கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Sathunkulam Policeஉயர்நீதிமன்றக் கண்காணிப்புக்குட்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு விசாரணையை மாற்றுக!
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியைச் சேர்ந்த தந்தை திரு.ஜெயராஜ் (59), மகன் திரு. இம்மானுவேல் பென்னிக்ஸ் (31) ஆகியோர்  பயங்கரமாகக் காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்டது மொத்தத் தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மிருகத்தனமான சித்திரவதையும் எதற்கும் அச்சப்படாமல் கொலையை மூடி மறைக்க உயர் காவல் அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சியும் அனைவரையும் திகைக்க வைக்கின்றன. அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வழக்கமான பழிசுமத்தும் முயற்சியை மேற்கொள்கிறது. பலியானவரின் தாய் \ மனைவி மற்றும் நேரில் பார்த்தவர்கள் குற்றவாளிக் காவலர்களை அடையாளப்படுத்திய பின்னரும் பென்னிக்ஸின் குதவாயில் லத்தியைத் திணித்து முக்கியமான உள்ளுறுப்புகளுக்குக் கடுஞ்சேதம் ஏற்படுத்தியது உட்பட்ட மிருகத்தமான சித்திரவதைகள் பற்றி உண்மைத் தகவல்கள் அளித்த பிறகும்கூட மாநில அரசாங்கமும் காவல்துறை அதிகார வர்க்கமும் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளக் காட்டும் தயக்கம் பொதுமக்களிடையே கடுங்கோபத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தக் காவல்நிலையக் குற்றத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் சிவில் உரிமைக் கழகம் இச்சிக்கலை விசாரிக்க முடிவு செய்தது. இருவரின் மரணம் 2020 சூன் 19,20 ஆகிய நாள்களில் காவலர் காவலிலிருந்த போது கொடிய சித்திரவதைக்கு உள்ளானதின் விளைவே என்பதையும் இயற்கையான காரணங்களால் அவர்கள் இறந்தார்கள் எனக் காவல்துறை முன்வைக்கும் கதையில் ஒரு துளி உண்மைகூட இல்லை என்பதையும் மசிஉக குழு திரட்டிய தரவுகள் மிகத் தெளிவாக நிறுவுகின்றன. சாத்தான்குளம் காவல்நிலையக் காவலர்களின் படுகொடூரமானதும், மனிதத்தன்மையே அற்றதும், மிருகத்தனமானதுமான இச்செயலை மசிஉக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
மக்கள் சிவில் உரிமைக் கழகக் குழு
 
காவல்நிலையக் காவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்களின் துயரச் சாவிற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் பற்றிய உண்மை விவரங்களை நேரடியாகத் திரட்ட, பாதிக்கப்பட்ட குடும்பத்தை 26-06-2020 அன்று தூத்துக்குடி மாவட்ட மசிஉக செயலாளர் திருமதி பாத்திமாபாபு, உறுப்பினர்கள் திருவாளர்கள் தங்கையா, பிரின்ஸ் கார்டோஜா, ராஜபோஸ் ரீகன் ஆகியோர் அடங்கிய குழு நேரில் கண்டது. ஜெயராஜின் மனைவி திருமதி செல்வராணி, அவருடைய மகள்களில் இருவர் மற்றும் மருமகன்களில் இருவர் ஆகியோரையும், குடும்பத்தின் சில நெருங்கிய உறவினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளிட்டோரையும் குழு சந்தித்தது.
 
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பின்னணி
 
பென்னிக்ஸ் தம்முடைய MBA பட்டத்தைத் திருச்செந்தூரிலும் MSW (சமூகப்பணி முதுவர்) பட்டத்தைப் பொள்ளாச்சியிலும் நிறைவு செய்துள்ளார். தொடக்கத்தில் திருப்பூரிலுள்ள குழுமம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் அங்குத் தம் மனச்சாட்சிக்கு விரோதமான செயல்களைச் செய்ய வேண்டியிருப்பதை விரைந்து உணர்ந்தார். அரசாங்க அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது குழுமமும் அதன் ஊழியர்களும் அரசாங்கக் குழுவின் கழுகுப் பார்வையிலிருந்து குழந்தைத் தொழிலாளர்களை வேகம் வேகமாக மறைப்பதைக் கண்டார். தம்முடைய கொள்கைகளுக்கு எதிராகத் தம் பணி அமைந்திருப்பதைக் கண்ட அவர் அதிலிருந்து வெளியேறினார். அதனை அடுத்து தம் தந்தையோடு இணைந்து வணிக முயற்சியை மேற்கொண்டார். சாத்தான்குளத்தில் ஏபிஜே மொபைல்ஸ் என்ற சிறு வணிக நிறுவனத்தை அவர்கள் நடத்தினார்கள். மரக்கடை ஒன்றையும் ஜெயராஜ் நடத்தினார். பென்னிக்ஸ் ஒரு வாடிக்கையான ரத்தக் கொடையாளர் என்று தெரிகிறது. குறிப்பாக அவர் மருத்துவ உதவி தேவைப்படுவோர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். இத்தகவல்களை அவருடைய சகோதரிகளும் உறவினர்களும் மசிஉக குழுவினருடன் பகிர்ந்து கொண்டனர்.
 
