அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே,

இந்தியாவில் நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகரக் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டி (SOC), இ.பொ.க. (மா-லெ) வின் 10-வது பிளீனம் கடந்த 13.10.2020 ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இப்பிளீனத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல புதிய தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

9-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.அ.க.வின் அரசியல் ஓட்டாண்டித் தனத்தாலும் அதிகாரத்துவப் போக்காலும் தலைமைக்குள் முரண்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியால் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, அக்கூட்டத்தில் தலைமைக் குழுவினர் பதவி விலகினர். முரண்பாடுகளைத் தீர்த்து புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்க பிளீனம் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. இதனை செயல்படுத்த இடைக்காலக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

இடைக்கால கமிட்டியானது, அணிகளின் பரிசீலனைக்காக அறிக்கைகள், ஆவணங்களை சுற்றுக்கு விட்டு தனது பணியைத் தொடங்கியது. இந்த ஆவணங்களை சுற்றுக்கு விட்டால், தான் அதிகாரத்துவம் எனும் அரசியல் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதும், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழியில் இந்திய நிலைமைகளில் புதிய தாராளவாதக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பருண்மையாக ஆய்வு செய்து, கோட்பாட்டு ரீதியில் முடிவுகளை எடுத்து கட்சியின் திசை வழியைத் தீர்மானித்து வழிகாட்டவில்லை என்ற தனது தவறும் அம்பலமாகும் என தலைமை அச்சப்பட்டது. இதனால், தலைமைக்குழுவின் பெரும்பான்மை தரப்பு அமைப்பு முடிவுகளையும், அமைப்பு முறையையும் தூக்கி எறிந்து பிளீன வேலைகளை முடக்கவும், இடைக்காலக் கமிட்டியையே கலைக்கவும் முயற்சித்தது.

அணிகள், தலைமையின் அதிகாரத்துவப் போக்கை கண்டித்து அமைப்பு முறையில் ஊன்றி நின்றனர். பெரும்பான்மை அணிகளிடம் மதிப்பிழந்து அம்பலப்பட்ட தலைமையின் சீர்குலைவு வேலைகளை அணிகளின் ஆதரவுடன் எதிர்கொண்ட இடைக்கால கமிட்டியானது தனது கடமையில் ஊன்றி நின்றது.

இதனால் தனது பாரதூரமான தவறுகள், பரிசீலனைக்கு உள்ளாவதை விரும்பாத தலைமையின் பெரும்பான்மை தரப்பானது, அணிகளின் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்காமல் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டது. 10 - வது பிளீனத்தை நடத்தி புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் கட்சியை உள்ளிருந்தே பிளவுபடுத்தி, சீர்குலைக்கும் முன்னாள் தலைமையின் சதித்தனம் முறியடிக்கப்பட்டது. இது மா.அ.க.வின் வராற்றில் முக்கிய நிகழ்வாகும்.

’’சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும், அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக் கூடாது; அதன் மூலம்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலில் கொண்டு செல்ல முடியும்” என உலக முதலாளித்துவம் பீற்றிக் கொண்ட புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை, இன்று பளிச்சென்று காட்டிவிட்டது கொரானா.

’’பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் கடமை இல்லை. அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் பார்த்துக் கொள்ளட்டும்’’ என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கட்டுப்பாட்டிற்குச் சென்றன.

இக்கொள்கையை தீவிரமாக அமல்படுத்தியதால் கொரோனா உலகப் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், சொந்த நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதைத் தடுக்க முடியாமல், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகள் தோல்வியடைந்துள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்தே சரியத் தொடங்கிய உலக முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு, கொரோனாவுக்குப்பின் நொறுங்கி அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

2008 - இல் ஏற்பட்ட ஏகாதிபத்திய - முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியானது, சமூகக் கட்டமைப்பு நெருக்கடியாக மாறி, இன்று வரை தீர்க்க முடியாதபடி முட்டுச்சந்தில் நிற்கிறது. இக்கட்டமைப்பு நெருக்கடியால் வெடித்தெழும் போராட்டங்களை ஒடுக்கவும், நவீன வடிவங்களில் சுரண்டலை அதிகரிக்கவும்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலகெங்கும் வலதுசாரி ஆட்சிகளின் மூலம் பாசிசத்தைப் புகுத்தி வருகிறது.

