தலித் இலக்கியத்துக்கும் லலித் இலக்கியத்துக்குமான பாரதூரமான வேறுபாடு எதுவென விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நெரிந்து என்ற சிறியதொரு கவிதைத்தொகுதியின் வழியே அறியவந்தார் மதிவண்ணன். மோவாயை சொரிந்து மோட்டுவளையை வெறித்து கவிதைக்கான கருவையும் உருவையும் தேடிக்கொண்டிருப்பவர்கள் மலிந்திருக்கும் சூழலில், செத்தமாட்டின் ஈரலை சுட்டுத்தின்ற தன் பாட்டனின் குசுவிலிருந்து கவிதைக்கான கச்சாப் பொருளை எடுத்துக்கொள்வதாய் மதிவண்ணன் அறிவித்தபோது மூக்கைப் பிடித்துக் கொண்டவர்கள் இன்னும் சமநிலைக்குத் திரும்பவில்லை என்பது சற்றுமுன் கிடைத்த தகவல். பின்னும் அவர் ஓயவில்லை. அடுத்தடுத்து கருத்தியல் தளத்தில் தன் படைப்புகள் வழியே குறுக்கீடு செய்தபடியே இருக்கிறார். ஆந்திராவில் மாதிகாக்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி நடந்த தண்டோரா இயக்கத்தின் வரலாற்றையும் படிப்பினைகளையும் தமிழ்ப்படுத்தி வெளியிட்டதன் மூலம் அவர் தமிழகத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயத்திற்கு மிகுந்த அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறார். பெருத்த ஆரவாரங்களுக்குள் தன்னை வீழ்த்திக்கொள்ளாமல் சற்றே ஒதுங்கிநிற்பவரைப் போன்று தெரிந்தாலும் அவர் சமகால சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது எழுத்தைப்போலவே பேச்சும் உணர்த்துகிறது....
பழ.பாலசுந்தரம், எழில்வரதன், பொன் சங்கர், கண்மணி, உள்ளிட்ட நண்பர்கள் சூழ ஒசூரில் நண்பர் அருளின் கௌரிசங்கர் விடுதியில் நிகழ்ந்த இந்த உரையாடலில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்...
1.
ஆதவன்- புத்தகத்தின் பின்னட்டையிலிருக்கிற நாலுவரியைத் தவிர படைப்பாளியைப் பற்றி வாசகனுக்கு பெரிதாக எதுவும் தெரிவதில்லை. எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்திருக்கிறோம் என்பதை அறிவிப்பதும்கூட ஒரு அரசியல்தான் என்பதால் உங்களது குடும்பச் சூழல் பற்றி சொல்வது சரியாகத்தானே இருக்கும்?
என் அம்மா திருச்செந்தூர். அப்பாவுக்கு நாசரேத். என் தாத்தா அந்தப் பகுதியிலிருந்து ரயில்வேக்கு வேலைக்குப் போன முதல் அருந்ததியர். அங்கிருந்து முதலில் படிக்கப் போனவர் என் அப்பா. அந்த கல்விமுறைக்குள் போய் மிரண்டு திசை திரும்பிப் போயிட்டார். படிக்கும்போதே காதலித்து கல்யாணம் முடிச்சிக்கிட்டார். படிப்பு போதுமானதா இல்லாததால தினக்கூலிக்குத்தான் போவாராம். அப்பத்தான் நான் பிறந்தேன். ஒருத்தர் சம்பாத்தியத்தில பிழைக்கிறது சிரமம்னு எங்கம்மாவும் துப்புரவுப் பணிக்குப் போனாங்க. அவங்களுக்கு ஒரு மடத்துல- கல்யாணமண்டபத்துல இலை அள்ளுறது, கக்கூஸ் கழுவறது மாதிரியான வேலை. நானும் அவங்களுக்கு கூடமாட ஒத்தாசையா இந்த வேலைகள் செய்திருக்கேன்.
ரொம்பவும் மோசமான பொருளாதார பின்புலம்தான் என்னுடையது. பைக்கட்டை மேலே போட்டு சட்டைக் கிழிசலை மறைச்சிக்கிட்டு ஸ்கூலுக்குப் போயிருக்கிறேன். ஒரு வாத்தியார் என்னை அழுக்குப் பாண்டின்னு தான் கூப்பிடுவார். +2 நல்ல மார்க் எடுத்தும், வேற படிப்புகளுக்கு சீட்டு கிடைச்சும் வசதியில்லாததால என்னால சேரமுடியல. டைப்ரைட்டிங் கிளாசுக்குப் போனேன். அப்பத்தான் கலை இலக்கியப் பெருமன்றம்- சிபிஐ தோழர்களோட தொடர்பு கிடைச்சது. எங்க குடியிருப்புல 90 சதம் ஏடிஎம்கே. திமுகவிலிருந்த அஞ்சாறு குடும்பங்கள்ல எங்களுதும் ஒன்னு. கம்யூனிஸ்ட்னு எங்களுக்கு யாரையும் தெரியாது. அப்ப, கலைஇலக்கியப் பெருமன்ற ஆட்களோட தொடர்பு- அதிலிருந்த பெரிய ஆட்களெல்லாம்கூட ரொம்ப எளிமையா – பெரிய அளவுல வித்தியாசமில்லாம பழகினது ரொம்பவும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.
ஈக்வாலிட்டிங்கிறதை முதல்முதலில் அனுபவிக்கும்போது அது ஒரு போதை மாதிரி. எங்கயுமே அனுபவிக்காத ஒரு விசயம். அதை முதல்முதல்ல அனுபவிக்கிறப்ப எந்த விலை கொடுத்தாலும் அதை இழக்க முடியாதுங்கிற மாதிரி ஒரு உணர்வு. அந்த நிலையிலதான் அவங்களோட நெருக்கமாகி அவங்களோடவே சேர்ந்து செயல்பட்டுக்கிட்டிருந்ததது. 8 அல்லது 9 படிக்கும் போதே எழுதத் தொடங்கியிருந்த கவிதைகள் வழியா இந்த அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டது.