தந்தை, மகன் ஆகியோருக்கெதிரான குற்றச்சாட்டு
 
நிர்ணயிக்கப்பட்ட இரவு எட்டு மணிக்குக் கடைகளை மூடுவது என்ற கொரோனா வரன்முறைகளை மீறினார்கள் என்ற அற்பக் குற்றச்சாட்டின் பேரில் ஜெயராஜும் பென்னிக்கஸும் சூன் 19 அன்று சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்படுகின்றனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அவர்களுக்கெதிரான முதல் தகவல் அறிக்கை எண் 312\2020 பதிவு செய்யப்படுகிறது. அது அவர்கள் இந்தியத் தண்டனைச் சட்டம் விதிகள் 188 (அரசு அலுவரால் முறையாக அறிவிக்கப்பட்ட ஆணைக்குப் பணிய மறுப்பது), விதி 269 (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நோயைப் பரப்புகின்ற கவனக்குறைவான செயல்), 294(b) (பொது இடத்தின் ஆபாசமான செயல்), விதி 353 (பொது ஊழியரைத் தம் கடமையைச் செய்யவிடாமல் தாக்குவது அல்லது வன்குற்றச் செயலை மேற்கொள்வது) 506(ii) (மிரட்டும் குற்றச் செயலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதைத் தெரிவித்தது.
 
இப்பிரிவுகளின் கீழ் குற்றச் செயல்கள் மெய்ப்பிக்கப்பட்டால் அபராதத்துடனோ அல்லது அபராதமின்றியோ ஒரு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். முதல் தகவல் அறிக்கையின்படி புகார்தாரர் ஒரு காவலரே என்பது மிகவும் முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் 19-06-2020 இரவு மணி 9.15இன் பொழுது இச்சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கிறார். இரவு எட்டு மணிக்குக் கடைகள் சாத்தப்பட வேண்டும் என்ற வரன்முறையின்படி கடையைச் சாத்தும்படி, காவல் ரோந்து குழு கேட்டுக்கொண்ட பொழுது அவர்கள் இருவரும் காவலர்களைப் பார்த்து சத்தம் போட்டார்கள்; தரையில் படுத்துப் புரண்டார்கள். அது அவர்களுக்குச் சிறிய காயங்களை ஏற்படுத்தியது.
 
காவல்நிலையக் கொலைகளுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுத் திருப்பங்கள்
 
குடும்ப உறுப்பினர்களாலும், அண்டை வீட்டார்களாலும் சொல்லப்படுகின்ற நிகழ்வின் முறை வேறாக உள்ளது. ஜெயராஜையும் பென்னிக்ஸையும் விடுவிக்கக் கோரி வழக்குரைஞர் ஒருவர் உட்பட பலர் பத்தொன்பது இரவே காவல்நிலையம் சென்றுள்ளனர். தந்தையும் மகனும் வலி தாங்க முடியாமல் கதறும் சத்தத்தை 19-20 பின்னிரவு முழுவதும் கேட்க முடிந்தததாக அவர்கள் கூறினர். இருவரையும் விடுவிக்கக் கோரி அவர்கள் விடுத்த வேண்டுகோள்கள் பலனளிக்கவில்லை.
 
மசிஉக குழு சந்தித்த மக்கள் கூற்றின் அடிப்படையில் மறுகட்டமைக்கப்பட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:
 
1. சூன் 18 அன்று வழக்கமான இரவுச் சுற்றுகளின்போது சாத்தான்குளம் காவலர்கள் நிர்ணயிக்கப்பட்ட இரவு எட்டு மணிக்குக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
 
2. அடுத்தநாள் சூன் 19 அன்று சுமார் ஏழு மணியளவில் வந்த காவலர்கள் விசாரணைக்காக ஜெயராஜைத் தங்களுடன் வரும்படி அழைத்தனர். கடையிலிருந்து காவல்நிலையம் நடந்து செல்லும் தொலைவிலேயே இருந்ததால், தாம் அங்கு நடந்தே வந்துவிடுவதாக ஜெயராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஜீப்பினுள் தள்ளித் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
 
3. நடந்ததைக் கேள்விப்பட்ட அவருடைய மகன் பென்னிக்ஸ், சகோதரி ஒருவருக்குச் செய்தியைத் தெரிவித்துவிட்டுக் காவல்நிலையத்திற்கு விரைந்துள்ளார்.
 
4. காவல்நிலையத்திற்குச் சென்றடைந்த பென்னிக்ஸ், அங்குத் தம் தந்தை மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதையும் அவர் மீது வன்முறை ஏவப்படுவதையும் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
 
5. தம் தந்தை முரட்டுத்தனமாகவும் வன்முறையாகவும் நடத்தப்படுவதைக் கண்டு நிலைகுலைந்துபோன பென்னிக்ஸ், காவலர்களின் ஏற்றுக்கொள்ள முடியாத வன்செயல்களுக்கான காரணங்களைக் கேட்டுள்ளார்; காவலர்கள் தம் தந்தையை அடிப்பதை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
 
6. தம் தந்தை ஜெயராஜ் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த பென்னிக்ஸ் முயற்சி செய்த பொழுது, சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஸ்ரீதர் வெறி பிடித்தவராய் அவரையும் சேர்த்து அடிக்கும்படி தம் கீழ்நிலைக் காவலர்களிடம் உரக்கக் கத்தியுள்ளார்.
 
