kovilpatti lockup deathதூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஜெயராஜும், அவரது மகனும் காவல் துறையால் கொடூரமாக அடித்து, சித்தரவதை செய்யப்பட்டதோடு பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதால் அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணம் அடைந்திருக்கின்றனர்.

தமிழக காவல் துறையின் இந்த அரக்கத்தனத்திற்கு எதிராக தூத்துக்குடி மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துப் போய் இருக்கின்றது. வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி அரசு தன்னுடைய அடியாள் இப்படியான அயோக்கியத்தனத்தில் ஈடுபட்டு மாட்டிக் கொண்ட போதும் கொலையாளிகளைக் காப்பாற்றும் கேடுகெட்ட செயலை செய்யத் துணிந்திருக்கின்றது. உடற்கூராய்வு அறிக்கை வெளிவருவதற்கு முன்பே முந்திக் கொண்டு எடப்பாடி பழனிசாமி ஒரு பொய்யான அறிக்கையை வெளியிடுகின்றார். அதில், ஜூன் 22 ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறுவதாகக் கூறியதாகவும், சிறைக் காவலர்கள் பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததாகவும், சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் இரவு 9 மணியளவில் உயிர் இழந்ததாகவும், அதே போல அவரது தந்தை ஜெயராஜ் 23 ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி காலை 5.40 மணியளவில் உயிர் இழந்ததாகவும் கூறியிருக்கின்றார்.

ஒரு பச்சைப் படுகொலையை கூச்சமே இல்லாமல் மூடி மறைக்கும் இவர்கள்தான் மக்களைக் காப்பாற்றும் உத்தமர்கள் என்று நம்மை எல்லாம் இன்னமும் நம்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். காவல் துறையின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்து கடுமையான மக்கள் போராட்டம் நடந்த பின்னர்தான் இந்த அரசு பணிந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட கொலையாளிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருக்கின்றது. கொலைக்கு நீதி கேட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்துக்கு தலா 10 லட்சம் தருவதாகவும், அரசு வேலை தருவதாகவும் பிச்சை போடுகின்றது.

நெஞ்சுவலியாலும், மூச்சுத் திணறலாலும் இறந்திருந்தால் எதற்காக இந்த அரசு நிவாரணம் அளிக்க வேண்டும்? அப்படி என்றால் காவல் துறையினர் அடித்துதான் கொன்றிருக்கின்றார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்கின்றார் என்றுதானே அர்த்தம்.

அடித்துக் கொன்றுவிட்டு காசு கொடுத்தால் பாதிக்கப் பட்டவர்கள் வாயை மூடிக் கொண்டு போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்று நினைக்கும் கேவலமான மனநிலையில் இருந்து இந்த அரசுகளை முதலில் நாம் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

காவல் நிலையக் கொலைகள் என்பது ஏதோ தெரியாமல் உணர்ச்சி வேகத்தில் நடைபெறுவது கிடையாது அதிகாரத் திமிரில், தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மமதையில் திட்டமிட்டு நடத்தப்படுவது. ஒட்டுமொத்த அரசுத் துறைகளும் ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஈடுபட்டு நாறி நாற்றமெடுத்துக் கொண்டு இருக்கும்போது, இது போன்ற பொறுக்கி போலீஸ்களை யார்தான் தண்டிப்பது?

ஏன் காவல் துறையினர் எவ்வளவு கேவலமான குற்றங்களில் ஈடுபட்டாலும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை என்றால், இந்த அரசு நடத்தும் அத்தனை ஊழல் முறைகேடுகளுக்கும் அவர்கள் பங்காளிகளாக இருப்பதால்தான். காவல் துறையை பகைத்துக் கொண்டு ஆற்றில் மணல் அள்ள முடியுமா? இந்த கொரோனா காலத்திலும் 24 மணி நேரமும் சந்துக் கடைகளை திறந்து வைத்து தாலியறுக்க முடியுமா? இல்லை தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்றவற்றை விற்று கல்லா கட்ட முடியுமா?

அதற்காகத்தான் அரசியல்வாதிகள் காவல் துறையையும் தன்னுடைய கொள்ளையில் கூட்டாளிகளாக எப்போதும் சேர்த்துக் கொள்வது. அரசியல்வாதிகள் தங்களை நம்பியே வாழ்கின்றார்கள் என்ற திமிர்தான் சாமானிய மக்களை கிள்ளுக்கிரைகள் போல நினைத்து அவர்களை அடித்து உதைக்கவும், காவல் நிலையத்தில் வைத்து ஆசன வாயில் லத்தியை சொருகவும், பாலியல் வல்லுறவு செய்யவும், மின் அதிச்சி கொடுக்கவும், கைகளை உடைக்கவும், பற்களை உடைக்கவும், நகங்களைப் பிடுங்கவும், இதை எல்லாம் செய்துவிட்டு மருத்துவ சிகிச்சைக்கு கூட அனுமதிக்காமல் சாக விடுவதற்கும் அவர்களுக்கு தைரியத்தைத் தருகின்றது.

