karl marx 340அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

“ஆகவே இப்போது தெட்டத்தெளிவாய்த் தெரிகிறது - முதலாளித்துவ வர்க்கம் இனி சமுதாயத்தின் ஆளும் வர்ககமாய் இருக்கத் தகுதியற்றது, தான் நீடித்து நிலவுதற்கு வேண்டிய நிலைமைகளை யாவற்றுக்கும் மேலான சட்டவிதாய் இனியும் சமுதாயத்தின் மீது பலவந்தமாய் இருக்கத் தகுதியற்றது என்பது தெட்டத் தெளிவாய் தெரிகிறது. அது ஆளத் தகுதியற்றதாகிறது - ஏனெனில் அதன் அடிமை அவனது அடிமை நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கு அதனால் வகை செய்ய முடியவில்லை; அவன் அதற்கு உண்டி அளிப்பதற்கு பதில் அது அவனுக்கு உண்டி அளிக்க வேண்டிய நிலைக்கு அதன் அடிமை தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடியவில்லை. சமுதாயம் இனி இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பணிந்து வாழமுடியாது. அதாவது, முதலாளித்துவ வர்க்கம் இனியும் தொடர்ந்து நீடிப்பது சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 1848)

ஆசான்கள் மார்க்சும் – எங்கெல்சும் 1848-ல் கூறியதை மென்மேலும் மெய்ப்பிக்குமாறு உலகெங்கிலும் வரலாறு காணாத அளவு ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உழைப்புச் சுரண்டல் தீவிரமாகிறது.

இயற்கை வளங்களை சூரையாடுவதால் பெருகும் கொள்ளை நோய்கள், சுற்றுசூழல் நெருக்கடி, வறுமை மற்றும் ஏகாதிபத்திய போர்களால் அகதிகள் புலம்பெயர்தல் முதலியவையும் இன்ன பிற முதலாளித்துவ ஏகாதிபத்திய சகாப்தத்துக்கே உரிய நெருக்கடிகளும் உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கின்றன. முதலாளிகள் இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரமாக உலகெங்கும் நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

நமது நாட்டில் பாசிசத்தை மட்டுமல்ல, முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்தி சோசலிச சமூகத்தை நோக்கிச் செல்ல தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட இதர மக்கள் பிரிவினரை திரட்டக் கூடிய ஆற்றல் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே “நீ சிறிய கட்சி, நான் பெரிய கட்சி”, “உங்கள் நிலைப்பாடு தவறு, எங்கள் நிலைப்பாடுதான் சரி”, “நாங்களே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மற்றவர்கள் எல்லாம் போலிகள், திரிபுவாதிகள், சந்தர்ப்பவாதிகள்” என்ற குறுங்குழுவாதத் தவறும் வறட்டுத்தனமும் பெரியண்ணன் மனோபாவமும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

இந்தத் தவறினால் ஒன்றுபடுவதற்கான எந்த முன்னகர்வுமின்றி மேலும், மேலும் பிளவுகளும் விரிசல்களும் உழைக்கும் வர்க்க எதிரிகளான ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக கம்யூனிஸ்ட் கட்சிகளை பலவீனப்படுத்துகின்றன. இதை மைய பிரச்சினையாக நாங்கள் கருதுகிறோம்.

நாங்கள் யார்?

எங்களில் பலரும் இந்திய பொதுவுடைமை கட்சி (மா லெ) மா.அ.க-வில் பல வருடங்கள் முழு நேரமாக வேலை செய்தவர்கள். மா.அ.க என்பது ஒப்பீட்டளவில் அரசியல் ஆர்வமிக்க இளைஞர்கள் பலரும் அதன் மக்கள்திரள் அமைப்புகளில் பணியாற்றி வருவதை அரசியல் சக்திகள் பலரும் அறிவர். ஆனால் அப்பேற்பட்ட இயக்கம் தனது உள்ளார்ந்த முரண்பாடுகளில் சிக்கி சிதைந்து போயிருக்கிறது.

