காவல் வன்முறையால் பாதிப்புற்ற பழங்குடி இருளர் சமுகப் பெண்களின் வழக்குமூலங்களை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் 21.12.2021 அன்று அளித்துள்ள உத்தரவை, மக்கள் கண்காணிப்பகம் வரவேற்றுப் பாராட்டுகிறது. கடலூர் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன், மற்றும் நான்கு காவலர்கள் மீது பாதிப்புற்ற பழங்குடி இருளர் சமூகப் பெண்கள் லட்சுமி, இராதிகா, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோர் புகார் அளித்திருந்தனர். அதில் காவலர்களின் துன்புறுத்தல், தாக்குதல், சித்திரவதை, சட்ட விரோதக் காவல், திருடியதாகப் பொய் வழக்கு என்பன பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர். 

இதன்மீது மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்து பாதிப்புற்ற 15 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் என ரூ. 75 இலட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டதோடு மட்டுமில்லாமல், பத்து ஆண்டுகளுக்கு மேல் காவல் துறையினர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு டிஜிபி-யை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த சம்பவத்தின்போது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பளராக இருந்த திரு.பாஸ்கரன், IPS அவர்கள் 01.12.2021 அன்று மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் எவ்விதத் தகவலும், உண்மையும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அளித்த பத்திரிகை செய்தியில் அப்படியொரு சம்பவம் நடவடிக்கைவில்லை என மறுத்ததோடு மட்டுமில்லாமல் திருட்டு வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் லெட்சுமி புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தார். 

பழங்குடியின மக்கள் மீதான காவல் வன்முறையை வெளிச்சமிட்டுக் காட்டிய ஜெய்பீம் திரைப்படம் வெளியான பின்பும் இருளர், குறவர், கல் ஒட்டர், காட்டு நாயக்கர் மக்கள் மீதான காவல் வன்முறை வட மாவட்டங்களில் மட்டுமின்றி மத்திய, தென் மாவட்டங்களிலும் தொடர்வதை மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 

பழங்குடியின மக்களை பொய்யான திருட்டு வழக்கில் குற்றவாளியாக்குதல், வழக்கமாகக் குற்றச் செயல்புரிவோராகப் புனைதல் தாக்குதல் நடத்துதல் போன்ற மீறல்களைச் செய்யும் காவல் அதிகாரிகள் இதுவரை தண்டனையில் இருந்து விலக்கு பெற்றது போல் உள்ளனர் என்பதற்கு மக்கள் கண்காணிப்பகத்தோடு இணைந்து பணியாற்றும் பேராசிரியர் கல்விமணி, திண்டிவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த இரமேசுநாதன் போன்றோர் சான்றாக உள்ளனர்.

எனவே, பாதிப்புற்றோர்க்கு இழப்பீடு வழங்கியது மட்டும் போதாது. பாதிப்பை ஏற்படுத்திய காவல் அதிகாரிகள் மீது பிரிவு 376 உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டம் பட்டியலினத்தோர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமை திருத்தச் சட்டம் 2016 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மூன்று மாதத்திற்குள் அதாவது 31.03.2022க்குள் எடுக்கப்பட வேண்டும். காலதாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். இதுபோன்று தொடரும் காவல் வன்முறையை பொது மக்கள் வெகுவாக கண்டிப்பதன் மூலமாக காவல் வன்முறை மேலும் தொடராமல் இருக்க தமிழகத்தின் அனைத்து ஐ.ஜிக்கள், சட்டம் ஒழுங்கு பிரிவின் ஏ.டி.ஜி.பிக்கள் ஆகியோருக்கு இந்த வழக்கு ஓர் எச்சரிக்கை மணியாக ஒலிக்க வேண்டும். 

முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை பத்தாண்டுகள் கழித்து முடித்துள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. தொடர்ந்து பாதிப்புறும் இருளர், குரவர், கல் ஒட்டர், காட்டு நாயக்கர் போன்ற அடிநிலை மக்களுக்கு நீதி விரைந்து கிடைக்க வேண்டுமெனில், தற்போதுள்ள மாநில மனித உரிமை ஆணையம், மாநில பெண்கள் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில பட்டியல்/பழங்குடியினர் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்குநர், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குத் தேவையான பணியாளர்கள், நிதி, பயிற்சி வழங்கப்பட வேண்டும். பெயரளவில் செயல்படும் ஆணையங்கள் தேவையில்லை. ஐ.நா.வின் வழிகாட்டுதல்களையும், பாரிஸ் கோட்பாடுகளையும், பின்பற்றி செயல்படும் சுதந்திரமான, பொறுப்புள்ள திறன் மிகுந்த, வெளிப்படையான கட்டுப்பாடு மிகுந்த ஆணையங்களே இன்றைய தேவையாகும். 

- ஹென்றி திபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

Pin It