கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போரட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அ.இ.அ.தி.மு.க அரசு அமைத்தது. 04.06.2018 அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது. ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021அன்றும், முழு அறிக்கை 18.05.2022 அன்றும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது.

முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பின் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் செய்தியாளர்களைச் சந்தித்து பின்வருமாறு கூறினார்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பொறுத்தவரை விசாரணை வெளிப்படையாகவும், அதே நேரத்தில் ரகசியத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததனர்.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 5 பாகங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளேன். இந்த அறிக்கை மொத்தம் 3000 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. இந்த அறிக்கையின் முதல் இரண்டு பாகங்களில் சம்பவம் தொடர்பானவை இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பாகத்தில் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நான்காம் பாகத்தில், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

tuticorin protest police firingஐந்தாம் பாகத்தில் 1500 வீடியோ ஆவணங்கள் மற்றும் 1250 சாட்சிகள், 1500 காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரிடம் இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டபோது தனக்கு இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை எதுவும் தெரியாது எனவும், தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை எனவும், உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளைத் தெரிவித்து விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன், பேரணி போன்றவற்றில் ஈடுபடும் போது பொதுமக்கள் என்ன மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார். இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம் பின் வருமாறு

“தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கிச் சுடுதல் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூட படுகாயம் அடையவில்லை. போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அதற்குத் தகுதியான முக்கியத்துவம் கொடுத்து அப்போதைய தென் மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருந்து, உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு சம்பவம் கொடூரமான செயல். காவல்துறையினர் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர். இது காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி.

காவல் துறையினர் பூங்காவிற்குள் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர். குண்டு வருவது தெரியாமல் போராட்டக்காரர்கள் சிதறி ஒடினர். கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை ஆய்வு செய்ததில், அவை தொலைவில் இருந்து துல்லியமாக சுடக்கூடிய Long Range துப்பாக்கிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம் பின்னால் இருந்து சுட்டது தெரிய வந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவலர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். அவரைத் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் போன்ற நான்கு இடங்களில் இருந்து சுட வைத்துள்ளதன் மூலம் அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர்.

இப்போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகி உள்ளார். அன்றைய தினம் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

அவர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார். வீட்டில் இருந்து கொண்டே அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்திற்குச் செல்லாமல் உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார். தென் மண்டல காவல் துறைத் தலைவர் சைலேஷ் குமார், நெல்லை சரக காவல் துறைத் துணைத் தலைவர் கபில் குமார் சர்கார், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 சார்பு ஆய்வாளர்கள், 1 தலைமைக் காவலர், 7 காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் 17 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், போராட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியத் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கண்ட அம்சங்கள் மூலம் அன்றைய அ.இ.அ.தி.மு.க அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஏவலர்களாக நடந்து கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் 17 பேர் மட்டுமின்றி “துப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்” என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுச் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதும்தான் போராடிய மக்களின் உயர்ந்த நோக்கத்திற்கான உண்மையான வெற்றியாக அமையும்.

நீதி வெல்லும்! நிச்சயம் வெல்லும்!!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து