ma ka i ka

மூடு டாஸ்மாக்கை மூடு பாடலும், அதற்காக ம.க.இ.க (மக்கள் கலை இலக்கிய கழகம்) பாடகர் தோழர் கோவன் கைதும், தற்போது அவர் பிணையில் விடப்பட்டிருப்பதும் தெரிந்ததுதான். தோழர் கோவன் கைதை தி.மு.க, காங்கிரசு உட்பட ஆளும்வர்க்க கட்சிகளில் பெரும்பாலானவை கண்டித்தன. அது உண்மையிலேயே ஆட்சியிலிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஒரு நெருக்கடிதான். இந்த நெருக்கடிகள் இல்லாதிருந்தால் பிணை இப்போது கிடைத்திருக்காது.

இந்த நிலையில், ம.க.இ.க ஆதரவு இதழான புதிய ஜனநாயகம் மின்னிதழில் "2G வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள் - 2G மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதி வருவதன் மூலம், தி.மு.க-வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்" என்றொரு கட்டுரை நவம்பர் 3-இல் வெளியிடப்பட்டுள்ளது. (இது தோழர் கோவனின் பிணை கிடைக்கும் முன்பாகும்)

இதை ம.ஜ.இ.க (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) வன்மையாக கண்டித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது. ம.ஜ.இ.க ஆதரவு மின்னிதழான samaran1917.blogspot.in -இல் "ஜெயா அரசே! ம.க.இ.க பாடகர் கோவன் மீதான தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறு! உடனே விடுதலை செய்!" என்று வெளியிட்ட சுவரொட்டியில் "ம.க.இ.க-வே பார்ப்பன எதிர்ப்பு பேரால் '2G புகழ்' இராசா, கனிமொழி, மாறன் கும்பலுக்குப் பரிந்து பேசாதே!" என்று முழக்கம் வைத்திருக்கிறது. (இதுவும் தோழர் கோவனின் பிணை கிடைப்பதற்கு முன்பாகும்)

ம.க.இ.க-வின் கட்டுரையும், ம.ஜ.இ.க-வின் கண்டனமும் அரசியல் பார்வையாளர்களின் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ம.க.இ.க தனது நெருக்கடியின் பொருட்டு அ.தி.மு.க அரசை எதிர்கொள்ள தி.மு.க-வோடு சமரசம் செய்கிறதா? என்பது விவாதம்.

நாம் அதை சமரசம் என்றபோதும் ஆதரிக்கிறோம். இந்த சமரசம் தேர்தல் கட்சியாக சீரழிவதற்கோ அல்லது அரசு ஆதரவு ஒட்டுக்குழுவாகப் போவதற்கோ இல்லை என்று நம்புகிறோம். ம.க.இ.க-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் நமக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான புரட்சிகர இயக்கங்கள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ள நிலையில் ம.க.இ.க மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. டாஸ்மாக்கை மூடக் கோரும் போராட்டம், அதற்கு முன்பே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்களிப்பு, தற்போது நடந்த வழக்குரைஞர்கள் போராட்டத்திலும் இவர்களது ஆதரவு சக்திகளின் பங்கேற்பு என தொடர்ச்சியாக மக்கள் பிரச்சினையில் முன்நிற்கும் மார்க்சிய-லெனினிய ஆதரவு அமைப்புகளில் ம.க.இ.க முன்னணிப் பாத்திரம் வகிப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.

இவையெல்லாம் சேர்ந்துதான் அரசின் நெருக்கடியையும் கொண்டு வந்திருக்கிறது. இந்த நெருக்கடிகள் ம.க.இ.க-வின் சக்திக்கு அதிகப்படியானதே. இப்போது இதை அவர்கள் முறையாக கையாண்டு வெளிவரவில்லை என்றால் முடங்கிப்போக வேண்டியதுதான். அரசு கொடுக்கும் நெருக்கடிகளும் அதற்குத்தான். நாம் அது முடங்கிப் போவதை விரும்பவில்லை.

எந்த ஒரு அமைப்பும் தனது சொந்த பலத்தால் மட்டுமே அரசை எதிர்கொண்டு நெருக்கடியைத் தீர்க்க முடியாத நிலையில், அதற்கான ஆதரவை உருவாக்கிக் கொள்வதுதான் அரசியல் அறிவு. ஆதரவைப் பெருக்கிக் கொள்வது என்பது எதிரிகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்வதும்தான். ஏற்கனவே அப்படி பயன்படுத்திக் கொண்டதால்தான் இன்றைக்கு சில இயக்கங்களும், முக்கியமான தோழர்களும் உயிரோடு இருக்கிறார்கள்.

