ஜாதிமறுப்பு, காதல் திருமணம் என்றாலே குடும்பங்களில் வெறுப்பும், மிரட்டலும் உள்ள இன்றைய காலகட்டங்களில், காதல் திருமணங்கள் பற்றி இந்து மத சமூகத்தின் பார்வை என்னவென்றால், காதல் திருமணங்களால்தான் ஜாதிக்கலவரங்கள் நடக்கிறது; ஜாதி மாறி திருமணங்கள் செய்பவர்களால்தான் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன என்பதாகவே உள்ளன. இந்துச்சமூகத்தின் பொதுப்புத்திக்குத் துணைபோகும் விதமாக பத்திரிகைகளும், ஊடகங்களும் நூற்றில் ஒன்று, இரண்டு ஜாதிமறுப்பு காதல் திருமணங்கள் தோல்வியுற்றால், அதை ஊதிப் பெருக்கி பெரிதாகக் காட்டுகின்றன.

இந்த மாதிரியான செய்திகள் இனிவரும் இளைய தலைமுறைகள் ஜாதிமறுப்பு, காதல் திருமணங்கள் செய்து ஜாதியற்ற சமூகமாக மாறுவதைத் தடுக்கும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும் பரவுகின்றன. இச்சூழலில் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் ஜாதிமறுத்து, சடங்கு மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட திருச்சி இறையரசி - தமிழமுதன் இவர்களின் காதலைப் பற்றி காட்டாறு குழுவுடன் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்.

iraiarasi tamizhamuthan

தோழர் இறையரசி: இயற்பெயர்இராஜேஸ்வரி. ஊர் கைலாசபுரம். அம்மா வெள்ளையம்மாள், அப்பா ரங்கன். எனக்கு ஒரு அக்கா, ஒரு தம்பி உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு பெயரை இறையரசி என்று மாற்றிக்கொண்டார்.

தோழர் தமிழமுதன்: அப்பா அரசெழிலன். அம்மா அனுராதா. சொந்த ஊர் தேவக்கோட்டை. திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரியில் படித்தவர். திருச்சியில் வசிக்கிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை. பெயர் இரா. த. இசை.

உங்கள் காதல் வரலாறைத் தொடங்குங்க. யார் முதலில் ப்ரொபோஸ் செய்தீர்கள்?

நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். 6 ஆம் வகுப்பிற்கு இறையரசி வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். அதன் பின்பு இறையரசி கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் என்னுடைய நண்பரும் படித்தார். அவர் இறையரசியுடைய பக்கத்து டிபார்ட்மெண்டில் படித்தார். அவர்தான் செல்போன் எண்ணை எனக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான் இறையரசி என்னிடம் நன்றாகப் பேசிப் பழகினார். இரண்டு வருடம் நல்ல நண்பர்களாகப் பேசினோம். அதன் பிறகு நான் தான் என்னுடைய விருப்பத்தை முதலில் சொன்னேன். ஆனால் இறையரசி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

அதற்கு, ஜாதியைக் காரணம் காட்டினார். நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். இது எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் பேசினேன். என்னுடைய அப்பா பெரியாரியல் வழியைப் பின்பற்றி வாழ்பவர். அவர் நம்முடைய காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார். முதலில் நாம் கல்லூரிப் படிப்பை முடிப்போம். அதன் பிறகு இதைப்பற்றி வீட்டில் பேசுவோம் என்று சொன்னேன். அதேபோல வீட்டில் பேசினோம்.

இறையரசி... உங்க ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

நான் முதலில் மறுப்பு தெரிவித்தேன். நண்பர்களாகவே பழகுவோமே என்று சொன்னேன். ஏன்னா, நாங்க தாழ்த்தப்பட்ட ஜாதிங்கறதுனால, காதல் வேண்டாம்னு சொன்னேன். அதன் பிறகு அவர் என்னுடைய அப்பா ஒரு பெரியாரியல்வாதி, அவர் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார். என்னுடைய அப்பாவை உங்கள் வீட்டில் போய் பேசச் சொல்கிறேன் என்று சொல்லி என்னைக் கன்வின்ஸ் பண்ணினார். அதுக்கு அப்புறம் தான் எனது காதலைத் தெரிவித்தேன். அதேபோல எனது மாமனாரும் என் அப்பாவிடம் வந்து பேசினார்.