ஆதவன்- அமைப்புகளோடுள்ள தொடர்பு சிலநேரங்களில் வெறும் தொடர்பாகவே சுருங்கிப் போவதுண்டு. படைப்பாக்க மனநிலைக்கு அந்த தொடர்பு எந்த பங்களிப்பையும் செய்யாமல் பாராமாகிப் போவதுமுண்டு. தொடக்ககால நிலையிலிருந்து ஒரு போர்க்குரலாக உங்கள் கவிதைகள் மாறுவதற்கு கலை இலக்கியப் பெருமன்ற தொடர்பு எந்தளவுக்குப் போதுமானதாயிருந்தது? அல்லது அந்த திறப்பு எப்போ எதுவழியா நடந்திருக்கும்னு உங்களால யூகிக்க முடியுதா?
மதி- நான் இயல்பிலேயே எதிர்ப்புணர்வு உள்ளவன். அதுக்கு ஒரு வடிகாலாக என் கவிதைகள் இருக்கலாம்னு தோணுது. அஞ்சாம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்தேன். நான்தான் முதல் மார்க். தொடர்ந்து பர்ஸ்ட் ரேங்க். நல்லா படிக்கிறவங்களையெல்லாம் ஆறாம் வகுப்பில் இங்கிலிஷ் மீடியத்துல சேர்த்தப்ப நானும் சேர்ந்தேன். இந்த திடீர் மாற்றத்துக்குள்ள என்னால என்னை பொருத்திக்க முடியல. என்னோட முதல் ரேங்க் தகுதி பறிபோனது. அது ஒரு தோல்வி. அதை வேறொன்றால் ஈடுகட்டகிற தவிப்புல பேச்சுப்போட்டியில கலந்துக்கிறது, கவிதை எழுதறதுன்னு நான் வெளிப்பட்டேன்னு சொல்லலாம். அந்த உணர்வோட தொடர்ச்சியாகத்தான் இன்றைய கவிதையைப் பார்க்க முடியும்.
தொடக்ககால கவிதைகள்லயும் வடிவம் சார்ந்த பிரச்னை இருந்திருக்கலாமே தவிர சமூகம் சார்ந்துதான் எழுதினேன். சூழலைப் பார்த்து போபமடைந்து ஒன்னும் செய்ய முடியலையேங்கிற அந்த மனநிலையோட வெளிப்பாடாகத்தான் கவிதை எழுதறேன். ....தாத்தாவின் குசுவிலுருந்து கவிதைக்கான கச்சாப் பொருளை எடுக்கிறன்னு எழுதினதை வெறும் வார்த்தையா எடுத்துக்கக் கூடாது. குசு விடுவதற்கான நெருக்கடி இருக்கே, அந்த நேரத்தில் அதை விடுறதைத்தவிர வேற வழியில்லை. விட்டுத்தான் ஆகணும். அந்த மாதிரியான நெருக்குதலுக்குள்ள போனபிறகுதான் எழுதறேன்.
ஆதவன்- உங்களோட நெரிந்து கவிதைத் தொகுப்பு அளவுக்கு அருந்ததியர் வாழ்க்கையைப் பேசின படைப்பாளிகளா யாரை கருதறீங்க?
மதி- எனக்கும் முன்பே விழி.பா.இதயவேந்தன் எழுதிக்கிட்டிருந்தார். அருந்ததியருங்க கஷ்டப்படறாங்கன்னு ஒரு பொதுவான பார்வை இருந்தது. இப்படி சொல்றதுக்காக அவர் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவருடைய எழுத்தில் எதிர்ப்புணர்வு இல்லை. பூமணியோட ‘பிறகு’ தான் சரியான புரிதலோட வெளிப்பட்ட படைப்பு. புத்தமித்திரனோட சில கவிதைகள் இரக்கத்தை யாசித்து நிற்காத தன்மையை வெளிப்படுத்தும். கௌதம சக்திவேல் இப்போ எழுதிக்கிட்டிருக்கார். எழில் இளங்கோவன் நான்-பிக்ஷன் எழுதறார்.
ஆதவன்- அருந்ததியர் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் எவ்வாறு பதிவாயிருக்கு?
மதி- அறியாமைதான் வெளிப்பட்டிருக்கு. கொச்சைப்படுத்தப்பட்டிருக்கு. பெருமாள் முருகனோட ஏறுவெயில் மாதிரி, சூரியகாந்தனோட நாவல் மாதிரி- ஆழ்ந்த பார்வை இல்லாம, வெறுமனே மனிதாபிமானக் கண்ணோட்டத்தில எழுதப்பட்டிருக்கு.
ஆதவன்- ஆனா பெருமாள் முருகனோட படைப்புகள் எல்லாம் அசலான தலித் படைப்புகள்னு கொண்டாடப்படறதும், சமீபத்தில்கூட அவரது ‘கூளமாதாரி’ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படறதுமாக இருக்கே?
மதி- அது பெரிய மோசடி. அதை தீர்மானிக்கும் இடத்தில் அருந்ததியர் இல்லை. அருந்ததியர் யாராவது படிச்சிட்டு இது எங்க வாழ்க்கையை சரியாப் பேசுதுன்னு சொல்லியிருக்காங்களா?
ஆதவன்- தோட்டிகள் மேலிருக்கிற இரக்கத்தால்தான் தகழி ‘தோட்டியின்டே மகனை’ எழுதினதாகவும், அதற்கு சற்றுங்குறையாத உணர்வால் உந்தப்பட்டுதான் அந்த நாவலை அமரர் சுந்தரராமசாமி மொழிபெயர்த்ததாகவும் சொல்லப்படுது. ஆனா நீங்க அந்த நாவலை கடுமையா விமர்சிக்கிறீங்களே?