கடந்த 2019-ல் இவ்வமைப்பில் நடந்த பிளீனத்தின் மையப்பொருள் என்பது பத்தாண்டுகாலமாக அதன் அரசியல் சித்தாந்த தலைமை ஆய்வை ஏன் முடிக்கவில்லை என்பதை விசாரிப்பதும் அதனோடு சேர்த்து “புதிய தலைமை” தேர்ந்தெடுப்பதும் ஆகும். அந்த பிளீன விவாதத்தில் அணிகளின் கேள்விகளால் தலைமை துளைத்தெடுக்கப்பட்டது.

விளைவாக, அமைப்பின் சித்தாந்த தலைமையென சொல்லிக் கொள்ளப்படும் அந்த தோழர், “1980களில் மா.அ.க வின் அரசியல் கோட்பாட்டு ஆவணங்களை முன்வைத்தபோது நான் செய்த வரலாற்று பிழையை திருத்திக் கொள்ள எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதைத் தவறவிட்டு விட்டேன்.

இதனை எனது அரசியல் தற்கொலையாக கருதுகிறேன்” என்றார். அதன் செயலர் உட்பட தலைமையில் இருந்த மற்றவர்கள், “நாங்கள் அமைப்பை வழிநடத்த இலாயக்கு அற்றவர்கள். இனி, தலைமைக்கு நாங்கள் வரமாட்டோம்.” எனக்கூறி கண்ணீர் விட்டனர்.

பிளீனத்தில் அரசியல் ரீதியான பரிசீலனையும் இல்லை. அமைப்பு ரீதியான அறிக்கைப் (பத்தாண்டிற்கான அறிக்கை) பரிசீலனையும் இல்லை. ஒட்டுமொத்த அணிகளையும் ஒரு சூன்யத்தில் தள்ளிவிட்டு, தந்திரமாக செயலர் உள்ளிட்ட “அரசியல் தற்கொலை செய்துகொண்ட, தலைமைக்கு இலாயக்கற்ற அவர்களே” ஒரு சில புதிய தோழர்களுடன் தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தவறிழைத்தவர்களின் மீதான நடவடிக்கை என்பதற்காக கூடி மீண்டும் அவர்களே ‘புதிய தலைமை’யாக தேர்ந்தெடுக்கப்படும் அவலம் நடந்தேறியது.   

இதனால், அதிருப்தியான பல ஆண்டு அனுபவமுள்ள முன்னணித் தோழர்கள் பலரும் அதன்பின் அமைப்பிலிருந்து வெளியேறினர். அமைப்பின் உள்ளிருந்து பயணித்தவர்கள் விடை தெரியாத பல கேள்விகளுடனும், குழப்பத்துடனும், வேறு வழியின்றி அரைமனதுடன் பயணித்தனர். அரசியல் - சித்தாந்த ரீதியில் காலாவதியாகிப்போன தலைமையின் உள்முரண்பாடு வெடிக்க தொடங்கியதன் வெளிப்பாடே தோழர். மருதையனின் வெளியேறல். உடன் நிகழ்வாக, அமைப்பில் பொதிந்திருந்த அனைத்து நெருக்கடியும், முரண்பாடுகளும் வெடிக்கத் தொடங்கி வெளியே அம்பலமாகியது. இறுதி விளைவாக செயலர் தரப்பால் கட்சி இரண்டாக பிளக்கப்பட்டது.

இப்பிளவுக்கான காரணம் பற்றி கிடைத்த விவரங்களின் அடிப்படையிலும், ஆரம்பப்புரிதலின் அடிப்படையிலும் நாங்கள் முதலில் செயலர் தரப்பை ஆதரித்தோம். அங்கு மா.அ.க-வின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்திய போதெல்லாம், கேள்விகள் அனைத்தையும் அங்கீகரித்து பிளீனம் (2021) முடிந்தவுடன் அனைத்து நிலைமைகளிலும் ‘மாற்றம்’ வரும் என்றனர்.

