச் செயல்பாட்டினை உள்ளடக்கிய செயல்பாட்டை அதனதன் வழியில் கொண்டு செல்வது தான் அதற்கான பூர்வீகத்தன்மையாக இருக்க முடியும்.

சமையல் செய்வதற்கு இணையத்தைப் பயன்படுத்துவது போல நாடகமும் அவ்வாறு ஆகிவிடாமல் காப்பது நாடக ஆர்வலர்கள் அனைவருக்கும் பங்குண்டு. கொரோனா காலத்தில் சூம் செயலி, யூ டியுப், கூகுள் மீட் வழியாக நாடகத்தைக் கற்றுத் தரவில்லை என்றால் நாடகம் அழிந்து விடும் என்று எண்ண வேண்டியதில்லை. ஊரடங்கு காலங்களில் நாடக நடிகர்கள், இயக்குநர்கள் நாடகப் பிரதியை உருவாக்குவது, நாடகங்களுக்கான அரங்கப் பொருள்களைத் தயாரிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதும், ஊரடங்கு காலத்திற்குப் பிறகான செயல்பாட்டிற்கானதாக அமையும். நாடக ஒத்திகை என்பது ஒரே நாளில் சந்தித்து, ஒரே நாளில் கலந்து பேசி முடிவடைவதல்ல. இவை ஒவ்வொரு முறையும் நடிகர்கள், நாடக இயக்குநருடனான நேரடித் தொடர்பாட்டினைக் கொண்டதாகும். இணையவழி நாடகக் கற்றல், கற்பித்தல், பயிற்சியளித்தல் எனும் இச்செயல்பாடு, அரங்கியலின் நேரடித் தொடர்பாட்டினை நீர்த்துப் போகச் செய்து விடும். அரங்கக் கற்றல் என்பதே நேரடிப் பரிவர்த்தனைக்கானது என்பதை அரங்கவியலாளர்கள் நன்கு அறிந்தும், ஒரு சில அரங்கவியலாளர்கள் இணையவழி அரங்கப் பயிற்சி அளிப்பது அவர்களின் பிற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது.

கொரோனாவிற்குப் பின்னான லாப நோக்கத்தை மையப்படுத்தி, காய் நகர்த்துவதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எல்லாத் தளங்களிலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு செய்து வருவதை நாம் உணர்ந்து, எதிர்வினை ஆற்ற வேண்டும். கொரோனா எனும் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமியைக் காட்டிலும் மிக மோசமான அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சன உண்மை.

தனிநபரிடமிருந்த மதுக் கடைகளை அரசு கையில் எடுத்ததும், அரசு நடத்த வேண்டிய கல்வியைத் தனியாரிடம் கொடுத்ததும் போக, இன்றோ கல்வி நிறுவனங்களையும் மருத்துவத் துறையையும் இப்படியான அரசின் பொதுத் துறைகளை கார்ப்பரேட் முதலாளிகளிடத்தில் கொரோனாவை முன்னிட்டு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மாறி வரும் சூழல் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கானதாக இல்லை என்பதை இதன் வழியாக நாம் உணர வேண்டும்.

முற்றிலும் இணையவழிக் கல்வி என்பது நடைமுறைப் படுத்தச் சாத்தியமில்லை என்ற போதிலும், ஒருவேளை இணையவழிக் கல்வியை நடைமுறைப் படுத்தினால் கல்வி வழி வரும் வருமானங்கள் பெரு முதலாளிகளிடத்தில் ஒட்டுமொத்தமாகச் சேர்வதோடு, ஆட்சியாளர்களும் தரகு முதலாளிகளிடம் கூட்டு வைப்பதோடு முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்ததாகக் கல்வி அமைந்து விடும். மக்களுக்கான அறநெறி சார்ந்த மதிப்பீட்டுக் கல்வி பின்னுக்குத் தள்ளப்படும். ஏழை எளிய மாணவர்களுக்கக் கல்வி எட்டாக் கனியாக ஆகிவிடும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து வருவது முற்றும் நிறுத்தப்படும்.

இச்சூழலில் கல்வியாளர்கள், முற்போக்குவாதிகள் என்போர் கொரோனாவிற்கு எதிராகப் போராடுகிறோமோ இல்லையோ மாறிவரும் கல்விச் சூழலுக்கு எதிராகவும், தரகு முதலாளியப் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் களத்திலும் எழுத்திலும் போராட வேண்டிய தேவையை கொரோனா காலத்தில் உணர வேண்டியுள்ளது. நோய்மையை வைத்துக் கொண்டு அரசியல் செய்துவதும் ஆதாயம் தேடுவதும் மக்கள் நலன் சார்ந்த அரசின் நடவடிக்கையாக இல்லை என்பதை அறிந்திட வேண்டியுள்ளது.

கல்வி வழி உரிமைகளையும், உடைமைகளையும் பெறுகின்ற காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் இழப்பதோடு இறப்பினை நோக்கி நகரும் வாழ்க்கைக்கு நாம் தயாராகிக் கொண்டுள்ளோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மாறி வரும் கல்விச் சூழல் ஒருபுறமென்றால், மறுபுறம் சாதிய மதவாதம் மேலோங்கி வளர்கின்றது. சனாதனப் பிற்போக்குத்தனம் மனித சமூகத்தை ஒன்றிணைய விடாமலும், கல்வியாளர்களின் மேல் தாக்குதலையும் செய்து வருகிறது. வாழ்வின் மோசமான சூழலிருந்து விடுபட கொரோனாவை விடத் தீங்கு விளைவிக்கும் வைரசுகளை அடையாளங்கண்டு, கல்வி வழியாக மனித சமூக விடியலை வென்றெடுப்பதும், நல்வாழ்விற்கான மனித சமூகத்தைக் கட்டமைப்பதும் எல்லோரின் கடமையுமாகும். கொரோனா காலத்தின் பின்னும் முளைத்து வரும் இணைய வழிக்கல்வி என்பது சமூக வளர்ச்சிக்கானதாக இல்லாமல் மானுட வீழ்ச்சிக்கானதாக இருக்கும் என்பதை அறிந்து செயல்பட வேண்டியுள்ளது.

- ம.கருணாநிதி