தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக தாங்கள் போட்ட அத்தனை கணக்குகளையும் தவிடுபொடியாக்கி தலித் மக்களை பார்ப்பன பாசிச பிஜேபி பக்கம் சென்றுவிடாமல் அரண்போல நின்று தடுத்துவரும் திருமாவளவன் மீது ஓட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி பிஜேபி கும்பலின் கோபம் திரும்பியுள்ளது. கிருஷ்ணசாமி போன்ற சில பிழைப்புவாதிகளை வென்றெடுக்க முடிந்த பிஜேபியால் கடைசிவரை திருமாவளவனை வென்றெடுக்க முடியமால் போனதற்குக் காரணம் அவரின் உறுதியான பார்ப்பன பாசிச எதிர்ப்பு நிலைப்பாடே ஆகும்.

thirumavalavan 645தேர்தல் அரசியலைக் கடந்து தலித் மக்கள் மத்தியில் இன்று பார்ப்பன பாசிசத்தை உறுதியாக அம்பலப்படுத்தும் ஒரே ஆளுமையாக இந்தியாவில் திருமாவளவன் மட்டுமே இருக்கின்றார். சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி இந்துத்துவ பார்ப்பன பாசிச கும்பலுக்கு அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்திருக்கின்றார். இதனால், தங்களின் கண்முன்னாலேயே தங்களின் பாசிசத் திட்டங்கள் தமிழ்நாட்டில் தோல்வியுறுவதை செரிக்க முடியாத கும்பல், திருமாவளவன் அவர்களை ஏதோ தலித்துகளை வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்கின்றவர் போன்றும், இந்து மதத்தை அழிக்க வந்தவர் போன்றும் தோற்றத்தை உருவாக்க முயன்று வருகின்றன.

பிஜேபியின் இந்த வக்கிர எண்ணத்தை நிறைவேற்ற பாமக சாதிவெறிக் கும்பலும் அதனுடன் கைகோர்த்து களம் கண்டு வருகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி பொன்பரப்பியில் இந்து முன்னணியும், பாமகவும் இணைந்து நடத்திய கொலைவெறித் தாக்குதல். 20க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை தீவைத்துக் கொளுத்தி, பலபேரை மிகக் கொடூரமாகத் தாக்கி வெறியாட்டம் போட்ட பாசிஸ்ட்டுகள், இன்று கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் பொதுவெளியில் நடந்த சம்பவத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள்தான் காரணம் என்று அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலம் பாமக, பிஜேபி கும்பல் எப்போதுமே தலித்துகளின் பரம எதிரி என்ற உண்மை அம்பலமாகி இருக்கின்றது.

இவர்கள் தலித் இயக்கத் தலைவர்களை வென்றெடுப்பதன் நோக்கமே அவர்களைப் பயன்படுத்தி தலித் மக்கள் மத்தியில் பார்ப்பன பாசிசத்தை விதைத்து, இங்கிருக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் அடியாள் படையாக மாற்ற வேண்டும் என்பதுதான். மற்ற மாநிலங்களில் அவர்கள் இதைத்தான் நீண்ட நாட்களாக செய்து வருகின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான எந்த ஒரு முன்னெடுப்பையும் பிஜேபி ஆர்எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பலால் செய்ய முடியவில்லை. ஆனால் அதற்கான வேலைகளை அவர்கள் தொடர்ந்து செய்துதான் வருகின்றார்கள். அதற்காகத்தான் இந்தத் தேர்தலில் அவர்கள் ஊழல் முறைகேடுகளில் சிக்கி முற்றிலுமாக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கும் அதிமுகவையும், சாதிவெறி பாமகவையும், தன்சொந்த சாதி மக்களை சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் பார்ப்பனமயப்படுத்தத் துடிக்கும் கிருஷ்ணசாமியையும் இணைத்து கூட்டணி வைத்தார்கள். ஆனால் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டு செல்வாக்கிழந்து அவர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையில் இருப்பதால் நிச்சயம் இந்தப் பாசிச கும்பல்களின் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேறப் போவதில்லை.

அதை நன்றாக உணர்ந்துதான் வெளிப்படையாக வந்து சாதிவெறியையும் மதவெறியையும் இந்தப் பாசிசக் கும்பல் கக்க ஆரம்பித்திருக்கின்றது. பொன்பரப்பியில் நடந்த சாதிவெறித் தாக்குதலுக்கு பாமகவும், இந்து முன்னணியும்தான் காரணம் என்பது அப்பட்டமாக வெளியான பின்பும் தமிழிசையும், எச்.ராஜா போன்ற சைக்கோ பேர்வழிகளும், பாமக சாதிவெறிக் கும்பலும் தைரியமாக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதும், அவர்களுடன் உறுதியாக நின்று, பாமக இந்து முன்னணி அயோக்கியர்களை அம்பலப்படுத்திய திருமாவளவன் மீதும் குற்றம் சுமத்துகின்றார்கள்.