சில ஆதாரங்கள்:

புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கைகளுக்காக தோழர்கள் கலியபெருமாள், தியாகு, கிருஷ்ணசாமி, பஞ்சலிங்கம், கந்தசாமி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தெரியும். அவர்கள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஆளும் வர்க்கத்திலிருந்து கிடைத்த உதவிகள் தெரியுமா? அன்றைக்கு தமிழ்நாடு மக்கள் குடியுரிமை சங்கம் என்ற அமைப்பு இருந்தது. இதுதான் பின்னாளில் மக்கள் உரிமைக் கழகம் என்றானது என சொல்லப்படுகிறது. அவ்வமைப்பின் பொறுப்பாளராக தி.மு.க-விலிருந்த முக்கியமானவரான க.சுப்பு இருந்துள்ளார். அதேபோல் தி.மு.க ஆதரவோடு சென்னை மேயராக இருந்துள்ள எஸ்.கிருஷ்ணசாமியும் பொறுப்பு வகித்துள்ளார். இவர் ஏ.ஐ.டி.யு.சி தொழிசங்கத்தில் பொறுப்பு வகித்தபோதும் கட்சிக்குள் வராதவரென சொல்லப்படுகிறது. இவர்களோடு காங்கிரசிலிருந்த டாக்டர் விஜயலட்சுமி, வலம்புரி ஜான் (அப்போது இவர் அ.இ.அ.தி.மு.க-வா என தெரியவில்லை) ஆகியோரெல்லாம் குரல் கொடுத்துள்ளனர். ஆளும்வர்க்கத்திற்குள்ளிருந்து கொடுக்கப்பட்ட இந்நெருக்கடிகள் தோழர்கள் 5 பேரின் தூக்குத் தண்டனையை இல்லாமல் செய்ததில் முக்கியப் பங்காற்றியது.

இராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் ஒருத்தரைக்கூட தூக்கு கயிற்றுக்கு இரையாக்காமல் காப்பாற்றியதிலும் ஆளும்வர்க்க இயக்கங்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பு உள்ளதுதானே!

அவ்வளவு ஏன், நம் மதிப்பிற்குரிய தோழர் ஏ.எம்.கே (1972-இல் எனதான் கேள்விப்பட்டுள்ளோம்) ஸ்ரீவில்லிப்புதூரில் கைது செய்யப்பட்டார். மிக முக்கியமானவராக இருந்த அவரை 'என்கவுண்டரில்' கொல்ல நினைத்ததாம் அரசு. அப்போதும் தோழர்கள் சாமர்த்தியமாக வேலை செய்திருக்கிறார்கள். க.சுப்புவையும், அட்வகேட் இராமசாமியையும் குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள். சென்னை மேயராக இருந்த D.நாராயணா ரெட்டி தனது அலையோசை பத்திரிகையில் செய்தி வெளியிட்டு பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளார். இதுபோன்ற பல்வேறு நிர்பந்தங்களாலேயே தோழர் ஏ.எம்.கே அன்று காப்பாற்றப்பட்டார்.

மேற்கூறிய நடவடிக்கைகளை நாம் தவறென்று சொல்ல முடியுமா? இதுதான் சரி. புரட்சியாளர்களும், புரட்சிகர இயக்கங்களும் காப்பாற்றப்படுவதற்கு எல்லா இடத்திலும் லாபி செய்கிற திறமை இருக்க வேண்டும். எல்லோரையும் சரிசமமாக எதிர்ப்பதென்பது அரசியல் சாதுர்யமல்ல. பிரித்து கையாள்வதுதான் சாமர்த்தியம். ஆகவே ம.க.இ.க ஆளும்வர்க்க கட்சிகளை பிரித்து கையாண்டால் அதை ஆதரிக்கலாம் தோழர்களே!

- திருப்பூர் குணா

Comments

20 comments

20
bharath
http://www.vinavu.com/2015/11/03/tn-brahminical-forces-efforts-to-isolate-dmk/

மேற்குறிப்பிட்ட வினவு கட்டுரை, பு.ஜ வில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வந்ததாகும்.வினவு தளத்தில் நவம்பர் 3 பதிந்திருக்கிறார்கள்.

இது திட்டமிட்டு புதியஜனநாயகத்தில் வெளியிடவில்லை, ஏனெனில் அப்பொழுது கோவன் கைது செய்யப்படவில்லை.

