கடந்த 29.07.2020 அன்று வெளிவந்த நக்கீரன் இதழில், “பலநூறு ஏக்கர் அனாதீனநிலத்தை ஆட்டையைப்போடும் ஆளுங்கட்சியினர் + அதிகாரிகள்” என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவந்தது.

’’பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டி ஒன்றைத் துவங்கி இயங்கி வருகின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் செயலாளராக இருந்த தங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்திலுள்ள சில சர்வே எண்களில் அமைந்துள்ள நிலங்களை வாங்கித்தருவதாக உறுதியளித்து சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இந்த தாழம்பூர் நிலமானது அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் என்பதால், அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து அந்நிலத்துக்கு பட்டா வாங்க முயற்சி செய்ததாகவும், ஆனாலும் வாக்களித்தவாறு தங்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை எனவும் மேற்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் நக்கீரனுக்குத் தகவல் சொன்னதன் பேரில் புலனாய்வு செய்யப்பட்டது’’ என்று மேற்படி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நக்கீரன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கராஜ் என்பவர், எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசு தான் என மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்கிற போதிலும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியும். பு.ஜ.தொ.மு அணிகளில் சில பேருக்கும் அது தெரிந்திருக்கக்கூடும்.

மேற்படி பிரச்சினையில், அக்டோபர் – 2019 இல் சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், 29.7.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் கட்டுரை வெளிவந்துள்ள நிலையில், அன்றைய தினமே (29.7.2020) பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதில் சுப.தங்கராசு அவர்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும், அவர் வகித்து வந்த மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு அன்றைய தினமே மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கீற்று இணையதளத்தில், “ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு” என்கிற பெயரில் வெளியான கட்டுரையில் ஒட்டுமொத்த தலைமைக்குழுவுக்கும் இக்‘குற்றத்தில்’ பங்குள்ளது என்ற அவதூறு கட்டுரை வெளியாகியுள்ளது. எந்தக் கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்கிறபோதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகரத் தொழிற்சங்க அமைப்பான பு.ஜ.தொ.மு மீதான குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும். வணிகப் பத்திரிக்கையான நக்கீரன் கூட தனக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், கீற்று இணையதளமோ, பு.ஜ.தொ.மு மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன? அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற இயக்கத்தினை வீழ்த்திவிட முடியாது. இந்தச் சூழலில், சுப.தங்கராசு அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? அந்தக் குற்றச்சாட்டை பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு எவ்வாறு கையாண்டது? என்பது குறித்து ஒரு சுருக்கமான விளக்கத்தைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 400 தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவது என்ற நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த சொசைட்டிக்கு ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செயலராக சுப.தங்கராசு இருந்து வந்தார். வாங்கத் திட்டமிடப்பட்ட வீட்டுமனைகளுக்காக சொசைட்டி உறுப்பினர்களிடமிருந்து, மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை திட்டமிட்டவாறு வீட்டுமனைகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் சுப.தங்கராசு அவர்களுக்கு முக்கியப்பங்கிருப்பதாகவும், அந்த சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் 11.10.2019 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாநில நிர்வாகக்குழுவுக்கு அளித்தனர். இந்தப் புகாரின் மீது சுப.தங்கராசு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் 14.10.2019 தேதியிட்டு, தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

25.10.2019 அன்று கூட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் மாநில நிர்வாகக்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, சுப.தங்கராசு மீது கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவானது 12.11.2019 முதல் 17.11.2019 வரை பல்வேறு ஆவணங்கள், சான்றுகள், இதில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களது வாக்குமூலங்கள் என பலவற்றைத் திரட்டி, தனது விசாரணை அறிக்கையை 25.11.2019 அன்று மாநில நிர்வாகக்குழுவுக்குக் கொடுத்தது. ( இந்தப் பிரச்சினை குறித்து புகார் அளித்தவர்களில் சிலரும், இந்த சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் விசாரணைக்குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

மேற்குறிப்பிடப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு 03.12.2019 முதல் 05.01.2020 வரை பல சுற்று கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் மூலமாக குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக மாநில நிர்வாகக்குழு வந்தடைந்த முடிவின் அடிப்படையில் சுப.தங்கராசு அவர்களுக்கு 06.01.2020 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கபட்டு, அதன் மீதான அவரது விளக்கத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 12.01.2020 தேதியிட்ட கடிதம் மூலமாக சுப.தங்கராசு தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பு விதிகளின்படி, மாநிலக்குழு முதல் மாவட்டக்குழு வரை அமைப்பின் கொள்கைக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்தத் தனிநபர் மீதோ அல்லது எந்தக் குழு மீதோ புகார் வந்தால் அதை எப்படிக் கையாள வேண்டுமென விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் அடிப்படையில், மேற்குறித்த விசாரணைக்குழு அறிக்கை மீது நடந்த விவாதத்தின் வழியாக வந்தடைந்த முடிவுகள், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை, அந்தக் குற்றப்பத்திரிக்கை மீது சுப.தங்கராசு கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மாநில நிர்வாகக்குழு பரிசீலித்து, தண்டனை வழங்குவதற்குரிய அடிப்படை இருந்தால், குற்றத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்பட வேண்டிய தண்டனை என்னவென்பதைத் தீர்மானித்து, தொடர்புடைய ஆவணங்களோடு மாநில செயற்குழுவில் வைத்து விவாதித்து இறுதி முடிவெடுக்க வேண்டும். புகார் மற்றும் புகார் மீதான விளக்கம் தொடங்கி இறுதி முடிவெடுப்பது வரை இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.

மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு காரணமாகப் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு, ஈ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க முடியாத நிலைமை காரணமாக மாநில நிர்வாகக்குழு நேரில்கூடி இறுதி முடிவெடுக்கவோ, மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து இறுதி முடிவெடுக்கு ஒப்புதல் பெறவோ, மாவட்ட செயற்குழு மட்டம் வரை எடுத்துச்சென்று விவரிக்கவோ இயலாத சூழல் நிலவியது.

இந்தச் சூழலில் நக்கீரன் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து தேவையற்ற குழப்பங்கள், அவநம்பிக்கைகள், அவதூறுகள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நக்கீரன் கட்டுரை வெளியான அன்றைய தினமே கான்பரன்ஸ் கால் மூலம் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, மாநில நிர்வாகக்குழு முதல் கிளைச்சங்கம் வரை அமல்படுத்தி வருகின்ற ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட சுப.தங்கராசு வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பை மாநில இணைச்செயலாளர் தோழர் டி. பழனிச்சாமி அவர்கள் தற்காலிகமாக ஏற்று செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனாதீன நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்பது குறித்து விசாரணைக்குழுவின் விசாரணையின்போது தெரியவந்தது. இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, அபகரிப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து, இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்ட போதிலும், சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.

அதேசமயத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எந்தத் தகுதியில் இருந்தாலும், அவர் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மைக்கேற்ப எவ்வித பாகுபாடும் இன்றி அமைப்புரீதியான தண்டனை வழங்குவதிலும், அத்தகைய நடவடிக்கைகளை கீழ் அணிகள் வரை எடுத்துச்சென்று ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநீக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுப.தங்கராசு அவர்களுடன் தொழிற்சங்கரீதியாக எவ்விதத் தகவல் பரிமாற்றமோ, தொடர்போ வைத்துக் கொள்ள வேண்டாம் என மாநில நிர்வாகக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

- டி. பழனிச்சாமி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு - புதுச்சேரி

Pin It