தமிழமுதனின் அப்பா பெரியாரியல்வாதி. அதனால் சிக்கல் இல்லை. இறையரசியின் அப்பா, அம்மா இதை எப்படி எடுத்துக்கிட்டாங்க?

எங்களுடைய இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. எதிர்பாராத விதமாக என்னுடைய அப்பாவின் நண்பர் இணையருடைய அப்பாவிற்கும் நண்பர். அவர்தான் இறையரசியின் அப்பாவிடம் பேசினார். அப்படிப் பேசியும் அவருக்கு ஜாதிமறுப்புத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. எப்படியிருந்தாலும் பிரித்து வைத்து விடுவார்கள் என்று நினைத்தார். திருமணத்திற்கு முந்தைய நாள் வரைக்கும் அப்படித்தான் நினைத்தார். ஒரு வழியாக நண்பரின் அறிவுரையை ஏற்று திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டார்.

உங்களுடைய திருமண நிகழ்வு எப்படி நடந்தது? யார் முன்னிலையில் நடந்தது?

எங்களுடைய திருமணம் 2015 இல் ஜனவரி 18 ஆம் தேதி, தேவக்கோட்டையில் நடந்தது. ‘மூத்தோர் விழா’, அதாவது, எங்கள் குடும்பங்களில் உள்ள மூத்தோர்களுக்கு என்று ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் மூத்தோரின் வாழத்துகளுடன் நடந்தது.

எங்களுடைய திருமணத்தில் என்னுடைய தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, இறையரசியின் அப்பா, அம்மா, இவர்கள் 6 பேரின் முன்னிலையில் எந்த ஒரு சடங்கும் இல்லாமல், மாலை மாற்றித் திருமணம் செய்துகொண்டோம். உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதன்பின்பு எங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கினோம்.

இறையரசி, உங்க கல்யாணத்துக்கு முன் தாலி இல்லாம கல்யாணம்என்பதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

என்னுடைய திருமணம் ‘மூத்தோர் விழா’ வில் நடந்தது. மற்ற திருமணங்களில் ஐயர் வைத்து மந்திரங்கள் ஓதி, தாலி கட்டித் திருமணம் செய்வார்கள். அந்த மாதிரியான திருமணத்தைத் தான் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், எனக்கு நடந்தது புதுமையாக இருந்தது. தாலி இல்லாமல், எந்த ஒரு சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல் வெறும் மாலையை மட்டும் மாற்றிக்கொண்டு உறுதிமொழி எடுத்தோம். அவர் எனக்கு ஒரு செயின் மட்டும் போட்டுவிட்டார். உறுதிமொழி எடுத்தது எனக்குப் புதுமையாக இருந்தது.

உங்கள் மாமனார் அரசெழிலன் ஒரு பெரியாரியல்வாதி என்பதால், இந்த மாதிரியான ஜாதி மறுப்புத் திருமணம், தாலியே இல்லாத திருமணத்தைப் பற்றி அவங்களுடைய சொந்தக்காரங்களுக்குத் தெரிந்திருக்கும். அவங்க தரப்பில் எதிர்ப்பு இருந்தாலும் அவர் சமாளிப்பார். ஆனா, உங்க சொந்தக்காரங்க இதை எப்படிப் பாத்தாங்க? அவங்கள எப்படிக் கையாண்டீங்க?

என்னுடைய உறவினர்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. இந்த மாதிரியான ஜாதி கடந்த திருமணம் என்னுடைய உறவுகள் வட்டாரத்தில் நடந்தது இல்லை. அதிலேயும் தாலி இல்லாமல், எந்த ஒரு திருமணமும் நடந்தது இல்லை. தாலி இல்லாத திருமணத்தைப் பார்த்து எப்படி இந்த மாதிரியான திருமணத்திற்கு சம்மதித்தீர்கள்? நாளைக்கு அந்தப் பையன் விட்டுட்டு போக மாட்டான் என்பது என்ன நிச்சயம்? என்று என்னுடைய அப்பாவைக் கேட்டார்கள்.

