அன்பார்ந்த நண்பர்களே!

வணக்கம். கீற்று இணைய தளத்தில் 4-8-2020 அன்று ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "சீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது திட்டமிட்டு அவதூறு கூறப்பட்டுள்ளது.

 "சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள். அதற்குத் தலைமையின் எதிர்வினை "அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று தகவல் தெரிவித்தவர்களிடமே கேள்வி கேட்டதுதான்."

இது ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திரு.ஜெயகாந்த்சிங் என்பவர் அவர் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட போது ‘சூறாவளி' எனும் பெயரில் அவர் நடத்திய வலைத் தளத்தில் எழுதிய அவதூறு தான். பல வருடங்களாக சீந்துவாரற்று கிடந்த அவதூறை தூசி தட்டி எடுத்து வேறு இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். தான் எழுப்பிய மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதாரத்தை கூட இத்தனை ஆண்டுகளாக ஏன் திரட்டவில்லை என அவருடன் சேர்ந்து எழுதும் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவினர் கேள்வி கேட்காமல் அவதூறை அப்படியே வாந்தி எடுத்துள்ளனர்.

எவ்வித முகாந்திரமும் இல்லாமல் போகின்ற போக்கில் அவர் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளார் என்று இவர்கள் சொல்வதற்கும் பா.ஜ.க. பாசிஸ்டுகளின் பிரச்சார முறைக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் போலீசு எப் அய் ஆர் போட்டுவிட்டால் குற்றசாட்டப்பட்டவர் தான் இனி, தான் தவறு செய்யவில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமாம். இந்த காவி பாசிஸ்டுகளின் ‘நீதி பரிபாலன' முறையை தான் இவர்களும் முன்வைக்கிறார்கள். நாங்கள் குற்றஞ்சாட்டிவிட்டோம், முகாந்திரம், ஆதாரம் என்று யாராவது அவர்களிடம் கேட்டால், குற்றம் செய்யவில்லை என நீங்கள் நிரூபியுங்கள் எனத் திருப்பி கேட்கிறார்கள்.

தோழர் ராஜு தன் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை யாரும் தெரிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையானதுதான். திரு.ஜெய்காந்த்சிங்கும் தோழர் ராஜுவும் பல்வேறு போராட்டங்களில் அக்காலத்தில் இணைந்து ஈடுபட்டது விருதாச்சலம் வட்டாரம் அறிந்ததே. அதுமட்டுமன்றி தோழர்.ராஜுவின் குடும்பத்தில் ஒரு நபராகவும் அவர் பழகி வந்துள்ளார். அப்பேற்பட்ட 'தோழரால்' ஆதாரத்தை காட்ட முடியவில்லையேன்றால் என்னவென்பது. குற்றச்சாட்டு வைத்த ஜெயகாந்த் சிங்கிற்கு இது பொய் என்பது நன்கு தெரியும்.

தினமலர் போன்று அவதூறுகளை அவிழ்த்துவிட்டால், மக்களுக்காக பணியாற்றும் அமைப்புகளின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் அது பயன்படுமே ஒழிய, சொல்பவர்களின் நோக்கத்திற்குகூட அவை பயனளிக்காது. இதை சொல்வதற்கு காரணம் பொதுவாழ்க்கையில் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லாத ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.

கீற்று இணையத் தளம் என்பது முற்போக்கானவர்கள், பகுத்தறிவாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அறியப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மீதும், அமைப்பிலுள்ள தோழர்கள் மீதும் அரசியல் ரீதியாக அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை, தனிநபர்களாக நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. எனினும் கீற்று ஓர் நேர்மையான தளம் என்றால் மக்களுக்காக செயல்படும் அமைப்பின் தலைவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம், அடிப்படை ஆதாரம் என்ன என்பதைக் கேட்டு தீர விசாரித்த பின்னர் தான் இந்த கட்டுரையை பதிப்பித்து இருக்க வேண்டும்.

மேலும் பல்வேறு இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் சங்கமமாக இருக்கிற கீற்று இணையதளம் தோழர் ராஜு பற்றி விசாரித்து தெரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. எனவே இது போன்ற அவதூறுகளை பரப்புவதை கீற்று இணையத் தளம் இனியாவது நிறுத்திக் கொள்ளவும். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மீது அவதூறாக வெளிவந்த பகுதிகளை மேற்கூறிய கட்டுரையில் இருந்து உடனே நீக்க வேண்டும். தங்களது தவறை பரிசீலிக்க வேண்டும்.

தோழர் ராஜு பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர்களிடம் அதுதொடர்பாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் கேளுங்கள். அதை எடுத்து கொண்டு விருத்தாசலம் வாருங்கள். தோழர் ராஜு அவர்களின் சொத்து விபரங்களை பற்றியும், வாழ்வாதாரத்திற்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றியும், எல்லா வகையிலும் பதில் அளிக்க அவர் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- தலைமைக் குழு,

மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு – புதுவை

Comments

2 comments

2
P ILANGO SUBRAMANIAN
சிறிது காலத்துக்கு முன்பு, தோழர் மருதையன் உள்ளிட்ட சில தோழர்கள் கட்சியில் இருந்து விலகியதற்கு, இந்த ரியல் எஸ்டேட் ஊழலில் தங்களுக்குரிய பங்கைக் கேட்டு அது கிடைக்காமல் போனதே காரணம் என்று பரவலாகப் பேசப் படுகிறது. இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது மாநில அமைப்புக் கமிட்டியின் தலைமை?
Dharmar Raju
[quote name="P ILANGO SUBRAMANIAN"]சிறிது காலத்துக்கு முன்பு, தோழர் மருதையன் உள்ளிட்ட சில தோழர்கள் கட்சியில் இருந்து விலகியதற்கு, இந்த ரியல் எஸ்டேட் ஊழலில் தங்களுக்குரிய பங்கைக் கேட்டு அது கிடைக்காமல் போனதே காரணம் என்று பரவலாகப் பேசப் படுகிறது. இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது மாநில அமைப்புக் கமிட்டியின் தலைமை?[/quote] நண்பரே அமைப்பிலிருந்துமுன்பு வெளியேறியவர்கள் ஏன் வெளியேறினோம் என்று சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தெரிவித்து விட்ட பிறகு இப்படி விமர்சனம் வைப்பது அபத்தம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.