“திருந்திபடி என்று சொல்லாமல் திருப்பி அடி என வன்முறை அரசியலுக்கு வழிகாட்டும் விசிக திருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக அடித்தட்டு மக்களுக்காக நீங்கள் கொண்டு வந்த ஒரு திட்டம் சொல்ல முடியுமா? “ என தமிழிசையும்,

"சரக்கு மிடுக்கு பேச்சிற்கு சொந்தக்காரரான திருமாவளவன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆவார். சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்" என்று எச்.ராஜாவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை படிக்கவிடாமல் அவர்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகக் கீழ்த்தரமாக அடிமைகளாக நடத்திய கும்பலின் தலைவியான தமிழிசைக்கு இதைச் சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது என்று தெரியவில்லை. ரோகித் வெமுலாக்களையும், முத்துகிருஷ்ணன்களையும், அனிதாக்களையும் கொன்றுபோட்ட கொலைவெறி பிடித்த கும்பல் இன்று ஏதோ தலித் மக்களின் நலனில் அக்கறை இருப்பது போன்று பேசுவது அருவருப்பானது. தமிழக மக்கள் எதையும் மறக்கவில்லை. நந்தினியை கருவறுத்துக் கொன்றதையோ, கோவையில் கலவரம் செய்து பிரியாணி அண்டாவைத் திருடித் தின்றதையோ, திருப்பூரில் மோடி படத்திற்கு செருப்பு மாலை போட்டு கலவரத்தைத் தூண்டப் பார்த்ததையோ, ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிராகவும், எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு எதிராகவும், நியூட்ரினோ, கெயில், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் போராடிய மக்களை தேசவிரோதிகள் என்ற முத்திரை குத்தியதையோ, மாநில அரசுடன் கைகோர்த்து 13 பேரை சுட்டுக் கொன்றதையோ எதையுமே மறக்கவில்லை.

உண்மையில் தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் அதற்கான முழு பொறுப்பும் பைத்தியக்காரர்களையும், சைக்கோக்களையும், விஷநாக்குப் பேர்வழிகளையும் மட்டுமே கொண்டு நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பிஜேபிதான். சாதிக் கலவரத்தைத் தூண்டி விடுவது, மதக் கலவரத்தைத் தூண்டி விடுவது, பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்வது, சிறுபான்மை மக்களையும், தலித்துகளையும் தாக்குவது, பணமதிப்பிழப்பு நீக்கம் செய்து ஒட்டுமொத்த மக்களையும் பிச்சைக்காரர்கள் போல அலைய விட்டுவிட்டு வெளிநாட்டில் கள்ள நோட்டு அடித்து அதை பணக்காரர்களுக்கு விநியோகம் செய்வது, தேசபக்தி என்று பேசிக்கொண்டே ராணுவ வீரர்களை சாக விடுவது, அந்தச் சாவை வைத்து ஓட்டு கேட்பது - இது தானே பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் சமூக நல்லிணக்கத்தை கட்டிக் காப்பாற்றும் லட்சணம்.

நிச்சயமாக தமிழ்நாட்டில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி, பாமக போன்ற பாசிஸ்ட்டுகளின் செயல்திட்டம் ஒருநாளும் பலிக்கப் போவதில்லை. தன்மானமும், சுயமரியாதையும் உள்ள எந்தத் தலித்தும் இந்தக் கழிசடை கும்பலின் பின்னால் நிச்சம் செல்ல மட்டார்கள் என்பதுதான் உண்மை. தோழர் திருமாவளவன் போன்றவர்கள் தலித் மக்கள் சமூக, அரசியல், பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்டதற்கான சரியாக காரணத்தைத் தொடர்ந்து சமரசமின்றி பிரச்சாரம் செய்து வருவது இந்தியாவில் வேறு எந்தத் தலித் இயக்கத் தலைவரும் செய்யாத பணியாகும். இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளும் தோழர் திருமாவளவன் அவர்களின் இந்தப் பணிக்கு அவருடன் இணைந்து கரம் கோர்த்துள்ளன. எந்தத் தலித் மக்களை இந்துத்துவத்தின் அடியாள் படையாக மாற்றி, அவர்கள் மூலம் தனது பாசிசத்தை இந்த மண்ணில் விதைக்க நினைத்தார்களோ அதே மக்களால் இந்தப் பாசிசக் கும்பல் இந்த மண்ணில் இருந்து அடித்து விரட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை நாம் பார்க்கத்தான் போகின்றோம்.

- செ.கார்கி

Pin It