கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அறிவிப்பு செய்யப் போகிறார் என்ற தகவல் வந்த நாளில் இருந்து ஒரு விதமான பரபரப்பும், பதட்டமும் பயமும், நாடு முழுவதும் தொற்றிக் கொண்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் துவங்கிய கொரோனாவின் தாக்குதல் பயம் இந்தியாவிலும் கடந்த வாரத்தில் மக்களிடம் தொற்றிக் கொண்டது. கொரோனாவிற்கு பயந்து நாடு முழுவதும் மக்கள் தங்கள் இருப்பிடம் நோக்கி ஓடத் துவங்கியவர்கள் இன்றும் ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள். தலைநகர் டெல்லியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அவலம் நாடு முழுவதும் நடந்து கொண்டே இருக்கின்றது. இது போன்று கொரோனாவிற்கு பயந்து பல்வேறு அவசரத் தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை காவல் துறையின் தாக்குதலுக்கும் அவமானங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள்.

corona policeகோவியட் 19, கொரோனா அழிவு நோயைத் தடுக்க உலகில் அனைத்து நாடுகளும் போராடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் போர்க்கால அடிப்படையில் பல பாதுகாப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து சக மனிதருக்கு எளிமையாக சமூகத் தொற்று மூலம் பரவ வாய்ப்பு உள்ளதால் சமூக விலகலை நடைமுறைப்படுத்த அரசு ஊரடங்கு உத்திரவு மற்றும் 144 தடை உத்திரவை நாடு முழுவதும் 22 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனை மக்கள் அனைவரும் வரவேற்று கடைப்பிடிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

பல்வேறு நெருக்கடிகளை உள்வாங்கி ஏற்றுக் கொண்டு அரசு கொண்டு வந்துள்ள உத்திரவுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் அனைவரும் உள்ளோம். ஆனால் அதே நேரத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் மக்களின் இயலாமை மற்றும் சமூக சூழலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக சமூக விலகலை முதல் முறையாக அனுபவிக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக விலகலை முழுமையாக உள்வாங்கி கடைப்பிடிக்க முடியாத நிலையும் உள்ளது என்பதனை கவனத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திடீரென அரசால் சமூக விலகல் அறிவிக்கப்பட்டவுடன் முதலில் பெரும்பான்மையான மக்களுக்கு என்ன நடக்கின்றது? நடக்குமோ? என்று தெரியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா போன்ற கொடிய நோயின் தாக்குதல் மூலம் ஏற்பட்டுள்ள இது போன்ற நெருக்கடிகள் உலகிற்கே புதிது என்பதால் மக்களை முன்கூட்டியே ஆற்றுப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது துர்வாய்ப்பு.

வாழ்வியல் சூழல்,கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லப் போதுமான கால அவகாசம் கொடுக்காமல் அரசு திடீரென சமூக விலகல் அறிவித்தது. இதனால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பான போக்குவரத்து அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்ட நிலையில், அரசால் அறிவிக்கப்பட்ட சமூக விலகலைக் கடந்து மக்கள் தன்னிச்சையாக தங்கள் இடங்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றார்கள்.

ஒரு பக்கம் அத்தியாவசியத் தேவைக்காக மக்கள் வெளியில் சென்று வரலாம் என முதல்வர் அறிவிப்பு செய்கிறார். இதனை நம்பி பொது வேலை செய்வோர், நாளிதழ் விநோகம் செய்வோர், பால் விநியோகம் செய்வோர், காய்கறிகளை சந்தைக்குக் கொண்டு வரும் விவசாயிகள், வணிகர்கள், மருந்து வாங்கச் செல்பவர்கள், ஏ.டிஎம்.மில் பணம் எடுக்கச் செல்பவர்கள், ஒரு வேளை உணவின்றித் தவிக்கும் சக மனிதர்களுக்கு உணவளிக்க வரும் மனித உரிமைக் காப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் வயது வரம்பு ஏதும் பாராமல், எவ்வித விசாரணையும் செய்யாமல் சாலையில் கண்டவுடன் காவல் துறையினர் நாடு முழுதும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் அதிகமான காவல் வன்முறை தமிழகத்தில் தான் நடைபெற்று வருகின்றது. இது போன்ற வன்முறைகளை பொது சமூகம் ஒரு பக்கம் வரவேற்றாலும், காவல் துறையால் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது மனித உரிமை மீறலே ஆகும். நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவத்திற்கு ஆவணமாக பல பத்திரிக்கைகளில் மற்றும் தொலைக் காட்சிகளில் தொடந்து செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளன.

அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் காவல்துறையின் பணிகளுக்கு இடையூறு கொடுக்கும் விதமாகவும், அரசு நடைமுறைபடுத்தி வரும் சமூக விலகலை மீறி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் வேண்டுமென்றே சிலர் நம் சமூகத்தில் செயல்பட்டு வருவது உண்மைதான். இது போன்ற சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களின் செயல்களைத் தடுப்பதற்கு காவல் துறையினர் வன்முறையை கையில் எடுப்பது சரியானதாகாது. எனவே வன்முறைக்கு மாற்றாக அரசும், காவல்துறையும் இணைந்து பல்வேறு சமூக அமைப்புகளை இணைத்து பல்வேறு யுத்திகளைக் கையாண்டு சமூக விலகலை மேலும் வலுப்படுத்தி மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்வோர், பொதுப் பணிகளுக்கு செல்வோர், அவசரத் தேவைகளுக்காக சென்று வருபவர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கான சூழல் நம் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே கொரோனா தாக்குதல் பயத்தில் தவிக்கும் மக்கள் மீது காவல்துறை நடத்தும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் இது சட்ட விரோதமானதாகும். எனவே கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க முனைப்போடு செயல்படும் அரசு, அதே போல் மக்கள்மீது எவ்வித மனித உரிமை மீறலும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் போர்க் கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

- இ.ஆசீர், மக்கள் கண்காணிப்பகம்