அதன் அடிப்படையில் இணைந்து செயல்பட்டோம். ஆனாலும் கடந்த காலங்களில் அமைப்பிலிருந்து வெளியேறிய தோழர்கள் பற்றி அரசியல் தலைமை அவிழ்த்து விட்ட அவதூறுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை அறிந்து கொள்ள நாங்களே களத்தில் இறங்கி தேடத் துவங்கினோம்.

அமைப்புச் செயலரின் அதிகாரத்துவத்துக்கு எதிராக நேரடியாக விமர்சித்து அதன் காரணமாக ஓரங்கட்டப்பட்டதும், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோற்றத்துக்கு பின் கட்சியின் அரசியல் திசைவிலகல், மக்கள் திரளுக்கு வால்பிடித்துச் செல்லப்படுவதற்கு எதிராகவும், அமைப்புமுறை சீர்திருத்தம் கோரியும் அமைப்பு முறையில் ஊன்றி நின்று போராடி, 2016-ல் வெளியேறிய முன்னாள் பகுதிப் பொறுப்பாளரை விசாரித்து அவரது அனுபவத்தை கேட்டறிந்தோம். (இது குறித்து தனியாக கட்டுரை வெளியிடுகிறோம்).

மேலும் 2019 பிளீனத்திற்குபின் அதிருப்தியில் வெளியேறிய கட்சித்தோழர்கள் பலரின் அனுபவங்களையும், குறிப்பாக ஆய்வுக்குழுவில் பங்கெடுத்து அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றுக்கருத்தை முன்வைத்ததால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட தோழரின் அனுபவத்தையும் சேகரித்தோம்.

அவர்களின் அனுபவமும், செயலர் தரப்பு எங்களுக்கு கொடுத்த அறிக்கை விவரங்களும் முரண்பாடாக இருந்ததுடன், செயலர் தரப்பின் அறிக்கை அனுபவவாதமாகவும், சந்தர்ப்பவாதமாகவும், சுயமுரண்பாட்டுடனும் தொகுக்கப்பட்டிருந்ததை உணர்ந்தோம்.

கடைசி நம்பிக்கையாக நாங்கள் கருதிய 2021 செயலர் தரப்பு பிளீனமும் கேலிக்கூத்தாக நடந்து முடிந்தது (பிளீனம் பற்றி தனியாக எழுதுகிறோம்). அதையடுத்து, மா.அ.க-வின் மீது முழுமையாக நம்பிக்கை இழந்த, ஆனால் புரட்சியின் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடைய நாங்கள் வேறுவழியின்றி வெளியேறுவது எனும் தீர்க்கமான முடிவை அறிவித்தோம்.

எங்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள். புரட்சிக்காக கல்லூரிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு முழுநேரமாக கட்சிக்கு வந்தவர்கள். அரசியல் சித்தாந்த பிரச்சினைகளை நாங்கள் எழுப்பியதற்காக எங்களை எதிரிகள் போல் அணுகியவிதம் பற்றி தனியாக மீண்டும் எழுதுகிறோம். மா.அ.க மீது அரசியல் ரீதியாக நம்பிக்கையிழக்க காரணமானவற்றை மட்டும் முன்வைக்கிறோம்.

• அகில இந்தியப் புரட்சி எனப்பேசிக்கொண்டே தமிழகத்தின் சமூகநீதி அரசியல், திராவிட இயக்கத்தின் புரட்சிகர வாலாக நீண்டு போய்விட்ட போராட்டம் மற்றும் அமைப்புகளை மட்டுமே கட்டியமைக்கின்றனர். பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அரசியல் சித்தாந்த ஐக்கியத்திற்கான முயற்சிகளை முற்றிலுமாக கைகழுவியது. இந்தியாவின் ஒரே புரட்சிகரக் கட்சி என தற்பெருமை பேசி, தலைமைக்குழுவே குறுங்குழுவாதிகளாக செயல்படுவதுடன் அதற்கேற்ப அணிகளின் சிந்தனையை வார்த்தெடுக்கின்றனர்.

