மூடப்பட்ட கதவுகளுக்குள்
முடங்கிக் கிடக்கிறது.
மனிதம்.

மரணத்தைச் சுமந்தபடி
சந்துபொந்தெங்கும் சந்தடியற்று
நுழைகிறது கொரோனா!

வானத்தை அளந்த
விண்ணாதி விண்ணர்கள்
விக்கித்து நிற்கின்றார்கள் !

பூமி எமக்கென்று மார்தட்டியவன்
சந்ததிகள்
அறைகளுக்குள் புகுந்து
தாழ்பாளிட்டுக் கொள்கின்றார்கள்!

நேற்றுவரை
"மனிதரை மனிதரோடு நெருங்கி வரச்
செய்தல்தான் மானிட மேன்மை" என்றவன்
இன்று இடைவெளிவிட்டு
எட்ட நில் என்கின்றான்!

ஆயிரம் மதம் பிரித்து
அன்பால் இணைவோம்
என்றவர்கள்
"மனிதரை மனிதர்
காண்பதே கேடு"
என்கிற நாளிது.

எத்தனை தலைக்கனத்தோடு
எகத்தாளம் போட்டவர்கள்....
இந்து, முஸ்லீம் என்றும் ....
கிறிஸ்தவன், பெளத்தன் என்றும்...
ஆண்டான் அடிமையென்றும்.....
தீண்டாமை, சாதி, மொழி பிரித்து உலகத்தை
தானே அழித்து, தலை சாயச் சிதைத்தவர்கள்
பெண் தீட்டு என்று பேசித் திரிந்த மனம் -இன்று
கண்ணிற்கு அகப்படா சிறு
வைரசிற்கு அஞ்சி வாய்கட்டி நின்று
வணக்கம் புரிகின்றார்!

இந்தப் பொழுது இன்னும்
எனைக் கொல்லவில்லை !!

நிலாக் காட்டி சோறூட்டிய தாயை,
தோளில் சுமந்து கதை சொன்ன தந்தையினை,
அன்பேயுருவான சகோதரரை, உற்றாரை
புதைக்க வழியற்று ஈழப் போர்க்களத்தில்
போட்டது போட்டபடி விழுந்த மனிதரைப்போல்
முகம் மூடி அலைகிறது உலகத்து மானிடம்!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றவன்
வெளிச்சம் தொலைத்து அந்தகாரப் பேரிருளில்
பேயாய் ஒதுங்குகின்றான்!

தாத்தா பாட்டியென
விரல் பிடித்து நடந்தவர்கள்
முதியோரைத் தவிக்க விட்டு
மூலையிலே பதுங்கி முகம் தொலைக்கிறது!

என் உடை, என் துணை
என் வீடு, என் கார்
கண், மூக்கு, கை, தலையென
என் உடம்பில் எங்கு உட்கார்ந்திருக்கும்
இந்தப் பாழும் வைரஸ்!
சோற்றிற்குள் கை வைக்கவும்
நம்பிக்கையற்றுத் துவளுகின்றது மனம்

பறவைக் கூட்டமும்
ஓடுகின்ற மேகங்களும்
பறந்து திரிகின்றன.
பச்சை மரங்கள்
பசுமையாய்த் துளிர்க்கிறது.
வானமும் சூரியனும் இன்னமும்
அழகாய்த்தான் இருக்கிறது.

கால் நனைத்த அலை,
கை அளைந்த மண்
சிற்றோடை, பைன்மரம், நயாகரா
எல்லாம் துடிப்போடு இருக்கிறது
பார்க்கத்தான் ஆளற்று
மனிதர் பதுங்கிக் கிடக்கின்றார்.
ஆதரவற்ற முதியோரை
அச்சமின்றி அழிக்கிறது வைரஸ்
அதைக் கண்டும் காணாமல்
அர்த்தமற்றுத் தவிக்கிறது நம் வாழ்வு

எது கடைசி மூச்சு என்று அறியாமலே
ஒவ்வொரு மூச்சையும் இழுத்து விடுகின்றேன்!

மனிதர்களே மிகப்பெரிய எதிரி
என்கின்றது கொரோனா!
தப்பித்து ஓடும் மனிதரையும் தனித்தனியே
துரத்துகிறது அது.
பூமி தனக்கேயென்று பட்டா போட்டவன்
இனி எங்கு தப்பித்து ஓடுவான்???

- மா.சித்திவிநாயகம்

Pin It