மதி- பொதுவா ஒரு சமூகத்தை எழுதும்போது அதிலுள்ள சிறந்த ஆளுமைகளைப் பற்றி எழுதுவாங்க. உதாரணத்துக்கு, பிரதாப முதலியார் சரித்திரம். பொய்த்தேவில் வருகிற ஒரு பார்ப்பனர் விபச்சாரியை தேடிப் போறதை ‘வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர் இறங்கியிருப்பதாக’வும், அதையே ஒரு முதலி செய்யும்போது இழிவாகவும் சித்தரிப்பார் க.நா.சு. தோட்டியின் மகன்ல, மோசமான கைக்கூலியா இருக்கிற ஒருத்தனை எடுத்துக்கிட்டு - அவன் பீயைப் பற்றியே சதா யோசிக்கிறவங்கிற மாதிரி சித்திரிக்கிறார் தகழி. அருந்ததியர்னா மோசமானவங்க- அசிங்கமானவங்க என்ற கருத்தில் நின்று தான் தகழி எழுதியிருக்கிறார்.
ஆதவன்- இந்த ஒரு காரணமே போதும்னு நினைச்சுத்தான் அதை சுந்தர ராமசாமி மொழிபெயர்க்கத் துணிந்திருப்பார். சரி, தலித் வாழ்க்கையை எழுத வருகிற தலித்தல்லாதவர்களை இப்படி மட்டைக்கு ரெண்டு கீற்றாய் கிழித்தெறிய காரணம் அவர்கள் தலித்தல்லாதவர்கள் என்பதுதானா? தாங்கள் மிக நன்றாக அறிந்த தங்களது சாதிக்காரர்கள்கிட்ட இருக்கிற ஒடுக்குமுறை மனோபாவத்தைப் பற்றி எழுதி அவங்களோட விரோதத்தை சம்பாதித்துக் கொள்வதற்குத் துணியாமல், ‘நாங்களும் உங்களைப் பற்றித்தான் எழுதுவோம்’னு தலித்துகள்கிட்ட அடம் பிடிக்கிறவங்களைப் பற்றி?
மதி- அவரவர் அவரவருக்குத் தெரிந்ததை எழுதறோம். அதுதான் சரியும்கூட. கூடுவிட்டு கூடு பாய்வதெல்லாம் சாத்தியமே இல்லை. ஒருத்தனுக்கு அறியாமை இருந்தால் அந்த அறியாமையோட பலனை பாரத்தை அவனேதான் சுமக்க வேண்டியிருக்கும். ஆனால், அருந்ததியர் பற்றி மத்தவங்களுக்குள்ள அறியாமையோட பாரத்தை அவங்களுக்குப் பதிலா அருந்ததியரே சுமக்க வேண்டியிருப்பது பெரிய அவலம். உதாரணமா, என்னோட கவிதைகள் அருந்ததியர் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தறதில்ல. தலித்துகள் ஒரு மாதிரியாகவும், சாதி இந்துக்கள் இன்னொரு மாதிரியாகவும் எதிர்கொள்றாங்க. இலக்கியம் படிக்கிறோம்னு பொதுவா சொன்னாலும் அவரவருக்குப் பிடிச்சதைத்தான் படிக்கிறோம். சாதி இந்து அவனது சாதியை திட்டுவதையோ விமர்சிப்பதையோ விரும்பறதில்லை.
ராஜ் கௌதமன் ஒரு பேட்டியில் பாமாவோட கருக்கு பற்றி சொல்லும்போது, ‘எல்லாரும் சேர்ந்து பாராட்டுறாங்கன்னா அந்த நாவல்ல ஏதோ குறை இருக்கிற மாதிரி தெரியுதே’ன்னார். பெரியார் ஒருமுறை, ‘எனக்கு எது சரி எது தப்புன்னு தெரியாது. ஆனா ராஜாஜி என்ன செய்கிறாரோ அதுக்கு எதிரா செய்தா சரியா இருக்கும்னு எனக்குத் தெரியும்’னார். சாதி இந்து மனம் தனக்கு ஒவ்வாத விசயத்தை ஒருபோதும் எற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு ஒவ்வாத விசயங்களை எழுதறதுதான் தலித் இலக்கியம்கிறதுக்கான லிட்மஸ் டெஸ்ட். அப்படி தலித்தல்லாதவங்களால எழுத முடியல, எழுதலேங்கிறதுதான் உண்மை.
2.
பாலசுந்தரம்- அருந்ததியர்கள் யார்?
மதி- அருந்ததியரை துப்புரவுப் பணியாளர்கள் அல்லது மலமள்ளிகள், பீயள்ளிகள்னுதான் பார்க்கிற மனோபாவம்தான் பொதுவா தமிழ்ச்சமூகத்துல இருக்கு. அருந்ததியர்களுக்காகப் போராடுகிற/ ஆதரிக்கிற நண்பர்களுக்கும் இதே பார்வைதான்.
நாம் பெரியபெரிய அரண்மணைகளைப் பார்த்திருக்கிறோம். எதிலாவது கக்கூஸ் என்கிற ஏற்பாடு உண்டா? கிடையாது. மேட்டுக்குடிகள் வாழ்ந்த அரண்மனையிலேயே கக்கூஸ் கிடையாதுன்னா, சாதாரண மக்கள் அவங்க வீட்டுக்குள்ளயே கக்கூஸ் வச்சிருக்க வாய்ப்பேயில்லை. ஏரிக்கரை, குளத்தங்கரை அல்லது வேறுமாதிரியான மறைவிடங்கள்ல ஒதுங்கறதுதான் நம்மோட பழக்கவழக்கமா இருந்திருக்கு. அப்படியான அனுபவம் நமக்கும் இருக்கு. ஆகவே அருந்ததியர்கள் எப்பவுமே மலமள்ளிக்கிட்டிருந்தாங்கன்னு சொல்லுவதில் ஒரு வரலாற்றுப்பார்வை இல்லை.