கருனாநிதி பாஜக தமிழகத்தில் பற்றிப் பரவ ஒரு காரணமாயிருந்தாலும், அவருக்குப்பிறகு மிச்சமிருக்கும் திராவிடத்தின் கூறுகளும் அழிந்துபோகும், மேலும் வரும் தேர்தலில் பார்ப்பனக்கூட்டாளிகள் தி.மு.க வை தனிமைப்படுத்தி அழிக்க முயலுகிறது என்பதாகத்தான் அக்கட்டுரையில் உள்ளதே தவிர, திமுகவை ஆதரிக்கும் விதத்தில் இல்லை என்பதே சரியான பார்வையாகும்.
bagathsingh barathi
ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை கையாளுவதும், அல்லது பிரித்து கையாளுவதும் , ஒடுக்குமுறையிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆளும் வர்க்கத்துடன் அரசியல்- அமைப்பு - தத்துவார்த்த ரீதியாக சமரசம் செய்துகொண்டு அதன் வாலாக மாறுவதும் வேறு வேறு. இரண்டிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. ம.க.இ.க சமரசம் செய்தால் தவறில்லை ஆதரிக்கலாம் என கூறுவதன் மூலம் தங்களை பற்றியும் நிறைய அறிந்துகொண்டேன் திருப்பூர் குணா !!
bagathsingh barathi
இந்து மதம் மேல்கட்டுமானாக மட்டுமன்றி, அது அடிக்கட்டுமானகாவும் இருக்கிறது.பார்ப்பன (இந்து ) மதத்திற்கு எதிராக போர் தொடுப்போம்( மதத்திற்கு எதிரான போர் என்பது அராஜகவாதம் என்பதே மார்க்சிய நிலைப்பாடு )- புரட்சிப்புயல் ம க இ க வின் தத்துவார்த்த இதழ்.
இதுவே மார்க்சியத்திலிருந்து பு .ஜவின் கோட்பாட்டு விலகல். இதுவே அவர்களை கிராம்சியத்தை நோக்கி , அல்தூசரை நோக்கி , எம்.என்.ராயை நோக்கி ,பெரியாரை நோக்கி , கால்ட்வேல்லை நோக்கி செலுத்துகிறது.
bagathsingh barathi
இந்துத்துவ பாசிச சக்திகளோடு உங்கள் பாஷையில் சொல்வதெனில், பார்ப்பன பாசிச சக்திகளோடு கூடிகுலாவிய கும்பல்தான் கருணாநிதி கும்பல். பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து மத்தியில் அமைச்சரான சாராய சாம்ராஜ்ஜிய மன்னன் டி.ஆர்.பாலுவும் , கருணாவும் ,மீண்டும் அதே சக்திகளோடு கூட்டணி வைக்கலாம்.தங்கள் ஊழல் வழக்கை ஊத்தி மூடலாம். ஏன் காங்கிரஸ் பாசிச கும்பலோடு சேர்ந்தும் ஊத்தி மூடலாம்.விடுங்க.கருணாநிதிக்கே இல்லாத கவலை உங்களுக்கு ஏன் அய்யா ?? பார்ப்பன பண்டாராம் சங்கராச்சியாரை கைது செய்த ஜெயா பார்ப்பன பாசிஸ்டா ? பார்ப்பன முற்போக்குவாதியா ?? இதெல்லாம் ஆளும் வர்க்கங்களின் பேரம் நடத்தும் தந்திர அரசியல்.அதில் பார்ப்பன எதிர்ப்பு எனும் பேரால் ஆசியாவின் முதல் பணக்கார கருணா கும்பலுக்கு பரிந்து பேசுவது ஏன் ? தமிழகத்தை தமிழ்தேசியத்தை அழித்து துடைத்த இந்த இரு திராவிட கட்சிகளும் ஒன்றே என்பதுதான் சரியான நிலைப்பாடு. ஊடகம் ஆளும் வர்க்கத்து ஆயுதம். அப்படிதான் பேசும்.பு ஜ யாருடைய ஆயுதம் ?
bagathsingh barathi
அமெரிக்க அடிவருடித்தனம் , உலகமய தாராளமய தனியார்மய ஆதரவு , தேசிய இன ஒடுக்குமுறைக்கு ஆதரவு ,இந்துத்துவ பாசிசத்தின் இளைய பங்காளியாக இருப்பது என எல்லா கொள்கையிலும் தி .மு .க , அ.இ .அ.தி.மு .க இரண்டும் ஒரே மட்டைகளே .அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமதவெறி அமைப்புகள் அமெரிக்காவில் சுதந்திரமாகச் செயல்படுவதை அனுமதிக்கிறது. இந்துத்துவ அமைப்புகளுக்கு ஏராளமாக நிதி உதவி வழங்குகிறது. ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அமெரிக்காவில் நிதிவசூல் செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதில் பஜ்ரங்தள் அமைப்பிற்கு மட்டும்தான் - மதக்கலவரங்களில் ஈடுபடுவதாகக் கூறி - அது வசூல் செய்யும் நிதிக்கான வரிச்சலுகைக்குத் தடைவிதித்துள்ளது. மேலும் குஜராத் கலவரத்திற்குக் காரணமான மோடியின் மீது அமெரிக்கா விசா தடை விதித்திருந்தது. ஆனால் மோடி பிரதமரானவுடன் அந்தத்தடையைத் தானாகவே நீக்கிக் கொண்டது. எனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்துத்துவ, மதவாத சக்திகளை எதிர்க்கிறது என்பது ஒரு மாயையேயாகும். . ஆனால் இஸ்லாமிய மதத்தையே பயங்கரவாத மதமாகச் சித்தரித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்த்துச் செயல்படுகின்றன என்பதுதான் நிதர்சமானகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது புதியகாலனியாதிக் கத்தைத் தொடர, அரபு நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்திற் கான