7. ஆய்வாளர் மேற்பார்வையிட, திருவாளர்கள் இரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு உதவி ஆய்வாளர்கள், “காவல் நண்பர்கள்” நால்வருடன் இணைந்து, அந்த இரு நன்மக்கள் மீது காட்டுத்தனமான தாக்குதலைத் தொடுத்தனர்.
 
8. பென்னிக்ஸை அக்குழு அடித்து நொறுக்கியபொழுது இருவரும் வலியில் கதறினர். தம் மகன் அடிக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாத தந்தை, மகன் அடிக்கப்படுவதற்கு எதிர்ப்புக் காட்டினார்; மகனை அடிப்பதை நிறுத்தும்படி கோரினார். அது காவலர்களை மேலும் ஆத்திரமூட்டவே செய்தது. அவர்கள் தந்தையை மறுபடியும் அடிக்கத் தொடங்கினர். சுவரைப் பார்த்து நிற்கும்படி, சுவரோடு சேர்த்து இருவரையும் நிற்க வைத்தார்கள்; கொடிய லத்தியால் தொடர்ந்து அடித்தார்கள். தாங்க முடியாத வலியால் துரதிர்ஷ்டம் பிடித்த பலிகடாக்களான அவ்விருவரும் கதறியது காவல்நிலையத்திலிருந்து வெகுதொலைவிற்குப் பலராலும் கேட்க முடிந்ததாக மசிஉக குழுவிடம் பென்னிக்சுடைய நண்பர்களும் உறவினர்களும் கூறினார்கள்.
 
9. அதன் பிறகு இரு பலிகடாக்களையும் காவல்நிலையத்தின் முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தரைத்தளத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தது ஒருவேளை அங்குக் கொண்டு சென்றதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அடிப்பது தொடர்ந்தது. “அவர்கள் கதறலை என்னால் கேட்க முடியவில்லை, இன்னும் கடுமையாக அடியுங்கள்,” என்று ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதாகத் தெரிகிறது.
 
ஒட்டுமொத்தத்தில் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானதாகவும் ஈவிரக்கமற்றதாகவும் இருந்தது. காவலர்கள் பென்னிக்சுடைய ஆசனவாயினுள் லத்தியைச் சொருகி முரட்டுத்தனமாகத் திருகியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இதனால் முக்கியமான உள்ளுறுப்புகள் கடும் சேதமுற்றிருக்கின்றன. பென்னிக்சுக்குப் பெருமளவில் ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய தாய் செல்வராணி மாற்றுவதற்கு லுங்கிகளைத் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்ததை வேதனையுடன் குறிப்பிட்டார்கள். பென்னிக்சுடைய சகோதரி அவருடைய மார்பில் அடர்த்தியான முடி வளர்ந்திருந்ததையும் அதைக் காவலர்கள் அதிக அளவு வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்ததையும் சொன்னார்கள்.
 
10. சற்றுக் காலங்கடந்து செல்வராணியுடைய சகோதரர் ஜெய்சிங்கும் மற்ற நண்பர்களும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார்கள். அப்பொழுதும் தந்தை, மகன் ஆகிய இருவரின் கதறல்களைக் கேட்க முடிந்திருக்கிறது. காவல்நிலையத்தின் மூடப்பட்டக் கதவுகள் திறந்தபொழுது, பென்னிக்ஸுடைய மாமா காவலர்களின் கொடூரத் தாக்குதல் விளைவுகளைக் கண்ணாறக் கண்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஆய்வாளருடைய காலிலேயே விழுந்து இருவரையும் விடுதலைச் செய்யச் சொல்லிக் கெஞ்சியுள்ளார். “அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அதற்காக நீங்கள் அவர்களை அடித்துவிட்டீர்கள், இப்பொழுதாவது தயவுசெய்து அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். சிகிச்சைக்காக அவர்களை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம்,” என அவர் கேட்டுள்ளார். ஆனால் காவலர்கள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
 
11. 20.06.2020 காலை 7.30 மணி அளவில், இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தம் பெயரை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்ற உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவமனையில் அப்பொழுது கடமையிலிருந்த மருத்துவர் காவலர்கள் கோரியபடி மருத்துவத் தகுதிச் சான்றிதழ் வழங்கத் தொடக்கத்தில் தயங்கியதாக மசிஉக குழுவிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் பின்புறம் காயங்கள் இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிறிது நேரம் கழித்து உயர் மருத்துவ அலுவலர் ஒருவர், காவலர்கள் கேட்பதைப் போல் தகுதிச் சான்றிதழ் வழங்குமாறு தொலைபேசியில் கேட்டுக் கொண்டதால், அவர் சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார்.
 