உண்மையில அருந்ததியர்கள் தோல் பணியாளர்கள். தோல்பணியாளர்கள்னு சொன்னதம் வெறும் செருப்புத் தைக்கிறவங்கன்னு புரிஞ்சிக்கக் கூடாது. தமிழ்நாட்டுல பெரிய ஜீவநதிகள் எதுவும் கிடையாது. அதனால இங்குள்ள விவசாயம் பெரும்பாலும் கிணற்றுப் பாசனத்தையே நம்பியிருந்தது. கிணற்றுக்குள்ளிருந்து நீரை மோந்து மேலேகொண்டு வந்து ஊற்றுகிற ‘பரி’தான் இந்த கிணற்றுப்பாசனத்துக்கு மிகவும் அடிப்படையானது. தோலாலான இந்தப் பரியை தைத்துக் கொடுப்பதுதான் அருந்ததியர்களோட பிரதான வேலை. பரி மூட்டுவதும் செருப்பு தைப்பதும், அந்த வேலைகள் இல்லாதபோது விவசாய வேலைகளையும் அருந்ததியர்கள் செய்துக்கிட்டிருந்தாங்க.
1930களில் விவசாயத்திற்குள் மின்சாரம் பரவலாகத் தொடங்குது. மோட்டார் பம்ப் வருது. கமலை/ ஏற்றத்துக்குப் பயன்பட்ட பரி தேவையற்றதாகுது. ரப்பர், பிளாஸ்டிக் பயன்பாடு வந்தப்ப இவங்களோட செருப்புத் தொழிலும் பாதிக்கப்படுது. இப்படித்தான் அருந்ததியர் கையிலிருந்த தோல் தொழில் பறிபோனது.
இந்த அமைப்புக்குள்ள ஒரு பெரிய மாற்றம் வரும்போது அதனால் மேல்தட்டுச்சாதிகள் பாதிக்கப்பட்டால் - சமூக அமைப்பு- கட்சிகள்- இயக்கங்கள் அழுத்தம்கொடுத்துப் போராடி அந்த பாதிப்பிலிருந்து அவங்களை காப்பாத்தும் முயற்சி நடக்கும். உதாரணமா, நெசவாளர்கள். முதலாளித்துவம் விசைத்தறியோட வந்தப்ப கைத்தறியைப் பற்றி காந்தியிலிருந்து பெரியார் வரை எல்லாரும் பேசினார்கள். போராடினார்கள். ஆனால் அருந்ததியர்கள் ஒரு கீழ்த்தட்டு சாதி என்பதால அதற்குப் பெரிய அழுத்தம் கொடுத்து போராடாமல் கைவிட்டதால, அருந்ததியர்கள் தங்களோட பாரம்பரியத் தொழிலை கைவிட வேண்டியதாயிற்று.
தோல்பணியை தூய்மையற்றதாக பார்க்கிற வழக்கம் இங்கிருந்ததால அந்தப் பணியிலிருந்து வெளியேறினவங்க வேறுவகையான பணிகளை மேற்கொள்ள இந்த சாதிய சமூகம் இடம் தரல. அதனால அதேவகைப்பட்ட துப்புரவுப்பணியாளர்களா மாற வேண்டியதாச்சு. ஒரு இந்து எந்த நிலையிலும் தன் தொழிலை மாற்றிக்கொள்ள மாட்டான். அதற்காக அவன் எதையும் செய்வான்னு அம்பேத்கர் சொல்வார். அருந்ததியருக்கான பெரிய சோகம் அவர்களோட பாரம்பரியத் தொழில் மாறிப் போனதுதான்.
அதனாலதான் என்ன படித்திருந்தாலும் அருந்ததியர்னா துப்புரவுப் பணியாளர்தான்னு சாதி இந்துக்கள் மட்டுமல்ல, தலித்துகளும் பார்க்குறாங்க. ஏன், அருந்ததியருமே சக அருந்ததியனை அப்படித்தான் பார்க்கிறார். சிவபெருமான் மேல பட்ட அடி சகல ஜீவராசிகளுக்கும் பட்ட மாதிரி இந்த சாதிங்கிறது எல்லாரையும் எல்லாத்திலயும் புடிச்சிருக்கு. அதனால அருந்ததியரை வேற மாதிரி பார்க்க முடியல.
ஆதவன்- மின்சாரம், ரப்பர், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வந்நதால பரிமூட்டுவது, காலணி தயாரிப்பது போன்ற தோல் தொழில் செல்வாக்கு இழந்து அருந்ததியரில் ஒரு பகுதியாட்கள் நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை உருவாக்கியது. தங்களது பாரம்பரியத் தொழில்களை இழக்கவேண்டிய நிலையை எதிர்த்து அருந்ததியர்கள் போராட்டம் ஏதும் நடத்தியிருக்கிறார்களா?
மதி- எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்திருக்கலாம். அது குறித்த பதிவுகள் இல்லை. கல்வியில்லாததும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். 1800களின் கடைசிப் பகுதியில் பறையர், பள்ளர் மத்தியில் கிறிஸ்தவ மிஷினரிகள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். மதமாற்றமும் கூடவே தொடங்கிவிட்டது. அவர்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்பும் திறக்கப்பட்டது. ஆனால் 1940களில்தான் அருந்ததியர் மத்தியில் மிஷினரிகள் வருது. அதற்கு முன்பு அருந்ததியர்கள் வலிய தேடிச்சென்றும் கூட மிஷினரிகள் அவர்களை ஊக்குவிக்காதாது மட்டுமல்லாம மறுத்தும் துரத்தியடித்ததை Bonds Last என்ற புத்தகத்தில் சுவிஸ் நாட்டு ஆய்வாளர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். தவிரவும் வரலாற்றை எழுதியவர்கள் சாதி இந்துக்களாகவும், சாதி இந்து மனநிலை கொண்டவர்களாகவும், இருந்ததால் அந்த காலத்து விசயங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
ஆதவன்- ஆந்திர மாநிலம் கஞ்ஜம் மாவட்டத்திலிருந்து 17ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்து வந்த தெலுங்கர்கள்தான் அருந்ததியர்கள்னு ஒரு வாதம் இருக்கு. அதனால்தான் திருமாவளவன்கூட அருந்ததியர்களை மொழிவழிச் சிறுபான்மையரா கருதணும்னு சொன்னாரே?