• இந்தியப்புரட்சிக்காக வகுத்துக்கொண்ட நீண்டகால மக்கள் யுத்தப் பாதை உள்ளிட்ட போர்தந்திர திட்டங்களெல்லாம் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பதைப் போல யதார்த்தத்தில் ஒரு அடிகூட எடுத்து வைக்காமலே 40 ஆண்டுகாலத்தை வீணடித்தது, மார்க்சிய - லெனினியத்தின் அடிப்படையிலான வர்க்க பார்வையிலிருந்து திசைவிலகிய கட்டமைப்பு நெருக்கடி என்ற தவறான செயல்தந்திரத்தை முன்னெடுத்து சென்றது, ஒரு வர்க்கத்துக்கான கட்சி என்ற முறையில் செயல்படாமல் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் படிப்பாளி பிரிவினரின் சமூக ஆதரவை மட்டுமே இலக்காக வகுத்து கொண்ட நடைமுறையை இன்றளவும் உயர்த்தி பிடிப்பது.

• இந்திய சமூகத்தைப் பற்றிய ஆய்வுப்பணியை பத்து வருடத்திற்கு மேல் ஆகியும் முடிக்காமல், 2019 பிளீனத்தில் அவர்களே ஒப்புக்கொண்டபடி அணிகளை “தந்திரமாக” ஏமாற்றியுள்ளனர். புதிய அரசியல் சூழ்நிலைமைக்கு ஏற்றாற்போல் அரசியல் ரீதியில் சரியான செயல்தந்திரத்தை முன்வைக்கவில்லை.

• அமைப்பின் பத்து வருட அனுபவத்தை தொகுக்காமல் மொத்த அமைப்பையும் செயலரின் அனுபவவாத திசைவழியில் இழுத்துச் சென்று அமைப்புத் தோழர்களின் அர்ப்பணிப்பு, புரட்சிகர உணர்வை விரயமாக்கியது. அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு பரவசப் போக்கில் வால் பிடித்துச் சென்று அதில் சுயதிருப்தி கொள்வது.

• அணிகளை அரசியல் சித்தாந்த ரீதியாக பயிற்றுவிக்காமல், நடைமுறை வேலை என்ற பெயரில் செக்குமாடாக உழழும் வகையில் அவர்களின் வேலைத்திட்டங்களை வடிவமைத்து அமைப்பு முழுவதையும் மந்தைகளைப் போல மாற்றி , தங்களது தலைமைக்கு போட்டி உருவாகிவிடாமல் ஒரு தலைமுறை அரசியல் ஆர்வமிக்க இளைஞர்களையே காயடித்து இரண்டாம் மட்ட தலைமை உருவாகாமல் பார்த்துக் கொண்டது.

• அமைப்புத் தவறுகளுக்கு எதிராக கேள்வி கேட்பவர்களிடம் அதிகாரத்துவத்துமாக அணுகுவதும், அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனப்பூர்வமாக அணுகிய தோழர்களை கொள்கையில் மாறுபட்டவர்கள் யாரும் அமைப்பினில் நீடிக்க முடியாது என்று கூறி வெளியேற்ற அமைப்பின் துணைவிதிகளையே குத்தீட்டியாக பயன்படுத்தி வருவது.

• இறுதியாக அனாதீன நிலத்தை சூறையாடும் நிலத்தரகு கும்பலைப் போல தலைமைக்குழுவே ஊழலில் படுத்துப்புரண்டிருப்பதும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீதான குற்றவுணர்வு இன்றி ‘கட்சி ரகசியம்’ என்ற பெயரில் கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் தயங்காதவர்களாக சீரழிந்து விட்டனர்.

