சமீபத்தில் கண்கள் வீங்க தூங்கிய ஞாபகமே இல்லை. எல்லாமே கோழித் தூக்கம் தான். வாழ்வின் ஓட்டம் அப்படி. ஏனோ மனம் ஒரு வகையில் ஒரு நிலைப்படுவதை இந்த கொரோனா முடக்கம் உண்டு பண்ணி இருப்பதை மறுக்க முடியவில்லை. கல்லூரி முடிந்த சமயம்.. முதல் நிலை வேலை.... இரண்டாம் நிலை வேலைக்குச் சென்ற சமயம். கன்னம் புஷ்டியாகாத காலம். கண்களில் மட்டும் மிக தீவிரமாக காதல் கொண்டிருந்த காலம். அதன் பிறகு மிக உன்னிப்பாக இப்போது தான் அந்த கண்களை அதில் கொண்ட காதலை உற்று நோக்க முடிந்தது.

"சம்சாரம் அது மின்சாரம்" ரகுவரனைப் பிடிக்காத கால கட்டம் அது. அதன் பிறகு அதே ரகுவரனை மிக நுண்ணிய புள்ளியில் ரசிக்க வைத்த காலம் ஒன்றும் வந்தது. விசுவைப் பிடித்த காலத்தில் இருந்து விசுவின் புலம்பல்கள் மிகக் கோரமாக விரட்டிய காலத்துக்கு வந்திருந்த வாழ்வை இப்போது தான் இத்தனை நுட்பமாக உற்று நோக்க வாய்த்திருக்கிறது. அது இது அப்போது இப்போது என்று எல்லா ஒப்பீடுகளையும் மிகக் கவனமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது இந்த இடைவேளை.

திருமணம் ஆன புதிதான நாட்களை மீண்டும் இந்த இடைவேளை கொண்டு வந்திருக்கிறது. மிக மிக அருகாமையில் அதன் பின் வீடு இப்போது தான் இருக்கிறது. மிகை என்றாலும்... அதில் ஓர் உண்மை ஒளிந்திருக்கிறது. எதன் பொருட்டும் இல்லாத வீடுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. உயிர் பயம் ஒரு பக்கம் என்றாலும்... வேலை தொடர்பான அழுத்தமின்றி.... லட்சியம் தொடர்பான ஓட்டமின்றி...... கனவு தொடர்பான விவேகமின்றி.... மிக மிக இயல்பாக ஒரு குழந்தையின் இருத்தலை கொண்ட இந்த நாட்களில்... நதி போல ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்வு எனலாம்.

42 கிலோவில் சிக்கென்று இருந்தவளை பட்டென்று தூக்கிக் கொண்டு திரிந்த நாட்களெல்லாம் நினைவில் மிதக்கின்றன. மகன் நிறைத்த தொப்பை... கணவன் நிறைத்த உடல்... குடும்பம் தந்த அழுத்தம்....எல்லாம்... எல்லாம் சேர்ந்து உருமாற்றியிருக்கும் மனைவியை உற்று நோக்கும் இந்த இடைவேளையில்... வெட்கமற்ற வினையற்ற...... பெறுவது பற்றிய கணக்கின்றி.... தருவது மட்டுமே அன்பென்று ஓர் உணர் கொம்பு முளைத்து... ஆண் கொம்பு அடங்குகிறது.

குடும்பத்தை சிலிம்மாக்கி விட்டு இடுப்பில் டயர் ஏற்றிக் கொண்ட வீட்டுப் பெண்களின் முகம் பார்த்து பேச கிடைத்த வாழ்வின் இடைவேளை இது என்றே நம்புகிறேன்.

எதற்கு ஓடுகிறோம், ஏன் ஓடுகிறோம் என்று தெரியாத..... போட்டி என நினைத்துக் கொண்டு ஓடும் எல்லா ஓட்டத்தையும் நிறுத்தி விட்டு.... "சும்மா இருங்களேன்" என்று சொல்லும் காலத்தை உற்று நோக்குகிறேன். இந்த பயணங்களில் சும்மா இருத்தலில் தான் மிகப் பெரிய ஞானங்கள் கிடைத்திருக்கின்றன. சும்மா இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் இல்லை.

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. மீண்டும் அசையும் பொருட்டு இப்படி ஆசுவாசம் அவசியம் தான் போல.

- கவிஜி

 

Pin It