12. பகல் 2.30 மணி அளவில் ஜெயராஜும் பென்னிக்சும் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் திரு. D. சரவணன் முன்பு நிறுத்தப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் மேல், மாஜிஸ்ட்ரேட் பார்வை படாமலிருக்க மூன்று காவலர்கள் அவர்களைச் சுற்றிக் காவலாக நின்றுகொண்டதாகக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் மசிஉக குழுவிடம் தெரிவித்தார்கள். மாஜிஸ்ட்ரேட் சற்றுத் தொலைவில் இருந்தார். இருவரையும் தம் அருகில் அழைத்து வருமாறு அவர் கேட்டுக் கொள்ளவில்லை; ஏதேனும் புகார்கள் உள்ளனவா எனவும் அவர்களை விசாரிக்கவில்லை. ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பெரிய அளவிலான குற்றங்கள் இழைக்கப்படாமலிருந்தால் கைது நடவடிக்கைகள் தேவையில்லை எனக் குறிப்பாகச் சொல்லியிருந்தும் அவர்கள் இருவரையும் அற்பக் காரணத்திற்காகக் காவலில் வைப்பதற்கான தேவையைக் காவலர்களிடம் மாஜிஸ்ட்ரேட் வினவவில்லை. எந்த வகையான அக்கறையுமின்றி எந்திரத்தனமாகக் காவலர்கள் கேட்டுக் கொண்டவாறு 110 கி.மீ. தொலைவிலுள்ள கோவில்பட்டியில், இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்ட்ரேட் பணித்தார்.
 
13. அதன் பிறகு சாத்தான்குளத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலுள்ள கோவில்பட்டிச் கிளைசிறைக்குப் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். கோவில்பட்டி சிறைச்சாலையைவிட சில சிறைச்சாலைகள் குறைவான தொலைவிலிருந்த போதும் கோவில்பட்டிக்குக் கொண்டு சென்றதில் எந்தப் பொருளும் இருப்பதாகத் தோன்றவில்லை. சாத்தான்குளத்திலிருந்து கோவில்பட்டிக்குத் திருநெல்வேலியைக் கடந்துதான் செல்ல வேண்டும். திருநெல்வேலியில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். கோவில்பட்டியைவிடப் பக்கத்திலுள்ள தூத்துக்குடியிலும் அரசு மருத்துவமனையும் பெரிய சிறைச்சாலையும் உள்ளன.
 
14. கோவில்பட்டி கிளைச்சிறை அலுவர்களும், பார்த்தாலே புலப்படுகின்ற பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் நிலைபற்றி கவலைப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சரியான முடிவை மேற்கொள்ளாமல், 2020 சூன் 20 மாலையில் நேரடியாகச் சிறைக்குள் அடைத்தனர்.
 
15. சூன் 22 திங்கள் கிழமை இரவு 7.30 மணி அளவில் பென்னிக்ஸ் மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பென்னிக்ஸைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கிளைச்சிறைக் கண்காணிப்பாளர் திரு.சங்கர் பணித்துள்ளார். இரவு 9 மணி அளவில் பென்னிக்ஸ் மரணம் அடைந்தார். கோவில்பட்டி கிழக்குக் காவல்நிலையத்தில் சிறைக் கண்காணிப்பாளர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176 1A (i) இன் (மரணத்திற்கான காரணம் பற்றி மாஜிஸ்ட்ரேட் விசாரணை) கீழ் வழக்குத் (FIR எண் 650\2020) தாக்கல் செய்தார்.
 
16. அதே நாள் இரவு 10.20 மணி அளவில் ஜெயராஜ் நிலைமையும் மோசமடைந்ததால் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 23 காலை 5.40 மணி அளவில் அவரும் மரணம் அடைந்தார். சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் கோவில்பட்டிக் கிழக்குக் காவல்நிலையத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176 1A (i) இன் (மரணத்திற்கான காரணம் பற்றி மாஜிஸ்ட்ரேட் விசாரணை) கீழ் புகார் (FIR எண்.650\2020) பதிவு செய்தார்.
 
கோர கொலைகளுக்குக் கற்பிக்கப்படும் காரணங்கள்
 
1. சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகளில் ஒருவர் சூன் 19க்கு முன்பு எப்பொழுதோ பென்னிக்ஸிடமிருந்து இலவசமாகக் கைபேசிகள் பெற முயற்சி செய்துள்ளார். ஆனால் தந்தையின் அறிவுரையின் பேரில் பென்னிக்ஸ் அவ்வாறு வழங்க மறுத்துள்ளார். இது காவல்நிலைய அதிகாரிகளுக்கும் பென்னிக்சுக்கும் இடையே கசப்புணர்வையும் பகையையும் உருவாக்கியதாக மசிஉக குழுவிடம் கூறப்பட்டது. இந்தத் தகவலை ஏபிஜே மொபைல்ஸுக்குப் பக்கத்திலே கடை வைத்திருந்த வணிகர் ஒருவரும் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார் (ஆனால், பென்னிக்ஸுடைய சகோதரிகள் அது பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என மறுத்தனர்.) இதன் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.
 