மதி- அது ஒரு முட்டாள்தனத்தின் வெளிப்பாடு. அருந்ததியர், மாதாரி, மாதிகா என்பதெல்லாம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதிகள்ல தோல்பணியாளர்களைக் குறிக்கிற பெயர்கள். இதுதவிர, சக்கிலியர், பகடை, செம்மான் என்று வழங்கப்படும் அருந்ததியச் சாதியினரின் பெயர்கள் எதுவும் ஆந்திர எஸ்சி பட்டியலுக்குள் இல்லை. அப்படியானால் அவங்க ஒட்டுமொத்தமா அங்கேயிருந்து இங்க வந்துட்டாங்களா? அல்லது அங்கிருந்த எல்லாரையும் கொன்னுப்போட்டுட்டு கொஞ்சம் பேர் மட்டும் இங்க வந்தாங்களா? ஒரு பகுதியினர் இடம் பெயர்ந்து வந்திருக்கலாம். அவர்களது மொழியில் பொதுவான சொற்கள் சிலது இருக்கலாம். அதைமட்டும் வைத்துக்கொண்டு இப்படி பேசுவது எப்படி சரியாகும்? வரலாற்றைத் தேடிப்போகாத ஒரு அறிவுச் சோம்பேறித்தனத்திலிருந்து தான் இப்படியான அபிப்ராயங்கள் வருது.
தமிழ்நாட்டில் எந்தவொரு சாதிக்கும் வரலாறு கிடையாது. வரலாற்றுத் தரவுகளை சேமித்து வைக்கிற பழக்கம் நம்மிடம் இல்லை. கையிலிருப்பதையும் தொலைத்துக் கட்டுகிற- பழைய ஓலைச்சுவடிகளை கொளுத்துகிற அல்லது ஆற்றில் விடுவதை விழாவாக கொண்டாடுகிற பழக்கம் நம்மகிட்ட இருந்திருக்கு. அனல்வாதம் புனல்வாதம்ங்கிற பேராலும் வரலாற்றை காலி பண்ணுகிற வேலை நடந்திருக்கு. அதனால இங்கே வரலாறுன்னு முன்வைக்கப்பட்டது எல்லாமே அவரவர் வசதிக்கு எழுதிக் கொண்டதுதான். அதை வைத்துக்கொண்டு இன்னின்னாரது பூர்வீகம் இதுன்னு வகைப்படுத்தறது சரியில்ல.
ஆதவன்- அருந்ததியர் ஆதித்தமிழரே என்று எழில் இளங்கோவன் புத்தகம் சொல்லுது. கருப்பு பேட்டியில் பௌத்தர்களைக் குறிக்கும் சாக்கியர் என்பதுதான் சக்கிலியர் என்று மருவிவிட்டதாக புத்தமித்திரன் சொல்கிறார்.
மதி- தலித்துகள் எல்லாருமே பௌத்தர்கள்தான் என்கிறார் அம்பேத்கர், அயோத்திதாசரும்கூட சொல்கிறார். வார்த்தைகளை தொடர்புபடுத்தி மட்டுமில்லாம பழக்கவழக்கங்களைக் கொண்டும் கூட நாம் பௌத்தத் தொடர்பை புரிந்து கொள்ளலாம். உணவுக்கென்று ஒரு உயிரைக் கொல்லக்கூடாதுங்கிறதும் செத்த விலங்கின் மாமிசத்தை வேண்டுமானால் புசிக்கலாம் என்பதும் பௌத்தக் கோட்பாடு. செத்தமாட்டின் கறியை சாப்பிடுகிற வழக்கம் இந்த பௌத்தக் கோட்பாட்டிலிருந்து தலித்துகளுக்கு வந்ததுதான். ஆனா செத்தமாட்டுக்கறியைத் தின்பது கேவலம்னு ஆதிக்கசாதிகள்தான் கட்டமைச்சாங்க. நாயின் காய்ந்த தோல்கூட கழிக்கப்பட வேண்டியதில்லைன்னு புத்தரோட செய்திகள்ல வருது.
அதில்லாம, குடுமி விட்டுக்கறது, சடை வளர்க்கிறது தான் இந்துப் பழக்கம். மொட்டைப் போட்டுக் கொள்வது பௌத்தர்களோட வழக்கம். அருந்ததியர்களிடம் மொட்டை போட்டுக்கொள்ளும் பழக்கம் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் பௌத்தத்தின் தொடர்ச்சிதான். இந்த வழக்கத்தை இந்துக்கள் பிற்காலத்தில் உள்வாங்கிக் ச்கொண்டார்கள்.
மாடன், கருப்பன், மாரி என்ற தலித்துகளின் பெயர்களெல்லாம் புத்தரைக் குறிக்கும் பெயர்கள்னு அயோத்திதாசர் சொல்வார். ஒரு மரத்தடியில் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கக்கூடாதுன்னு புத்தர் சொல்கிறார். அதாவது அந்த நிழல் மீது பற்று வந்துவிடக்கூடாதுங்கிறதுக்காக. இந்த பற்றற்ற நிலைதான் தலித்துகளிடம் சேமிக்கிற - சொத்து சேர்க்கிற பழக்கம் இல்லாதிருப்பதற்கான காரணம். யாரையும் நம்புவது, ஜீவகாருண்யம் காட்டுகிற அருந்ததியர்களின் மனப்பாங்குகூட பௌத்தத்தின் குணம்தான். இது எல்லாவற்றையும் விட, இந்தளவுக்கு ஏமாளிகளாய் இருப்பதேகூட தலித்துகள்- அருந்ததியர்கள் பௌத்தர்கள்தான் என்பதற்கு போதுமான ஆதாரமாய் கொள்ளமுடியும்.