தொகுப்பாக, இவர்கள் முன்னணிப்படை இல்லை என்பதை அவர்களது அரசியல் வரலாறு மற்றும் நடைமுறை மூலம் நிரூபித்துள்ளனர். இந்த அவலங்களை ஏற்க மறுத்து தொடர்ச்சியாக வெளியேறிய தோழர்களும், மார்க்சியத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட மேலும் சில புதிய இளம் தோழர்களும் ஒன்றாக கூடி, 3 மாதங்களாக அரசியல் ரீதியாக விவாதித்து, இறுதியில் இளம் கம்யூனிஸ்ட்டு கழகமாக உருவாகியுள்ளோம்!

“முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம், ஜனநாயக மத்தியத்துவம், விமர்சன - சுயவிமர்சனம், பாட்டாளி வார்க்க சர்வாதிகாரம்” போன்ற மார்க்சியத்தின் அடிப்படைகளில் எங்களுக்கு எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் தற்போது தனிக் கட்சியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடனோ அல்லது அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்ள அன்றாடம் சில கட்டுரைகளை மட்டும் எழுதும் நோக்கத்துடனோ நாங்கள் இம்முயற்சியை மேற்கொள்ளவில்லை.

நடைமுறைவேலைகள் என வெறும் செக்குமாடாக செயல்படாமல் (பழைய அனுபவத்தைக் குறிப்பிடுகின்றோம்) அரசியல் - சித்தாந்த ரீதியாக, மார்க்சிய - லெனினிய அரசியலையும், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், தொழிலாளர்களின் போராட்ட நடைமுறையில் இருந்தும் கற்றுக் கொண்டும், அதற்கேற்ப நடைமுறைகளை வகுத்துக்கொள்வது; குறிப்பாக இந்தியாவின் உற்பத்தி நிலைமைகளை புரிந்து கொள்வது.

பிற கம்யூனிஸ்ட்டு கட்சிகளின், குழுக்களின் நிலைப்பாடுகளை விமர்சனப் பூர்வமாக பயில்வது, அவர்களுடன் அரசியல் சித்தாந்த ரீதியில் விவாதிப்பது. எது சரியாக உள்ளதோ, அவர்களுடன் இணைவது அல்லது சரியானவற்றை உருவாக்க முயற்சி செய்வது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிட பொறுப்பேற்று செயல்பட முடிவெடுத்துள்ளோம்.

உலகம் முழுவதும் பாசிச சக்திகள் மேலோங்கி வருகின்ற இச்சூழலில், ஜனநாயக சக்திகளிடம் பாசிசத்திற்கெதிராக கைகோர்ப்பதும், நாடு முழுவதும் புரட்சிகர நோக்கில் செயல்படும் கம்யூனிஸ்ட்டு கட்சிகளிடையே ஒரு ஐக்கியமும் தேவை.  அனைத்து புரட்சிகர சக்திகளிடமும் சித்தாந்த ரீதியான, புரட்சிக்கான திட்டத்தை பற்றிய விவாதத்தை ஆக்கபூர்வமாக தொடங்க வேண்டும்.

ஜனநாயக – மத்தியத்துவ அடிப்படையில் முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தி அதன் அனுபவத்தை தொகுத்து முன்னேற வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அதற்கான சிறு முயற்சியை ஆசான் கார்ல் மார்க்ஸின் பிறந்த நாளன்று தொடங்கியுள்ளோம். அரசியல் ரீதியிலான உரையாடலைத் தொடங்கவும், விவாதக் களமாகவும் www.yclindia.wordpress.com என்ற இணையம் இருக்கும் என கருதுகிறோம். எங்களின் அடுத்துக் கட்ட முயற்சிகள் பற்றி எங்களின் இணையப்பக்கத்தில் பரிமாறிக் கொள்கிறோம்.