2. சூன் 18 அன்று காவலர்கள் தங்கள் ரோந்தின்போது வழக்கமான பொதுமுடக்கம் பற்றிய நெறிமுறைகளை அறிவித்துக்கொண்டு வந்துள்ளனர். அப்பொழுது அங்கே வணிகர்கள் குழு ஒன்று நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் யாரோ ஒருவர் மோசமான வார்தையைப் பயன்படுத்தியதுடன், “எல்லாக் கடைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நம் கடைகளுக்கு அருகே மட்டும் அவர்கள் ஏன் இந்த அறிவிப்பை மேற்கொள்ள வேண்டும்?” எனக் கேட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூற்று ஜெயராஜால் சொல்லப்பட்டதாக யாரோ ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இது காவலர்களுக்கும் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு இடையே இருந்த கசப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
 
முதல்வரின் அறிக்கை
 
சாத்தான்குளம் சிக்கல் தொடர்பான தமிழ்நாடு முதல்வரின் 24-06-2020 நாளிட்ட ஒரு பக்கச் சார்பான அறிக்கை மசிஉகவை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது என்பதை அது பதிவு செய்ய விரும்புகிறது. தந்தை, மகன் ஆகிய இருவரின் மீதான சித்திரவதையின் விளைவே அவ்விருவரின் காவல்நிலையச் சாவுகள் எனக் குற்றம் சாட்டப்படுவதை முதல்வர் குறிப்பாகக்கூடச் சுட்டவில்லை. குற்றச்சாட்டிலிருந்து காவலர்களை விடுவிக்கின்ற இத்தகைய அறிக்கை, காவலர்களுக்குச் சார்பாகச் சிக்கலை மூடி மறைக்க அரசு முயற்சி செய்கிறது என்கின்ற அவநம்பிக்கையையே தமிழ்நாடு மக்களிடையே வளர்க்கும். முதன்மையாகத் தாம் ஒரு பொதுமக்கள் பிரதிநிதி என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். இழப்பீடு வழங்குவதோ குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்குவதோ மட்டும் முழு நீதி வழங்கியதாக ஆகாது; அது பொதுமக்கள் பிரதிநிதியாகத் தாம் ஆற்றும் கடமைக்கும் பொருந்துவதாக அமையாது. தொடர்புடைய காவல் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதும் விரைந்த விசாரணை மூலம் இறுதியாக அவர்களுக்குத் தண்டனை வழங்குவதுமே செய்யப்பட வேண்டியவை ஆகும்.
 
விசாரணையின் போதும் காவல்வைப்பின் போதும் புறக்கணிக்கப்பட்ட விதிமுறைகள்
 
1. டி.கே.பாசு எதிர் மேற்கு வங்காளம் வழக்கில் உச்சநீதிமன்றம் ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய பதினோரு வழிகாட்டு நெறிகளை வழங்கியது. இந்த வழிகாட்டுநெறிகளில் கூறப்படுகின்ற, கைது செய்யப்படுகின்றவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சாட்சியாகக் கைதுக் குறிப்பில் (மெமோரெண்டம்) கையெழுத்து இடுவது உட்படப் பல நெறிமுறைகள் இருவரின் கைதின்போது பின்பற்றப்படவில்லை என்பதையே கிடைக்கின்ற முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2019 ஆண்டுத் திருத்தத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு வரையில் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களுக்கு விதிவிலக்கான சூழ்நிலைகளிலேயே விதி 41இன்படி (பிடியாணை இல்லாமல் கைது செய்வது) கைது செய்யலாம். அர்னேஷ் குமார் எதிர் பீகார் மாநில வழக்கில் (AIR 2014 SC 2756) இதை உச்சநீதிமன்றம் மிகவும் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இதை உள்துறை அமைச்சகம் 2014 சூலையில் எல்லா மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றிக்கையாக அனுப்பி வைத்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் விதி 41B இன் கீழான கைதுக்கான விதிமுறைகள் கறாராகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை நீதிமன்றக் காவலில் வைக்க ஆணையிடும்போது மாஜிஸ்ட்ரேட் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
3. மானுபாய் ரட்டிலால் பட்டேல் எதிர் குசராத் மற்றும் பிறர் (AIR 2013 SC 313) வழக்கில் தம் முன்னால் வைக்கப்படும் ஆதாரங்கள் நீதிமன்றக்காவலுக்கு ஆணையிடப் போதுமானவையா என்பதை மாஜிஸட்ரேட் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றக் காவல் ஆணையைச் சிந்தனை எதுவுமின்றியோ எந்திரத்தனமாகவோ பிறப்பிக்காமல் அறிவைப் பயன்படுத்தி பிறப்பிப்பது மாஜிஸட்ரேட் ஒருவரின் கட்டாயக் கடமையாகும்.
 
4. அபராதத்துடனோ அல்லது அபராதமின்றியோ ஏழு ஆண்டுகள் வரை அல்லது அதற்குக் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களைப் புரிந்துள்ள தண்டனைக் கைதிகளையும் அல்லது விசாரணைக் கைதிகளையும் மற்றும் உச்ச காலஅளவுத் தண்டனையைவிட குறைந்த காலஅளவுத் தண்டனை பெற்ற கைதிகளையும் விடுதலை செய்வது பற்றி மாநில அரசாங்கங்களும் யூனியன் பிரதேசங்களும் பரிசீலிக்க வேண்டும் என்று கோவிட் 19 தொற்றுநோய் தொடக்கத்தில் 2020 மார்ச் 23 அன்று உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த வழக்கில் (சிவில் எண் 1\2020) பரிந்துரை செய்தது.
 
5. நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும்போது குற்றம் சாட்டப்பட்டவரின் உடம்பில் காயங்கள் உள்ளனவா என்பதை நீதிபதி/ மாஜிஸ்ட்ரேட் கவனிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குற்ற நடைமுறை விதிகள் 2019, பிரிவு 6(1) கட்டாயப்படுத்துகிறது. காயங்கள் எதுவும் இருப்பின் அவை நீதிமன்றக் காவல் ஆணையில் பதியப்படுவதுடன், நீதிமன்றக் காவல் பிடியாணையிலும் பதியப்பட வேண்டும்.
 