3.
ஆதவன்: தலித்- பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு கோரிக்கை ஆந்திராவில் தண்டோரா இயக்கத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டதுதானா அல்லது இங்கேயே அதன் தேவை உணரப்பட்டதா?
மதி - உள் ஒதுக்கீடு ஆந்திராவிலிருந்து கடன்வாங்கப்பட்டது என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஆந்திராவிற்கு முன்பாகவே 1979ல் பஞ்சாபிலும், பின்பு அரியானாவிலும் 2000க்குப் பிறகு ஆந்திராவிலும் வந்தது. எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு பார்வையில்லாம நமது நண்பர்கள் தொடுத்த வழக்கால் இப்ப எல்லாமே போய்விட்டது. உச்சநீதிமன்றம் மறுத்துட்டதாலேயே உள்ஒதுக்கீடு கோரிக்கையை முடிந்துபோன விசயமாக பார்க்கவேண்டியதில்லை. தமிழ்நாட்டிலும் இந்த கோரிக்கை கால்நூற்றாண்டு காலமா எழுப்பப்பட்டு வருது. சிபிஎம் கையிலெடுத்ததால கூடுதலா அரசியல் அழுத்தம் கிடைச்சிருக்கு.
கண்மணி- உள்ஒதுக்கீடு கோரிக்கை தலித் ஒற்றுமையை சீர்குலைக்கும்னு சொல்லப்படுதே?
மதி- இருக்கிற கொஞ்சநஞ்ச அதிகாரத்தையும், உரிமைகளையும் சக தலித்துகளோடு பங்கிட்டுக் கொள்ளத் தயாரில்லாத நிலைதான் தலித் ஒற்றுமையை சீர்குலைக்கும். இந்த இடஒதுக்கீட்டைக்கூட பகிர்ந்துகொள்ள மறுக்கிற இவர்கள் கையில் நாளைக்கு பெரிய அதிகாரங்கள் கிடைத்தால் என்னவாகும் என்ற அவநம்பிக்கை இதிலிருந்துதான் உருவாகுது. ஆந்திராவுல உள்உதுக்கீடு நடப்பிலிருந்த காலத்தில், மாலாக்கள் மேல் நடந்த ஒரு தாக்குதலுக்கு எதிரா மாதிகாக்கள் குரல் கொடுக்கும் இணக்கமான நிலை உருவானது. ஆனால் உள்ஒதுக்கீட்டை மாலாக்கள் மறுத்தப்ப அதுக்கு எதிர்வினையா, ஆந்திர எஸ்.சி, எஸ்.டி பட்டியலிலிருந்து மாலா சாதியை நீக்கணும்னு மாதிகாக்கள் கேட்கும் நிலை உருவானது. அவரவர் பங்கு உறுதிப்படும்பொழுதுதான் தலித் ஒற்றுமை சாத்தியப்படும். உள்ஒதுக்கீட்டை கைவிட்டுட்டு ஒற்றுமையக் காப்பாத்தனும்கிறதுல என்ன நியாயம் இருக்குன்னு தெரியல. ஆந்திராவில் அமைக்கப்பட்டிருக்கிற உஷாமேரா கமிட்டிகூட உள்ஒதுக்கீடு மூலம் வாய்ப்புகளை சமமா பகிர்ந்தளிச்சா தான் அடிப்படையான மாற்றம் எல்லா தலித் சாதியிலும் வரும்னு சொல்லியிருக்கு.
ஆதவன்: புதிய பொருளாதாரக் கொள்கை- உலகமயம் - தனியார்மயம்- தாராளமயச் சூழலில் அரசு வேலைவாய்ப்பு அனேகமாக நின்றுவிட்டது. இப்ப தனியார்துறையில் இடஒதுக்கீடு கேட்கப்படுது. கொடுத்தபாடில்லை. இடஒதுக்கீடே நடைமுறையில் இல்லையென்றாகிவரும்போது உள்ஒதுக்கீடு என்பதற்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? அல்லது இப்போதைக்கு கல்வியில் மட்டுமாவது ஒப்புக்கேனும் நீடிக்கிற ஒதுக்கீட்டை அடைவதுதான் நோக்கமா?
மதி- எல்லாமே இல்லாமல் போய்விடவில்லை. எது கிடைக்கிறதோ அது நியாயமா பங்கிடப்படனும்கிறதுதான் கோரிக்கை. எல்லாமும் இழப்பில்லாம கிடைக்கிறதுக்கான போராட்டத்தை நடத்தவும் கூட இந்த உள் ஒதுக்கீடு அவசியம்தான். அதில்லாம, இடஒதுக்கீட்டை வெறும் சீட்டாக புரிஞ்சிக்கக்கூடாது, அது அதிகாரத்தோட தொடர்புடையதும்கூட.
புதிய பொருளாதார கொள்கையை தலித்துகளிடம் கேட்டுவிட்டு யாரும் கொண்டுவரல. பார்ப்பனர்களும் பனியாக்களும் முடிவு செய்து கொண்டுவந்திருக்கிறார்கள். தங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கிறப்ப பெரும்பான்மை மக்களுக்கு பயனளிக்கிற திட்டங்களை உள்ளடக்கின பொருளாதார கொள்கைகளை தலித்துகள் முன்வைப்பாங்க.
