எங்கு பார்த்தாலும் மக்கள் கொரோனோ அச்சத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். நோய்த் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்களும் தாங்கள் எங்கே கொரோனோ நோய்த் தொற்றுக்கு ஆளாகி விடுவோமோ எனப் பயந்து, தங்களால் முடிந்தவரையும் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க முயற்சிக்கின்றார்கள். இவை எல்லாம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மக்களை இன்று மிக மோசமாக தாக்கிக் கொண்டிருப்பதில் கொரோனோவை விட, இந்த மண்ணில் பல ஆண்டுகளாக சாகாமல் வாழ்ந்து வரும் பார்ப்பனியம் என்னும் நச்சுக்கிருமி பெற்றெடுத்த சாதியமே என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. கைகளைக் கழுவினால் கொரோனோ வராது என்கின்றார்கள் ஆனால் எதைக் கொண்டு கழுவினால் இந்த சாதி என்னும் கொடிய நச்சுக் கிருமி சாகும் எனத் தெரியவில்லை.

கொரோனோவால் பாதிக்கப்படாதவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்கின்றார்கள். காரணம் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவும் என்பதால்... ஆனால் இந்தக் கேடுகெட்ட சாதிவெறியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளை மட்டும் ஏனோ தனிமைப்படுத்தாமல் சுதந்திரமாக வெளியே சுற்ற அனுமதித்து இருக்கின்றார்கள். அதனால் அது சமூகத்தில் மட்டும் அல்லாமல் அரசு உறுப்புகள் வரை அனைத்து இடங்களிலும் நோய்களைப் பரப்பி அனைவரையும் சாதி வெறியர்களாக மாற்றி வைத்துள்ளது.

ஒரு நோயாளியைப் பார்த்து இன்னொரு நோயாளி எப்படி பயப்படுவது இல்லையோ, அதே போல இந்த சாதிவெறி பிடித்தவர்களைப் பார்த்து ஒட்டுமொத்த சமூகமும் பயப்படாமல் கடந்து போகின்றது என்றால், அதன் கொடிய தன்மையை இந்த சமூகம் அலட்சியம் செய்கின்றது என்பதைவிட அதை அங்கீகரிக்கின்றது என்றே பொருள். அப்படிப்பட்ட ஒரு சமூகம் தன்னை நாகரீக சமூகம் என்று சொல்லிக் கொள்வதற்கான தார்மீக தகுதியை இழப்பதோடு, காலப்போக்கில் அந்த சாதிவெறி நோயால் சீரழிந்து காணாமல் போவதற்கான வாய்ப்பே அதிகம்.

முற்போக்கு இயக்கங்கள் எவ்வளவுதான் சாதி ஒழிய வேண்டும் எனப் போராடினாலும், அந்த சமூகத்தை ஆளும் அரசானது சாதி வெறியர்களை நக்கிப் பிழைக்கும் அரசாகவும், அந்த சாதிவெறிக் கும்பல்களால் ஆளப்படும் அரசாகவும் இருந்தால், முற்போக்கு இயக்கங்களின் பணிக்கு அது பெரும் தடையாகவே இருக்கும்.

இன்று தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசில் முதலமைச்சரில் இருந்து மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவருமே கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் என்பதோடு, அப்பட்டமான சாதிவெறியர்களாகவும் உள்ளார்கள். அதனால்தான் தொடர்ச்சியாக அவர்களால் சமூகத்தின் முற்போக்கு சிந்தனையின் மீது தாக்குதல் தொடுத்து அதை முடமாக்குவதற்கான வேலையைச் செய்ய முடிகின்றது.

ilamathi selvan 630காதல் திருமணம் செய்து கொண்ட இளமதி மற்றும் செல்வன் இணையைப் பிரித்து, இந்த சமூகத்தைப் பிடித்த பிணி தாங்கள்தான் என்பதை வெளிப்படையாகவே இந்த அரசும், அதனோடு கூட்டணி வைத்திருக்கும் பாமக உட்பட சாதிவெறிக் கும்பலும் நிரூபித்து இருக்கின்றார்கள். இளமதியை செல்வனிடம் இருந்து பிரித்த மகிழ்ச்சியில் காவல் நிலையத்தில் இருந்த வன்னிய சாதி வெறியர்கள், ‘மருத்துவர் அய்யா வாழ்க!’ என்று முழங்கி இருக்கின்றார்கள். ஏற்கெனவே திவ்யாவையும், இளவரசனையும் பிரித்த பாமக, அதன் பின்னர் அரசியல் அனாதையாய் தமிழகத்தில் மாறிப் போனது. சாதிவெறி அரசியலை முன்னெடுத்த தர்மபுரியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தூக்கி எறியப்பட்டது. பாமக தோற்பதோடு அதோடு கூட்டணி வைக்கும் கட்சியும் நிச்சயம் தோற்றுப் போகும் என்பது உறுதிபடுத்தப் பட்டிருக்கின்றது. இளமதி - செல்வன் பிரச்சினைக்குப் பின்பு பாமக என்ற தீய சக்தி மேலும் அம்பலப்பட்டு நிற்கின்றது.