மறுபுறம், ஏகாதிபத்திய முகாம்களின் பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப புதிய கூட்டணிகள் உருவாகிறது. இதில் தெற்காசியப் பிராந்தியத்தில், அமெரிக்காவின் அடியாளாக மோடி தலைமையிலான அரசு சீனாவுடனான எல்லைத் தகராறில் இறங்கி, தேசிய வெறியைக் கிளறிவிடுகிறது.

இந்தியாவில் அம்பானி, அதானி, அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளால் இயற்கை வளங்கள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த கிராமப்புற, மலைவாழ் பழங்குடி மக்கள் சென்னை, மும்பை, சூரத் போன்ற தொழில் நகரங்களில் நவீன கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டனர்.

இப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதம் மோடி அரசால் திடீரென அமல்படுத்தப்பட்ட கொரோனா பெயரிலான ஊரடங்கால், வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தேசிய நெடுஞ்சாலைகளில் அகதிகளாக சொந்த ஊருக்கு கால்நடையாக ரத்தம் சொட்டச் சொட்ட நடந்தே சென்ற அவலத்தை நாடே பார்த்தது. விவசாயமும், சிறுதொழிலும் கார்ப்ரேட்டுகளால் அழிக்கப்பட்டு வரும் நிலையில், சொந்த ஊர் திரும்பிய இம்மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் பரிதவிக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் இருப்பதையும் இழந்துள்ள நிலையில் இன்று, கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு மட்டும் 17% உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு வருகிறது. 8 மணி நேர வேலை என்ற ஏட்டளவிலான உரிமையும் பறிபோகிறது. 1990-களில் இருந்தே விவசாயத் துறையில் கார்ப்பரேட்டுகள் புகுத்தப்பட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.

இன்றோ, விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்ட வேளான் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவற்றை எதிர்க்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஊஃபா மற்றும் NIA கைதுகள் மூலம் அச்சுறுத்துகிறது பாசிச மோடி அரசு.

நாடெங்கும் உழைக்கும் மக்கள் மீது இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளின் குண்டர்படைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இசுலாமியர்களுக்கு எதிரான படுகொலைகளும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களும், பெண்கள், சிறுமிகள் மீதான வல்லுறவுக் குற்றங்களும் தொடர மோடி தலைமையிலான அரசே துணை நிற்கிறது.

உலகமே பார்க்க பாபர் மசூதியை இடித்த கும்பலின் தலைவர்களை உத்தமர்கள் என நீதிமன்றமே விடுவிக்கிறது. இந்துமத வெறியாட்டங்களின் கூடாரமாக உள்ள உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆட்சியை, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் கனவான ’ராமராஜ்ஜியத்தின்’ புதிய சோதனைக்கூடமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்த நாட்டையும் உ.பி. யாக மாற்ற கிராமப்புறங்களில் இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளால் வருணாசிரம, ஆதிக்க சாதி வெறியாட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.

நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்களிடையே ஏகாதிபத்தியங்களின் சீரழிந்த, ஆபாச, நுகர்வுவெறிப் பண்பாடு பரப்பப்படுகிறது. மோடி அரசு, புராண பொய்ப்புரட்டுகளை பாடத்திட்டமாகப் புகுத்தி கல்வியை காவிமயமாக்குகிறது. ஏழை, கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தினரின் உயர்கல்வியும், மருத்துவக் கனவும் ‘நீட்` போன்ற மையப்படுத்தப்பட்ட தேர்வுகளால் பறிக்கப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இந்து - இந்தி - இந்தியா எனும் இந்துராஷ்டிர ஆட்சிக் கனவுக்கான ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பண்பாடு ஆகியவற்றை நிலைநாட்டவே மோடி அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது.

இந்து மதவெறி பார்ப்பன பாசிசத்தை எதிர்த்தும், இயற்கையையும், நாட்டையும் சூறையாடி வரும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின், உள்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் தாக்குதல்களை எதிர்த்தும் எமது அமைப்புகள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது. இத்தகைய அரசியல் சூழலில் கட்சியை வலுப்படுத்தவும், வழிநடத்திச் செல்லவும் புதிய தலைமைக்குழு பொறுப்பேற்றுள்ளது.

மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்து, புரட்சிகர சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, நாட்டையும், மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் - காவி பாசிச தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்கும் வகையில் பொருத்தமான புதிய செயல் தந்திரத்தை வகுத்து முன் வைக்கவும், புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கவும் புதிய தலைமைக்குழு உறுதி ஏற்றுள்ளது.

தோழமையுடன்,
மாநில அமைப்புக் கமிட்டி (SOC),
இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ),
தமிழ்நாடு.

Pin It