ஆதவன்: தலித்துகள் கையில் அரசியல் அதிகாரம்னு சொல்றீங்க. தலித்துகளோட எண்ணிக்கையை ஒப்பிடறப்ப தலித் அல்லாதவங்கதானே பெரும்பான்மை. எப்படி அதிகாரம் கை மாறும்?
மதி - அதிகாரத்தைக் கைப்பற்றுவது எந்த தலித் சாதியாலும் தனியாக முடியாது. இஸ்லாம், கிறித்துவ மதத்தில் இருப்பவர்களையும் சேர்த்து தலித்துகள் மக்கள்தொகையில் 22 அல்லது 23 சதம் இருப்பார்கள். ஓபிசியில் இருக்கின்ற அடித்தட்டு சாதிகளையும் சேர்த்தால் 30 சதம் என்கிற ஒரு பெரிய வாக்கு வங்கி உருவாகும். இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் அரசியல் அதிகாரம் கிடைக்கும். அரசியல் அதிகாரம்கிறதை நான்கு தலைவர்கள் பெறக்கூடியதுன்னோ அல்லது ஆதிதிராவிட நலத்துறை மந்திரி ஆவதுதான்னோ புரிஞ்சிக்கக்கூடாது. தலித்துகள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது என்பது எல்லாருக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது என்பதுதான்.
ஆதவன்: இது என்ன கன்சிராம் முன்வைத்த தலித் பகுஜன் சூத்திரமா? தலித்துகளையே ஒன்றுதிரட்ட முடியாத பலகீனத்தில் இருக்கிற தலித் இயக்கங்கள் ஓபிசியில் இருக்கிற அடித்தட்டு சாதிகளை எப்படி அணிதிரட்ட முடியும்? பள்ளர்கள், நாங்க தலித்தே இல்லைன்னு சொல்றதையும் இங்க கவனத்துல வச்சிக்க வேண்டியிருக்கு.
மதி: பள்ளர்கள் என்னமும் சொல்லிக்கட்டும். ஆனா அதே பள்ளர்களுக்கு உத்தபுரத்துல என்ன நடந்துச்சுங்கிறதை நினைவுபடுத்திக்கிறது நல்லது. இந்த உள்முரண்களையெல்லாம் தாண்டி போலிஸ், கோர்ட், சுடுகாட்டுப்பாதைன்னு அன்றாடப் பிரச்சினைகளுக்காக சட்டத்திற்கு உட்பட்டு - ஆனால் பெரிய விலை கொடுத்து தலித் இயக்கங்கள் போராடிக்கிட்டிருக்கு. ஆனா மொத்தத் தீர்வு அரசியல் அதிகாரத்தைப் பெறுவதில்தான் இருக்கு. 30 சதத்துக்கும் மேலிருக்கிற தலித், ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டுவது சாத்தியம்தான். இன்று எந்தக் கட்சிக்கும் தனியாக முப்பது சதம் ஓட்டு இல்லைங்கிற உண்மைய கணக்கில் எடுத்துக்கனும்.
பி.எஸ்.பி உ.பி.யில் தொடங்கின காலத்திலிருந்து அவங்களோட வாக்கு எண்ணிக்கை குறையவேயில்லை. படிப்படியா வளர்ந்து ஒரு தலித் ஆட்சி அமைப்பது வரை போயிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இது சாத்தியம். எங்கும் எதிலும் பிரதிநிதித்துவம் இல்லாத - எண்ணிக்கை ரீதியில் சொற்ப பலன் கொண்ட பல்வேறு சாதிகள் தலித் தலைமையில்தான் அணிதிரண்டாக வேண்டும்.
ஆதவன்: ராஜாஜி எதைச் செய்கிறாரோ அதற்கு எதிராக செய்தால் சரியாக இருக்கும் என்று பெரியார் சொன்னதை குறிப்பிட்டீங்க. சாதி இந்து மனநிலை நம்முடைய படைப்புகளை ஏற்கும்பொழுது அதில் ஏதோ பிரச்சினை இருப்பதாக சந்தேகிக்கனும்னு ராஜ்கௌதமன் சொன்னதையும் குறிப்பிட்டீங்க. மாயாவதி தலைமையில் பார்ப்பனர்களும், ஓ.பி.சிகளும் முஸ்லீம்களும் திரண்டிருக்கிறார்கள். அவர்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொண்டு வருகிறார்களா அல்லது தலித்துகளிடம் முழுவதுமாக அதிகாரம் சென்று விடக்கூடாது என்பதால் கூட்டு சேர்ந்து கட்டுப்படுத்தி வருகிறார்களா? ஒரு அருந்ததியனை உள்ளாட்சி மன்றத் தலைவராக ஏற்றுக்கொள்ளாத சாதி இந்துவின் மனநிலை எப்படி தலித்துகளின் தலைமையின் கீழ் அணிதிரளும்?
மதி: அதில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. மாயாவதியின் வாக்கு வங்கி பற்றிய கருத்து பாதி உண்மை. பாதி கற்பிதம். மூன்று சதம் பார்ப்பனர்கள் ஓட்டு மட்டுமே மாயாவதிக்குக் கிடைத்திருக்கிறது. நீங்க சொன்ன இருதரப்பாகவும் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித் எழுச்சி நடக்கும்போதே ஓ.பி.சி.யில் உள்ள அடித்தட்டு சாதிகள் இந்தப்பக்கம் நகர்வதும் நடக்கிறது. இவர்கள் பார்ப்பனர்களைவிடவும் எண்ணிக்கையில் வலுவானவர்கள். இந்தக் கூட்டு ஒரு சக்தியாக மாறும்போது ஓபிசியிலிருக்கிற மைனாரிட்டிகளும் இணையறாங்க. பாராளுமன்ற ஜனநாயகம்தான் இந்தியாவில் நடைமுறையில் இருக்குது. அதில் அதிகாரத்தை பெற வாக்கு எண்ணிக்கைதான் முக்கியம். இந்த சூத்திரம் உ.பியில் சரியா நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கு.