6. ஆனால், இந்த விதிகள் எதுவும் சாத்தான்குளம் காவல்நிலையத்தாலும் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டாலும் பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது. வழக்கை விரிவாக ஆராயாமலும் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பின்னணியை விசாரிக்காமலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் காயங்களை நேரடியாகப் பரிசோதிக்காமலும் மாஜிஸ்ட்ரேட் எந்திரத்தனமாக நீதிமன்றக் காவல் ஆணையைப் பிறப்பித்துள்ளார். மேலும் இந்தக் கோவிட் 19 தொற்றுநோய்க் காலத்திலும்கூட தந்தையையும் மகனையும் சிறைக்கு அனுப்ப அனுமதித்துள்ளார்.
 
மருத்துவப் பரிசோதனை
 
மசிஉக குழுவிற்குக் கிடைத்த தகவலின்படி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் தொடக்கத்தில் மருத்துவத் தகுதிச் சான்றிதழில் கையெழுத்திட விரும்பவில்லை எனத் தெரிகிறது. காவலர்களின் வற்புறுத்தலின் பேரிலும் மேல் அதிகாரியின் வாய்வழி ஆணையை அடுத்துமே அவர் சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். 
 
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் புட்டப் பகுதிகளில் நிறைய அளவில் தழும்புகள் இருந்ததாகவும் பென்னிக்ஸின் வலது காலில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் தந்தையையும் மகனையும் பரிசோதனை செய்த கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார் எனச் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் இதன் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.
 
கோவில்பட்டி கிளைசிறையில் அனுமதிக்கப்பட்டது
 
சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படும் அனைத்துக் கைதிகளுக்கும் முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையம், தான் அனுப்பிய 2010 மே 17 நாளிட்ட கடிதத்தில் (D.O.No. 4\7\2010-PRP & P) கட்டாயமாக்கியது. கோவில்பட்டி சிறைச்சாலை அதிகாரிகள் இதைப் பின்பற்றவில்லை எனத் தெரிகிறது.
 
கோரிக்கைகள்
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்து (SUO MOTU WP [MD] எண் 7042\2020) கோவில்பட்டி நீதிமன்ற முதலாம் மாஜிஸட்ரேட்டை காவல்சாவுகளைப் பற்றி விசாரிக்க ஆணையிட்டுள்ளதை மசிஉக கவனத்தில் எடுத்துக் கொண்டு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.
 
1. தமிழ்நாடு அரசாங்கம் விசாரணையைச் சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகச் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சிபிஐக்கு மாற்றப்பட்ட பல வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வராமலேயே உள்ளன. மேலும் சிபிஐ தன் விசாரணைக்கு உள்ளூர்க் காவலர்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நேர்மையும் திறமையும் வாய்ந்த ஐபிஎஸ் ஒருவரின் தலைமையில் சிறப்புப் புலன்விசாரணைக் குழு (SIT) விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மசிஉக கோருகிறது.
 
2. சாத்தான்குளம் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் திரு. D. சரவணன் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், நீதிமன்றக் காவலுக்கு ஆணையிடும் மாஜிஸ்ட்ரேட் ஒருவரிடம் எதிர்பார்க்கப்படும் நீதிமன்றப் பொறுப்புகளைப் புறக்கணித்ததற்காக அவர் மீது முறையான துறைசார் மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
3. கோவில்பட்டி கிழக்குக் காவல்நிலையக் கோப்புகளில் காணப்படும் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மரணங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் முறையே குற்றவியல் எண் 649\2020, 650\2020 ஆகியவற்றில் காணப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176 1A (i) இன் (மரணத்திற்கான காரணம் பற்றி மாஜிஸ்ட்ரேட் விசாரணை) என்கின்ற குற்றச்சாட்டுகள் மாற்றப்பட்டு அல்லது திருத்தப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டம் விதி 302இன் கீழான குற்றச்சாட்டும் IPC 120B இன் கீழான சதித்திட்டக் குற்றச்சாட்டு உள்ளடக்கிய தொடர்புடைய பிற குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்படுவதுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவலர்களும் விசாரணையின்பொழுது குற்றவாளிகள் எனத் தெரியவருகின்ற பிறரும் முதல் தகவல் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
 
4. தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலின் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஊடகங்களில் வெளியானபடி, இருவரும் உடல்நலம் சார்ந்த பிற சிக்கல்களின் காரணமாக மரணமுற்றதாக அறிவித்ததின் மூலம், வேண்டுமென்றே பொய்த்தகவலை அளித்து, குற்றவியல் நீதி முறையில் தலையீடு செய்ததற்காக அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்வதும் பரிசீலிக்கப்பட வேண்டும். காவல் கண்காணிப்பாளர் என்ற முறையில், காவல்நிலையக் கொலைகளுக்கு அவர் தார்மீகப் பொறுப்பேற்பதுடன் கொலைகள் பற்றிய நேர்மையானதும் நடுநிலைமையானதுமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்புப் பொறுப்பையும் அவர் ஏற்றிருக்க வேண்டும். காவல்கொலைகளை விளைவித்ததற்கான சட்டப்படியான பொறுப்பிலிருந்து தமக்குக் கீழுள்ள காவல் அதிகாரிகளை விடுவித்துவிட்டதாகவே காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கைகள் அமைகின்றன.
 