ஆக்ரமிப்புப் போர்களை நியாயப்படுத்த மதவாதத்தையும், இனவாதத்தையும் கடைப்பிடிக்கிறது. காட்டுமிராண்டி இஸ்லாமியர்களை எதிர்த்து நாகரிகமடைந்த கிறிஸ்துவர்கள் நடத்தும் போர் என அதைச் சித்தரிக்கிறது. எனவே இந்து மதவாதத்திற்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்கிறது என்று கூறுவது இந்திய மக்களின், உலக மக்களின் முதன்மையான பொது எதிரியாகத் திகழும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொள்ளும் நயவஞ்சகமேயாகும். எனவே இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்த போராட்டம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. அவ்வாறு பிரிப்பது இந்திய மக்களின் முதல் எதிரியான அமெரிக்கவுக்கு ஆதரவானது மட்டுமல்ல, இந்துத்துவப் பாசிச சக்திகளைப் பலப்படுத்துவதாகவே இருக்கும்.
bagathsingh barathi
சமரசம் செய்வதில் தவறில்லை என்பதும் சமரசமே. குணா , ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொள்வதை வெறும் நிகழ்வாக பார்க்கிறார். நிகழ்வின் மூலநோயான கோட்பாட்டு சமரசத்தை பார்க்க விரும்பவில்லை . சந்தர்ப்பவாதத்தை பிழைப்புவாதத்தை கலைப்புவாததை செயல்தந்திரம் என்கிறார். நோயின் அடிப்படையை பார்க்க மறுக்கிறாரா அல்லது பார்க்க விரும்பவில்லையா என தெரியவில்லை.பார்ப்பனிய எதிர்ப்பின் பெயரால், பார்ப்பன நரித்தனம் என்ற பேரால், பார்ப்பனர் அல்லாத நரித்தனத்தை ஆதரிப்பது செயல் தந்திரம் / போர்த்தந்திரம் என்றால் குணாவிடம் வாதிப்பது பயனில்லை. இந்த விவாதம் படிப்பவருக்கே. தோழர்களை விடுதலை செய்யும் பொருட்டு தி.மு.க வை பரிந்து பேசவில்லை பு.ஜ. கோட்பாட்டு ரீதியாகவே பெரியாரின் திராவிட குட்டையில் விழுந்து , கால்ட்வேல்லிர்க்கு நூற்றாண்டு விழா எடுக்கும் தி.க வாக,வீரமணியிடம் இருந்து பெரியாரை மீட்கும் புதிய தி.கவாக தேய்ந்து போய்விட்டதால் வந்த சமரசம் இது.கோவன் கைதுக்கு முன்பே 2ஜி ஊழல் குறித்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.ஜெயா ஆட்சி துவங்கியதில் இருந்தே கலைஞரின் ஊடக வெளிச்சமும் கருணையும் பு ஜ விற்கு கிடைத்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல.
bagathsingh barathi
ஆளும் வர்க்கத்தின் முரண்பாடு எப்போது பயன்படுத்துவது? ஒரு ஜனநாயக இயக்கத்திற்கான ஐக்கியத்தில் மறைமுக சேமிப்பு சக்திகைளை கடைசிய ஆயுதமாக பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆளும் வர்க்கத்தின் ஊழலுக்கு மாற்றாக இன்னொரு ஆளும் வர்க்கத்தின் ஊழலுக்கு முட்டுக் கொடுப்பது செயல்தந்திரமா? இதிலெல்லாம் பாட்டாளி மக்களின் வளமும் செல்வமும் கொள்ளையடிக்கும் ஆளும் வர்க்கத்தை சாதியாக பிரித்து கொள்ளையடிக்கும் தலித் முதலாளிக்காக பரிந்து இயக்கம் நடத்துவது இந்த சுரண்டல் முதலாளித்துவ அரசமைப்பையும் முதன்மையான அமேரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களே ஊழலுக்கு ஊற்றுக்கண் என்ற உண்மையை மறைக்கும் இந்த செயல்பாடுகள் ஜனநாயக புரட்சிக்கான பாட்டாளிவர்க்க செயல்தந்திரங்களா? இல்லை. இல்லவே இல்லை. அரசமைப்புக்கு எதிரான ஒரு ஜனநாயக இயக்கத்திற்கான ஒற்றுமை ஐக்கியத்திற்கான ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான வேறுபாடுகளை பயன்படுத்துவதை புரட்சிகர கட்சிகள் தங்கள் வாழ்வுக்காக ஆளும் வர்க்கங்களோடு சமரசம் செய்வதும் லாபி செய்வதும் ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான வேறுபாடு பயன்படுத்துவது ஆகும் என்று நீங்கள் எழுதியுள்ளது தவறானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். புரட்சிகர கட்சிகள் மறைமுக சேமிப்பு சக்திகளை கூட மக்கள் நலனுக்காக ஜனநாயக புரட்சியின் ஜனநாயக இயக்கத்தின் ஒரு குறிப்பான நேரத்திற்கான முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்துமே அன்றி, தங்கள் பிழைப்புக்காக அல்ல.
அனானியன்
//////இந்து மதம் மேல்கட்டுமானாக மட்டுமன்றி, அது அடிக்கட்டுமானகா வும் இருக்கிறது.பார் ப்பன (இந்து ) மதத்திற்கு எதிராக போர் தொடுப்போம்( மதத்திற்கு எதிரான போர் என்பது அராஜகவாதம் என்பதே மார்க்சிய நிலைப்பாடு )- புரட்சிப்புயல் ம க இ க வின் தத்துவார்த்த இதழ்.//////