ஆசான் லெனின் சொல்வது போல் “மார்க்ஸ் அந்தக் கட்சித் தலைவர்களுக்கு எழுதியதில், நீங்கள் ஒன்றுபட்டுத் தீரவேண்டுமானால் இயக்கத்தின் நடைமுறைக் குறிக்கோள்களை நிறைவாக்குவதற்கான உடன்பாடுகள் செய்து கொள்ளுங்கள், ஆனால் கோட்பாடுகள் பற்றி எந்தவிதமான பேரத்துக்கும் இடங்கொடாதீர்கள், தத்துவார்த்த வகைப்பட்ட “சலுகைகள்” எதுவும் கொடாதீர்கள் என்று எழுதினார்…”

இதன் வழி கம்யூனிச புரட்சியாளர்கள் நமது மகத்தான இலட்சியமான சோசலிச சமூதாயத்தின் மூலம் கம்யூனிச சமூதாயத்தை படைக்க அனைவருடன் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு!

புரட்சிகர வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,

இளம் கம்யூனிஸ்ட் கழகம் (YCL)

Comments

12 comments

12
Ganesankaruppiah
வாழ்த்துகள்
Vivek
இதில் மா. அ. க. மற்றும் செயலர் தரப்பை விமர்சனம் செய்துள்ளீர்கள்..சரி.
ஆனால் பிளவுபட்ட இன்னொரு குழுவான மருதையன் & கோ பற்றி எதுவுமே சொல்லாமல் மிகவும் தந்திரமாக விலகி செல்வது , ஏனோ?
நெல்லையப்பன்.
நடைமுறைதான் உரைக்கல்.
Balu
Vivek- இப்படி பேசி பேசி நாசமா போ போறிங்க....
தமிழ்
@Vivek
வேறொன்றுமில்லை, இந்த இளம் கம்யூனிஸ்டுகள் மருதையனின் சீடர்கள் தானே தவிர வேறுயாருமில்லை!

// அரசியல் - சித்தாந்த ரீதியில் காலாவதியாகிப்போன தலைமையின் உள்முரண்பாடு வெடிக்க தொடங்கியதன் வெளிப்பாடே தோழர். மருதையனின் வெளியேறல்.//

ஹா ஹா ஹா...

பாவம் எத்தனை வேஷம் போட்டாலும் மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க தெரியாதவர்கள்...

டிராஸ்கியவாதி (கோஷ்டிவாதி) மருதையன் தமது 'இடைவெளி' இணையத்தளத்தில் 2016 -லியே தனக்கு தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது என்கிறார், ஆனால் அதை வெளிப்படையாக வைத்து எங்கும் விவாதிக்கவில்லை. நேர்மையுள்ளவன் தமது கருத்தை வெளிப்படையாக முன் வைத்து பேசுவான். (அதுசாரி நேர்மைக்கும் மருதையனுக்கும் என்ன சம்மந்தம்!) அவர் தமது கருத்துக்கு ஆதரவாக உள்ளே ஒரு கும்பலை உருவாக்கினார் என்பது தான் ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டு விட்டது, அது மருதையனின் இந்த சீடர்களுக்கு புரியாது. ஒரு விசியத்தை புரிந்துக்கொள்வதற்கு கூட வர்க்க உணர்வு வேண்டும். பாவம் இவர்களுக்கு இதெல்லாம் புரியபோவதில்லை! ஏனென்றல் இவர்களை பொறுத்தவரை மருதையன் ஒரு புனிதர்.

