ஆட்சியையும், பதவியையும் காப்பாற்றிக் கொள்ள அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தல் அரசியலில் பங்கேற்கும் அரசியல்வாதிகளுக்கு சூது, வாது, கள்ளம், கபடம் போன்ற நற்குணங்கள் மட்டும் இருந்தால் போதாது, அதையும் தாண்டி அவர்கள் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடுகளை எல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும். தன்னை ஒரு மனிதனாகவே கருதாத துறவு நிலைக்கு அவர்கள் செல்ல வேண்டும். கல்லை எடுத்து வீசினாலும், செருப்பை எடுத்து வீசினாலும், ஏன் மலத்தை எடுத்து அடித்தாலும் அஞ்சா நெஞ்சுடன் அசரா தீரத்துடன் துடைத்துப் போட்டுவிட்டு தெய்வீக சிரிப்புடன், சாந்த சொரூபியாக மக்கள் முன் காட்சியளிக்க வேண்டும். இதைத்தான் பார்ப்பன ஆன்மீகத்தில் அனைத்தையும் கடந்த நிலை என்கின்றார்கள், அதாவது பிரம்மம் என்கின்றார்கள். அதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால் சம்மந்தம் இருக்கின்றது. பிரம்மத்தை அடைவதற்கான வழியாக எப்படி சுயமதிப்பீடுகள் விலையாக கேட்கப்படுகின்றதோ, அதே தான் பதவியைப் பெறுவதற்கும் அதன் மூலம் பணம் பெறுவதற்குமான வழியை அடைய அதே சுயமதிப்பீடுகள் விலையாகக் கேட்கப்படுகின்றது.

s gurumurthyஅதைக் கொடுக்க திராணியற்ற யாரும் தேர்தல் அரசியலின் பக்கம் தலைவைத்துப் படுக்கவே தகுதியற்றவர்கள். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னால் மானம், மரியாதை பார்ப்பதெல்லாம் உண்மையில் தசரதனனோ, இல்லை பாஞ்சாலியோ கற்பைப் பற்றி வகுப்பெடுப்பது போன்று அபத்தமானது. ஊர் மேய்பவர்களுக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்களைப் பார்த்தால் ஊரார் தூற்றுவதும் வாய்க்கு வந்தபடிக்கு ஏசுவதும் வாடிக்கையானதுதான்.

அப்படித்தான் பார்ப்பனத் தரகன் ஆடிட்டர் குருமூர்த்தி ஒபிஎஸ்சையும், ஈபிஎஸ்சையும் ஆண்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவாளவர்களை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி அணி உத்திரவிட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பார்ப்பனத் தரகன் குருமூர்த்தி Impotent என்ற வார்த்தையால் ஒபிஎஸ், ஈபிஎஸ்சைக் குறிப்பிட்டார். இதற்கு அடிமைகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தபின் பார்ப்பனத் தரகன் தான் impotent என்ற வார்த்தையை ‘திறனற்றவர்கள்’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியதாகவும், ஆனால் அது தவறாக பொருள்கொள்ளப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

பார்ப்பனத் தரகன் குருமூர்த்தி சொல்வதுபோல Impotent என்ற வார்த்தைக்கு திறனற்றவர்கள் என்ற பொருளும் உள்ளது, அதே போல ஆண்மையற்றவர்கள் என்ற பொருளும் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பிஜேபியின் நிரந்தர அடிமைகளாகவே மாறிப்போன இந்தக் கூட்டத்தை திறனற்றவர்கள் என்று நாகரிகமாக அழைக்கும் அளவுக்கு குருமூர்த்தி போன்ற புரோக்கனுக்கு மனம் வருமா என்பதுதான் கேள்வி. பிஜேபியின் கிளை அமைப்பாக செயல்படுவது என்ற உத்திரவாதத்தின் பேரில் மோடியின் பாதங்களில் விழுந்து வணங்கி, கட்சியையையும் சின்னத்தையும் வாங்கி வந்தும் கூட இடைத்தேர்தலில் தோற்றதானது பார்ப்பனக் கும்பலை கொதிப்படையச் செய்திருக்கின்றது. அவர்களைப் பொருத்தவரை இது பிஜேபியின் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது. இப்போதைக்கு தமிழ்நாட்டில் அதிமுகதான் பிஜேபி. அதன் மீது எல்லா அதிகாரங்களையும் செலுத்தும் உரிமை அதற்கு தற்போது இருக்கின்றது.

தலைமைச் செயலகத்தில் வெங்கையா நாயுடுவை ஆய்வு செய்ய அனுமதித்ததில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய அனுமதித்ததுவரை இந்த அடிமைக் கூட்டம் தனது விசுவாசத்தை எந்தவித எதிர்ப்பும் இன்றியே காட்டி வந்திருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சிகள் இந்த ஆய்வு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தபோதும் அடிமைகள் அதை நியாயப்படுத்தியே பேசி வந்தனர். எந்தச் சூழ்நிலையிலும் பார்ப்பான எசமானனை பகைத்துக்கொள்ள விரும்பாத உத்தம சூத்திர அடிமைகளாகத்தான் இவர்கள் இருந்து வந்திருக்கின்றார்கள். இவர்களிடம் தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிஞ்சித்தும் எப்போதுமே இருந்தது கிடையாது. அப்படி இருந்ததால்தான் அவர்களால் நீட் நுழைவுத்தேர்வு, உதய் மின்திட்டம், உணவுப் பாதுகாப்பு திட்டம்,ஜி.எஸ்.டி போன்றவற்றிற்கு எந்தவித எதிர்ப்பும் இன்றி ஆதரவு தெரிவிக்க முடிந்தது. மத்தியில் பார்ப்பான்களின் நலன் காக்கவே நடந்துகொண்டிருக்கும் ஆட்சி என்ன மாதிரியான நாசகாரத் திட்டங்களை தமிழகத்தின் மீது திணித்தாலும், அதை சிரம்மேற்கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக இருக்கும் ஓர் அடிமைக் கூட்டத்தை எப்படி நடத்த வேண்டுமோ அப்படித்தான் அது நடத்திக்கொண்டு இருக்கின்றது.