இந்து மதமா - சாதியா ? .. ப.சி. பாரதி அவர்களே ..

அவதூறு பரப்ப வேண்டும் - துணிந்து செயல்பட வக்கில்லை எனினும் அவதூறு பேசி அணிகளை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு மஜஇக தாழ்ந்து போனதை எண்ணி பரிதாபமாகத் தான் இருக்கிறது.
bagathsingh barathi
விமர்சனதிற்கு கோட்பாட்டு ரீதியாக பதில் தாருங்கள்.எங்கள் நிலைப்பாடு தவறு எனில் கோட்பாட்டு ரீதியாக பதில் தாருங்கள்.இது புரட்சிபுயலில் வந்த உங்கள் நிலைப்பாடு. (புரட்சிபுயல் மே-- டிசம்பர் 1993) அதைவிடுத்து தேவையற்ற வாதம் செய்வதில் பயனில்லை. புரட்சிப்புயல் உங்கள் தத்துவார்த்த இதழ் இல்லையா ?? நீங்கள் எந்த அமைப்பு ? உங்களின் நிலைப்பாடு என்ன ?? Ananiyan
bagathsingh barathi
பாசிசம் ஜெர்மனில் இனவடிவம் எடுத்தது போல,இங்கே மத வடிவமும் ,சாதி வடிவமும் எடுக்கிறது. பாசிசம் என்பது பொருளாதார நெருக்கடியின் விளைபொருள். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி. பாசிசம் வளர வளர நாடு அந்நிய நிதிமூலதன கும்பலின் வேட்டைக்காடாய் மாறிவருகிறது என்றே பொருள்.அதை மறைக்கவே நாம் வேட்டையாடப்ப டுகிறோம்.பாசிசத்தை பார்ப்பன பாசிசமாக குறுக்கும் சூழ்ச்சியும் நடைபெறுகிறது. மோடி எதிர்ப்பு நிதிஷ்குமாரிலும்--மன்மோகனிலும்,ஜெயா எதிர்ப்பு கருணாவிலும் போய் நிற்கும் அவலம் இதனால்தான் . பார்ப்பனன் சூத்திரன் பஞ்சமன் என யார் ஆளும் வர்க்கமாக இருந்தாலும் பாசிசத்தை வேறுவடிவங்களில் கையில்எடுக்கும்.காங்கிரஸ் பா.ஜ.க பாசிசத்தின் வெவ்வேறு முகங்கள் எனில், அந்த இருமுகங்களுக்கும் தமிழகத்தில் விலாசம் வாங்கி தந்த ஜெயா ,கருணாநிதி இருவரும் இந்துத்துவ பாசிசத்தின் திராவிட முகங்கள். இவர்களும் பாசிசத்தின் பாசமிகு பிள்ளைகளே !! பாசிஸ்ட்டுகளே !! அரசியல் பொருளாதார அமெரிக்க அடிமைத்தனத்தை வீழ்த்தாமல் இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்த முடியாது !!
bagathsingh barathi
பார்ப்பன எதிர்ப்பின் பேரால் பார்ப்பனர் அல்லாத ஆளும்வர்க்கதிர்க்கு, பிரிட்டிஷ் காலனியத்துடன் சமரசம் செய்துகொண்ட பெரியாரை போல, ஜெயாவை எதிர்ப்பதன் பேரில் கருணாநிதிக்கு சாமரம் வீசும் பிழைப்புவாதம் சந்தர்ப்பவாதம்தான் துணிச்சல்--எனில், அந்த கொள்கையை விட்டுவிட்டு அம்மணமாக ஓடும் துணிச்சல் எமக்கு இல்லைதான். உங்களுக்குதான் அணிகளை தக்கவைக்க வேண்டும் என்ற நிர்பந்தம்.எமக்கில்லை. கூடன்குள உதயகுமார் உங்களை அம்பலபடுத்தி விட்டார். நாங்கள் அம்பலபடுத்த ஒன்றுமில்லை.
bagathsingh barathi
இந்து மதம் அடிக்கட்டுமனகாவும் மேல்கட்டுமானகவும் இருக்கிறது ( புரட்சிப்புயல் ) என்பது மார்க்சியமா ? அது அல்தூசர் வாதம். இல்லை அதுவே மார்க்சியம் என நீங்கள் கருதினால் எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தீர்கள் என விளக்குங்கள் ? உங்கள் இயக்கத்துக்கு தோழர்களுக்கு வசைபாடத்தான் தெரியுமா ?? கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்ல தெரியாதா ? கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத துனிச்சல் மிக்கவரா நீங்கள் ? ஏகாதிபத்திய தொங்குசதை தொண்டுநிறுவன உதயகுமார் கூட உங்களை அமபலபடுதுகிறார். நீங்கள் பெரியாரிய அம்பேத்கரிய இயக்கம் என சொலுங்கள்.ஏற்கிறோம்.மார்க்சிய லெனினிய இயக்கம் என சொன்னால் விடமாட்டோம். பெரியார் மண்ணில் பார்ப்பனியத்திற்கு கல்லறை காட்டுங்கள்.பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை நிறுவ வந்த கால்ட்வேல்லிர்க்கு நூற்றாண்டு விழா எடுங்கள். நாங்கள் உங்களின் மார்க்சிய விலகலை, சாகும் வரை தோலுரித்து மார்க்சியம் காப்போம்.
அனானியன்
ப.சி.பாரதி
மகஇக வின் நிலைப்பாடு குறித்து நான் கேள்விப்பட்டது வரை, அவர்கள் சாதியை அடிக்கட்டுமானமாகவும், மேல்கட்டுமானமாகவும் இருப்பதாகவே குறிப்பிடுகிறார்கள். மதத்தை அவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு மக இக வில் ஏ.எம்.கே. கள் கிடையாது என்று எண்ணுகிறேன்.
நான் முன்னால் சிபிஎம் (25 ஆண்டுகளுக்கு)
அதை வைத்து என்னை துதி பாடப் போகிறீர்களா !!. உண்மையாகவே உங்கள் பினாத்தல்களை எண்ணி சிரிப்பதா , இல்லை எரிச்சலடைவதா என்று தெரியவில்லை.
எனக்குத் தெரிந்து மக இக பெரியார், கால்டுவெல் போன்றோரை பார்ப்பனிய எதிர்ப்புக்குத் தான் பயன்படுத்தி இருக்கிறார்களே ஒழிய பெரியாரிய சீர்திருத்த வாதத்தையோ, அல்லது தமிழ் தேசியர்களாக குறுகியோ எங்கும் பேசியதில்லை.. (அடுத்த பதிவு பார்க்க)
அனானியன்
ப.சி.பாரதி,