டிராஷ்கிவாதிகள் எப்பொழுதும் தமது அரசியல் கொள்கையை வெளிப்படையாக வைத்து பேசாமல், ஏதேனும் பிரச்சனையை கிளப்பி அமைப்பை உடைப்பார்கள் என்பதை நிருபித்துவிட்டார். இத்தகைய முயற்சி ரஷ்ய கட்சி வரலாற்றில் பல முறை நடந்துள்ளது. இவ்வாறு தான் தோழர் ஸ்டாலினிக்கு எதிராக டிராஸ்கியவாதிகள், தோழர் ஸ்டாலின் தோழர் லெனினின் உயிலை மறைத்துவிட்டார் என்ற பிரச்சினையை கிளப்பினர், ஆனால் உண்மையில் அது லெனினது உயில் சம்மந்தமான பிரச்சினையில்லை, தங்களது சந்தர்ப்பவாத அரசியலை மறைத்துக்கொண்டு பிரச்சினையை கிளப்ப 'இது' போன்ற விசியங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
"அவர்கள் அதிகார வர்க்கப் போக்கு பற்றி பேசுகிறார்கள். அதிகார வர்க்கப் போக்கு என்ற சொல் ருஷ்ய மொழியில், பதவிப் பித்துக் கொள்ளுதல் என்று பொருள்படும். பணியின் நலன்களை ஒருவரது சொந்தப் பதவிக்குக் கீழ்ப்படுத்துவது என்று இதற்குப் பொருள். இது பதவிகள் மீது கவனத்தை செலுத்துவது, வேலையைச் செய்யாது விட்டுவிடுவது என்று பொருள். கருத்துக்களுக்காகப் போராடுவதற்குப் பதிலாக உறுப்பினர் சேர்த்துக் கொள்வது பற்றிச் சச்சரவிடல் என்று இதற்கு பொருள். இந்த வகை அதிகார வர்க்கப் போக்கு கட்சிக்கு விரும்பத்தகாததும் அபாயம் விளைப்விப்பதும் ஆகும் என்பது சந்தேகமின்றி உண்மையே. நமது கட்சியில் போட்டியிடும் இரண்டு தரபுகளில் எது இப்படிப்பட்ட அதிகாரவர்க்க பழிக்கு இலக்காகியிருக்கிறது என்பதை வாசகரே நிதானிக்கட்டும் என்று தாராளமாக விட்டு விடுகிறேன்." (பக்கம் 272, தோழர் லெனின், ஓரடி முன்னால் ஈரடி பின்னால்)
"இதில் ஒரு வரியை கவனித்தீர்களா? கருத்துக்களுக்காகப் போராடுவதற்குப் பதிலாக உறுப்பினர் சேர்த்துக் கொள்வது பற்றிச் சச்சரவிடல் என்று இதற்கு பொருள்."
கேடுகெட்ட மருதையன் 2016 ல் தனக்கு தோன்றிய கருத்தை ஏன் வெளிப்படையாக வைத்து விவாதிக்கவில்லை. இதற்கு பெயர் என்ன?
மா.அ.க. தனது அரசியல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான், "தேர்தல் பாதை திருடர் பாதை" என்பதை முன்வைத்து செல்கின்றது. ஆனால் யார் அதன் கொள்கையை சதித்தனமாக புகுத்த முயற்சி செய்து தற்போது அமைப்பை உடைத்தது யார்?
மார்க்சிய லெனினிய புரிதல் தேவையில்லை குறைந்தளவுக்கு பகுத்தறிவு இருந்தால் கூட இதை புரிந்துக்கொள்ள முடியும்.
பகுத்தறிவு கிடையாது, தர்க்க அறிவு கிடையாது, மார்க்சிய அறிவு கிடையாது, போல்ஷ்விக் கட்சி வரலாறும் தெறியாது, டிராஷ்கிஸ்டுகள் எவ்வாறு செயல்பட்டார்கள், செயல்படுவார்கள் என்ற புரிதலும் கிடையாது, உட்கட்சி போராட்டம் பற்றியும் தெறியாது, எதுவும் தெரியாமல் அறைவேக்காடாக இருப்பது, ஆனால் எழுதுவது மட்டும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல். ஒரு பலமொழி தான் நியாபத்திற்கு வருகிறது, "ஒவ்வொருவனும் தனக்கு தெரிந்ததை மட்டும் பேசினால் இந்த பூமியே அமைதியாகிவிடும்".

