stalin 2502021 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியும் போட்டி போட முடியாத, பல கட்சிகள் நெருங்கக் கூட முடியாத, சில கட்சிகள் காப்பி அடிக்க நினைத்து சூடு போட்டுக்கொண்ட, எல்லாக் கட்சிகளும் பொறாமைப்படும் ஒரே கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமே!

இந்த மாதம் 7ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே தி.மு.க வின் தலைவர் தளபதி ஸ்டாலின் அதற்கான முன்னோட்டத்தை “ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்” என அறிவித்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த உறுதிகள் மக்களாட்சியின் கனவை மெய்ப்பிப்பவையாக உள்ளன.

1. வளரும் வாய்ப்புகள்; வளமான தமிழ்நாடு

2. மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி

3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்

4. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்

5. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்

6. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்

7. உயர்தர ஊரகக் கட்டமைப்பு; உயர்ந்த வாழ்க்கைத் தரம்

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, அதன் மக்களின் வாழ்வாதாரத்தை, வாய்ப்புகளை, உரிமைகளைப் பற்றித் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு குழுவை நியமித்து, அதன் சாத்தியப்பாடுகளைக் கவனத்தில் வைத்து சொல்வதையெல்லாம் செய்யவேண்டும் என்ற தன்னுறுதி வெளிப்பட தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ததில் ஸ்டாலின் தான் ஒரு சரியான தலைமை என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மார்ச் 13ஆம் நாள் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, 128 பக்கங்கள், 63 தலைப்புகள், ஐநூற்று ஐந்து வாக்குறுதிகள் என தமிழக, தமிழ் மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்கிறது!

கொரோனாவால் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடியாக ரூ.4000/-, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000/-, மின் கட்டணம், பெண்களுக்கானப் பேருந்துக் கட்டணம், பெட்ரோல், டீசல், எரிவாயு என அனைத்திலும் சலுகைகள் வழங்குவதன் மூலம் உடனடியாக ஒவ்வொரு குடும்பமும் நிம்மதிப் பெருமூச்சு விட வழி செய்துள்ளார்.

எத்தனை ஆயிரங்களை ஆளுங்கட்சியினர் கைகளில், அறிக்கைகளில், வெற்றிலைகளில் மடித்துக் கொடுத்தாலும் மாதாமாதம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரிக் சலுகைகளின் வழி சேமித்துக் கொடுக்கும் ரூ.3500/-க்கு ஈடாகுமா என்று எண்ணிப் பார்க்கும் வகையில் பல அடிகள் முன்னேற்றத்தை இந்த வாக்குறுதி தரும்.

1967ல் தி.மு.கழகம் அறிவித்த அரிசியை மலிவு விலையில் கொடுப்போம் என்ற வாக்குறுதி தான் கழகத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலத்தையும் புரட்டிப் போட்ட வாக்குறுதி! சோற்றுப் பாட்டைத் தீர்த்து வைத்ததன் மூலமே நம் மக்கள் அடுத்த வளர்ச்சிக் கட்டத்திற்குச் செல்லும் இலகுவை அடைந்தனர்.

கல்வி வாயிலை அடைய அவர்களுக்குப் பேருதவி செய்த மாபெரும் புரட்சி அது என்றும் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் சொல்கிறார்.

நடுவண் அரசும் அதன் அடிமை மாநில அரசும் கல்வி உதவித் தொகைகளைக் குறைத்தும், இல்லாமலும் செய்து கொண்டு வரும் இவ்வேளையில், தி.மு.கழகம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகையை இரட்டிப்பாக்கி அறிவித்துள்ளது. ஏழை மாணாக்கரும், அவர்தம் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் கல்வியாளர்களும் கொண்டாடும் வாக்குறுதியாக இது அமைந்துள்ளது.

பல்லாண்டுகாலமாக நடைபெற்று வரும்போதிலும் அண்மைக்காலமாகச் சமூக ஊடகங்களில் பெருங்கவனம் பெற்று வந்த அவலமான பாதாளச் சாக்கடைப் பணியாளர்களின் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்பணி உடனடியாக இயந்திரமயமாக்கப் படும் என்ற அறிவிப்பும் அப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அதற்காக உழைத்த பல்வேறு சமூகப் பணியாளர்களுக்கும் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பாகியுள்ளது.

பசுமைப் பரப்பளவைக் கூடுதலாக்கி 25% சதவிகிதமாக உயர்த்துவது, குறைந்து வரும் நிகர பயிரிடும் பரப்பை 11.75 லட்சம் ஹெக்டேர் கூட்டுவது என்ற அறிவிப்பு உழவுத் தொழிலின் மீது சிறுக சிறுக உழவர்கள் இழக்கும் நம்பிக்கையை மீட்டுத்தரும். புதியவர்களை அத்தொழில் நோக்கியும் திருப்பும்.

இந்துக் கோயில்களுக்கு ரூ.1000/- கோடி என்ற அறிவிப்பு, இந்த மண்ணின் சைவ, வைணவ, நாட்டார் தெய்வ வழிபாட்டினருக்கு ஒரு பெரும் புத்துணர்வைத் தரும். தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் கூட அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.200/- கோடி, அரசு மதச் சார்பற்றதும், அனைத்து மதத்தினருக்குமானது என்ற நம்பிக்கையை விதைக்கும் ஒரு அருமையான அறிவிப்பு!

ரூ.35 லட்சம் கோடியை இலக்காகக் கொண்டப் பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள், 5% குறைவான நகர்ப்புற குடிசைகள், ஊரகப்பகுதிகளில் 85% கான்கிரீட் வீடுகள் என அடுத்தப் பத்தாண்டுகளில் சாதிக்க முடியும் என்று நம்புபவற்றை தேர்தல் அறிக்கையாகத் தந்திருக்கிறார்கள்.

தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ‘புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்’ உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பதே இந்த வாக்குறுதிகள் எவ்வளவு தீவிரமாகச் செயல்படுத்தப்படும் என்பதை மக்களுக்கு உணர்த்துகிறது.

ஸ்டாலின் இன்று மாபெரும் தலைவராக மக்களிடை உயர்ந்து நிற்கிறார். அதற்கு அவருடைய அயரா உழைப்பும், கண்டிப்பும், உறுதியும், மக்கள் மீதான அளவற்ற அன்புமே காரணம். அதுவே தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற உறுதி முழக்கமாக இடம்பெறுகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சொல்வதைப் போல தி.மு.க.வின் 2021 தேர்தல் அறிக்கை இந்திய நாட்டுக்கான அறிக்கையாக ஒளிவீசுகிறது. நாட்டையே ஆளும் தகுதி படைத்தவராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையளிக்கிறார்!

- சாரதாதேவி

Pin It