ஏதோ உதயகுமாரை வைத்து பேசியுள்ளீர்கள். பழைய கீற்று கட்டுரைகளில் இது குறித்து பார்த்ததிலும், அதே கால கட்டத்தில் மக இகவின் வினவு இணையத்தைப் பார்த்ததிலும் இருந்து என்னுடைய கண்ணோட்டத்தின் படி, உதயகுமார் நேர்மையற்றவராகவே தென்படுகிறார். ஒரு நாள் குறித்து ஊர் மக்கள் முன் கணக்கு கொடுக்கிறோம் , தேதியை முடிவு செய்யுங்கள் என்று ராஜு கொடுத்த கடிதத்திற்கு பதில் தராமல் கமுக்கமாக இருந்ததே அதற்கு சான்று .

தவிர மஜ இகவின் நிலைப்பாடு தான் எந்த வகை மார்க்சியத்தில் சேரும் என்று அப்போது எண்ணி குழம்பி இருக்கிறேன். அணு உலை அறிவியல் வளர்ச்சி, அதை எதிர்ப்பது மடமை என்று மஜ இக போஸ்ட்டர் பார்த்த ஞாபகம். புதியதாக அணுவுலை மார்க்சியமோ. ?? ரஸ்ய அரசு அதனை இயக்க அவ்வளவு நெருக்கடி கொடுத்த நிலைமை, அப்துல்கலாம் வந்து வாய் நிறைய பொய் புழுகிக் கொண்டு சென்ற வேகம் இவற்றை வைத்து ஓட்டுக் கட்சிகள் கூட கணித்து விடுவார்கள் , இது ரஸ்ய நலனுக்கான திட்டம் என்று. ஏ.எம்.கே வுக்கு இன்னும் ஸ்டாலின் தான் ரஸ்யாவை ஆட்சி செய்வதாக நியாபகமோ ?..
அனானியன்
@ கட்டுரையாளர் & ப.சி.பாரதி