அவர்களைப் பொருத்தவரை நாயினும் கேவலமாகவே அவர்கள் இந்த அடிமைக் கூட்டத்தைப் பார்க்கின்றார்கள். அவர்கள் அப்படித்தான் பார்க்கின்றார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியும். இருந்தும் அதில் இருந்து மீண்டுவர எந்த வழியும் இவர்களிடம் கிடையாது. இவர்களின் ஒட்டுமொத்த ஊழல் டைரியும் தற்போது மோடியின் கைவசம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது அதில் உண்மை இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்றுதான் தோன்றுகின்றது. அந்தத் தைரியத்தில்தான் வருபவன், போபவனெல்லாம் சகட்டுமேனிக்கு இந்த அடிமைக்கூட்டத்தை அசிங்கப்படுத்துகின்றார்கள். மெழுகுவர்த்தி ஏந்திப் போராடியவர்களையும், துண்டுப் பிரசுரம் கொடுத்தவர்களையும், கார்ட்டூன் வரைந்தவர்களையும் கைது செய்து தனது சண்டித்தனத்தைக் காட்டும் இவர்கள் தங்களை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன பார்ப்பனத் தரகன் குருமூர்த்தியை என்ன செய்யப் போகின்றார்கள்?. நிச்சயம் ஒன்றும் செய்ய மாட்டார்கள். குரைக்கிற நாய் கடிக்காது என்பது பழமொழி.

அதுவும் பார்ப்பன விசுவாசம் மிக்க இந்த அடிமைகள் குருமூர்த்தி போன்றவர்கள் மீது நிச்சயம் கைவைக்கமாட்டார்கள். சங்கராச்சாரி மீது கைவைக்க ஜெயலலிதாவுக்கு இருந்த தைரியத்தில் நூறில் ஒருபங்கு கூட இந்த அடிமைக்கூட்டத்திற்குக் கிடையாது. ஜெயலலிதா இருந்தவரை சோ ராமசாமி போன்ற பார்ப்பனத் தரகனை நம்பியே ஆட்சி செய்தார். அதே போல இப்போது இந்த அடிமைக் கூட்டமும் குருமூர்த்தி போன்ற பார்ப்பன தரகனை நம்பியே ஆட்சி செய்ய விரும்புகின்றார்கள். பிறப்பால் பார்ப்பான் என்ற தகுதியை மட்டுமே வைத்துகொண்டு ஒரு மாநிலத்தின் ஆட்சி எப்படி நடக்கவேண்டும் என்று இந்த அயோக்கியன் உத்தரவு போடுகின்றான் என்றால், அவனுக்கு இந்த அதிகாரத்தை வலிந்துகொடுத்து, அவனது காலை நாக்கிப் பிழைக்கும் கும்பலுக்கு மானமரியாதை எல்லாம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

அதனால் பார்ப்பனத் தரகன் குருமூர்த்தி 'ஆண்மையற்றவர்கள்' என்று சொன்னாலும் இன்னும் கேவலமாகக் கூட வேறு எதாவது சொன்னாலும் ‘என்னங்க சாமி இப்படி சொல்லீட்டிங்க. நீங்கலெல்லாம் ஆசிர்வதித்தால் தான் நாங்கள் சுபிட்சமாக இருக்க முடியும்,ஏதோ தவறு நடந்துவிட்டது. சாமிதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும்’என்று சாஸ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கிவிடுவார்கள். அவர்களைப் பொருத்தவரை இருக்கும் மூன்று ஆண்டுகளும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், அதன் மூலம் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் பணத்திற்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டிய எந்தச் சிந்தனையும் தற்போது அவர்களுக்குக் கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் முன்பைவிட தற்போதுதான் இந்தப் பார்ப்பனக் கூட்டத்தை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியானது அடிமைகள் கூட்டத்தில் இருந்து சிலரை தப்பியோட நிச்சயம் தூண்டும். அப்படி அடிமைகளில் சிலர் தினகரன் தரப்பிற்குச் சென்றுவிட்டால் இந்த ஆட்சியை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்பதுதான் உண்மை. எனவே அடிமைகளை மிரட்டி வைக்க இது போன்ற பார்ப்பன தரகன்களின் ஆதரவு இல்லாமல் போனால், ஆட்சியும் கட்சியும் தினகரனிடம் போவதை இந்த அடிமைகளால் நிச்சயம் தடுக்க முடியாது. அதனால் காறித்துப்பினாலும், கழுவி ஊற்றினாலும் பேசாமல் இருந்துவிடுவதுதான் நல்லது. பிரம்மத்தை அடைய நினைப்பவன் தன்மானத்தையும், சுயமரியாதையும் பார்ப்பனியத்தின் காலடியில் விட்டுவிட வேண்டும் என்பதுதானே நிபந்தனை.

- செ.கார்கி

Pin It