பாமக மட்டுமல்லாமல், செல்வன் - இளமதி இணையைப் பிரிக்க அதிமுக அமைச்சர்கள் எல்லாம் வெளிப்படையாக செயல்பட்டதன் மூலம் தாங்கள் பாமக மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சி போன்ற சாதிவெறிக் கட்சிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டி இருக்கின்றார்கள். எப்படி பாமக அரசியல் அனாதையாய் ஆனதோ, அதே போல அதிமுக சாதிவெறிக் கும்பலும் அரசியல் அனாதையாய் இந்தத் தேர்தலில் மாறப் போகின்றது. அதே போல கொங்கு பகுதியில் தலித்துகளுக்கு பெரும் விரோதியாய் இயங்கிக் கொண்டிருக்கும் கொங்கு நாடு மக்கள் கட்சியை திமுக தொடர்ந்து ஓட்டுக்காக ஆதரிக்குமேயானால் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் அதன் முடிவும் அழிவும் நெருங்கி விட்டதாகவே அர்த்தம். சாதி வெறியர்களை ஆதரிக்கும் அனைவருமே முற்போக்கு சக்திகளுக்கு எதிரிகளே ஆவார்கள். இந்த சமூகத்தில் இருந்து சாதிய நோயை விரட்ட வேண்டும் என்றால், சாதி வெறியர்களை மட்டுமல்லாமல் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் நாம் களப் பணியாற்ற வேண்டும்.

காரணம் இது போன்ற சாதிவெறியர்களின் செயல்பாடானது தொடர்ச்சியாக சமூகத்தில் காதல் திருமணத்திற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சாதியத்தை கெட்டிப் படுத்துகின்றது. சாதி வெறியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றது. இளமதி - செல்வன் இணை பிரிக்கப்பட்ட அன்றுதான், நவநீதகிருஷ்ணன் - மெளனிகா இணையும் பிரிக்கப்பட்டிருக்கின்றது..

திருப்பூர் மாவட்டம், காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனும், ஆயிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரகுபதி மகள் மெளனிகாவும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திருப்பூரில் உள்ள விநாயகர் கோயில் ஒன்றில் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல பெண் வீட்டார் `மகளைக் காணவில்லை’ என ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதனால் காவல்நிலையத்தில் ஆஜரான மெளனிகா `விருப்பப்பட்டுத்தான் தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை' என்றும் கூறி தனது கணவரோடே சென்றிருக்கின்றார். அதன் பிறகு மார்ச் 9-ம் தேதி மதியம் மெளனிகாவின் போனுக்குப் பேசிய உறவினர் ஒருவர், 'அவரது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில அட்மிட் செஞ்சிருக்கோம். உடனே வர வேண்டும்' எனக் கூறியிருக்கின்றார். இதை உண்மை என்று நம்பி மெளனிகாவும், அவரது கணவரும் மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றார்கள். பிறகு திரும்பும் வழியில் மெளனிகாவை உறவினர்கள் சிலர் அடித்து காரில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். தடுக்கப் போன நவநீதகிருஷ்ணனையும் கடுமையாகத் தாக்கி இருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து தன்னுடைய மனைவியை மீட்டுத் தர வேண்டுமென நவநீதன் புகார் கொடுத்திருக்கின்றார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் மெளனிகாவை காவல்துறை கண்டுபிடிக்காததால் தன்னுடைய மனைவியை மீட்டுத் தருமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

சாதிவெறியர்கள் வழக்கம் போல ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றனர். ஒன்று அடித்து, உதைத்து காதலர்களைப் பிரிக்கின்றனர். இல்லை என்றால் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி வரவழைத்துப் பிரிக்கின்றனர். அதுவும் முடியாத போது, கடைசியாக சாதி ஆணவப் படுகொலை செய்கின்றனர்.

சமூகம் அதன் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் உற்பத்தி உறவுகளில் பெரும் மாற்றத்தைக் கோரி நிற்கின்றது. ஆனால் இந்த சமூகத்தில் ஏற்கெனவே சாதியின் பெயரால் தலித்துகளையும், பிற சூத்திரசாதி மக்களையும் சுரண்டிக் கொழுத்த அயோக்கியர்கள் அப்படியான மாற்றம் தங்களின் இருத்தலுக்கும், மேலாதிக்கத்துக்கும் வேட்டு வைத்துவிடும் என்பதால் முன்னோக்கி நகரும் சமூகத்தின் கால்களை பின்னோக்கி இழுக்க முயற்சிக்கின்றனர். இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளுடன் ஏற்கெனவே கடும் சிக்கலில் மாட்டியுள்ள முதலாளித்துவமும் கரம் கோர்த்து, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சியை சிதைக்கின்றன. மேலும் சாதிவாதிகளே கார்ப்பரேட்டுகளாகவும், ஆட்சியதிகாரத்தை பங்கு போட்டுக் கொண்டிருப்பவர்களாகவும் உள்ளபோது, அதற்கு எதிரான நமது போராட்டம் மேலும் கூடுதலான உழைப்பைக் கோரி நிற்கின்றது.

சாதி வெறியர்களும், அவர்களை உற்சாகப்படுத்தும் ஓட்டுப் பொறுக்கிகளும் ஒரணியில் நிற்கின்றார்கள். ஆனால் முற்போக்குவாதிகள் மட்டும் ஏனோ இன்னும் பிரிந்து கிடக்கின்றார்கள். இன்னும் முற்போக்குவதிகள் என்று தங்களை சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், இது போன்ற கழிசடைகளை எதிர்த்து பேசக்கூட திராணியற்ற கோழைகளாகவும், பிழைப்புவாதிகளாகவும், ஒட்டுண்ணிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். எதிரி எவ்வளவு வலிமை வாய்ந்தவனாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அவன் பிற்போக்குவாதி என்பதால் அவன் அழிந்து போகவும், நாம் எவ்வளவு வலிமையற்றவர்களாக தற்போது இருந்தாலும் வரலாற்றுப் போக்கில் வெல்லப் போகின்றவர்கள் என்பதையும் உணர்ந்து வேலை செய்தால் நிச்சயம் இந்த சாதிவெறியர்களை வீழ்த்தி விடலாம்.

- செ.கார்கி