//ம.க.இ.க-வின் கட்டுரையும், ம.ஜ.இ.க-வின் கண்டனமும் அரசியல் பார்வையாளர்களின் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ம.க.இ.க தனது நெருக்கடியின் பொருட்டு அ.தி.மு.க அரசை எதிர்கொள்ள தி.மு.க-வோடு சமரசம் செய்கிறதா? என்பது விவாதம்.////

அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தீர்களா ? எங்கும் கருணாநிதியையும் ஆ.ராசா வையும் யோக்கியர்களாக சித்தரிக்கவில்லை. நீதித்துறையும் ஆளும் வர்க்கங்களும் கொண்டுள்ள திராவிட இன வெறுப்பின் வெளிப்பாடுகளை விளக்கியுள்ளார்கள்,

கட்டுரையின் சாரத்தைப் புரிந்து கொள்ளாமல், கட்டுரையாளர் ம.க.இ.க, திமுகவுடன் சமரசம் செய்து கொண்டுள்ளது , அது சரி தான் என்ற தொனியில் பேசுவதும் கிடைச்ச கேப்பில் எப்படி ஆட்டோ ஓட்டலாம் என்று மஜ இக காரர் பிச்சு பினாத்துவதும் - முடியல் .

@ப.சி.பாரதி - நீங்கள் ம.ஜ.இ.க வை சேர்ந்தவராக இருந்தால், ஒன்று கூறுகிறேன். என்று அணு உலைக்கு சுவரொட்டி ஒட்டினீர்களோ அன்று உங்கள் மீதான மதிப்பை குறைத்துக் கொண்டேன். புரட்சியாளர்கள், புரட்சிகர அமைப்புகள் சரியான பாதையிலிருந்து விலகும் போது, அதனைக் கண்டிப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு நேர்மையும் அவசியம் .
அனானியன்
ப.சி.பாரதி

/// அந்த கொள்கையை விட்டுவிட்டு அம்மணமாக ஓடும் துணிச்சல் எமக்கு இல்லைதான். உங்களுக்குதான் அணிகளை தக்கவைக்க வேண்டும் என்ற நிர்பந்தம்.எமக் கில்லை. ////