மருதையனிஸ்டுகள் வலது சந்தர்ப்பவாத வேலைகளை செய்கிறார்கள் என்றால், இந்த மருதையனின் சீடர்கள், வேறு விதமான வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். இவர்கள் "இளம் மருதையனிஸ்டு கழகத்தை" சார்ந்தவர்களே தவிர வேறுயாருமில்லை!
Balu
Vinoth- இது போல்ஸ்விர்க் கட்சிக்கு பொருந்தும் வலது சந்தர்ப்பவாத (SOC 2) க்கு பொருந்தாத ... 27 year's கட்சி வலது சந்தர்ப்பவாத பாதையில் போய்விட்டது. ஆனா கட்சி வலது சந்தர்ப்பவாதம் அல்ல.... தாங்கள் என்னமோ போல்ஷ்விர்க் கட்சி போலவும் .. சந்தர்ப்பவாதத்தையும், கோஷ்டி முறியடித்தது போல பேசுகிறார்கள் .... புரட்சிக்கு எதிர்ரா வேலை செய்யும் எந்த ஒரு கட்சியும் புவி பரப்பில் இருந்து தூக்கி எரிய படும்...
தமிழ்
@Balu

சம்பந்தம்
சம்பந்தம் இல்லாமல் பேசுவது.

போல்ஷ்விக் கட்சியும், சீனக்கம்யூனிஸ்டு கட்சியும் வலது இடது சந்தர்ப்பவாத தவறுகள் செய்துள்ளன.

சரி கமெண்ட்டைக் கூட ஒழுங்கா படிக்காம பதில் சொல்லும் உங்களிடம் பேசுவதும் சுவற்றில் முட்டி கொள்வதும் ஒன்று...
Balu
@vinoth SOC தொடங்கிய முதல் இன்று வரை வலது சந்தர்ப்பவாத கட்சியாகவே உள்ளது....
அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு SOC இந்த புவி பரப்பில் இருந்து தூக்கி விச படும்...(புரட்சிக்கு எதிரை வேலை செய்யும் கட்சி)...
தருமர்
முன்பு வேறொரு பெயரில் கட்டுரை எழுதியவர்கள் தற்போது பெயரை மட்டும் மாற்றி அதே கருத்தை திரும்ப வேறு வார்த்தைகளில் எழுதியுள்ளனர்.
Balu
#தருமர் சரியானது என்பது ஒன்று தான்....
Balu
#Tamil SOC 2 வலது திசை விலகலில் இருந்து கட்சியே மீட்போம்...Plenum அறிக்கை....மக்கள் அதிகாரம் வலது சந்தர்ப்பவாத என்று கூறினார்கள்.... ஆனால் மக்கள் அதிகாரம் அரங்கு இன்னும் கலைக்கப்படவில்லை..... புதிய ஜனநாயக புரட்சி என்று கூறிகிறர்கள் ஆனால் விவசாய அரங்கு இல்லை..... ஆனால் கட்சியே வலது சந்தர்ப்பவாத பாதையில் இருந்து மீட்போம் என்று கூக்குரல் விடுகிறார்கள்......SOC .....
தமிழ்
@Balu

//Vivek- இப்படி பேசி பேசி நாசமா போ போறிங்க....//
//அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு SOC இந்த புவி பரப்பில் இருந்து தூக்கி விச படும்...//

விவேக் நாசமா போகட்டும், SOC புரி பரப்பில் இருந்து தூக்கி வீசப்படட்டும் அதை அவரவர் பார்த்துக்கொள்வார்கள், அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

எந்த கமெண்டையும் முழுதாக படிப்பதில்லை, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளும் வகையில் நிதானமில்லை (இல்லை புரிந்துக்கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை). உங்களை பார்த்தால் பாவமாத்தான் இருக்கிறது. உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கும் போல. நல்ல மருத்துவரை பாருங்கள். (நான் கிண்டல் செய்யவில்லை உண்மையாகவே சொல்கிறேன்)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.