காவல் துறை என்பது குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் துறையோ, குற்றம் நடந்தால் அதைக் கண்டுபிடிக்கும் துறையோ அல்ல. அது உண்மையில் குற்றங்களுக்கு விலை வைத்து விற்கும் துறை. சாராயம் காய்ச்ச இவ்வளவு, கஞ்சா விற்க இவ்வளவு, சந்துக்கடை நடத்த இவ்வளவு, விபச்சாரம் செய்ய இவ்வளவு, பான்மசாலா, குட்கா விற்க இவ்வளவு என்று எல்லாவற்றிக்கும் ஒரு விலை வைத்திருக்கின்றது. இந்த விலையை நீங்கள் சரியாகக் கொடுத்தீர்கள் என்றால், இந்த உலகத்தில் ஒரு 'யோக்கியமான' அயோக்கியனாக நீங்கள் வாழ முடியும். இல்லை என்றால் உங்களின் ஆசன வாய்க்கும் ஒரு நாள் ஆபத்து இருக்கின்றது என்று பொருள்.

நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னால் உணவுக்கே வழியற்று, வாழ்வா சாவா போராட்டத்தில் தான் பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் போலீஸ் போன்ற அதிகார வர்க்கத்தில் பணியாற்றுவோர் தன்னுடைய ஊதியத்தில் ஒரு பைசா கூட குறையாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த ஊரடங்கு காலத்திலும் சாமானிய மக்களை அடித்து, உதைத்து, மிரட்டி, பணம் பறிக்கும் துறையாக காவல் துறை உள்ளது. ஆண்டாண்டு காலமாக வாங்கியே பழக்கப்பட்ட கைகள் கொரோனா காலத்திலும் அரிப்பெடுத்து அலைகின்றது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தலாக தமிழக காவல் துறை மாறியுள்ளது. காசுக்காக கொலை செய்யும் கொலைகாரர்களைவிட மிகக் கொடிய குற்றக் கும்பலாக தமிழக காவல் துறை மாறி இருக்கின்றது. காசுக்காக பெண்ணை வைத்து விபச்சாரம் செய்த கோயம்பேடு காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பார்த்திபன், முஹம்மதுவை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டின காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ் என்று பொறுக்கி போலீஸ்களின் பட்டியல் மிக நீளமானது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி, சிவகங்கையைச் சேர்ந்த திவ்யா என்ற 17 வயது சிறுமி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த பழங்குடியின இருளர் பெண்கள் போன்றவர்கள் அதிமுக ஆட்சியில் தான் காவல் துறையால் காவல் நிலையத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டவர்கள்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் படி 2001 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் 120 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதில் வெறும் 50 சதவீதம் மட்டுமே வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சொல்கின்றது. அதே போல 2016ம் ஆண்டு 96 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2017ல் போலீஸ் அதிகாரிகள் மீது 56 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 48 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மட்டுமே தண்டிக்கப் பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக டிஜிபி திரிபதி அனைத்து காவல் நிலையத்துக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியதாக ஒரு செய்தியை அனைத்து பத்திரிக்கைகளும் வெளியிட்டு இருக்கின்றன. ஆனால் அந்த சுற்றறிக்கையில் சாத்தான்குளம் சம்பவம் பற்றி எதுவுமே இல்லாததோடு, அது காவலர்கள் எப்படி கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பது என்பதைப் பற்றித்தான் இருக்கின்றது.

குற்றங்கள் மலிந்த மக்கள் விரோத கொடுங்கோலர்களின் கூடாரமாக தமிழக காவல் துறை மாறி விட்டது. திருத்த முடியாத அளவிற்கு அதன் செயல்பாடுகள் செல்லரித்து விட்டன. குற்றக்கும்பலான அரசியல்வாதிகளும் ஆளும் வர்க்கத்தின் கூலிப்படையான காவல் துறையும் ஓரணியில் இணைந்து தமிழ்நாட்டு மக்களை சித்தரவதை செய்து கொண்டிருகின்றார்கள்.

காவல் துறை என்ற ஒடுக்குமுறை ஊழல் அராஜக அமைப்பே ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கமே சம்பளம் கொடுத்து ரவுடிப் படையை நடத்துவதுதான் உண்மையில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இதை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சம்பவங்கள் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் குற்றக் கும்பலின் சரணாலயங்களாகவே உள்ளன.

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு மக்கள் கமிட்டிகளை அமைப்பதன் மூலம் ஏறக்குறைய 100 சதவீதக் குற்றங்கள் நடைபெறாமல் நம்மால் தடுக்க முடியும். இன்றைய டிஜிட்டல் உலகில் இதை எல்லாம் மிக எளிமையாக சாத்தியப்படுத்த முடியும். மக்களை ஒடுக்கும் காவல் துறை என்ற அமைப்பு இல்லாமலேயே மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் சமூகமே உண்மையில் நாகரிக சமூகம் ஆகும். ஆனால் அப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப் பட்டால் அதிகாரத்தை மக்கள் மயப்படுத்தினால் ஊரை அடித்து உலையில் போட்டு பல ஆயிரம் கோடிகள் சொத்து சேர்க்கும் சுயநலக் கும்பல்களால் எப்படி வாழ முடியும் என்ற அச்சம்தான் அதைச் செய்ய விடாமல் அரசுகளைத் தடுக்கின்றது.

- செ.கார்கி

Pin It