மக.இகவின் மீது கொலைவெறியோடு இருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. யார் பந்து போட்டாலும் மக இகவுக்கு பவுண்டரி அடிக்கிறீர்கள் ?. பயமா ?. பதற்றமா ? .
ரஸ்யாவில் இருந்து புதிய உலை வருகிறதாம். போஸ்டர் ஒட்டத் தயாராகுங்கள் பாரதி/
bagathsingh barathi
முதலில் பாசிசம் --மதம் முதலியவற்றின் பொருளியல் அடித்தளம் பற்றி கூறுங்கள்.பாசிசத்தின் பொருளியல் அடிப்படையை வெறும் பார்ப்பன பாசிசம் என எந்த மார்க்சிய வரையறையின் படி வந்தீர்கள் ? மதம் என்பது மேலகட்டுமானகவும் அடிக்கட்டுமானகாவும் உள்ளது என்பது எந்த மார்க்சிய வரையறை ?? மார்க்சிய கோட்பாட்டின் படி விளக்குங்கள். பிரசண்டாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்து மருதையன் கூருகிறார்.அப்படியெனில் பிரசண்டாவின் ( டிராட்ஸ்கி ) அதீத ஏகாதிபத்திய கோட்பாட்டை ஆதரிக்கிறீர்களா ?? மக்கள் அதிகாரம் /மாற்று அதிகாரம் என்பதன் வர்க்க அடிப்படை என்ன ? கட்டமைப்பு நெருக்கடிக்கான தீர்வு என்ன ? தற்காலிக புரட்சிகர அரசாங்கம் எந்த வர்க்கத்திற்கான அரசு ? வர்க்க அமைப்புகள் கட்டி இனி போராட்டம் நடத்த இயலாது என்பதால் பொது முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது ( மக்கள் அதிகாரம் புதிய செயல் தந்திரம் ) என்பதன் அர்த்தம் என்ன ? இதன் ஒருபகுதியாகத்தான் டாஸ்மாக்கின் ஊற்றுக்கண் கருணாவை சந்தித்தாரா கோவன் ??
bagathsingh barathi
@திருப்பூர குணா...
கலியபெருமாள், தியாகு உள்ளிட்ட தோழர்கள் மீதும், மார்க்சிய லெனினிய இயக்கத்தை தமிழகத்தில் வித்தைதவரும், மாபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் ஏ.எம்.கே மீதும் வழக்கு பாய்ந்தது , அவர்கள் கட்சியின் இடது பயங்கரவாத நிலைபாட்ட்டில் உறுதியாக நின்றதை தெளிவு படுத்துகிறது. தியாகு அவர்கள் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதியதை கடுமையாக விமர்சித்த கலியபெருமாள் இறுதியில் அதே தவறை செய்தார். இந்த ஊசலாட்டத்திற்கு இவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது.கட்சியின் இடது பயங்கரவாத வழி, இந்த தன்னியல்பையும் ஊசலாட்டத்தையும் கொணர்கிறது. இன்றும் அவ்வியக்கத்தில் போலி என்கவுண்டர்களை விட சரணடைதல் அதிகமாக நடப்பதற்கும் இதுவே காரணம். தோழர் ஏ.எம்.கே கைது செய்யப்பட்டபோது கூட க.சுப்பு அருகில் இருந்தார். அவர் அப்போது தி.மு.க வில் இல்லை. அவரும் சோலை உள்ளிட்ட அவரது நண்பர்களும் ஊடகத்தில் இதை வெளியிட்டனர். வேலூர் நாராயணன் ஒரு பகுத்தறிவுவாதி. தோழரின் நண்பர். அவர் ரெட்டி சமூகம் என்பது நீங்கள் சொல்லியே தெரிகிறது. அவரை வேலூர் நாராயணன் என்றே அனைவரும் அறிவர்.ரெட்டி என சொல்வதன் மூலம் தோழர் மீது சாதி சாயம் பூசும் சிந்தனை கண்டிக்கப்படவேண்டியதே. அவர்கள் அனைவரும் தொழிற்சங்கத்தில் தோழரின் அளப்பரிய பங்கிற்க்காகவும் நண்பர் என்ற முறையுளும் செய்த உதவிகளை , ஆளும் வர்க்க சமரசம் லாபி என கொச்சைபடுதுவதும், அதை மகஇக ஆளும் வர்க்கத்துடன் கோட்பாட்டு ரீதியாக சமரசம் செய்துகொள்வதை ( தேர்தலுக்கு பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் தவறே ) ஒப்பிட்டு சமப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் தவறான கண்ணோட்டமும் ஆகும். நேபாள மாவோயிஸ்ட்களின் பாராளமன்றவாத திருத்தல்வாதத்தை ஆதரித்து பேசியுள்ள மருதையனின் நேர்காணலும் ( காண்க வினவு ) பு ஜவின் கட்டுரைகளும் அது வலது போக்கை நோக்கி செல்வதை உணர்த்துகிறது.
கயல்
//மகஇக வின் நிலைப்பாடு குறித்து நான் கேள்விப்பட்டது வரை, அவர்கள் சாதியை அடிக்கட்டுமானமா கவும், மேல்கட்டுமானமாக வும் இருப்பதாகவே குறிப்பிடுகிறார ்கள். மதத்தை அவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு மக இக வில் ஏ.எம்.கே. கள் கிடையாது என்று எண்ணுகிறேன்.//

மதம் ஒரு மார்க்சிய பார்வை - புதிய ஜனநாயக வெளியீடு

பக்கம் 48 “மதம் என்பது மேற்கட்டுமானத்தின் ஒரு கூறாகும். ஆனால் இந்து மதத்தைப் பொருத்தவரை அது மேற்கட்டுமானத்தின் கூறாக இருப்பதோடு பிரதானமாக, அடித்தளமாகவே இருக்கிறது”

பக்கம் 49 “இவ்வாறு இந்துமதம் உற்பத்தி உறவுகளாகவே, அடித்தளமாகவே உள்ளது”

பக்கம் 60 “ஆனால், பார்ப்பன (இந்து) மதம் மேற்கட்டுமானத்தின் ஒரு கூறாக மட்டுமல்ல, அதைவிட தலையாயமாக உற்பத்தி உறவுகளாக, அடித்தளமாக (பொருளுற்பத்தி முறையாக) இருக்கின்றது.“

இதன் விளைவாக அவர்கள் வகுத்த கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் உறுப்பினர் தகுதியாக “இந்துமத (பார்ப்பனிய) கருத்தோட்டங்களையும் உணர்வுகளையும் உடையவரை பாட்டாளி வர்க்க கட்சியில் சேர்க்கவே முடியாது” (பக்கம் 49) என்று வைத்தார்கள்.
P.saravanakumaran
மகஇக தடம் மாறி வலதுசாரி திமுக பக்கம் என்றோ
சாய்ந்து விட்டார்கள், திருத்தல்வாத மார்க்சிஸ்ய கோட்பாட்டையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள்,பழைய பார்ப்பன பல்லவியை பாடி இளைஞர்களை காயடிக்கும் வேலையை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.