5. கொலை மற்றும் அது சார்ந்த குற்றச்சாட்டுகளை உள்ளடக்குவதற்காக முதல் தகவல் அறிக்கையின் குற்றச்சாட்டுகளை மாற்றம் செய்யப்படுவதின் விளைவாய் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காவலர்களை உடனே கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள காவலர்கள் (அவர்களுடைய குற்ற நடவடிக்கைகளை மெய்ப்பிக்கின்ற மருத்துவ அறிக்கைகள் போன்ற முக்கியமான குற்ற ஆவணங்கள் உள்ளிட்ட) ஆதாரங்களைத் திருத்திவிடாமல் தடுக்கவும் சாட்சிகளை மிரட்டிக் கலைத்துவிடாமல் தடுக்கவும் இது மிகவும் முதன்மையானதாகிறது.
 
6.  பிரிவுகள் 302, 120B மற்றும் பிற இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அப்போதிருந்த மற்ற காவலர்கள், தந்தையையும் மகனையும் அடித்த காவலர் நண்பர்கள், சாத்தான்குளம் மருத்துவமனை மருத்துவ அலுவலர், பொய்யான மருத்துவத் தகுதிச் சான்றிதழை வழங்க அறிவுறுத்தியதாகக் கூறப்படும் உயர் மருத்துவ அதிகாரி, கோவில்பட்டி சார்சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் மற்றும் தொடர்புடைய பிற அலுவலர்களைத் திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் குற்றச்சாட்டுகளில் உள்ளடக்க வேண்டும்.
 
7. இதே காவல் அதிகாரிகள் காவல்நிலையச் சித்திரவதை மற்றும் மரணங்களில் தொடர்புடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு பல வழக்குகளில் சிக்கியுள்ளதாகப் பொதுவெளியிலிருந்து துணைத் தகவல்கள் வெளி வருகின்றன. இந்தக் காவல் அதிகாரிகளின் முந்தைய நடத்தைகள் யாவும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த இரட்டைக் கொலைகளுக்கான தண்டனைகளுடன் கடந்தகாலக் குற்றச்செயல்களுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் தண்டனைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 
8. சாத்தான்குளம் காவல்நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி கிளைசிறை ஆகியவற்றின் CCTV பதிவுகள் சிதைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவை உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா காவல்நிலையங்களின் நுழைவுப் பகுதியையும், காவல்நிலைய வளாகத்தின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கச் சிசிடிவிக்கள் நிறுவப்படுவதை தமிழ்நாடு அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் மசிஉக கோருகிறது.
 
 9. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் தயாரிப்பதில் ஏற்படும் தேவையற்றக் காலத்தாழ்வுகள் குறித்து மசிஉக கவலை கொள்கிறது. நம் காலத்தின் மிகுந்த உணர்ச்சிகரமானதாகவும் முக்கியமானதாகவும் இந்நிகழ்வு விளங்குவதால் திருமதி. செல்வராணியிடம் இவ்வறிக்கைகள் உடனடியாக வழங்கப்படுவதுடன், பொதுவெளியிலும் அவை கிடைக்கும்படி செய்திட வேண்டும்.
 
10. காவல்துறைச் சீர்திருத்தங்கள்
 
• காவல்துறைச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எண்ணற்ற குழுக்களின் அறிக்கைகள் உள்ளன. புலனாய்வு முகமையைச் சட்டம் ஒழுங்கு முகமையிடமிருந்து பிரித்து, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கின்ற தொழில்சார் அதிகாரிகளைப் பணியமர்த்திப் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.
 
•      தற்போதைய நடப்புகளில் காவலர்கள் தங்கள் துறைக்கும் தங்கள் அரசியல் எசமானர்களுக்கும் மட்டுமே பொறுப்புக் கூற வேண்டியவர்களாய் உள்ளனர். காவலர்களின் தவறான நடவடிக்கைகளை விசாரிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சுதந்திரமான புகார் ஆணையம் இருக்க வேண்டும். இது இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், (பிரகாஷ் சிங் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில்) உச்சநீதிமன்றம், மாதிரிக் காவல்துறைச் சட்டம், 2006 ஆகியவற்றில் ஏதோ ஒரு வடிவத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் இந்தத் திசையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வுக்குட்படுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களான கேரளாவிலும் புதுச்சேரியிலும் செயல்படுகின்ற காவல்துறை புகார் ஆணையங்கள் உள்ளன என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
 
• மேலும் பொதுவாக, காவல்துறைக்குப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கும்போது, விண்ணப்பிக்கின்றவர்கள் உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் உறுதியானவர்களாக உள்ளார்களா என்பதையும், சூழ்நிலைகளைப் பக்குவத்தோடு கையாளும் திறன் படைத்தவர்களாக உள்ளார்களா என்பதையும் சோதித்தறிய வேண்டும். மேலும், அவர்கள் பணிக்காலம் முழுவதும் மனித உரிமைகள் பற்றியும், நடத்தை மாறுதல்கள் பற்றியும் தொடர்ச்சியான பயிற்சி அளித்திட வேண்டும்.
 