அதற்கு என்னுடைய அப்பா யாரும் எதுவும் சொல்லவேண்டாம். என்னுடைய மகளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கிறது. அவளும் படித்து இருக்கிறாள். அவளுக்கான வாழ்க்கையைச் சரியாகத்தேர்ந்தெடுத்திருப்பாள் என்று நம்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறேன் என்று சொன்னார். முதலில் உறவினர்கள் என்னை வெறுத்தாலும், இப்போது எல்லோரும் என்னிடம் பேசுகிறார்கள். பரவாயில்லை நல்லமுறையில் வாழ்கிறார்கள் என்று பொறாமைப்படுகிறார்கள். அந்த மாதிரிதான் நாங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

காதலர் தினத்தைப் பற்றி மற்ற மூன்று மதத்தினரின் பார்வை எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்?

கிறிஸ்துவ மதம் காதலை பெரிதாக எதிர்ப்பதில்லை. அப்படி எதிர்த்தால் அது பொருளாதார வித்தியாசத்தால் எதிர்க்கும் என்று நினைக்கிறேன். இஸ்லாமிய மதம் தங்களின் பெண்கள் வேறு மதத்தைச் சார்ந்த ஆண்களை தேடிப் போகக்கூடாது என்றும், பெண்கள் சுதந்திரமாகத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்றும் பார்க் கிறார்கள். ஆனால், இந்த இந்துமதம் இருக்கிறது பாருங்கள்... மற்ற மதங்களுக்கு எல்லா ஏற்றத்தாழ்வு ஜாதி, சாஸ்திர, பழக்க வழக்கம், பெண் அடிமைத் தனம் இவைகள் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் மதம் இதுதான்.

காதலர் தினத்தை எதிர்க்கும் இந்து அமைப்பு களுக்கு மொத்த பாடத்திட்டமாக இருப்பவை பார்ப்பனியச் சிந்தனை தான். இந்த பார்ப்பனர்களின் நலனுக்காகத்தான் இந்த எதிர்ப்பு பயன்படுகிறது.

முதலில் இருவர் இணையும் திருமண விழா என்றால் ஜாதகம், பெயர்ப் பொருத்தம், நிச்சய தார்த்தம், முகூர்த்தம் நடத்துதல், சாந்தி முகூர்த்தம், இந்த மாதிரியான நிகழ்வுகள் அனைத்தும் பார்ப்பனர்கள் சொல்லும் நாட்களில்தான் நடக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் செழிக்கும். வம்சம் விரித்தியாகும் என்றும் மக்கள் நம்பு கிறார்கள். இதைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் உடம்பு நோகாமல், மந்திரங்கள் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்க முடியும். இவை களை எல்லாம் நம்பாமல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பழகி, காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் விடுவார்களா இந்தப் பார்ப்பனர்கள்.

காதலைப் பற்றி உங்களது கருத்து?

சிறுவயதில் ஏற்படும் காதல்கள் 14 வயது முதல் 18 வயது வரை ஏற்படும் காதல் ஒருவிதமான அட்ராக்சன் என்றுதான் கூறவேண்டும். வாழ்க்கையின் தேவைகள், ஒருவரை ஒருவர் அறியாத வயதுதான்.

20 முதல் 25 வயது அதற்கு மேலாக ஏற்படும் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்து, பழகி இருவரின் வாழ்க்கை நிலையையும் உணர்ந்து தங்களின் வாழ்க்கையைச் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் இருவரிடமும் இருக்கும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

தமிழமுதன்...உங்களுடைய ஜாதிமறுப்பு, காதல் திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது?

எங்களுடைய திருமணம் குடும்பத்தாரின் அனுமதியுடன் நடந்ததால் இன்றும் எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. அதற்குக் காரணம் எங்கள் வாழ்க்கைமுறைதான். எங்கள் குடும்பத்தில் இந்துமத சாஸ்திர சடங்குகள், குலதெய்வ வழிபாடுகளும் எதுவும் நடத்துவது இல்லை. இதற்குக் காரணம் என்னுடைய அப்பாதான். அவர் பெரியாரியலைக் கடைப்பிடிப்பதால் எங்கள் வாழ்க்கை சிறப்புடன் இருக்கிறது. அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

Pin It