ஆட்சி நடத்தறவங்களா - முடிவு எடுக்கிறவங்களா- தலித் உணர்வுள்ள தலித்துகள் இருந்தால்- அவங்க கையில் அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்கிறதுக்கு உ.பியைப் பாருங்கள். இங்கு தலித்துகளுக்கு எதற்கும் ஆகாத தரிசு நிலத்தை கொடுக்கிறார்கள். உ.பி.யில் பாசன நிலம் தருகிறார்கள். இங்கே காங்கிரீட் குடிசைபோல வீடுகட்டி தரப்படுது. அங்கே நல்ல வீடு உத்திரவாதம் செய்யப்படுது. வன்கொடுமை தடுப்புச்சட்டம் தீவிரமா அங்கே செயல்படுத்தப்படுது. இங்கு நடைமுறையில் இல்லவே இல்லை. இங்கும் அப்படியான ஒற்றுமையும் எழுச்சியும் மேலேழுந்து வருவது சாத்தியம்தான். இதற்கு ஜனநாயக சக்திகள் உதவ முடியும். எல்லா சாதியிலும் இந்த ஜனநாயக சக்திகள் இருக்கிறார்கள் என்பது முக்கிய விசயம். இவர்களும் தலித் தலைமையில் சாதி ஒழிப்பு போராட்டத்தில் பங்கெடுக்க முடியும். அதற்கான விவாதங்கள் இங்கு தொடங்கப்படனும். இப்போதைக்கு தள்ளிப்போனாலும், அது சாத்தியமே. அது நடக்காமல் தமிழ்நாட்டோட, இந்தியாவோட சரித்திரம் நிறைவடையாது.
ஆதவன்: தலித்துகளோடு சிறுபான்மையினர் இணைவது குறித்து சொன்னீர்கள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் விடுதலைப்புலி ஆதரவு நிலைபாடு கொண்டவர்கள். ஐநூறு ரூபாயோ அல்லது அதற்கு சமமான பொருளையோ மட்டும் எடுத்துக்கிட்டு அவர்களது சொத்துபத்து அவ்வளவையும் இருந்தது இருந்தவாக்கில் விட்டுட்டு 48 மணிநேரத்துக்குள் வெளியேறனும்னு கெடு விதிச்சு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை விரட்டியடித்தவர்கள் புலிகள். இப்பவும்கூட கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவையொட்டி எழுந்த சர்ச்சையில், இங்கிருக்கிற இந்து முன்னணி ரேஞ்சுக்கு ‘இஸ்லாமியர் கடைகளை புறக்கணிப்பீர்’ என்று துண்டறிக்கை விநியோகம் அங்கே நடந்திருக்கு. இப்படிப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான புலிகளை ஆதரிக்கிற திருமாவளவனோடும், கிருஷ்ணசாமியோடும் சிறுபான்மையினராகிய இஸ்லாமியர் எப்படி ஒன்று சேரமுடியும்?
மதி: தங்களுக்கான விஷயங்களோடு சுருங்கிப்போகாம பொதுவிஷயங்களிலும் தலையிடுவதாக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலிருந்தே புலி ஆதரவு நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொள்வதா கருதுறேன். ஆனால் அதற்காக புலிகளோட இஸ்லாமிய எதிர்ப்பு நிலையை விமர்சிக்காமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒடுக்குகிறவர்களோடு ஒடுக்கப்படுகிறவர்கள் ஒற்றுமை சாத்தியம் இல்லை. அது தன்னளவில் முரணானது. அதேநேரத்தில் இந்த தலைவர்களிடம் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
ஆதவன்: அதிகாரத்தை கைப்பற்ற தலித் ஒற்றுமையைத் திரட்டும்போது மற்றவர்கள் விடுமுறையில் சென்றுவிடுவதில்லை. உத்தபுரத்தில் அதுதான் நடந்தது. அங்கு தலித்துக்கு எதிராக ஓ.பி.சி திரட்சி நிகழ்ந்திருக்கிறது. வி.சி.சண்முகம், மதுரை ஆதினம் தொடங்கி, அனேகமா எல்லா அரசியல் கட்சிகளும் - சி.பி.ஐ. உட்பட- தலித்துகளுக்கும் சிபிஎம்முக்கும் எதிரா ஒரு அணியில் திரண்டதைப் பார்த்தோமே? நாம் பிரிஞ்சிருக்கிறதாலதான் பறச்சியும் சக்கிலிச்சியும் ஆளும் நிலை வந்துட்டதுன்னு ஆதிக்க சாதிகள் தங்களுக்குள் இருக்கும் முரண்களை தீர்த்துக்கொண்டு ஒன்று திரள மாட்டார்களா?
மதி- ஓ.பி.சியில் ஆதிக்கவாதிகள் ஐம்பது சதத்தை தாண்ட முடியாது. மற்றவர்களை நாம் அணிதிரட்ட முடியும். நாம் நம்மை பலமில்லாதவங்களா சிறுபான்மையா உணர்வதுதான் இப்போதுள்ள பிரச்சினை. ஓ.பி.சி தலைமையிலான அணிதிரட்சி ஒடுக்குமுறைக்கான திரட்சி. தலித் தலைமையிலான அணிதிரட்சி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்டவங்களோடது. ஒடுக்கப்படுறவங்கதான் எப்பவும் வெற்றி அடைவார்கள் என்பதில் நமக்கு சந்தேகம் வேண்டியதில்லை.
தட்டச்சு உதவி- ந.பெரியசாமி
நன்றி: புத்தகம் பேசுது மாத இதழ்
- ஆதவன் தீட்சண்யா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ம.மதிவண்ணன் நேர்காணல்
- விவரங்கள்
- ஆதவன் தீட்சண்யா
- பிரிவு: கட்டுரைகள்