• பணிச் சுமையின் காரணமாகவும் பணி இயல்பின் காரணமாகவும் காவலர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். குறித்த கால அளவுகளில் மனநல ஆலோசனைகள் வழங்குவதும் பணி நேரங்களை இறுதி செய்து முறைப்படுத்துவதும் இன்றைய உடனடியான தேவைகளாகும்.
 
11. (தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டாலும்) காவல்துறை நண்பர்கள் என்ற அமைப்பு அதன் உறுப்பினர்களிடையே தாங்கள் முக்கியமானவர்கள் என்ற மிதமிஞ்சிய உணர்வை ஏற்படுத்துவதால் அது முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அவர்கள் பெரும்பாலும் காவல்துறைக்குத் தகவல் கொடுப்பவர்களாக மாறி சிக்கலில் சிக்கியுள்ளவர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கி விடுகிறார்கள். மக்களைச் சென்றடைவதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்வதற்கு, மாவட்டந்தோறும் பெண்கள் தலைவர், திருநங்கையர், தலித் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், சமூகப் பணியாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், இதழியலாளர், தொழிற்சங்கவாதி, உழவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய பொறுப்பான குடிமக்களைக் கொண்ட காவல்துறை நண்பர்களை உருவாக்குவது நம் தேவையாய் உள்ளது.
  
12. தூத்துக்குடி சூழ்நிலை
 
• தூத்துக்குடி போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பல்வகையில் பொருள் தருவதாய் உள்ளது. அங்கு உள்ளூர் மக்களைக் காவல்துறையின் கட்டைவிரலுக்குக் கீழ் அடக்கி வைத்து, கார்ப்பரேட் குற்றவாளிகள் விருப்பம்போல் செயல்படவும் மக்களின் அனைத்துக் குடிமை உரிமைகளையும் பறித்துக்கொள்ளவும் வழிவகை செய்ய எந்த ஓர் அரசாங்கத்திற்கும் இது இன்றியமையாத் தேவையாகிறது. மக்களின் அமைதியைக் கெடுக்காமல் காவலர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதை உறுதிப்படுத்துவதற்கான காவல் சட்டங்கள் முதலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காவலர்கள் தங்கள் வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றங்களின் அதிகாரத்தைத் தங்கள் கைகளுக்குள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
 
• இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான தூத்துக்குடி ஸடெர்லைட் போராட்டமும் குறிப்பாக 2018 எழுச்சியும் எளிதில் மறக்கவே முடியாதது; மறக்கப்படவே கூடாதது. அதன் செயற்பாட்டாளர்களை காவல்துறை இன்னும் பல்வேறு வடிவங்களில் அச்சுறுத்துவதும் வேட்டையாடுவதும் தொடர்கிறது. அவர்கள் இன்னும் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்படுகிறார்கள்; விசாரிக்கப்படுகிறார்கள். அடுத்து யாரை அழைக்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடிய செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளைத் தமிழ்நாடு அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு ஓர் அமைதிச் சூழலை உருவாக்க வேண்டும்.
 
• ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது பதினாறு அப்பாவி உயிர்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கழித்தும் இன்னும் தூத்துக்குடி மக்கள் நீதியின் வெளிச்சத்தைக் காணவில்லை. ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரோடு புகழ்பெற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், வழக்குரைஞர்களையும் உள்ளடக்கிய விரிவான குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசாங்கம் அமைத்து, குற்றவாளிகள் அவர்களுக்குரிய தண்டனையைப் பெறும் வகையில் இதுவரையில் நடந்துள்ள முன்னேற்றத்தை உள்முக மதிப்பாய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்ய வேண்டும்.
 
13. ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கு ஏற்கனவே இந்தியா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதன் சரத்துகளை இந்தியச் சட்டங்களில் உறுதியேற்பு (ratify) செய்திட வேண்டும். இது நீண்ட நாள்களாய் நிலுவையில் உள்ள, இந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை ஆகும்.
    
“இறந்து போனவர்கள் நீதி வேண்டிக் குரல் எழுப்ப முடியாது. அதை அவர்களுக்காகச் செய்வது உயிர் வாழ்பவர்களின் கடமையாகும்,” என்று அமெரிக்க எழுத்தாளர் லூயிஸ் மிக்மாஸ்டர் பஜோல்டு ஒரு சமயத்தில் கூறியுள்ளதைப் போல, நீதி கிடைக்கும்வரையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரையும், காலப்போக்கில் காவல்துறை நிர்வாகம் சீர்திருத்தப்படும் வரையும், காட்டுமிராண்டித்தனமான காவல்துறை அத்துமீறலை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராட PUCL அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும், குடிமைச் சமூகக் குழுக்களுக்கும், அக்கறையுள்ள குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. 
 
- கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர் &  க. சரவணன், மாநிலப் பொதுச் செயலாளர், PUCL
 
குறிப்பு: 29.06.2020 அன்று PUCL (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) வெளியிட்ட ஆங்கில அறிக்கையின் தமிழ் வடிவம் இது.
 
தமிழ் மொழியாக்கம்/ நன்றி: திரு. கலை வேலு